இளங்கோ கிருஷ்ணன், தமிழ் விக்கி
இளங்கோ கிருஷ்ணன் அழைத்தபோது நான் திருவனந்தபுரத்தில் இருந்தேன். ஷாஜி கைலாஸுக்காக ஒரு படம். இளங்கோ பதற்றத்தில் இருந்தார். “சார் பாட்டு ஃபைனல் வெளியாயிடுச்சு…பாத்தீங்களா”
நான் “ஆமா…ரொம்ப நல்லா இருக்கு” என்றேன்
“எனக்கு பதற்றமா இருக்கு சார்….முதல்பாட்டு….பொன்னியின் செல்வனிலேயே இதான் ஃபோக் சாங். மத்ததெல்லாமே கிளாஸிக் லேங்குவேஜ்ல இருக்கு. இது முதல்ல வெளியாயிருக்கு”
அப்படி பல பதற்றங்கள். ஒரு கவிஞன் பாடலாசிரியன் ஆவதென்பது சட்டென்று புகழொளிக்குச் செல்வது. அதிலும் பொன்னியின் செல்வன் போன்ற மாபெரும் சினிமாவில், ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் முதல்பாடல் வெளியாவதென்பது ஒரு பெருநிகழ்வு. இளங்கோ சட்டென்று அவர் குடும்பத்தினரிடையே கூட ஹீரோ ஆகியிருப்பார்.
ஆனால் அந்த மகிழ்ச்சியை இன்னும் இருபதாண்டுகள் கழித்து நினைத்துப் பார்க்கையில்தான் அனுபவிக்க முடியும். இப்போது அடிவயிற்றில் பதற்றம் மட்டுமே இருக்கும். இன்பம் போன்ற துன்பம் அல்லது துன்பம் போன்ற இன்பம். என்ன செய்கிறதென்றே தெரியாது.
மணி ரத்னத்திடம் இளங்கோவை நான் ‘சிபாரிசு’ செய்தேனா என பலர் கேட்பதுண்டு. சினிமா ஒரு தொழில். அதில் சிபாரிசெல்லாம் செல்லுபடி ஆகாது. எந்த விஐபி சிபாரிசு செய்தாலும் தகுதி இல்லையேல் தொழிலுக்குள் செல்ல முடியாது. நிலைக்கவும் முடியாது. மறக்கவே முடியாத விஷயம் இது கோடிகளின் தொழில் இது என்பது.
மணி ரத்னம் புதிய சொல்லாட்சி கொண்ட பாடலாசிரியர் தேவை என நினைத்தார். காரணம் ஒன்றே ஒன்றுதான், பலர் அதை உணர்ந்திருக்க மாட்டார்கள். இன்று தமிழ் சினிமாவில் இருக்கும் மிக முதிய இயக்குநர் அவரே. அவருக்குப்பின் வந்த இரண்டு தலைமுறையினர் ஓய்வுபெற்றுவிட்டனர். மணிரத்னம் இளமையாக இருப்பது அவருடைய படைப்புகளிலுள்ள இளமையால். அவர் அதை தக்கவைத்துக் கொள்வது அவர் சேர்த்துக்கொண்டே இருக்கும் இளைஞர்களால். ரவிவர்மன் பொன்னியின் செல்வனுக்கு அளித்திருக்கும் புதிய தோற்றத்தை படம் பார்ப்பவர்கள் உணரலாம். அவ்வாறுதான் புதிய கவிஞர் தேவைப்பட்டார்.
நான் இளங்கோவை பரிந்துரைத்தேன். இளங்கோவின் கவிதைத் தொகுதிகளை வாங்கிவந்து கண்ணாடிபோட்டுக்கொண்டு ஆடிட்டர் போல குனிந்து அமர்ந்து முதல்பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை எல்லா கவிதைகளையும் வாசித்து ,(தமிழகத்தில் அனேகமாக இவர் ஒருவர்தான் அவ்வாறு வாசித்திருக்க வாய்ப்பு) நல்ல வரிகளை தேர்வுசெய்து பரிசீலித்து, அதை ரஹ்மானிடம் விவாதித்து, உதவி இயக்குநர்களுடன் மேலும் ஆலோசித்து, இறுதியாக மணி ரத்னம் இளங்கோ கிருஷ்ணனை தேர்வுசெய்தார். பொன்னியின் செல்வனில் எல்லாமே அவருடைய தெரிவுதான். அவர் அப்படத்தின் சர்வாதிகாரி.
இளங்கோ கிருஷ்ணனின் இசையில் இன்னும் துடிப்பான பாடல்கள் உள்ளன. ஆனால் இந்தப்பாடல் பொன்னியின் செல்வன் என்னும் சினிமாவின் பொதுவான உளநிலையை காட்டுவது. இது பாகுபலி போல அதிகாரப்போட்டி அல்ல. பழிவாங்கும் கதை அல்ல. நல்லதும் கெட்டதும் மோதும் கதை அல்ல. இது முதன்மையாக இளமைக்கொண்டாட்டம் கொண்டது. அந்த மனநிலை வெளிப்படும் பாடல் இது. ஆடிப்பெருக்கின் களியாட்டு.
முதன்மையாக இது ஒரு நாட்டுப்பாடல். நாட்டுப்பாடலாக எழுதப்பட்டது. ஆனால் ஒரு நாட்டுப்பாடலை அப்படியே மெட்டமைக்க ஏ.ஆர்.ரஹ்மான் தேவையில்லை. அந்த நாட்டுப்பாடல் ஏதோ சில மாயங்களால் மேலைநாட்டிசையாகவும் மாற்றப்பட்டுள்ளது. மேலைநாட்டு இசையால்தான் அந்த பிரம்மாண்டமான சூழ்ந்திசை உணர்வை அளிக்கமுடியும். நம் இசை தனித்த இன்னிசை. மெலடி எனலாம். மேலை இசை சேர்ந்திசைத்தன்மை கொண்டது. ஆர்க்கெஸ்ட்ரல் எனலாம். இப்பாடலில் நாட்டார்மெட்டும் பாடலும் மாபெரும் சேர்ந்திசைத்தன்மையை அடைகின்றன. அதன்வழியாக மேலைநாட்டிசையாக மாறுகின்றன.
அதன் இறுதியில் சேர்க்கப்பட்டது சிவமணி உருவாக்கிய தாளம். எளிமையாகத் தொடங்கி சிக்கலாகிக்கொண்டே செல்வது. நான் அதை இப்போதுதான் முழுமையாகக் கேட்கிறேன். ஆனால் நெடுநாட்களாகவே அது எப்படி மீண்டும் மீண்டும் நுணுக்கமாக அமைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது என்று கேள்விப்பட்டுக்கொண்டே இருந்தேன். அப்பாடலின் மைய ஓட்டம் அந்த தாளம்தான். சொற்கள் அதனுடன் இணைந்து தாங்களும் நடனமாடுகின்றன
இளங்கோவின் வரிகளும் அழகானவை
நீர் சத்தம் கேட்டதுமே நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற சொல் பூத்து நிக்கும்