ஒரு விளக்கம் ஒரு பட்டியல்- விஷால் ராஜா

விஷால்ராஜாவும் ஒரு மொக்கையும்

அன்புள்ள ஜெ,

தளத்தில் வெளியான குறிப்பை படித்தேன். தமிழ் விக்கி பணி, ஈரட்டி திறப்பு விழா, கட்டண உரை என்று தீவிரமாக இயங்கி வருவதால் இந்த சர்ச்சை உங்கள் கண்களில் பட்டிருக்காது என நினைத்தேன். கெட்ட செய்தியின் ஆற்றலை அப்படி குறைத்து மதிப்பிட்டு விட முடியாதுதான்.

காலச்சுவடு இதழில் அக்கட்டுரையை வாசித்ததும் உடனடியாக எனக்கு ஒவ்வாமை ஏற்பட்டது. ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அதை கடந்துவிட்டேன். பிற்பாடு, காலச்சுவடு ஆசிரியர் சுகுமாரன் அவர்களுக்கு மட்டும் ஒரு தனிச் செய்தி அனுப்பினேன். என் பிரியத்துக்கும் மரியாதைக்கும் உரிய கவிஞர் என்பதோடு அவர் ஒரு சிறந்த இதழாளரும்கூட. எனினும் இந்த சழக்கு எப்படியோ அச்சேறி இருக்கிறது. அவரிடம் நான் கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. சின்னதாக விளக்கம் மட்டும் கொடுத்தேன். அதையே மீண்டும் சொல்ல நினைக்கிறேன்.

தமிழ் விக்கி பாரபட்சமானது என்று கூறும் அக்கட்டுரை, தன் கருத்துக்கு ஆதாரமாக ஒரு முகநூல் பதிவை மேற்கோள் காட்டுகிறது. ஜெயமோகன் தளத்தில் மட்டுமே இலக்கியக் கட்டுரைகள் எழுதுகிறவர்களை, தமிழ் விக்கி பாராட்டுகிறது என்பது அப்பதிவின் சுருக்கம். அப்படி உங்கள் தளத்தில் மட்டும் எழுதுகிறவர்கள் என்று என்னையும் நண்பர் ஏ.வி.மணிகண்டனையும் அப்பதிவு குறிப்பிடுகிறது.

அடிப்படையில் இது பொய்யான தகவல். காலச்சுவடு, உயிர்மை போன்ற அச்சிதழ்களிலும் சொல்வனம், வல்லினம், அகழ் போன்ற இணைய இதழ்களிலும் நான் இலக்கியக் கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். (சிறுகதைகளும்தான்). காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட அசோகமித்திரன் சிறுகதை நூலுக்கு முன்னுரை கூட எழுதியிருக்கிறேன். எனில் ஏன் அப்படி பொய்யாக ஒன்றை எழுத வேண்டும்?

உங்களுடனான என் நட்பு வெளிப்படையானது. அதன் அனுகூலத்தினால் நான் மிகையாக பாராட்டப்படுவதாக ஒருவர் நினைத்தால் அதை விமர்சிக்க எல்லா உரிமையும் இருக்கிறது. என் எழுத்தை முன்வைத்து அதை செய்யலாம். ஆனால் போகிறபோக்கில், ஆதாரமில்லாமல் பொய் சொல்வது ஏற்புடையதல்ல. ஆதாரமில்லாத எல்லா பொய்களும் உள்நோக்கத்தினாலேயே பிறக்கின்றன.

அந்த முகநூல் பதிவுதான் பொறுப்பில்லாமல் எழுதப்பட்டிருக்கிறது என்றால், அதை இன்னொருவர் அப்படியே எடுத்து தன் கட்டுரையில் மேற்கோளாகவும் போட்டிருக்கிறார். போரும் வாழ்வும் நாவலில் இளவரசர் வாசைலி தன் இரண்டு மகன்கள் பற்றி இப்படி சொல்வார்- “ஒருவன் படபடத்த முட்டாள். இன்னொருவன் அமைதியான முட்டாள்”. இதில் ஆகப்பெரிய அபத்தம் – அக்கட்டுரை நடுநிலைமைக்காக வாதிடுகிறது என்பதே. தமிழ் விக்கி பாரபட்சமில்லாமலும் ஆதாரங்கள் அடிப்படையிலும் செயல்பட வேண்டும் என்று அறிவுரை சொல்கிற அந்த நபர், ஆதாரமற்ற ஒரு முகநூல் பதிவை ஏதோ பத்திர ஆவணம் போல் மேற்கோள் காட்டுகிறார். “நீ உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறதென்ன?”

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். இலக்கிய இடம் என்பது ஒருவருடைய எழுத்தின் அடிப்படையிலேயே தீர்மானம் ஆகிறது. அவர் எழுத்து எங்கே பிரசுரமாகிறது என்பதை பொறுத்தல்ல. சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் முதலிய மாஸ்டர்களின் பக்கத்து அலமாரியில் வைத்துதான் காலச்சுவடு மற்றவர்களின் புத்தகங்களையும் விற்பனை செய்கிறது. அப்படி அடுத்த வரிசையில் இருப்பதாலும் நவீன ஓவிய அட்டைப்படத்தோடு அழகிய வடிவமைப்பில் அச்சாவதினாலும் ஒரு சுமாரான எழுத்தாளர் நல்ல எழுத்தாளராகிவிட முடியுமா? எனில் இலக்கிய விமர்சனம் எனும் துறையே தேவை இல்லையே. தரமான எழுத்தாளர்கள் கூட தேவை இல்லை. தரமான அச்சகங்களே போதும் எனும் முடிவுக்கு வந்துவிடலாம். மேலும், “நூறு பேருக்கு எழுதுகிறவர்கள்” என சிற்றிதழ் எழுத்தாளர்களை வெகுஜனச் சூழல் மட்டம் தட்டுவதற்கு பின்னால் என்னவிதமான மேட்டிமை நோக்கும், பாதுகாப்பின்மையும் தொழில்படுகின்றனவோ அவையே “ஜெயமோகன் தளத்தில் எழுதுகிறவர்கள்” எனும் குரலுக்கு அடியிலும் உள்ளன. அம்மனநிலையே பிழையானது.

அந்த முகநூல் பதிவில் என்னோடு சேர்த்து நண்பர் ஏ.வி.மணிகண்டனும் வம்புக்கு இழுக்கப்பட்டுள்ளார். மணி, உங்கள் தளத்தில் மட்டுமே எழுதியிருக்கிறார் என்பது உண்மையே. ஆனால் அவருடைய கலை இலக்கிய கட்டுரைகள் முக்கியமானவை. காண்பியல் கலை மற்றும் இந்திய தத்துவம் சார்ந்த நுட்பமான அவதானங்களையும் புதிய கண்டடைதல்களையும் முன்வைப்பவை. கவிதைகள் பற்றியும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார். ஷங்கர் ராமசுப்ரமணியன் பற்றி அவர் எழுதிய “பழம் உண்ணும் பறவை” கட்டுரைக்கு நிகராகக் குறிப்பிட, தமிழில் நிறையக் கட்டுரைகள் கிடையாது. உங்கள் தளத்தில் வெளியிடாமல் வெறுமனே நோட்டீஸாக அச்சடித்து வினியோகித்திருந்தால்கூட அதன் தரத்தில் ஒரு குறையும் நேர்ந்திருக்காது. எனவே ஓர் எழுத்தாளனை விமர்சிக்கவும் நிராகரிக்கவும் அவன் எழுத்தை படிக்கும் வழக்கத்தையாவது இவர்கள் வளர்த்துக் கொள்ளலாம்.

*

க.நா.சுவின் தொடர்ச்சியில் வருகிற இலக்கிய விமர்சகனாக தமிழ் விக்கி என்னை அடையாளப்படுத்துகிறது. நான் அடிக்கடி வியப்போடு நினைத்துக் கொள்கிற ஆளுமை க.நா.சு. சமீபத்தில்கூட அவரை மிக உயர்வாக நினைத்துக் கொண்டேன். மேத்யூ அர்னால்டின் புகழ் பெற்ற “நிகழ்காலத்தில் விமர்சனத்தின் பயன்” (1864) கட்டுரையை படிக்கும்போது அவர் ஞாபகத்தில் வந்தபடி இருந்தார்.

ஒரு சூழலில் ஏன் இலக்கிய விமர்சனம் காத்திரமாக நிகழ வேண்டும் என்பதை தன் கட்டுரையில் மேத்யூ அர்னால்ட் விரிவாக விளக்குகிறார். சிறந்த எழுத்தாளர்கள் தம் தனித் திறமையினால் மட்டும் தோன்றுவதில்லை; ஒரு சூழலின் வளத்தினாலேயே தோன்றுகிறார்கள் எனும் மேத்யூ அர்னால்ட் எந்த பெரும் படைப்பும் ஒரு மனிதனின் ஆற்றலும் ஒரு தருணத்தின் ஆற்றலும் சந்திக்கும் புள்ளியிலேயே உருவாகிறது என்கிறார். ஷெல்லி, வோர்ட்ஸ்வொர்த் இருவரைவிடவும் கதே சிறந்த கவிஞனாக இருப்பதற்கு காரணம் ஜெர்மானியச் சூழலே. எனவே இலக்கியக் கருத்துக்கள் செழிப்பாக இருக்கும் இடத்திலேயே சிறந்த எழுத்தாளர்கள் உருவாக முடியும் என்பது மேத்யூ அர்னால்டின் முடிவு. இதை படிக்கையில், இந்த கருத்தை முன்வைக்கவே க.நா.சு தமிழில் ஓயாமல் போராடினார் என்பது கவனத்தில் எழுந்தது. தன் விமர்சனக் கலை நூலில் அவர் இப்படி எழுதுகிறார். “தமிழ் இலக்கியத்தில் வளம் தொடர்ந்து ஏற்படுவது என்பது இந்த இலக்கிய விமரிசனக் கலை வளர்ந்து மேஜராவதைப் பொறுத்தே இருக்கிறது என்றும் எனக்குத் தோன்றுகிறது”. தீர்க்கமான விமர்சனக் கருத்துக்கள் வழியாக சூழலை மேம்படுத்தி, நல்ல எழுத்தாளர்கள் உருவாவதற்காக நம் மண்ணை வளப்படுத்தியவர் க.நா.சு.

இந்த நேரத்தில் இதுவரையிலான என் கட்டுரைகளில் நான் முக்கியமாக கருதுகிறவற்றை இங்கே பதிகிறேன். வேலைக்கு விண்ணப்பிப்பது போல் இப்படி பட்டியல் போட வேண்டிய நிலையில்தான் நம் சூழல் இருக்கிறது.

பலூன் கோடாரி

மனிதனாக இருப்பது என்றால் என்ன? அல்லது கொலை செய்யாமல் இருப்பது எப்படி?

இன்னும் நிகழாதவை இங்கு ஏற்கனவே வந்துவிட்டன!

முதல் மனிதன்

குணச்சித்திரன் பராக்

அந்த மூன்றாவது கை

அழியாத் தடம்

ஒரு உலகத்தில் ஒரு வீட்டில் ஒரு மனிதன்

புதிய தலைமுறை எழுத்தாளர்களுக்கு உடனடியாக கிடைக்கும் அங்கீகாரங்களும் பாராட்டு மொழிகளும், நல்லது செய்யும் அளவுக்கே – சமயங்களில் நல்லதைவிடவும் கூடுதலாக – தீமை விளைவிக்கக் கூடியவை என்பது நான் கவனித்த விஷயம். எனவே தமிழ் விக்கியில் உள்ள அந்த வரியை அசௌகர்யத்துடனே முதலில் படித்தேன். அது எழுதப்பட்டிருக்க வேண்டாம் என்றே எனக்கு தோன்றியது. மேலும் புனைவாசிரியன் என்பதே எந்நிலையிலும் என் அடையாளம். இலக்கியத்தை புரிந்துகொள்ளவே நான் விமர்சனக் கட்டுரைகளும் எழுதுகிறேன். ஆனால் விரிவாக எழுதப்பட்டிருக்கும் என் கட்டுரைகளை திரும்பி பார்க்கும்போது, தமிழ் விக்கியின் அந்த வரியில் எந்த தவறும் இல்லை என்று படுகிறது. முன்முடிவுகளில்லாத வாசகர்களும் அதே எண்ணத்தையே அடைவார்கள். க.நா.சு இருந்திருந்தால் அவருக்கும் இவை பிடித்தமாய் இருந்திருக்கும்.

அன்புடன்,

விஷால் ராஜா.

***

அன்புள்ள விஷால்

அந்த முகநூல் உளறல் மற்றும் காலச்சுவடு மொக்கை பற்றி நண்பர்கள் அமர்ந்திருந்தபோது ஒரு சின்ன விவாதம் வந்தது. அவையில் இந்த ஆண்டு இலக்கியம் அறிமுகமான 21 வயதான இளைஞர் இருந்தார். அவரிடம் மூலப்பதிவுகளை வாசிக்கச் சொன்னேன். “நீங்க என்ன நினைக்கிறீங்க?’ என்று கேட்டேன்.

“சார், க.நா.சுவுக்கு நான்கு தலைமுறையா விமர்சன மரபிலே வாரிசுகள் இருக்காங்கன்னு விக்கி பதிவு சொல்லுது. நாலாம் தலைமுறை வாரிசா விஷால்ராஜாவோட பேரு இருக்கு. க.நா.சு 1988 வரை வாழ்ந்தவர். அப்டின்னா நாலாம்தலைமுறைக்கு 35 வயசுகூட ஆகியிருக்காது. இப்ப எழுத வந்த ஒருத்தரத்தான் சொல்லமுடியும். ஒரு நாலஞ்சு கட்டுரை எழுதினவரத்தான் சொல்லமுடியும்… விஷால்ராஜா எழுத்துக்களிலே க.நா.சுவோட பார்வை இருக்குன்னு சொல்லுது இந்த பதிவு… அதிலே என்ன தப்பு?” என்றார்.

இந்த ஒன்றாம் பாடத்தைக்கூட புரிந்துகொள்ளும் திராணி இல்லாத மோட்டாக்கள் நடுவேதான் இங்கே அத்தனை விவாதமும் நடந்துகொண்டிருக்கிறது. ஆகவே நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது பொறுமை, பொறுமை, பொறுமை என்றுதான்.

*

பொதுவாக தமிழ்ச்சூழலில் அன்றுமுதல் இன்றுவரை பாமரர் சொல்லும் ஒரு சில பொதுப்புரிதல்கள் உண்டு. ஜி.நாகராஜன் பற்றி பேசினால் “அவர் இவ்ளவுதானே எழுதியிருக்கார்” என்பார்கள். யுவன் சந்திரசேகர் பற்றி பேசினால் “அவரு இருநூறு பேர் படிக்கிற புக்லே எழுதுறவர்” என்பார்கள். எந்த சிற்றிதழ் எழுத்தாளருடைய விக்கிப்பீடியா பக்கத்திற்கும் செல்லுங்கள் “இவரை பற்றி எழுதவேண்டுமா? இவருக்கு தகுதி உண்டா?’ என்று ஒரு மொக்கை வந்து கேட்டிருக்கும்.

எண்ணிக்கையை அளவீடாகக் கொண்டால் நூற்றுக்கணக்கான நூல்களை எழுதியவர்கள் சிலநூறு பேர் தமிழகத்தில் உள்ளனர். ஆனந்தவிகடனிலேயே எழுதிக்குவித்தவர்களும் பலநூறுபேர் உள்ளனர். தமிழ் விக்கியின் அளவுகோல்கள் அவை அல்ல. தமிழ்விக்கிக்கு ஓர் ஆசிரியர் குழு உள்ளது. அதில் இருப்பவர்களை விட தகுதியானவர்கள் என எவரும் வெளியே இல்லை. அந்த ஆசிரியர்குழு ஒருவரின் பங்களிப்பை மதிப்பிடுகிறது. அவருடைய தொடர்ச்சியை வரையறை செய்கிறது. தமிழ்விக்கி உங்களுடைய எல்லா விமர்சனக் கட்டுரைகளையும் மதிப்பிட்டு, அதிலுள்ள தனிப்பட்ட ரசனை சார்ந்த விமர்சன அளவுகோலை க.நா.சு மரபு என அடையாளம் கண்டே அந்த வரியை எழுதியிருக்கிறது. அது எதிர்காலத்தை முழுதுற நோக்கி எழுதப்பட்ட வரி. ஏனென்றால் இது ஒரு சாதாரணக் கட்டுரை அல்ல. கலைக்களஞ்சியத்தில் ஒரு வரி. என்றும் அது இங்கே இருக்கும்.

தமிழ் விக்கியின் நோக்கமே எப்படியாவது தமிழ் நவீன இலக்கியம், பண்பாட்டாய்வில் மெய்யாகவே நடந்துள்ள சாதனைகளையும் அவற்றின் தொடர்ச்சியையும் இங்குள்ள பொதுச்சூழலுக்கு கொண்டுசெல்வதுதான். ஆனால் பாமர உள்ளமோ ‘எனக்கு ஏற்கனவே தெரியாததைச் சொன்னால் அது முக்கியமென நான் நினைக்க மாட்டேன்’ என்கிறது. அதற்கு ஒன்றும் தெரியவும் தெரியாது. அந்தப் பாமரக்குரலை தன்னை சிற்றிதழ் மரபின் தொடர்ச்சி என எண்ணிக்கொள்ளும் ஓர் இதழ் வெளியிடுகிறது. இந்த அபத்தமே சுட்டிக்காட்டப்படவேண்டியது.

*

பொதுவாக ஓர் இளம்படைப்பாளி கவனம்பெற்றதுமே சூழலில் ஒரு கசப்பு உருவாகிறது. அது நையாண்டியாக, முத்திரை குத்தலாக வெளிப்படுகிறது. குறிப்பாக குழு முத்திரை உடனடியாக வந்து சேரும். எனக்கு சுந்தர ராமசாமி குழு என்னும் முத்திரை கொஞ்சநாள் இருந்தது. அந்த குழுமுத்திரை குத்தும் குரல்களின் உட்பொருளை எளிதில் ஊகிக்கலாம். திறனற்ற, எவரையும் கவரும் தகுதி அற்ற எழுத்தாளர்களின் இயல்பான வெளிப்பாடு அது. ‘கவனிக்கப்பட்டவர்கள் எல்லாருமே குழு அரசியல் செய்து அதை அடைந்தவர்கள். எனக்கு குழு அரசியலில் ஆர்வமில்லை. ஆகவே என்னை எவரும் கவனிப்பதில்லை’ அந்த சுயசமாதானத்தில் உள்ள தன்னிரக்கத்தின் இழிவை நாம் பொறுத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். அந்த எளிய மனிதர்கள் வேறு எப்படி தன்னை தேற்றிக்கொள்ளவும், இங்கே தொடர்ந்து இருக்கவும் முடியும்?

ஓர் இளம் எழுத்தாளர் தன் இடத்தை நிறுவுந்தோறும் தீவிரமான எதிர்ப்பும், நிராகரிப்பும் உருவாகும். அதைக் கடந்து நிலைகொள்வதே எழுத்தாளனின் முன் உள்ள அறைகூவல். தன் படைப்பாணவத்தால், தன் படைப்புகள் மீதுள்ள நம்பிக்கையால் அவன் அதை எதிர்கொள்ளவேண்டும். அதற்கான மனநிலைகளை அவனே உருவாக்கிக் கொள்ளவேண்டும். சிலர் எதிர்த்து நிமிர்ந்து நிற்பார்கள். சிலர் முற்றிலும் ஒதுங்கிச் செல்வார்கள். சிலர் படைப்புக்குள் ஒடுங்கிக்கொள்வார்கள். அவரவர் இயல்பு சார்ந்தது அது. அது ஓர் ஆரம்பகட்ட ‘அமிலச்சோதனை’. புகழுக்குக் கொடுத்தாக வேண்டிய விலை. ஆனால் கவனிக்கப்படாமல் போவதை விட அது மேல்.

ஜெ

***

விஷால் ராஜா – தமிழ்விக்கி

க.நா.சுப்ரமணியம்- தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைசுனில் கிருஷ்ணனின் காந்திய நூல்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் பதிப்பகம், புதிய நூல்கள்