அன்புள்ள ஜெமோ
நான் உங்கள் தமிழ் விக்கி பிராஜக்ட் வந்தபோது சற்ற் கேலியாக எழுதியவர்களில் ஒருவன். நீங்கள் விக்கிப்பீடியாவை நகல்செய்து புகழ்பெற முயல்கிறீர்கள் என்றுதான் நினைத்தேன். நான் அவ்வளவாக உங்கள் எழுத்துக்களை வாசித்ததில்லை. ஆனால் உங்களைப்பற்றி மார்க்ஸியர்களும் திமுகவினரும் சொல்பவை காதில் விழுந்துகொண்டே இருக்கின்றன. நான் கட்சிசார்பானவன் கிடையாது. ஆனாலும் என் பார்வையில் அவர்களின் செல்வாக்கு உண்டு என நினைக்கிறேன்.
வள்ளலார் பற்றிய பதிவ பார்த்ததும் பிரமிப்பு ஏற்பட்டது. என் அப்பா வள்ளலார் பக்தர். நான் வள்ளலார் பற்றி சில சிறிய நூல்கள் வாசித்தவன். ஆனால் இத்தனை 360 டிகிரி செய்திகள் ஒரே பதிவில் இவ்வ்ளவு வாசிப்பு இன்பத்துடன் இருக்கும் என்று நினைக்கவே இல்லை. அந்தப்பதிவை அப்பாவின் நண்பர்களுக்கும் அப்பாவுக்கும் அனுப்பினேன். அவர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அந்தப்பதிவின் ஆங்கில வடிவமும் சிறப்பாக இருந்தது.
வள்ளலார் நம்முடைய தமிழ் ஆன்மீகத்தின் மையம். அவரைப்பற்றி ஒரு நல்ல கலைக்களஞ்சியப் பதிவே இப்போதுதான் வருகிறது என்பதே எத்தனை வெட்கப்படவேண்டிய விஷயம். அப்படி ஒரு பதிவு வேண்டும் என்று ஒருவர் முயற்சி செய்யும்போது அதற்கு எதிராக எவ்வளவு கேலி கிண்டல். எவ்வளவு வெறுப்பும் அவதூறும். நினைக்கவே வெட்கமாக இருக்கிறது. அவர்களில் ஒருவனாக நான் என்னை வைக்க விரும்பவில்லை. ஆகவே இந்தக் கடிதம்
மகேஷ் ராஜேந்திரன்