முதல் ஆறு -கடிதங்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்

பொலிவதும் கலைவதும் அமேசான்


அன்புள்ள ஜெயமோகன்,

முதல் ஆறு சிறுகதையை வாசித்தேன். சென்ற வருடம் abundance என்ற வார்த்தை எனக்கு கிடைத்தது. என்றோ படித்த உங்கள் பதிவொன்றில் நீங்கள் சொன்னது. வார்த்தைகள் மாறியிருக்கலாம். இத்தனை சிறிய மனிதருக்கு இவ்வளவு பெரிய உலகம் கொடுக்கப்பட்டுள்ளது. பார்க்கவே மாட்டேனென்று முடிவெடுத்தவன் தவிர மற்ற எல்லாருக்கும் இந்த உலகின் abundance தெரிய வரும்.

அவன் ஏழுவருடமாக சென்று வருகிற தடம். சலிப்பான ஒரு தடம். தினம் தினம் பொருள் தருகிற. அந்த நாளை நிறைக்கிற எதையும் அவன் காண்பதில்லை. ஏழு வருடத்தில் இந்த இரண்டு வருடங்கள் மட்டும் ஒளி கொண்டது. ஒவ்வொரு நாளையும் பொருளுள்ளதாக, தீவிரம் மிக்கதாக ஆக்குகிறாள் அவள். அவள்கூட அல்ல அவள் மேல் இவன் கொண்ட விழைவால் கிடைக்கும் இனிமை.

இனிமையில் திளைக்கும் தருணத்தில் தர்க்க மனம் அந்த இனிமையை பாதிக்கும் காரணங்களை ஒன்றொன்றாய் அடுக்கி அந்த தடைகளை களைந்து இனிமையை தக்கவைக்க முயலும். நம்முள் தக்கவைக்க வேண்டுமென்ற முனைப்பு வந்தபின் இனிமை மெல்ல கரைய ஆரம்பிக்கும். இப்ப கிடைக்கும் இனிமை கரைந்துவிடுமென்ற பயத்திலே அவன் அவளிடம் தன்னை வெளிப்படுத்தவில்லை.

தற்செயலாக நடக்கும் கலவரத்தில் பேருந்து புதியபாதையில் செல்ல, தன்னை சுற்றியுள்ள சூழலின் abundanceஐ  உணர்ந்துகொள்கிறான். அது வற்றாத இனிமை, என்றும் இருக்கும் இனிமை, மறையாத இனிமை, கொஞ்சம் கண் திறந்தால் காணும் இனிமை. அதை அறிந்த மனம் தன்னால் துணிவு கொள்ளும். அந்த இனிமையின் ஒரு துளிதான் அவளென கண்டுகொள்ளும். முடிவிலி வரை விரிந்திருக்கும் தேனின் ஒருதுளி அவள். அவனால் அடைய முடியும் துளி. அடைவேனா, இல்லையா கேள்விகளுக்கு அப்பால் இருக்கும் துளி. அவனுக்குக்காக பிறந்த துளி. அவன் நெஞ்சில் நிறையும் துளி.அங்கு மட்டுமே நிறைவு காணும் அத்துளி.

அன்புடன்

மோகன் நடராஜ்

***

அன்புள்ள ஜெ

புனைவுக்களியாட்டு சிறுகதைகளை நூல்களாக வாசிக்கிறேன். என் வாசிப்பில் முதலிடம் பெறுவது பொலிவதும் கலைவதும் தொகுப்புதான். வெளிவந்தகாலத்தில் வெவ்வேறுவகையான கதைகள் ஒன்றையொன்று மறைத்தன. அன்று தங்கப்புத்தகம் கதைகளில் மயங்கிக்கிடந்தேன். இன்று வாசிக்கையில் முதல் ஆறு, பொலிவதும் கலைவதும் கதையெல்லாம் மென்மையான கிளாஸிக்குகள் என்று தோன்றுகிறது. மயிலிறகாய் மயிலிறகாய் என்ற பாட்டு நெஞ்சுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

வெங்கட்ராமன்

***

பொலிவதும் கலைவதும் வாங்க

முந்தைய கட்டுரைஆன்மீகப் பயணத்தில் மறுதரப்புகளை கற்றுக்கொள்ளவேண்டுமா?
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் கவிதைப் பட்டறை – சரவணன்