அன்புள்ள ஜெமோ,
இளங்கோ கிருஷ்ணனின் பொன்னியின் செல்வன் படப்பாடலில் ஒரு வரி வருகிறது ‘பொட்டல் கடந்து புழுதி கடந்து தரிசு கடந்து கரிசல் கடந்து…’ என்ற வரி வருகிறது. அவரை சிபாரிசு செய்தவர் நீங்கள். அவரிடம் சொல்லுங்கள். சோழர்களின் தொடக்க காலகட்டத்தில் அவர்கள் பாண்டியநாட்டை ஜெயிக்கவில்லை. கரிசல் நிலம் அவர்களின் ஆட்சியில் இல்லை. சோழநாட்டில் பொட்டல், தரிசு நிலமே இல்லை. இதையெல்லாம் கவனித்து எழுதியிருக்கலாம். மற்றபடி பாட்டு நன்றாகவே உள்ளது.
டாக்டர் சிவதாஸன்
***
அன்புள்ள டாக்டர்
பேஷண்ட்ஸ் குறைவு என நினைக்கிறேன். முகநூலில் பிஸியாக இருப்பீர்கள் போல. மாத்ருபூதமும் இதேபோல சினிமாப்பாட்டில் அறுவைசிகிழ்ச்சை செய்தார்.
வந்தியத்தேவன் வருவது வடக்கே ராஷ்ட்ரகூட நாட்டில் இருந்து. போர்க்களத்தில் இருந்து சோழநிலத்துக்குள் நுழைகிறான். அவன் கடந்து வந்த நிலம் ராயலசீமா. அது இன்றும் பாதிப்பொட்டல். தெலுங்கு கங்கா திட்டம் வருவதற்கு முன் முழுப்பொட்டல். அதுதான் அசல் கரிசல் நிலம். அங்கு வாழ்ந்தவர்கள் குடியேறி வேளாண்மைக்கு கொண்டுவந்ததே தென்பாண்டி நாட்டுக் கரிசல் நிலம்.
பாவம் இளங்கோ. நல்ல மனிதர்.
ஜெ
***