வனவாசம் முதலிய கதைகள் -கடிதங்கள்

விஷ்ணுபுரம் பதிப்பகம்


விஷ்ணுபுரம் பதிப்பக நூல்கள், கோவை புத்தகக் கண்காட்சியில்

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று வனவாசம் கதையை வாசித்தேன். வனவாசப் பருவம் எல்லா மனிதர்களுக்கும் இருக்கும். நாடுகளுக்கும் இருக்கும். கலைகளுக்கும் இருக்கும். அந்த பருவத்தை அது கடந்துதான் வரவேண்டும்.வனவாசம் தண்டனையா? சுகபோகத்தில் சிக்கிவிட்டு பார்த்தால் தண்டனைதான். நான் வனவாசத்தை இப்படி எடுத்துக்கொள்கிறேன். படிக்கப் பிடிக்காது . ஆனாலும் படிப்பில் முதல் மாணவன். படித்ததற்கு காரணம் அம்மா, போட்டியாய் இருந்த சுகுமார், ரேங்க் சீட்டில் எண் ஒன்றை ஆசிரியர் எழுதும் முறை. எண் ஒன்றுக்கு பீடமும், கிரீடமும் கொடுப்பார்கள்.அது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதை வாங்கினால் ஒரு பெருமை.

என்னுடைய வனவாசம் ஸ்டடி விடுமுறையில் தொடங்கும். விடுமுறை தொடங்கியவுடன் அனைத்தும் தீவிரம்கொண்டு என்னை இழுக்கும். கோவில் திருவிழா பாட்டு, தொலைக்காட்சியில் பிடித்த சினிமா, அதுவரை காதுகொடுத்து கேட்டிராத அம்மா பேசும் கதைகள் கேட்க கேட்க இனிக்கும். இதனை வென்றுவிட்டு படிக்க அமர்வேன். மனதை சமாதானம் சொல்லி அமரவைப்பேன். எழுதும்போது என்னை நானே நினைத்துக் கொண்டு சிரித்துக்கொள்கிறேன்.இந்த வனவாசம் தேர்வு முடியும் வரை தொடரும். வனவாசத்தை வென்று கடந்த பின் ஒரு நிறைவு கிடைக்கும். அது தேர்வில் மதிப்பெண்ணில் வெளிப்படும்.

இக்காலகட்டம் கூத்து கலைக்கு வனவாசம். கூத்துக்கலையை வென்றது வேறொரு கலைதான். மீண்டும் கூத்து வெல்லுமா? ஆமா, இப்ப அர்ஜுனன் வேசத்துக்கு என்ன மதிப்பு?. இந்த வரியை படிக்கும்போது ஒரு நம்பிக்கை மனதில் வந்தது. மீண்டும் கூத்து எழும். மஹாபாரதம் வெண்முரசாய் இன்று எழுந்து நிற்கிறது. கூத்தும் எழுந்து நிற்க சாத்தியம் உண்டென்று வலுவாய் தோன்றுகிறது.

இதில் இன்னொரு வனவாசமும் கலைஞனனுக்குள் கலை கொள்ளும் வனவாசம். அரிதாரம் பூசியபின் எழும் அர்ஜுனன் கலைந்தபின் வனத்துக்குள் சென்றுவிடுகிறான். அரிதாரம் இட்டு படையல் வைத்தால்தான் மீண்டும் வருவான்.

அன்புடன்

மோகன் நடராஜ்

***

அன்புள்ள ஜெ

இந்தப்புத்தகக் கண்காட்சியில் புனைவுக் களியாட்டுக் கதைகளை வாங்கினேன். எல்லா கதைகளும் இணையதளத்தில் வெளியானவை. நான் வாசித்தவை. ஆனாலும் அவை நூல்களாக வேறு அனுபவம் அளித்தன. உதாரணமாக தங்கப்புத்தகம், வான்நெசவு. இரண்டுமே ஒரே களத்தில் நிகழ்பவை. ஆகவே ஒரு நாவல் போல முழுமையான அனுபவத்தை அளிப்பவையாக இருந்தன. அற்புதமான அனுபவங்கள். சிறுகதைத் தொகுதிகளில் பத்துலட்சம் காலடிகள் இன்னும் படிக்கவேண்டிய நூல்

செ.மாணிக்கவேல்

***

வான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்க

தங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்க

பத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்க

முந்தைய கட்டுரைக.நா.சு உரையாடல் அரங்கு
அடுத்த கட்டுரைர.சு.நல்லபெருமாள்