பொன்னியின் செல்வன் பதிவுகள் அழிப்பா?

பொன்னியின் செல்வன் – நாவல் தமிழ் விக்கி
Ponniyin selvan Novel
கல்கி ஆசிரியர்- தமிழ் விக்கி
kalki writer Tamil Wiki

அன்புள்ள ஜெ,

பொன்னியின் செல்வன் பற்றி நீங்கள் எழுதிய கட்டுரைகள் இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதாக ஒரு வதந்தி உலவிக்கொண்டிருக்கிறதே. அதற்கு நான் அப்படி இல்லை என்று பதில் சொன்னேன். நான் வாசித்த எல்லா குறிப்புகளும் அப்படியேதான் உள்ளன.நான் அறியாத ஏதேனும் கட்டுரைகள் இருந்து அவை நீக்கப்பட்டுள்ளனவா? சினிமாவுக்காக நீங்கள் சமரசம் செய்துகொள்கிறீர்களா? பொன்னியின் செல்வனுக்கு பதினைந்து லட்சம் வாங்கிவிட்டுப் போற்றிப் பேசுகிறீர்கள் என்றும் முன்னர் வசைபாடினீர்கள் என்றும் சொல்கிறார்கள்.

ரவி மாணிக்கம்

சாண்டியல்யன் தமிழ் விக்கி

Chaandilyan Tamil Wiki

ஜெகசிற்பியன் தமிழ்விக்கி

அன்புள்ள ரவி,

பொதுவாக ஒரு சினிமா வரும்போது அதையொட்டி ஒரு விவாதம் நிகழும். எல்லாம் தெரிந்ததுபோல் சிலர் பேசுவார்கள். சினிமாவைப் பொறுத்தவரை எல்லாமே விளம்பரம்தான். ஆகவே நிகழ்க.

என் தளத்தில் வெளியான எந்த கட்டுரையும், எந்தக் குறிப்பும் நீக்கப்படவில்லை. எல்லாமே அங்கேயே உள்ளன. தேதி மாறியிருக்கும், மறுபிரசுரத்தால். ஆனால் சுட்டி மாறியிருக்காது. ஆகவே மெய்யாகவே வாசித்து தலைப்போ, உள்ளடக்கமோ நினைவில் இருப்பவர்கள் எல்லா கட்டுரைகளையும் தேடி எடுத்துவிட முடியும்.

உண்மையில் இப்போது நின்றுவிட்ட பல இணைய இதழ்களில் வெளியான கட்டுரைகளும் என் இணையப்பக்கத்தில் எடுத்து அளிக்கப்பட்டுள்ளன. மிகச்சிலவே காணாமல்போயிருக்கின்றன.பொன்னியின் செல்வன் பற்றி நான் எழுதிய எல்லா வரிகளும் அப்படியே இணையப்பக்கத்தில் உள்ளன.

(இதற்கு ஒரு காரணம் உண்டு. வெளியான எதையும் இணையத்தில் இருந்து திரும்ப எடுக்க முடியாது என எனக்கு தெரியும். அவற்றின் நகல் எங்கோ இருக்கும். முகநூல் எழுத்து இல்லாமலாகிவிடும்)

சில கட்டுரைகள் கதைகள் நீக்கப்பட்டுள்ளன. நான் கேலியாக எழுதி, விவாதமாக ஆன இரு கட்டுரைகள். அவை அன்று எனக்கு மிக உதவி செய்த ஒருவர் நட்புடன் சொன்ன வரிகளுக்காக நீக்கப்பட்டன. அவர் சொன்னால் என்னால் மீற முடியாது. இரண்டு சினிமாவாக ஆகவிருக்கும் கதைகள். அவை அச்சில் கிடைக்கின்றன. அவற்றை நீக்கியது ஒரு வீம்புக்காக. ஒரு கதை சினிமாவாக ஆகும் செய்திவந்ததுமே இலக்கிய தாகம் மேலோங்கி அக்கதைக்காக பாய்ந்து வருவார்கள். எங்கே கிடைக்கும் என்று பரபரப்பார்கள். ஆர்வமிருந்தால் காசுகொடுத்து வாங்கித்தான் வாசிக்கட்டுமே என நினைக்கிறேன் (ஆனால் அப்படியெல்லாம் அவர்களும் மசிய மாட்டார்கள். பிடிஎஃப் கிடைக்கும் வரை போராடுவார்கள்)

மற்றபடி எதையும் நீக்க, பின்னெடுக்கவேண்டிய தேவை இல்லை. அது சாத்தியமும் அல்ல. அத்துடன் ஊதியம். பதினைந்து லட்சமா? இன்றைய சினிமாவின் ’நம்பர் ஒன்’ எழுத்தாளனுக்கு? ரஜினி பாணியில் ஹாஹாஹா என்று சிரித்துவிட்டு போகவேண்டியதுதான்.

*

பொன்னியின் செல்வன் பற்றி தமிழில் இருமுனைக் கருத்துக்கள் இருந்தன. ஒன்று அது ஒரு கிளாஸிக், தமிழிலக்கியத்தின் உச்சம். இதைச் சொல்பவர்கள் பொதுவாசகர்கள். அனேகமாக வேறு எதுவும் வாசிக்காதவர்கள். மறுபக்கம் பொன்னியின் செல்வன் ஒரு குப்பை, வெறும் கற்பனை என்னும் கருத்து. அதைச் சொல்பவர்கள் நவீனத்துவ எழுத்தாளர்கள். க.நா.சுப்ரமணியம் முதல் சுந்தர ராமசாமி, வேதசகாயகுமார் வரை மூன்று தலைமுறையினர்.

நான் ஒரு விமர்சகனாக இரண்டையும் மறுத்து 1991 முதல் எழுதியவன். என் மதிப்பீடுகள் எல்லாமே நூல்களாக இன்று வாசிக்கக் கிடைக்கின்றன. என் பார்வை சுருக்கமாக இதுவே. பொன்னியின் செல்வன் ஒரு பொதுவாசிப்புக்குரிய நாவல், ஒரு வரலாற்றுக் கற்பனாவாத புனைவு (Historical Romance) அந்த வகையில் அது ஒரு கிளாஸிக். அதை நவீன இலக்கியத்துடன் ஒப்பிட முடியாது. அது வரலாற்று நாவல்  (Historical Novel) அல்ல. அது நவீன இலக்கியத்தில் கிளாஸிக் அல்ல. அது ஒரு பொதுத்தள கிளாஸிக். (Popular Classic) ஒரு படைப்பு எப்படி பொதுத்தளக் கிளாஸிக் ஆகிறது? அது அடையும் பொதுவாசகத்தள ஏற்பினால்தான். பொன்னியின் செல்வன்தான் 100 ஆண்டுக்கால தமிழ் பொதுவாசிப்புத்தளத்தின் மிகப்பிரபலமான நாவல்.அன்றும் இன்றும் என்றும் என் கருத்து இதுவே. நான் இலக்கியக் கருத்துக்களில் சமரசம் செய்துகொள்வதில்லை.

பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று மிகுபுனைவுகள் இந்தியமொழிகள் அனைத்திலும் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் உருவாயின. கன்னடத்தில் கே.வி.ஐயரின் சாந்தலா, குஜராத்தியில் கே.எம்.முன்ஷியின் ஜெயசோமநாத், மலையாளத்தில் சி.வி.ராமன் பிள்ளை எழுதிய மார்த்தாண்டவர்மா. இப்புனைவுகள் உருவாக இரு பின்புலங்கள் உண்டு. ஒன்று இந்தியா தன் வரலாற்றையும் பண்பாட்டையும் மறுகண்டுபிடிப்பு செய்துகொண்ட காலம் அது. அது இந்திய மறுமலர்ச்சிக் காலம் எனப்படுகிறது. இந்நாவல்கள் அந்த மறுகண்டுபிடிப்பை வெகுஜனப்படுத்தும் நோக்கம் கொண்டவை. இவை வரலாறு சார்ந்த பெருமிதத்தை உருவாக்கின. அன்றிருந்த இலட்சியவாதத்தை முன்வைத்தன

இரண்டு, தொடக்ககால நாவல்கள் யுதார்த்தவாத அழகியலுக்குள் வரமுடியவில்லை. ஏனென்றால் நமக்கிருந்தது புராண மரபு. நம் தொடக்ககால சினிமாக்களும் புராணங்களே. அப்புராணங்களின் சாயலுடன் வரலாற்றுக்கதைகள் அதன்பின் வெளிவந்தன. அந்த புராணமனநிலைக்கு அணுக்கமானவை வரலாற்று மிகுபுனைவுகள். ஆகவே நாம் வால்டர் ஸ்காட், அலக்ஸாண்டர் டூமா ஆகியோரை அடியொற்றிய வரலாற்று கற்பனாவாதப் படைப்புகளை எல்லாமொழிகளிலும் எழுதினோம். எல்லா மொழிகளிலும் அவையே ’பாப்புலர் கிளாஸிக்’குகளாக உள்ளன.

அவற்றின் பண்பாட்டுப் பெறுமதியை எவரும் உதாசீனம் செய்துவிடமுடியாது. யதார்த்தவாத, நவீனத்துவ நாவல்களின் இலக்கிய அளவுகோல்களைப் போட்டு அவற்றை நிராகரிப்பது அறிவின்மை. பொதுவாசிப்புக்குரிய இத்தகைய படைப்புகளை செவ்வியல் நாவல்களுடன் ஒப்பிட்டு இலக்கியமதிப்பை அளவிடுவது அதைவிட அறிவின்மை. கல்கியை மட்டும் படித்துவிட்டு அவரே தமிழிலக்கியத்தின் உச்சம் என்று சொல்லும் அறிவின்மைக்கு சற்றும் குறையாதது அது. நான் முப்பதாண்டுகளாகச் சொல்லிவருவது இதையே.

இப்படைப்புகள் வரலாறு சார்ந்த ஒரு பொதுச்சித்திரத்தை அளிப்பவை. இளைய தலைமுறைக்கு வரலாற்றுத் தன்னுணர்வை இத்தகைய படைப்புகள் வழியாகவே கொண்டுசெல்ல முடியும். எல்லா உலகமொழிகளிலும் இப்படித்தான். வால்டர் ஸ்காட்டை எவரும் ஜேம்ஸ் ஜாய்ஸுடன் ஒப்பிடுவதில்லை. ஆனால் அவருடைய இடத்தை மறுப்பதுமில்லை. அலக்ஸாண்டர் டூமா ஒருபோதும் ரொமென் ரோலந்த் அல்ல. ஆனால் அவருக்கு இலக்கியம் இடம் இல்லாமலும் இல்லை. வால்டர் ஸ்காட் இல்லாமல் பிரிட்டிஷ் தன்னுணர்வு உருவாகமுடியாது.பிரெஞ்சு வரலாற்றுணர்வு டூமாவாலேயே உருவாக்கப்பட முடியும்.

அந்த வரலாற்றுத் தன்னுணர்வு ஓர் இளமைக்கால கனவு. ஒரு சமூகத்தின் கூட்டுக்கனவு. அது கறாரான உண்மை அல்ல. அந்த உணர்வு ஒரு சமூகத்தின் பண்பாட்டுணர்வுக்கு அடிப்படையானது. அதிலிருந்து மேலே எழுந்துதான் உண்மையான வரலாற்று புரிதல் உருவாக முடியும். அதற்கு வரலாற்றாசிரியர்களையே நாம் நாடவேண்டும். ஆகவேதான் பொன்னியின் செல்வனை ஓர் மகத்தான அறிமுகமாக, நுழைவாயிலாக முன்வைத்தேன். அதன்பின் அதேமேடையில் ஓர் ஆர்வம்கொண்ட வாசகன் சென்று வாசிக்கவேண்டிய மூன்று தலைமுறை வரலாற்றாசிரியர்களை, மூன்று வெவ்வேறு அணுகுமுறைகளை முன்வைத்தேன்.

எண்ணிப்பாருங்கள், அது ஒரு வணிகசினிமாவின் மேடை. அதில் இந்த அளவுக்கு வரலாறு பேசப்படுகிறது, அறிமுகம் செய்யப்படுகிறது. மறுபக்கம், தங்களை அறிவுஜீவிகள் என நம்பும் கும்பலால் ஒரு வரி பொருட்படுத்தும்படி சொல்லமுடியவில்லை. வெறும் வம்புகளும் காழ்ப்புகளும் மட்டுமே அவர்களிடமிருந்து வருகின்றன. ஏனென்றால் அவர்களுக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாது. அந்தமேடையில் சொல்லப்பட்ட எந்த வரலாற்றாசிரியர்களையும் அவர்கள் கேள்வியே பட்டிருக்க மாட்டார்கள்.

என் பார்வையில் கல்கி மட்டுமல்ல; சாண்டில்யன், ஜெகசிற்பியன் போன்றவர்களும் முக்கியமானவர்களே. தமிழ் வரலாற்று கற்பனாவாத நாவல்களின் முன்னோடியான தி.த.சரவணமுத்துப் பிள்ளை (மோகனாங்கி எழுதியவர்) கூட முக்கியமானவர். அவர்கள் அனைவரைப் பற்றியும் எழுதியிருக்கிறேன். அவர்களின் சிறந்த படைப்புகளை பரிந்துரை செய்திருக்கிறேன். வாசிப்பின் ஒருகட்டம் அவர்கள் வழியாகவே நிகழவேண்டுமென்று கூறியிருக்கிறேன். என் கட்டுரைகளை தேடிப் படிக்கலாம். அல்லது குறைந்தபட்சம் தமிழ்விக்கி பதிவுகளையாவது வாசிக்கலாம். வம்பு நல்லதுதான். பொழுதுபோகும். கூடவே இவற்றையும் பேசலாம். பெயர்களையாவது குறிப்பிடலாம்.

( நான் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த ஒரு விஷயம். இந்திய மறுமலர்ச்சியின் நாயகர்களே இந்தியா முழுக்க மொழிவழிப் பண்பாட்டுத் தனித்துவங்களை அடையாளம் காட்டியவர்களும். உறுதியான இந்தியதேசியப்பார்வை கொண்ட சி.வி.ராமன்பிள்ளைதான் மலையாள தனிப்பண்பாட்டு அடையாளத்தை முன்வைத்தவர். தேசியவாதியான பாரதிதான் தமிழ்நாடு என பாடியவர். கல்கியும் இதே பார்வை கொண்டவர்தான். ஒருவகையில் பொன்னியின்செல்வன் தமிழ்த்தேசியத்தின் அடிப்படையாக அமைந்த நாவல். தமிழ்த்தேசியம் பேசிய அனைவருமே அந்நாவலை தலைமேல்கொண்டதனால்தான் அது புகழ்பெற்றது)

வரலாற்றை உங்கள் குழந்தை கல்கி உருவாக்கும் உற்சாகமான இளமைத்துள்ளலில் இருந்து, சாண்டில்யனின் சாகசக்கனவுகளில் இருந்து அறிந்துகொள்வதே உகந்தது. அல்லாது, வெறுமே அரசியல் காழ்ப்பையு சாதிக்காழ்ப்பையும் கக்கிக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து அல்ல. எதிர்மறை மனநிலைகள் குழந்தைகளுக்கு மிக ஆபத்தானவை. அரசியல் என்றால் என்னவென்றே அறியாத வயதில் அவர்களுக்கு இக்காழ்ப்புகள் அறிமுகம் ஆகக்கூடாது. அது மிகப்பெரிய அழிவு. அவ்வழிவை தடுக்கும் ஒரே வழி அவர்களை பொன்னியின் செல்வன் நோக்கி கொண்டுசெல்வதுதான்.

*

சினிமாவுக்காகச் சமரசம் செய்துகொள்கிறேனா? அப்படி நான் நினைக்கவில்லை. எச்சூழலிலும் அதற்குரிய நடைமுறையையும் நெறியையும் கடைப்பிடிப்பது என் வழக்கம். அதையே அனைவருக்கும் சொல்வேன். நான் பி.எஸ்.என்.எல்லில் பணியாற்றும்போது என்னை இலக்கியவாதியாகக் காட்டிக்கொண்டதில்லை. என் சக ஊழியர்கள் வணிக எழுத்துக்களை போற்றிப் புளகாங்கிதம் அடையும்போது ஒரு வார்த்தைகூட அவர்களிடம் நவீன இலக்கியம் பற்றிப் பேசியதில்லை. அது அதற்கான இடம் அல்ல. பி.எஸ்.என்.எல்லில் அந்த சூழலுக்கு உகந்தவனாக இருந்தேன். அங்கே எனக்கு முரண்பாடுகளும் மோதல்களும் இருக்கவில்லை. ஆகவேதான் விஷ்ணுபுரமும், பின்தொடரும் நிழலின் குரலும், கொற்றவையும் எழுத முடிந்தது.

அதைவிட முக்கியமானது, நான் தொழிற்சங்கச் செயல்பாடுகளிலும் கொஞ்சம் ஈடுபட்டிருக்கிறேன். அங்கு நான் இலக்கியவாதி அல்ல. அங்கு என் வாசிப்புகூட ஒரு பொருட்டு அல்ல. அந்த உலகமே வேறு. அங்கே மனிதர்களிடம் நாம் பழகும் முறையே வேறு. அதுவே சினிமாவுக்கும். அது என் தொழில்களம். அங்கே நான் எவரையும் பகைத்துக் கொள்வதில்லை. ஆகவே எவரையும் எதன்பொருட்டும் விமர்சனம் செய்வதில்லை. சினிமாவே 200 பேருக்குள் நிகழும் தொழில். அங்கே நாம் மனிதர்களை திரும்பத் திரும்பச் சந்தித்துக்கொண்டே இருந்தாகவேண்டும். எந்த மனச்சுளிப்பும் இல்லாமல் ஒரு குழு ஓராண்டுக்காவது இணைந்து வேலைசெய்தாலொழிய சினிமாவை எடுக்க முடியாது. இசைந்துபோதல் என்பது சினிமா என்னும் தொழிலின் அடிப்படை விதி.

ஒரு சினிமாவில் எழுத்தாளர் ஒரு தொடக்கப்புள்ளி மட்டுமே. அதிலும் பொதுரசனைக்கான சினிமாவில் எழுத்தாளனின் இடம் மிகக்குறைவானது. நான் என் பணியை மிகச்சிறப்பாக ஆற்றுபவன். ஆகவேதான் என் இயக்குநர்கள் மீண்டும் மீண்டும் என்னை எழுதச் செய்கிறார்கள். அதன்பின் அவர்களின் படம் அது, நான் என் எல்லைக்கு அப்பால் தலையிடுவதில்லை. அது சமரசமா என்றால் உலகசினிமா விதிகளின்படி சமரசமே. தமிழ் சினிமாவில் அதுவே இயல்பான நடைமுறை.

*

சரி, இதையெல்லாம் எவருக்காகச் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? இதே விஷயத்தை என்னிடம் கேட்ட ஒரு நண்பரிடம் நான் கேட்டேன். ‘நான் என் கட்டுரைகளை நீக்குவேன் என நினைக்கிறீர்களா?’ அவர் சொன்னார். ‘இல்லை, உங்களால் முடியாது. நீக்கியிருந்தால் அவை வெளிப்படையாக சொல்லப்பட்டிருக்கும்’. நான் என் வாசகர்களிடம் அடைந்திருப்பது அந்நம்பிக்கையை. வாசகர்கள் அல்லாதவர்களுக்கு என்னை தெரியாது. அவர்கள் தங்களுக்குச் சௌகரியமான ஒரு பிம்பத்தை என்னைப் பற்றி வைத்துக்கொண்டு வசைபாடுகிறார்கள்.

எனில் நான் இதை எவரிடம் சொல்லவேண்டும்?இதன் வழியாக என்னை அறியநேரும் பத்துப்பதினைந்து இளம் வாசகர்கள் எங்கோ இருப்பார்கள். அவர்களுக்காக.

ஜெ

முந்தைய கட்டுரைகல்லடி வேலுப்பிள்ளை
அடுத்த கட்டுரைபா.திருச்செந்தாழைக்கு விருது