குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழ் விக்கி
அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?
திரு.குடவாயில் பாலசுப்பிர்மணியன் அவர்கள் பற்றிய கட்டுரைகளும், கோவை புத்தகத் திருவிழாவில் அன்னாருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது மற்றும் அவரைப் பற்றி நீங்கள் ஆற்றிய உரையும் அருமை.
நான் சில ஆண்டுகளுக்கு முன்னர் யதேச்சையாகக் குடவாயில் பாலசுப்பிரமணியத்தைக் கண்டடைந்தேன். தஞ்சைப் பகுதியில் தெலுங்கு கீர்த்தனைகள் எப்படி உருவாயின ? தியாகையர் எவ்வாறு திருவையாறு வந்தார் என்பதாக ஆராயப் புகுந்த போது, எழுத்தாளரின் ‘தஞ்சாவூர் நாயக்கர் வரலாறு’ என்ற நூலை சிங்கப்பூர் நூலகத்தில் கண்டெடுத்தேன். என்ன அருமையான பார்வைகள்! அந்த வாசிப்பு அனுபவத்தை என் வலத்தளத்தில் பதிந்தேன். அதனைக் கண்டு பல நண்பர்கள் அந்த நூலை எடுத்து வாசித்துள்ளனர் என்று தெரிந்துகொண்டேன்.
மூன்றாண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளரின் ‘தஞ்சாவூர்’ நூலைக் கண்டெடுத்து சுமார் மூன்று மாதங்கள் மீண்டும் மீண்டும் வாசித்தேன். ஒவ்வொரு பகுதியும் அளித்த மன எழுச்சியைச் சொல்லி மாளாது. சுமார் ஒரு மாதம் அந்த நூலைப் பற்றியும், அதன் ஆராய்ச்சி வழிமுறைகள் பற்றீயும் பலரிடம் பேசியும் இருந்தேன். அந்த வாசிப்பனுபவத்தையும் வலைத்தளத்தில் எழுதியுள்ளேன்.
திரு.குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு நம் தமிழ்ச் சந்ததிகள் பெரும் கடமைப் பட்டுள்ளார்கள் என்பதை நான் மனதார உணர்ந்துகொண்ட தருணங்கள் அவை. அதே மன நிலையை உங்கள் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா உரையிலும் பெற்றேன்.
என் வாசிப்பனுபவத்தைக் இத்தளங்களில் காணலாம்.
https://amaruvi.in/2019/08/04/tanjavur-book-review/
https://amaruvi.in/2015/09/01/தஞ்சாவூர்-நாயக்கர்-வரலா/
நன்றி.
ஆமருவி தேவநாதன்.