மைத்ரி- விவேக்

மைத்ரி வாங்க

விஷ்ணுபுரம் பதிப்பகம்

காஷ்மீரிய சைவத்தில், அபினவ் குப்தாவால் தொகுக்கப்பட்ட தத்துவ களஞ்சியம் கௌலா, க்ராமா, ஸ்பந்தா, பிரத்யபிக்ஞா என்று நான்கு மரபுகள் உள்ளன. இதில் உள்ள ஸ்பந்த தத்துவத்தில் சிவன்சக்தியின் உரையாடலே, இப்பிரபஞ்சத்தில் எல்லாமே மாறக்கூடியவை, மாறாதவை தூய உணர்வு (Pure Consciousness), இயக்கமில்லா இயக்கத்தை, அதிர்வில்லா அதிர்வை எப்படி உணர்வது.  இதற்கு பல வழிகள் உள்ளன. காதல், காமம், கவிதை, இசை மூலம் அந்த அதிர்வை நாம் உணர்வது  ஸ்பந்தா.  பிரத்ய விக்ஞா என்பது நம்மை உணர்தல், மறு கண்டெடுத்தல். நாவல் முழுவதும் வரும் இக்கதைகளம் ஸ்பந்த தத்துவத்தில் வரும் சிவன் சக்தியின் இடையேயான உரையாடலும், காதலும், முரண்களும், அதன் முடிவில் சுயகண்டெடுப்பான பிரத்ய விக்ஞா பாதையில் முடிகிறது . 

நாடகத் தருணங்கள், பாசாங்குகள் இல்லாத, மனுடத்தால் வரையறுக்கப்படாத உணர்வுகளை வெளிப்படுத்துவதாகவே  கதைக்களம் அமைக்கப்படுகிறது. அறிமுகம் இல்லாத உறவுகள் முதல் சந்திப்பிலேயே சில சமரச புள்ளிகளை அவர்கள் எட்டுவது ஏன்  என்று சமயங்களில் தோன்றும். ஆனால் மனித உணர்வுகளின் ஊசலாட்டத்தை விளக்குவது எளிதா என்னதுயரத்தை  துரத்தி செல்வதற்கு  மானுடத்துக்கு ஏதாவது காரணிகள் வேண்டும் , பொருளாதாரம், உறவுச்  சிக்கல்கள். இதுவே   மனிதத்தை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. ஞானத்தை, விடுதலையை நோக்கி விடையாக நாம் நகர்கிறோம்.  ஹரன் சிறு வயதில் தனது தாயின் மரணம், காதலின் துயரத்திற்கு பிறகு, கலங்கிய வாழ்க்கை  சூழலில் மைத்ரியை பார்க்கிறான். மைத்ரியை சந்தித்தவுடன்  தற்காலிமாக நிறைவை அவன் உணர்ந்தாலும், ஆழ்மனதின் துன்பத்தை எளிதில்  மைத்ரி கண்டுகொள்கிறாள் . ஹரன் இழப்புகளை தாண்டி செல்வது, ஒரு லட்சியம் இல்லாத பயணத்தை நோக்கி,  மனம் சிதறுண்டு நிலையில்லாத ஆத்மாவாக, தீரா பெருங் காமம் கொண்டவனாக,  மைத்ரியை சந்திக்கும் போது, தேவி அவனை தேர்ந்தேடுக்கிறாள். ஹரன்  என்னுடன் வா, கதவுகள் மூடப்பட்ட வாழ்க்கையிலிருந்து, கடந்த கால ஏக்கங்களில், தொடர்ச்சியான இன்னல்களில் இருந்து இதோ உன்னை விடிவிக்கிறேன், சிதறிய மனதை ஆற்றுப்படுத்துகிறேன். 

அவளின் குறும்புத் தோரணை, முகத்தில் இயல்பாக, முத்தத்தை எதிர்நோக்கும் குழந்தை போல் அமர்ந்திருந்ததும், அலைபாயும் கண்களை பார்த்தவுடன் ஹரன் தேவியின் தரிசனத்தை, பாதை அறியாத மலை பிரதேசத்தில்  ஒருவிதமான கனவுத்தன்மைக்கு செல்கிறான். மைத்ரி, முலையூட்டம் பேரன்னையாக காட்சி படுத்துகிறாள், சுயகண்டெடுப்பை அறிய அருளுகிறாள், அவனின் மைய விசையே அவளாக உருமாறுகிறாள். தனியர்களான மனிதர்கள் அறிமுகம் இல்லாதவர்களை ஒரு விலக்கத்தோடு பார்க்கிறார்கள், ஓரிரு சம்பிரதாய வார்த்தைக்கு மேல் பேசுவதும் இல்லை, அச்சத்தின் பொருட்டு தொடர் உரையாடல்கள்  அமைவதில்லை. ஆனால் மைத்ரி சராசரித்தனத்தில் இருந்து தன்னை விலகி தூய ஆத்மாவாக ஹரனின் கைகளை பற்றுகிறாள், கட்வாலி பாடல்களை அறிமுகப்படுத்துகிறாள். தேவி அவனை கலையால் தன்னுள் முழவதுமாக கொண்டுவிட்டால், இனி ஹரன்  அமுதூட்டும் அன்னையின் மடியிலே.  ஹரன், நான் இல்லாமல் ஒரு கணமும் அவள் முழுமை கொள்ளக் கூடாது, நிறைவடையக் கூடாது. அப்படி நிறைவடைவதை என் தோல்வியாக மட்டுமே என்னால் காண இயலும்.’  

அவள் உள்ளூர சிரிக்கிறாள், நான் உன்னை பெற்றெடுத்த பேரன்னை, இதோ நான் உன்னை தேர்வுசெய்திருக்கிறேன். அவளை தேவியாக கற்பனை செய்துகொண்டு , அவள் பாதங்களின் அடிப்பகுதியில் அமர்ந்து , என்னை மணப்பாயா தேவி என்கிறான். சௌந்தரிய லஹரியை உவமை கூறி ஆதி சங்கரன் என்ற அத்வைதி இவளின் மூதாதையை பார்த்திருப்பானோ என்று எண்ணுகிறான். ஷோப்பனோவரின் எதிர்மறை/மறுப்புவாத கொள்கையில் இப்பிரபஞ்ச  இருத்தலை இப்படி சித்தரிக்கிறார்.

1. இருத்தல்  என்பது மானுடத்  தவறு

2. இங்கிருக்கும் இருப்பில் அர்த்தம் இல்லை

3. மனிதர்களுக்கு மகிழ்ச்சி என்பது இங்கு இருக்கும் வரை இயலாது  .

4. வாழ்க்கை என்பது துன்பமும்/தீயவையும் தான்

முற்றிலும் எதிர்மறை தன்மை கொண்ட தத்துவவாதி . The World as Will and Representation என்ற புத்தகத்தில்  “The Metaphysics of Sexual Love” என்ற கட்டுரையில், காதல் என்பது நம் பகுத்தறிவுக்கு எதிரானது, நம் சந்ததிகளை பெருக்கி, நம் இருப்பை உறுதிப்படுத்துவத்துக்கான  உயிரியலின் உத்தி, அதற்காகவே மானுடர்கள் காதலிக்கிறார்கள் என்கிறார்.  ‘தூய அறிதலே‘, ப்ரம்மச்சாரியமே  மானுடத்தின் விடுதலை என்றும்  கீழத்திய பௌத்த தத்துவதில் இணைகிறார். அதில் மட்டுமே மனிதன் இன்பத்தை காண முடியும், இன்பத்தின்  மறுபக்கமாக  உடனே துன்பத்தில் மனிதன் மீண்டும் சிக்குண்டு தவிப்பான் என்பது அவரின் புகழ்பெற்ற will-life கோட்பாடு. மைத்ரியின் தொடக்கத்தில் ஹரன் கலங்கிய மனதோடு இமயமலையில் பயணத்தை தொடங்குகிறான், தேவியின் தரிசனத்திற்கு பின்புஅறிதலை‘, தொடர் பயணங்கள் மூலம் தொடுகிறான், சுயகண்டெடுப்பு நிலைக்கு சென்றவுடன், அவளின் விடுதலுக்கு பிறகு மீண்டும் துன்புறுகிறான். 

இங்கே தத்துவத்தின் உயரிய விழுமியங்கள்   நாவலில் எங்கும்  வருவதில்லை, எளிதான உரையடல்கள், அரவணைப்புகள், இமயமலையின் நிலவியல்களை, அதன் தொன்மங்கள் மற்றும் முரண்கள் மூலம், இமயமலையின் பிரம்மாண்டத்தின்  அருகில் சிறுகுழந்தையாக வழிநடத்துகிறாள். அவள் இமையத்தின் இயற்கையை, பழங்குடி மரபுகளை, இசை நுணுக்கங்களை எல்லாம் கற்றுக்  கொடுக்கிறாள்.   மந்தாகினி, சோன்ப்ரயாக், நாகேந்தர் தாதா குதிரை லாயம், கௌரிகுந்த்,  த்ரிஜூகிநாராயன் கோவில், டாமோ, மசக்பின், சுன்கியாலி, சௌலாய் மார்ச்சு, தேவதாரு மரங்கள், கஸ்தூரி மிருக், பன்வாலி காந்தா புக்யால் புல்வெளி, ப்ஹரல் ஆடுகள், நர்சிங் காவுன், போட்டியா இனமக்கள், நாய்கள், நந்தா தேவி கோயில்,  குலதேவா கோயில், கங்கீ, ஜாகர், குலதேவதா கதைகள், பகட்வால் என்ற வீரரின் புராண கதைகள், மோனல் பறவைகள்,  கங்கையின் பிறப்பிடம் கங்கோத்ரி பர்வத். பலநூறு பண்பாடுகளையும், நிலப்பரப்பையும் அறிமுகப்படுத்துகிறாள். காலத்தை திரும்பி பார்த்தால் ஹரனுக்கு இப்பயணம் ஆன்மதரிசனமாக இருக்கும். வீட்டை விட்டுகிளம்பிச்செல்என்று தனக்குள் ஏதோ ஒரு குரல் அவனை அழுத்தும்.

நாம் பார்க்கும் இந்த இமயமலை  நமக்கு காளிதாசனால் அறிமுகப் படுத்த பட்டது என்று நடராஜ குரு சொன்னது, சில வருடங்களுக்கு முன்பு பூன் மலைத்தொடரில் உள்ள லிட்டில் சுவிட்சர்லாந்து என்ற மலைக் கிராமத்திற்கு நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கே  உணவு விடுதியில் ஒரு பெரியவரை சந்தித்தேன், அவர் புத்தகம் படித்துக் கொண்டே காப்பியும் குடித்துக் கொண்டிருந்தார். எதார்த்தமாக பேச்சுக் கொடுத்தேன். ஒரு ஆழ்ந்த உரையாடலாக சென்றது. அவர் வியட்நாம் போரில் பங்குபெற்றிருக்கிறார். அதன் பின் நீண்ட காலமாக மனச்சோர்வில் இருந்து, அமெரிக்காவில் நீண்ட பயணம் செய்து, இந்த மலை கிராமத்திற்கு வந்துள்ளார். இலையுதிர்காலத்தின்  அதிகாலை விடுதி அறையிலிருந்து வெளியே வந்தவுடன், மேகங்கள் புகையாக, வண்ணங்களை தெளித்த மலையில் படிந்த காட்சியை பார்த்தவுடன் சற்றென்று அவரின் சோர்வு களைந்து, இனி இங்கு நான் நேர்மறையாக செயலாற்ற வேண்டும் என்று முடிவெடுக்கிறார். தற்போது இங்கிருக்கும் Wild Life-க்கு நிதி திரட்டுவதே ஸ்வதர்மம் என வகுத்துக் கொண்டார். இயற்கையை ரசிப்பதற்கான பயிற்சியை எங்கிருந்து பெற்றீர்கள் என்று கேட்டதுக்கு புனைவுப் புத்தகம்  தான் என்றார். மைத்ரி படிக்கும் போது இச்சம்பவம் ஞாபகம் வந்தது.  

இங்கிருக்கும் சலிப்புகளில் இருந்து விடுபட்டு ஒரு பயணம் செல்வதற்கும் சில அடிப்படை பயிற்சிகள் அவசியம்.  தொடர் பயணங்கள்/கற்றல் வழியாக புனைவெழுத்தாளர், வாசிப்பவரின் அகத்தில் இயற்கை வர்ணனைகளை ஆழமாக நிலைபெறச் செய்யமுடியம். மைத்ரியில் இவ்வுலகமும் அதன் இயங்குவிதியும்  நம் சராசரித்தனத்துக்கு அப்பாற்பட்டவை என்கிறது.  Gestalt theory-யில்  சொல்லப்பட்டது போல, இமயமலையின்  காட்சிகளை கற்பனைமூலம் இணைத்து முழுமையான வடிவங்களாக நாவல் உணரச்செய்கிறது. பயணங்களில்  வாழ்வுக்கான அர்த்தத்தை, விவாதித்தும் முரண்பட்டும் தத்துவ விசாரங்களிலிருந்து மைத்ரி கற்றுக்கொடுக்கிறாள். நாவலில்   இறுதியில் வரும் வலிகள், துயரங்கள், ஐரோப்பிய தத்துவவாதிகளும் (நீட்சே), எழுத்தாளர்களும் (ஃபியோதார் தாஸ்தோவ்ஸ்கி), தொடர்ந்து மனிதர்களுக்கு  துயரங்கள்  ஏன் அவசியம் என்கிறார்கள். துயரங்களே  மனிதனை  கருணையோடு இருக்கச் செய்கிறது, ஆன்மிகத்தை  நோக்கி உந்துகிறது, கலையே கூட துயரங்களின் வெளிப்பாடு அல்லவா . 

மைத்ரி விலகிச் செல்லும் போது ஹரன் துயரங்கள் மூலம் அடையும் விடுதலை உச்சகட்ட நாடகியத் தருணம், அவ்விடத்தில் செவ்வியல் தன்மையை அடைகிறது. ஹரன்  சந்தித்த  துயரங்கள் அனைத்தும் இந்த உச்சக்கணத்துக்கு தானே, அங்கிருந்து நாவல் மீண்டும் தொடங்குகிறது.  ஆம் மைத்ரி கொடுப்பதற்கு மட்டுமே பிறந்தவள். அபினவ் குப்தாவிற்கு தீக்ஷசை அளித்த தேவியே மைத்ரி. யா தேவி சர்வ பூதேஷு!! இலக்கிய படைப்பு நல்ல ஆன்மீகமான அனுபவத்தை நம்மிடம் கொண்டுசேர்த்துவிடும்.  ஞானத் தேடல் கொண்ட படைப்புகளை எழுதும் போது சொற்பொழிவுத்  தன்மை வராமல் இருப்பது அவசியம். ஆன்மிக  வினாவாக வாசகனே எழுப்பிக் கொள்ளுதல் அவசியம். இங்கு சொற்பொழிவுகள் இல்லை. வாசித்து  முடிக்கும் போதே பல ஆன்மிக கேள்விகளை எழுப்ப முடியும். அவ்வகையில் தமிழில் இது புதிய முயற்சி. புகழ்பெற்ற ரஷ்ய இயக்குனர் Andrei  Tarkovsky “இங்கிருக்கும் அனைவரும் நம்முடைய நேரத்தை ஆன்மிகமான மேம்படுத்த வேண்டும் என்கிறார். அதை செய்வதற்கான முக்கிய கருவி கலை என்கிறார்“. அஜிதன் அந்த கருவியை தன் வசமாக்கிக் கொண்டார் என்றே நினைக்கிறேன்.  

அவர் இதுவே தன்னுடைய கடைசி  நாவல் முயற்சி என்று முன்னுரையில் எழுதியுள்ளார். நாவலை வாசித்தவுடன் தோன்றியது, தான் சேர்ந்திருக்கும் எத்துறையிலும் அவரால் சிறப்பாக செயலாற்றமுடியும். அவருக்கு வாழ்த்துக்கள்

நன்றி,

விவேக் 

முந்தைய கட்டுரைகுடவாயில், கடிதம்
அடுத்த கட்டுரைதமிழ் விக்கி- தூரன் விருது, விருந்தினர் : கு.மகுடீஸ்வரன்