மைத்ரியுடன் இரண்டு நாட்கள்

அன்பின் ஜெ,

மைத்ரியை நான் வாசித்தபோது பெரும்பாலும் அதை ஒரு லட்சிய கனவுவெளியாகவே வாசித்தேன். ஹரனின் மூன்றுநாள் பயணமாக நாவல் விரிகிறது.

லட்சிய நிலத்தில் எவ்வித திட்டமிடலும் இல்லாத வகையில் அமைந்த ஒரு பயணம், பயணத்தில் சந்திக்க நேரும் அந்நிலத்தின் வடிவான களங்கமில்லாத பெண், அங்கு பகற்கனவுகளில் மட்டுமே சாத்தியமாகக்கூடிய வகையில் அவர்களுக்குள் ஏற்படும் லட்சிய உறவு. மூன்று நாட்களில் முழுமையடைந்து விட்ட முழுவாழ்வு. மனித வாழ்வில் நாம் இதுவரை கண்டடைந்த முதன்மையான இனிமைகள் அனைத்தும் அந்த மூன்று நாட்களுக்குள் அவனுக்கு அனுபவமாகின்றன. பசுமை போர்த்திய பெருமலைகள், அதை சுற்றிய அரைஞான் சாலையில் நிகழும் திகில் பயணம், ஆசுவாசப்படுத்தும் தோழியாய் உடன்வரும் மந்தாகினி, புன்னகையை நிரந்தர முகபாவமாக கொண்ட மனிதர்கள், பெண்மையின் கண்ணிமையின் அணுக்கம், தாலாட்டும் பழங்குடி இசை, பள்ளத்தாக்கை நோக்கி விரிந்த புல்வெளி, தீராப்பசி கொண்ட பெட்டை நாய், விதவிதமான மனிதர்கள் (டிஜே பாட்டு போட்டுக்கொண்டே ஒற்றைக் கையில் ஜீப் ஓட்டும் இளைஞன், கதையளக்கும் மிலிட்டரிக்காரர்), ஆற்றோரம் அமைந்த விடுதியில் கிடைக்கும் தனிமையான மாடி அறை, கடும் பயணத்தில் மட்டுமே ஏற்படும் பசியும் களைப்பும் அதற்க்கேற்ற உணவும் உறக்கமும், குதிரையின் பலமும் அதைவிட புத்திக்கூர்மையும் கீழ்படிதலும் கொண்ட கச்சர்கள், மலைக்கோயிலில் நிகழும் திருமண விழா, வண்ணங்கள், ஆபரணங்கள், வாத்தியங்கள், சிகப்பு முத்தாக ஜொலிக்கும் மணப்பெண், செவ்வியல் செதுக்கல்கள் ஏதுமற்ற அம்மையப்பனின் தரிசனம், அறுபடாத மசக்பின் இசை, மூவுலகையும் இணைக்கும் வானுயர் தேவதாருக்கள், சீதை மயங்கிய மாயமான், மலைவெளி எங்கும் விரிந்த வண்ண மலர்வெளிகள், அதை கொய்ய வரும் தேவதைகள், நாகரிகம் தீண்டா மலைக்கிராமங்கள், அங்கு குழந்தைகள் தலைமையேற்று நடைபெறும் ஒரு திருவிழா, குழந்தை சப்பரங்கள், வீட்டு முற்றத்தில் குழந்தைகள் விட்டுச்செல்லும் மலர்க்குவைகள், நிலத்தின் சுவையாய் அமைந்த முழுமையான விருந்து, உணவின் சூழலின் மயக்கத்துடன் கூடிய பின்மதிய உறக்கம், இளமழையின் பொன் தூறல், இவையாவாகவும் விரிந்து மேலும் நுட்பங்களை காட்டி தன்னை முழுதளிக்கும் காதலி, அவளுடன் ஏற்படும் மாயா.

துலாவின் மறுபக்கமாக அவனும் சிற்சில தருணங்களில் மைத்ரியும் கொள்ளும் அகத்தனிமை மட்டுமே நாம் கீழிறங்கி மண்ணில் கால் பதிக்கும் இடங்கள். அந்த அகத்தனிமையில் இந்த இனிமைகள், உறவுகள் யாவும் என்னவாக பொருள் கொள்கின்றன என்பதே என்னுள் நாவல் எழுப்பிக் கொள்ளும் முதன்மையான கேள்வியாக இருந்தது. பெரும்பாலும் இவையாவும் பொருளற்றவை என்பதே நவீனத்துவ பதில். ஆனால் ஹரன் அடைந்ததோ அல்லது மைத்ரி அளித்ததோ அவ்வாறான எளிய ‘பொருளற்ற’ உலகியல் இனிமைகள் அல்ல. அந்த இனிமையான பயணத்தின் வழி அவர்கள் தொட்டுத் தொட்டு செல்வது இங்கிருக்கும் எல்லாவற்றிலும் அமைந்த சாரமான ஒன்றை. அது தொலைதூர மலைகளின் தவத்தில் மட்டுமே காணக்கிடைப்பது, அல்லது எப்போதும் கைக்கெட்டும் தொலைவில் இங்கிருப்பது. பொன்னொளிர் தரிசனமாக நம்மை கரைத்தழிப்பது. பின்னர், கடும்குளிரிலும் களைப்பிலும் வெந்நீர் ஊற்றாக நம்மை ஆற்றுப்படுத்துவது. விரும்பினால் லட்சம்கோடி விண்மீன்களாக மாறி நம்மை சூழ்ந்து கொள்வது. ஆம் இயற்கையை இந்த அலகிலா விளையாட்டை நிரைந்து ததும்பும் ஆற்றலை அறிந்தவனுக்கு தனிமையில்லை, மைத்ரி என்றும் உடனிருக்கிறாள்.

அன்புடன்,

பாரி.

குறிப்பு: கடந்த ஒன்றரை வருடங்களாக என் மனைவி ரஞ்சனி அரசியிடம் சில தமிழ் கதைகளை வாசிக்க வைக்க தூண்டில் போட்டிருக்கிறேன். அவள் இதுவரை எதிலும் சிக்கியதில்லை. ஓரளவு நம் சூழலில் இயல்பாகவே உள்ள வாசிப்பின் மீதான ஆர்வமின்மையே காரணம். ஆனால் ஓரளவுக்குமேல் 90ஸ் கிட்ஸ்களுக்கு தமிழ் லிபி அளிக்கும் தடை இன்னொரு காரணம். எனவே நானும் இதுவரை எதையும் பெரிதாக வற்புறுத்தியதில்லை. மற்றபடி அவளுக்கு கதைகளின்மேல் பொதுவான ஆர்வம் உண்டு. இரவுகளில் என்னிடம் கதை சொல்ல கேட்பாள், பல கதைகளை முழுமையாகவே வாசித்துக் காட்டியிருக்கிறேன். இம்முறை நான் மைத்ரி வாசித்தவுடன் கதை கேட்டாள். நான் பொதுவான கதையோட்டத்தை சொல்லி ‘அவர்களின் லட்சிய காதல் என்ன ஆனது என்பதுதான் மிச்ச கதை’ என்பதுபோல பாதியுடன் நிறுத்திவிட்டேன். அவள் மேலும் சில கேள்விகள் கேட்டுப்பார்த்து விட்டு என்னில் ஆர்வமிழந்து அவளே வாசிக்கத் துவங்கினாள். எனக்கு அவள் முழுதாக வாசிப்பாள் எனும் நம்பிக்கையிருக்கவில்லை. நீண்டநாள் கழித்து தமிழில் வாசிப்பதால் முதல் சில அத்தியாயங்களுக்கு வாசிப்பு சரளத்தில் தடை இருந்தது. ஐந்து அத்தியாயங்கள் வரை புதிய சொற்களுக்கு என்னிடம் அர்த்தம் கேட்டுக் கொண்டிருந்தாள். அவளுள் ஏதோவொன்று நிகழ்வதை உணர்ந்தேன்.

இரண்டாம் நாள் மாலை வாசிப்பில் அமர்ந்தவள் அதனுள் முழுமையாக ஆட்கொள்ளப்பட்டிருப்பதை கவனித்தேன். இரவு மூன்று மணிவரை அமர்ந்து ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டிருக்கிறாள். எனக்கு அடுத்தநாள் காலை தான் தெரியும். மிகவும் பரவசமாக தான் ரசித்த இடங்கள், சம்பவங்கள் என முழுக் கதையையும் அதன் நுட்பங்களுடன் சொல்லிக் கொண்டிருந்தாள். அவள் செய்த ஒரே பிழை ஒரு படைப்பின் முதற் வாசிப்பிலேயே பல இடங்களை சொந்த வாழ்வுடன் தொடர்புறுத்தி வாசித்தது. அதுவும் மைத்ரி போன்று முற்றிலும் லட்சிய வெளியில் நிகழும் ஒரு படைப்பை எவ்விதத்திலும் அன்றாடத்துடன் தொடர்புறுத்த அச்சமயத்தில் என் மனம் விரும்பவில்லை. ஒரு படைப்பின் முதற்கட்ட வாசிப்பு என்பது முற்றிலும் அப்பிரதிக்குள் அது அளிக்கும் வாசிப்பு சாத்தியங்களாகவே இருக்க முடியும். வாசிக்கும் அனைத்து விஷயங்களையும் அன்றாட சொந்த அனுபவங்களுடன் தொடர்புறுத்துவது என்பது படைப்பின் தீவிரத்தையும் செறிவையும் கீழிறக்குவதாகவே அமையும் என்பதை சொன்னேன். அவள் சற்று தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு மேலும் நாவல் குறித்து பேசலானாள். மைத்ரியின் வழி முற்றிலும் புதிதாக அவளை நான் கண்டுகொண்டேன். நுட்பமான இடங்களை கண்டுகொள்வதும் உருவகங்களை விரித்துக் கொள்வதும் சாத்தியமான இடங்களில் சொந்த வாழ்வு அனுபவங்களை பரிசீலப்பதுமாக விரிந்து சென்றது அவளது வாசிப்பு. மேற்சொன்ன முதற்கட்ட வாசிப்பை தாண்டி ஒரு படைப்பின் இரண்டாம் கட்ட வாசிப்பு என்பது படைப்பின்வழி நம்மை நாம் கண்டுகொள்வதாகவே அமைய முடியும். அவள் நேரடியாக அந்த இரண்டாம் கட்ட வாசிப்புக்கு வந்துவிட்டிருந்தாள். பேசிப் பேசி தீராமல் மீண்டும் இன்று அதிகாலை நான்கு மணிக்கு மைத்ரி குறித்த தன் வாசிப்பை கடிதமாக அனுப்பியிருந்தாள்.  இதுவரை அவள் எனக்கு அனுப்பியதிலேயே மிகவும் அந்தரங்கமானதும் ஆத்மார்த்தமானதுமான கடிதம். அவள் பேரழகியாக (https://www.jeyamohan.in/199/) தோன்றிய தருணங்களில் ஒன்று.

அஜிதன் என்னும் ஆசிரியருக்கு வணக்கம். அஜிக்கு எங்கள் நன்றியும் அன்பும்.

டி.ஏ.பாரி

முந்தைய கட்டுரைஇருளில் வாழ்தல் -ஸ்ரீராம்
அடுத்த கட்டுரைஅறம் ஆங்கில மொழியாக்கம்- சுசித்ரா