பாண்டிச்சேரியில் இருந்து நள்ளிரவில் கிளம்பி 31 ஜூலை 2022 அதிகாலை மதுரைக்கு வந்தேன். மதுரையில் அழகியமணவாளனும், ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் மனைவி கிருபாவும் ரயில்நிலையத்துக்கு வந்திருந்தார்கள். முந்தைய நாள் மழைபெய்த ஈரமும் குளிரும் இருந்த மதுரை எனக்கு புதியது. நான் விடியற்காலையில் வியர்வை பெருகச்செய்யும் மதுரையையே அறிந்திருக்கிறேன்.
விடுதிக்குச் சென்றதும் பேசிக்கொண்டிருந்தேன். கவிஞர் தேவதேவனை பெங்களூரிலிருந்து வந்த ரயிலில் இருந்து ஜி.எஸ்.எஸ்.வி.நவீனும் அருளும் அழைத்து வந்தார்கள். சற்றுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு நான் தூங்கிவிட்டேன். பத்துமணிக்குத்தான் எழுந்தேன். அதற்குள் ஏகப்பட்ட கூட்டம் அறைக்குள் நிறைந்து இலக்கியக்கொப்பளிப்பு ஆரம்பித்திருந்தது. (தேவதேவன் பெங்களூரில் தன் மகனுடன் இருக்கிறார். பெங்களூர் நண்பர்கள் சந்திக்க விரும்பினால் ஏதாவது நிகழ்ச்சி ஏற்பாடு செய்யலாம். அபி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள விரும்பினார். ஆகவே அழைத்து வந்தார்கள்)
அருண்மொழி, அஜிதன், சைதன்யா மூவரும் நாகர்கோயிலில் இருந்து காரில் வந்தனர். அருண்மொழி அபிக்கு அணுக்கமானவள். இருவருக்கும் பொதுவானது இந்துஸ்தானி இசை. கீழே சிரிப்பொலியும் அரட்டையும் உரக்க கேட்கும். ‘யார்?’ என்றால் ‘அபி சார்தான்’ என்பாள். அவள் அடுத்த தலைமுறை படைப்பாளி. ஆகவே ஒரு நெருக்கம். எனக்கெல்லாம் அபி சுந்தர ராமசாமியின் தலைமுறையைச் சேர்ந்தவர். ஆகவே மரியாதையுடன் கூடிய ஒரு விலக்கம்.
ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் பிடிவாதமான முயற்சியால், தனிமனித உழைப்பால், உருவான நிகழ்ச்சி இது. அபியின் கவிதைகள் வழியாக மட்டுமே அவரை அறிந்தவர் நவீன். அத்தகைய வாசகர்களால்தான் கவிதை என்னும் இயக்கம் நீடிக்கிறது.
மதியம் அம்மா மெஸ்ஸில் சாப்பிட்டோம். சாப்பிட்டதுமே நான் ஒரு குட்டித்தூக்கம் மறுபடியும் போட்டேன். முந்தைய நாள் ரயிலில் போர்வை தரப்படவில்லை. தெரிந்திருந்தால் பாண்டிச்சேரியில் போர்த்தப்பட்ட பொன்னாடையையாவது கொண்டுவந்திருக்கலாம். எங்கள் குழு வழக்கப்படி அப்பொன்னாடையை நண்பர் இளம்படைப்பாளி அனங்கனுக்கு போர்த்தி அவர் எழுதவிருக்கும் படைப்புகளுக்காக கௌரவித்தோம்.
சுரேஷ்குமார இந்திரஜித் வந்திருந்தார். நீண்டநாளுக்குப் பின் கவிஞர் ஜெயபாஸ்கரனைச் சந்தித்தோம். முன்பு அவர் அனுப்பும் அழகிய கையெழுத்திலான வாழ்த்து அட்டைகள் நினைவில் நின்றிருப்பவை. அவருடைய கடிதங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்த ஒரு காலம் இருந்தது. முழு இன்லண்ட் லெட்டரில் நாலைந்து வரிகள் எழுதி எஞ்சிய பக்கத்தை காலியாக விட்டு வீணடிக்கும் அவர் மேல் எனக்கு ஆதங்கம் இருந்தது அன்று
திருச்செந்தாழை,ஸ்டாலின் ராஜாங்கம், இளங்கோவன் முத்தையா என எழுத்தாளர்களும் நண்பர்களும் வந்துகொண்டிருந்தனர். நண்பரும், சொல்புதிது இதழை என்னுடன் சேர்ந்து நடத்தியவருமான சதக்கத்துல்லா ஹசநீ, அமெரிக்காவில் சந்தித்த ஜமீலா என பலர் வந்திருந்தார். அரங்கு நிறைந்தது. குளிரூட்டப்பட்ட அரங்கு. கொஞ்சம் கூடுதலாகவே குளிர் ஊட்டப்பட்டிருந்தது.
சிறப்பான விழா. ஒவ்வொரு உரையும் ஒவ்வொரு வகையில் நன்றாக அமைந்திருந்தன. அபியை வெவ்வேறு கோணத்தில் அணுகும் உரைகள்.மிக நன்றாகத் தயாரிக்கப்பட்ட சுசித்ராவின் உரை கட்டுரையாகவே வெளியிடத்தக்க அளவுக்குச் செறிவு கொண்டிருந்தது
அபி பற்றி நான் நிறையவே பேசியிருக்கிறேன். ஆனால் எத்தனை பேசிய பின்னரும் பேச மிஞ்சியிருக்கிறது. கவிஞர்கள் பேசியிருக்கிறார்கள். ஆனால் கவிதை பற்றி கவிஞர்கள், விமர்சகர்கள் பேசுவதற்கும் வாசகர்கள் பேசுவதற்கும் பெரிய வேறுபாடுண்டு. கவிதையை வாசகர்கள் பேசத்தொடங்கும்போது சட்டென்று அது கவிதை வடிவமாக அன்றி, கவிதை அனுபவமாக ஆகிவிடுவதை காண்கிறேன்
முன்பு அபி எழுதிய ஒரு கட்டுரையையே சார்ந்து பேசுவதென்றால் கவிதை கவிஞனின் தனியனுபவம், பின்னர் மொழியினூடாக ஒரு பொது அனுபவம் என்னும் வடிவங்களை அடைகிறது. அந்த பொதுவடிவமே இலக்கிய விமர்சனத்தில் பேசப்படுகிறது. கவிதையை வாசகர்கள் பேசத்தொடங்கும்போது அது மீண்டும் ஒருவகை தனியனுபவமாக ஆகிறது. வாசகன் பேசுவது அவன் அடைந்த கவிதையைப் பற்றித்தான்.
எப்போது ஒரு கவிஞன் அப்படி வாசகர்களின் கவித்துவக் கற்பனையில் திகழ தொடங்குகிறானோ அப்போதுதான் அவன் அமரத்துவம் அடையத் தொடங்குகிறான். அவன் மொழியில் கரைந்து மொழியின் பகுதியாக ஆகிவிடுகிறான். அவ்வண்ணம் ஒரு கவிஞனை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பதற்காகவே கவிஞனைப் பற்றிப் பேசவேண்டியிருக்கிறது. எக்கவிஞனும் இயல்பாக மக்களிடம் சென்று சேர்வதில்லை. அப்படிச் சென்று சேர்பவர்கள் மக்கள் ஏற்கனவே அறிந்தவற்றை எழுதுபவர்கள். கவிஞனுக்கும் மக்களுக்கும் நடுவே ஓர் இணைப்பு மொழியில் உருவாகவேண்டும். அதற்கே கவிதைரசனை, கவிஞனை விவாதித்தல் ஆகியவை தேவையாகின்றன. நாம் இன்று பாரதியை நம் மொழியின் ஒரு பகுதியாக உணர்கிறோம். பேசிப்பேசி அவனை கொண்டு சென்று சேர்த்தவர்கள் பரலி சு. நெல்லையப்பர், வ.ரா முதல் ப.ஜீவானந்தம், ஜெயகாந்தன் வரை பலர்.
அபியின் ஏற்புரையில் தன் கவிதை ஓர் வாசிப்பனுபவமாக தன்னிடமே திரும்பி வருவது பற்றிய திகைப்பும் மகிழ்ச்சியும் தெரிந்தது. கவிஞருக்கு வாசகர்கள் கொடுக்கக்கூடும் பரிசு அது ஒன்றே. அது அவருடைய எண்பதாவது பிறந்தநாளில் ஒரு நற்கொடை.
விழாவில் அபியின் கவிதைகள் பற்றி விஷ்ணுபுரம் வட்டம் சார்பில் உருவாக்கப்பட்ட அந்தர கவி என்னும் தொகைநூல் வெளியிடப்பட்டது. அபியின் நண்பர் ஜி.ஆர்.பாலகிருஷ்ணன் அபி பற்றி எழுதிய ஆழங்களின் அனுபவம் என்னும் நூல் வெளியிடப்பட்டது. அபிக்கு வாழ்த்துப் பத்திரம் அளிக்கப்பட்டது. இளம் எழுத்தாளர் நிகிதா தொகுத்து வழங்கினார்.
விழாவுக்குப்பின் இரவுணவு ஏற்பாடாகியிருந்தது. விழா நிகழ்ந்துகொண்டிருக்கையிலேயே மழை கொட்ட ஆரம்பித்தது. விழா முடிந்தபின்னரும் மழை தொடர்ந்து மெல்ல ஓய்ந்தது. எனக்கு விழாவுக்கு நிகராகவே அந்த விருந்தும் பிடித்திருந்தது. ஒருவரின் பிறந்தநாள் விழாவில் உணவு வழங்குவது இருந்தாகவேண்டும் என்று தோன்றுகிறது
நான் பதினொரு மணி ரயிலில் திருவனந்தபுரம் செல்லவேண்டும். ஆகவே உடனடியாக காரிலேறி விடுதிக்குச் சென்று அங்கே பெட்டியை தூக்கிக்கொண்டு விரைந்தேன்.