கமல் உரையாடல், இரண்டாம் பகுதி பற்றி…

Watch | Part 2: Actor Kamal Haasan in conversation with writer Jeyamohan (in English) on democracy and the role of fiction

கமல் பேட்டியின் இரண்டாம் பகுதி வெளியிடப்பட்டிருக்கிறது. முந்தைய பகுதியின் மீதான பல எதிர்வினைகளை பார்த்துக் கொண்டிருந்தேன். கமல் என்னும் ஆளுமையை ஒவ்வொருவரும் எப்படி எப்படி புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்னும் திகைப்பு ஏற்பட்டது.

அரைநூற்றாண்டுக்கும் மேலாக ஊடக ஒளியிலேயே நின்றிருக்கும் ஓர் ஆளுமைக்கு அந்த ‘விதி’ தவிர்க்க முடியாத ஒன்று என்று புரிந்தது. ஆனாலும் அந்த குழப்பச்சிடுக்குகள் ஆச்சரியமூட்டின. எத்தனை கொண்டாட்டம், எத்தனை விதந்தோதல், எத்தனை காழ்ப்புகள், எத்தனை பொருமல்கள். சம்பந்தமே அற்ற எத்தனை முத்திரை குத்தல்கள். ஒருபக்கம் பார்ப்பனிய முத்திரை. மறுபக்கம் கிரிப்டோ கிறிஸ்தவர் என்று இந்துத்துவர்களின் அடிவயிற்றுச் சாபம்…

நானறிந்த கமல் பற்றிச் சொன்னால் அது இங்குள்ள விதந்தோதல்களில் ஒன்றாக ஒரு பக்கத்தினருக்கு தோன்றும். இன்னொரு சாரார் அவர்களின் ‘ஆண்டவரை’ நான் மனிதனாக்கிவிட்டதாக எண்ணவும்கூடும். ஏதேனும் ஒரு கட்டத்தில் அதை எழுதலாம். இந்த உரையாடலின் பின்னணி, உரையாடலின் முறை ஆகியவற்றை ஆர்வமுள்ள நண்பர்கள் புரிந்துகொள்வதற்காகச் சிலவற்றைச் சொல்லியாகவேண்டும். அவர்களுக்காக மட்டும்.

இந்த உரையாடல் என்னுடைய அறம் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கமான Stories of the True என்னும் நூலின் வெளியீட்டை ஒட்டி ஜகர்நாட் பதிப்பகமும் இந்து நாளிதழும் கோரியதன்பொருட்டு நிகழ்த்தப்பட்டது. ஒரு வணிக வெளியீடான புத்தகத்தின் ‘பிராண்ட் அம்பாசிடர்’ ஆக கமல் வந்தார். அவர் ஒரு வணிகப்பொருளின் விளம்பரத்துக்காக சிலகோடிகள் ஊதியம் பெறுபவர். இது நட்புக்காக மட்டும் அல்ல, இந்நூல் அவரை கவர்ந்த ஒன்று என்பதற்காகவும் அவர் அளித்த விளம்பரம். அவருடைய அலுவலகத்தில் நடைபெற்றது. இன்று இந்தியாவில் ஒரு நூல் விளம்பரத்துக்காக வேறெந்த நடிகரையாவது அணுகமுடியுமா? எனக்குத் தெரியவில்லை.

இந்நூலுக்காக மட்டும்தான் அவர் வந்தாரா? இல்லை, இதற்கு முன்னரும் தமிழில் இருந்து ஆங்கிலம் சென்ற பல இலக்கிய நூல்களுக்கு அவருடைய பரிந்துரையே பின்னட்டைக் குறிப்பாக இடம்பெற்றுள்ளது. இன்று நவீனத்தமிழ் இலக்கியத்தை தேசிய அளவுக்கு, உலகளவுக்கு கொண்டுசெல்ல நமக்கு புகழ்பெற்ற வேறு குரல்கள் அனேகமாக இல்லை என்பதே உண்மை. நம்மில் பிற உலகப்புகழ்பெற்றவர்கள் நம் அறிவியக்கத்தை எவ்வகையிலும் பொருட்படுத்துவதில்லை. இன்ஃபோஸிஸ் நாராயணமூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி கன்னட இலக்கியம் பற்றிப் பேசுகிறார். அப்படிப்பேச ஒரு தொழிலதிபர் நமக்கு இல்லை. நம் துணைவேந்தர்கள், நம் அரசியலாளர்கள் எந்த இலக்கியவாதி குறித்தும் அறியமாட்டார்கள். கமல் நமக்கு இன்றிருக்கும் ஒரே ஊர்தி. இந்தியா கவனிக்கும் ஒரே தமிழ்க்குரல். அதன்பொருட்டு அவருக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

கமலுடனான உரையாடல் பொதுவாக அறம் கதைகள் பற்றியும், திரைப்படங்கள் சினிமா ஆவதைப்பற்றியும் நடக்கலாம் என்று பதிப்பாளர் கூறினர். பேட்டியாக அன்றி ‘தன்னிச்சையான’ உரையாடலாக நிகழலாம் என்றும், ஒரு குறிப்பிட்ட புள்ளியில் கூர்ந்து செல்லவேண்டியதில்லை என்றும் கோரினர். அவ்வாறே நிகழ்ந்த இயல்பான பேச்சு இது. அது பின்னர் படத்தொகுப்பாளர்களால் அவர்களின் கோணத்தில் வெட்டி தொகுக்கப்பட்டுள்ளது.

நான் கமலிடம் என்றுமே விரும்புவது அவருடைய இளமையை. எனக்கு அறுபதாகிறது. நாற்பது வயதான பலரை பார்க்கையில், என்ன இத்தனை முதியவர்களாக இருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றும். நான் என் முப்பது வயதில் எத்தனை கனவுகளும், செயலூக்கமும் கொண்டிருந்தேனோ அதே போலவே இன்றும் திகழ்பவன். எனக்குச் சோர்வும் சலிப்பும் இல்லை. மகிழ்ச்சியும் கொந்தளிப்புமான வாழ்க்கை என்னுடையது. வாசிப்பு, எழுத்து, நட்புக்கூடல், பயணம் என் அன்றாடம். ஆனால் என் பார்வையில் என்னைவிட இளையவராகவே கமல் தோற்றமளிக்கிறார்.

எனக்கு எப்போதுமே தோன்றுவது அவருடைய மாறா வயது இருபது என்று. எதிலும் உற்சாகம். ஒன்றைச் சொல்லும்போதே அவருக்கு பத்து நினைவுக்கு வந்துவிடும். ஒரு திட்டத்தைச் சொல்லும்போதே மேலும் பல திட்டங்கள் பொங்கி எழும். நிலைகொள்ளாமல் இருப்பார். அந்த ஊக்கத்தாலேயே அவரால் ஒன்றை முழுமையாகச் சொல்ல முடியாது. ஒரு வலுவான தர்க்க வியூகத்தை உருவாக்க முடியாது. ஒரே விஷயத்தில் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கவும் இயலாது. அந்த பேச்சு, சிரிப்பு ஆகியவற்றிலிருக்கும் தன்னியல்பான இளமையின் ரசிகர்களே அவருடைய நண்பர்கள்.

இருபது வயதின் ஊக்கக் கொப்பளிப்பு இன்றி அவரை நான் கண்டதில்லை. அவரை நான் நேரில் காண விரும்புவதே அதன்பொருட்டுத்தான். திரையுலகில்கூட பலர் அவரை பார்ப்பதே அந்த தணியாத ஊக்கத்தில் சிறிது  பெற்றுக்கொள்வதற்காகத்தான். அவ்வாறு வாழ அவரால் இயன்றிருக்கிறது. அல்லது அந்த இயல்பு அவருள் இருக்கிறது. இன்னொருவர் என்றால் விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் திரைத்திட்டங்களில் திளைப்பார்கள். கோடிகளில் கணக்குபோட்டுக்கொண்டிருப்பார்கள். அந்த வெற்றியில் நீந்திக்கொண்டிருப்பார்கள். அவர் கிளம்பி அமெரிக்கா சென்று முழுக்கவே டிஜிட்டல் திரைப்பின்னணியில், முழுக்கமுழுக்க உள்ளரங்கில் திரைப்படம் தயாரிக்கும் தொழில்நுட்பத்தைக் கற்க ஒரு பல்கலைக்கழக வகுப்பில் சென்று அமர்ந்திருக்கிறார்.

தன்னைச் சுற்றி அதைப் பயில வந்து அமர்ந்திருப்பவர்கள் முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்கள் என்றார். அவர் அவர்களைவிடவும் பத்து வயது இளையவர்தானே என்று நான் எண்ணிக்கொண்டேன். அடுத்து என்ன பயிலலாம், எந்த புதிய இடங்களுக்குள் நுழையலாம் என்னும் சிறுவனுக்குரிய வேட்கை அவருடையது.

அந்த உரையாடலிலும் தெரிபவர் அந்த கமல். அவர் பேசுவன எல்லாமே அப்போது அக்கணத்தில் அவருக்கு தோன்றுபவை. அவர் இயல்பு என்னவென்றால் அப்படிப் பேசும்போதே ஓர் ஐம்பதுகோடி ரூபாய் திட்டம் உள்ளத்தில் தோன்றிம, அங்கிருந்தே அப்படியே எழுந்து, அதைச் செய்ய ஆரம்பிப்பது. உலகியல் பார்வையில் அவரை திட்டமிடத்தெரியாதவராக, லௌகீக விவேகம் கொஞ்சம் குறைவானவராக அது காட்டலாம். ஆனால் உண்மையில் பெரிய அரசியல்தலைவர்கள் கூட அப்படித்தான் இருந்திருக்கிறார்கள். நேரு அப்படிப்பட்டவர் என பதிவுசெய்திருக்கிறார்கள். கனவு காண்பவர். அதை செயலாக்கும் நடைமுறைவாதிகள்தான் நூறு, ஆயிரம்பேர் சுற்றிலும் நிறைந்திருக்கிறார்களே.

பலசமயம் கமல் வாழ்ந்த வாழ்க்கைதான் மிகச்சிறந்த வாழ்க்கையோ என்று நினைப்பேன். இளமையிலேயே நின்றுவிடுவது. இளமைக்குரிய ஊதாரித்தனம், கட்டுப்பாடின்மை, புதுப்புதுத் திட்டங்கள். தீராப்பெருங்கனவுகள், சாகசங்கள், காதல்கள்… அது ‘பாதுகாப்பான’ பயணம் அல்ல. அவரே ஏகப்பட்ட இடர்களில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டவர்தான். சாகசமும் ஆபத்தும் ஒன்றாகப்பிணைந்தவை.

ஆனால் என்ன குறைந்துவிட்டது? அவர் தன் மகள்களுக்கு மிகமிக விருப்பமான இலட்சியத் தந்தை. அவர்களின் கதாநாயகன். கூடவே அவர் தான் விரும்பிய வாழ்க்கையை வாழ்ந்தார். சம்பாதித்தார், விரும்பிய செயல்களில் அள்ளி இறைத்தார். ஒவ்வொரு கணமும் தான் விரும்பியபடி வாழ்வில் திளைத்தார். அதுதான் இருபத்தொன்றாம் நூற்றாண்டு வாழ்க்கையோ என்னவோ. இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மட்டுமே அத்தகைய வாழ்க்கை இயல்வது. நம்மில் பலர் உண்மையில் அவரைக் கண்டு அகத்தே பொறாமை கொள்கிறோமோ? (கண்டிப்பாக நான் இல்லை. நான் என் விருப்பப்படி மட்டுமே இக்கணம் வரை வாழ்ந்தவன். ஒரு நாளையும் எனக்கு மகிழ்வில்லாததாகச் செலவிடாதவன்)

இந்த உரையாடலிலும் அவருடைய உள்ளம் தாவித்தாவிச் செல்வதை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். அந்த உரையாடல் முழுக்க அவரைத்தான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் அவரைப்போல ஒரு மகத்தான கதாபாத்திரத்தை எழுதவேண்டும் என எண்ணினேன். அல்லது வெண்முரசில் அர்ஜுனன் என எழுதிவிட்டேனா என்ன?

Stories of the True : Translated from the Tamil by Priyamvada

 

https://tamil.wiki/wiki/Jeyamohan

முந்தைய கட்டுரைடி.செல்வராஜ், விசுவாசத்தின் முகம்
அடுத்த கட்டுரைஈரோடு, தமிழ் விக்கி தூரன் விருது விழா