க.நா.சு உரையாடல் அரங்கு

யுவன் சந்திரசேகர், தமிழ் விக்கி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். இந்த வருடம் தங்களின் மற்றும் அருண்மொழி நங்கை அவர்களின் வருகை அமெரிக்க வாசகர்களுக்கு வெவ்வேறு வகையில் இலக்கிய அனுபவத்தை தந்தது. தமிழ்விக்கி துவக்க விழா, பூன் முகாம்,  நூலகங்களில் நடந்த வாசகர்கள் சந்திப்பு, நண்பர்களின் வீட்டில் நடந்த சந்திப்பு என மே மாதம் முழுதும் எங்களை அறிவியக்க உலகில் வைத்திருந்தீர்கள். அடுத்து என்ன, அடுத்து யார் வரப்போகிறார்கள் என்ற கேள்விகளை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நண்பர்கள் கேட்டுக்கொண்டே உள்ளார்கள்.

பூன் முகாம் பற்றி எழுதும்பொழுது, திட்டத்தின்படி, ஒவ்வொன்றும் நேரத்திற்கு நடந்தது என்று பாராட்டியிருந்தீர்கள். எல்லாம் தங்களிடமும், நண்பர்களிடமும் கற்றுக்கொண்டதின் பயிற்சியே அன்று வேறில்லை. நாம் 2020-ல், தமிழ் ஆளுமைகளுடன் நடத்திய ஆறு zoom நிகழ்வுகள் மிக முக்கிய காரணம். பழனி, சங்கர் பிரதாப், சிஜோ, பாலாஜி ராஜூ என நண்பர்கள் கோயம்புத்தூரில் நடக்கும் விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்துகொண்டு, அந்த அனுபவத்தை எடுத்து வந்தார்கள். ஊட்டி முகாமில் கலந்துகொண்ட நண்பர்கள், அதை அப்படியே இங்கு நடத்திக் காண்பிக்க ஆசைப்பட்டார்கள். எல்லாமும் சேர்ந்து ஒரு கட்டுக்கோப்பான நிகழ்வுகளை நடத்தும் அறிவியக்கமாக உருவெடுத்துவிட்டோம். மேலும் தொடர்வதில் ஆர்வமுடன் உள்ளோம்.

முக்கியமாக, தங்களிடம் போனில் பேசியதைப்போல, zoom நிகழ்வுகளை மீண்டும், க.நா.சு உரையாடல் அரங்கு என்ற தலைப்பில் தொடரலாம் என உள்ளோம். இரு மாதத்திற்கு ஒரு முறை என்று திட்டமிட்டு ஒவ்வொரு ஆளுமையாக அழைத்து கலந்துரையாடல் நடத்தலாம் என உள்ளோம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா), கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினருக்கு தக்க சன்மானமும் கொடுத்து சிறப்பிக்கும். முதல் நிகழ்வு, ஆகஸ்ட் 6-ஆம் தேதி, இந்திய நேரம் இரவு 8:30-க்கு, எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் அவர்களுடன் நடத்த திட்டமிட்டுள்ளோம். நிகழ்விற்கான அறிவிப்பு பத்திரிகை தயாராகிக்கொண்டுள்ளது.  நண்பர்கள், யுவன் சந்திரசேகர் அவர்களின் படைப்புகளை வாசித்து, கலந்துரையாடலுக்கு தங்களை தயார் செய்துகொள்ள இக்கடிதத்தின் மூலம் முன்னறிவிப்பு கொடுக்கிறோம்.

இந்த முறை ஒரு வசதி, நண்பர்கள் தமிழ் விக்கி பக்கத்திற்கு சென்று வரவிருக்கும் விருந்தினரைப் பற்றியும், அவர்களின் நூல்கள் விபரங்களையும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ளலாம்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

 

முந்தைய கட்டுரைதமிழ்ப்பண்பாட்டுக்கு ஒரு நூல் -கடிதமும் பதிலும்
அடுத்த கட்டுரைவனவாசம் முதலிய கதைகள் -கடிதங்கள்