அறம் ஆங்கில மொழியாக்கம்- சுசித்ரா

 

அறம் ஆங்கில மொழியாக்கம்- அமேசான்
அறம் ஆங்கில மொழியாக்கம் – விஷ்ணுபுரம் பதிப்பகம்

அன்புள்ள ஜெ,

ப்ரியம்வதா மொழியாக்கத்தில் உங்கள் அறம் சிறுகதைத் தொகுதி Stories of the True என்ற பெயரில் ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. மிகவும் மகிழ்ச்சியான செய்தி.

ப்ரியம்வதாவை நான் 2017-ல் தஞ்சை புதிய வாசகர் சந்திப்பில் முதன்முதலாக சந்தித்தேன். சந்திப்பு முடிந்து சில காலம் கழித்து ப்ரியம்வதா அறம் கதையின் மொழியாக்கத்தை அனுப்பினார். ப்ரியம்வதா நிதித்துறையில் உழைப்புக் கோரும் பணியில் இருப்பவர். தொடர்ந்து சிறுகச்சிறுக அறம் வரிசைக் கதைகளை மொழியாக்கம் செய்து வந்தார். இவ்வாண்டு தொடக்கத்தில் முடித்தார். அவரது பயணத்தில் சற்றேனும் கூட பயணித்தவள் என்ற முறையில் அவருடைய பணியின் முக்கியத்துவத்தை பற்றி கூறலாம் என்று நினைக்கிறேன்

கடந்த ஐம்பதாண்டுகளில் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு படைப்புகளை மொழியாக்கம் செய்தவர்களின் பெயர்களை பட்டியலிட்டால் இருபது பெயர்களுக்கு மேல் சொல்ல முடியாது. இவர்களில் பலர் ஓன்றிரண்டு படைப்புகளுக்கு மேல் இயங்காதவர்கள். சொல்லும்படியான தரத்தில் மொழியாக்கம் செய்யாதவர்கள். அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல்நிலைக்கு சாதகமான புத்தகங்களை மட்டும் பிரச்சார நோக்கோடு மொழிபெயர்த்தவர்கள். படைப்பிலக்கியத்தை (creative literature) அதன் படைப்புச்சாரம் குன்றாமல் மொழியாக்கம் செய்தவர்களை ஒரு கையில் விரல்விட்டு எண்ணிவிட முடியும். ஒரு விதத்தில் இந்த மொழியாக்கங்களின் போதாமைகளால் தான் நான் இருபத்தைந்து வயதுக்கு மேல் தமிழில் ஆழ்ந்து படிக்கத் தொடங்கினேன், அந்த வரையில் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

ஆனால் இந்த போக்கால் துரதிருஷ்டவசமாக தமிழ் இலக்கியம் பேசப்படக்கூடிய தளத்தில் இந்திய சூழலிலோ உலகளவிலோ அறிமுகமாகவில்லை. இரண்டு குறைபாடுகள். ஒன்று, நம்முடைய மொழியாக்கங்கள் சரளமற்றதாக, பழைய பாணியில் அமைந்தவையாக இருந்தது. அதற்கு ஒரு காரணம் நம்முடைய முந்தையத் தலைமுறை மொழியாக்கக்காரர்கள் பலரும் வயதானவர்கள். கல்லூரி பேராசிரியர்கள். அவர்களுடைய மொழியாக்கங்கள் இயல்பான பறத்தல் இல்லாமல் வலிந்து செய்யப்பட்டவை போல இருந்தன. இன்னொன்று, நல்ல மொழியாக்கங்களும் கூட உரிய இடத்தை அடையவில்லை. உதாரணம் கல்யாண்ராமன் அவர்கள் மொழிபெயர்த்த அசோகமித்திரனின் கதைகளை சொல்லலாம். அவை வெகு சிறப்பான ஆக்கங்கள் ஆனால் உரிய இடத்தை அடையவில்லை

இந்தஉரிய இடம்எது என்பதை எளிதாக சொல்லிவிட முடியாது. வெளிநாடுகளில் பதிப்பு வருவதோ, வெளிநாட்டு பத்திரிக்கைகளில் பேசப்படுவதோ மட்டும்உரிய இடம்அல்ல. அதைத் தாண்டி உலகளாவிய சஹிருதயரை, ஒத்தமனமுடையவரை ஒரு எழுத்தாளர் கண்டுகொள்வதே உரிய இடம் என்று சொல்வேன். படைப்பிலக்கியவாதிகளின் நுண்பின்னல் மெல்லிய ரத்தநாளங்கள் போல் உலகெங்கும் விரிந்து கிடக்கிறது, அதில் ஒரு தொடர்புறுத்தல் நடந்தேற வேண்டும். மொழியாக்கக்காரரின் பணி அதுவே.

அதற்கு முக்கியமான ஒரு முயற்சியை மொழியாக்கக்காரர் எடுக்க வேண்டும். இன்று ஆங்கிலத்தில் எழுதும் எழுத்தாளர்கள் அனைவரும் ஏறத்தாழ பயன்படுத்தும் இலக்கிய மொழி ஒன்று உள்ளது. அதற்கு குறிப்பிட்டவகையான ஓர் ஒலி இருக்கிறது. தமிழிலேயே பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாவலின் ஒலிக்கும் இருபதாம் நூற்றாண்டின் நாவலுக்கும், நவீனத்துவ நாவலுக்கும் பின்நவீனத்துவ நாவலுக்கும் அதன் அடிப்படை மொழி ஒலியில் நமக்கு வேறுபாடு தெரிகிறதல்லவா. அது தான். உலகளாவிய படைப்பிலக்கியத்தின் சமகால அடிநாத மொழி என்று அதைச் சொல்லலாம். கான்ஸ்டன்ஸ் கார்னெட்டுக்கு முன்னால் பலர் தல்ஸ்தோயை ஆங்கிலத்துக்கு மொழியாக்கம் செய்தனர். ஆனால் கான்ஸ்டன்ஸ் கார்னெட் தான் முதன்முதலாக அவர் காலகட்டத்து அடிநாத மொழியை பிடித்தார். ஆகவே ஆங்கில வாசகர்களுக்கு அவரால் தல்ஸ்தாயை உடனே தொடர்பு படுத்த முடிந்தது. அந்த நுண்ணுணர்வுடன் மொழியாக்கம் செய்பவர் மொழியை கையாள வேண்டும். இல்லையென்றால் அந்த மெல்லிய வலைப்பின்னலைக் கடந்து நம் இலக்கியம் தொடர்பாகாதுப்ரியம்வதாவின் மொழியாக்கத்தில் அந்த மொழி பிரக்ஞை இருக்கிறது.  

இன்று உலகளாவிய ஆங்கிய எழுத்தில் ஒரு போக்கு உருவாகி வந்துள்ளது. உலகின் வெவ்வேறு மொழிப்பின்னணிகளிலிருந்து ஆங்கிலத்தில் புதிதாக எழுத வருகிறார்கள். அவர்களின் ஆங்கில நாவல்கள் அவர்களின் மண் வாசம் கூடிய ஆங்கிலத்தில் தான் உள்ளது. சர்வசாதாரணமாக அரேபிய ஸ்பானிய நைஜீரிய மொழிகளின் வார்த்தைகள், சொலவடைகள், மொழி பிரயோகங்கள் ஆங்கில நாவல்களில் இன்று வாசிக்கக் கிடைக்கின்றன. கூடவே மொழியாக்கத்திற்கான இடம் முன்பெப்போதுமில்லாத அளவுக்கு உருவாகி வந்துகொண்டிருக்கிறது. மொழியாக்கங்கள் அதே கலவைமொழிச்சாயலை இன்னும் எளிதாக இயல்பாக அடைகின்றன. இன்று உலகளாவிய கலாச்சார இணைவுக்கான சாத்தியத்தை நோக்கி ஆங்கில மொழி நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்று ஒரு ஆங்கில நாவலில் இட்டிலி என்பதை இட்டிலி என்றே சொல்லலாம். ரைஸ் கேக் என்று சொல்ல எந்த அவசியமும் இல்லை. அது போல அறம் என்பதை அறம் என்றே சொல்லலாம். கதைகளுக்குள் ப்ரியம்வதா இதை நிகழ்த்துகிறார். பெருவலியை பெருவலியென்றே சொல்கிறார். கதையின் போக்கு வழியே அதன் அத்தனை அர்த்தங்களையும் கடத்துகிறார். ‘அதெப்படி. வெள்ளைக்காரனுக்கு புரியுமா?’ என்று முந்தையத் தலைமுறையினர் கேட்கக்கூடும். அது காலனிய மனநிலை. ‘ஏன், வெள்ளைக்காரனும் சீனனும் ஆஃபிரிக்கனும் வந்து புரிந்துகொள்ளட்டுமேஎன்பது தான் நவீன பதில். இன்று நாம் அடுத்தவனின் நாச்சுவைக்கு ஏற்ப உணவு சமைப்பதில்லை, அவன் ரசனையை மேம்படுத்த முயல்கிறோம். அவன் வருகைக்கும் புரிதலுக்கும் தேவையான அறிமுகத்தை தருவது மட்டும் தான் நவீன எழுத்தாளர் செய்வது. உங்கள் கதைகள், ப்ரியம்வதா மொழியாக்கம் இரண்டுமே இந்த புதிய நகர்வுக்கு அத்தாட்சி.

இன்று இந்தியாவுக்கேள்ளேயே பிராந்திய மொழிகளை தொடர்ந்து சிறப்பாக மொழியாக்கம் செய்ய சில இயக்கங்கள் உருவாகி வந்துள்ளன. இவை அடுத்தத் தலைமுறையின் இளம் மொழிபெயர்ப்பாளர்களை வளர்த்துக் கொண்டு வருவதில் கவனம் செலுத்துகின்றன. மொழியாக்க வல்லமையை பேணுவது மட்டுமல்ல, அதை உரிய முறையில் ஆங்கில பதிப்புலகில் அறிமுகப்படுத்தவும் வாசகர்களிடம் எடுத்துச்செல்லவும் அவை உதவுகின்றன. உதாரணம், South Asia Speaks என்ற ஒரு அமைப்பு, வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் வெளிகொண்டுவர உதவுகிறது. வங்கஆங்கில மொழிபெயர்ப்பாளர் அருணவா சின்ஹா Ashoka Center for Translation என்ற அமைப்பை சமீபத்தில் தொடங்கியிருக்கிறார், மொழியாக்க வழிமுறைகளை பற்றிய வகுப்புகள் கருத்தரங்குகளை இந்த அமைப்பு தொடர்ந்து நடத்தி வருகிறது. இவற்றை பற்றி தமிழில் உள்ள நமக்கு அதிகம் தெரியாது, இவை இரண்டு வெவ்வேறு உலகங்களாகவே இயங்குகின்றன

ப்ரியம்வதா இந்த இரண்டு உலகங்களுக்கும் இடையே ஒரு பாலத்தை அமைத்துள்ளார். ஒரு இலக்கிய முகவரை கண்டடைந்து நல்ல பதிப்பகம் வழியே சிறப்பாக நூலை கொண்டுவந்துள்ளார். இன்று ஆங்கில பதிப்புலகில் இலக்கிய முகவர் (literary agent) உடைய பங்கு முக்கியமானது. அவர்களே எழுத்தாளரை பதிப்பாளர்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். பன்முக இலக்கியச் சூழலை தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். பதிப்பாளர்களும் பதிப்பு அளவுகே புத்தகத்தை வாசகர்கள் முன் கொண்டு போவதில் கவனமாக இருக்கிறார்கள்

நமக்கு இன்று உள்ள முக்கியமான குறைபாடு, தமிழில் வெளிவரும் புத்தகங்களை பற்றியோ, மொழியாக்கங்களை பற்றியோ, தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதும் நல்ல விமர்சன நிறை நம்மிடம் இல்லை. மொழியாக்கக்காரர்களை போலவே அவர்களும் உருவாகி வர வேண்டும். இதற்கெல்லாம் தொடக்கப்புள்ளியாக Stories of the True என்ற இந்த நூலும், ப்ரியம்வதாவின் செயல்பாடுகளும் அமையும் என நம்புகிறேன். உங்கள் நூல்கள் ஆங்கிலத்தில் வெளிவருவதன் வழியாக தமிழ் இலக்கியமே ஆங்கிலத்துக்கு அறிமுகமாகும் என்று நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மை. இன்று வெளியான பேட்டியில் நீங்கள் அசோகமித்திரன் சுந்தர ராமசாமி பெயர்களை சொல்லியிருந்தீர்கள். புத்தகத்திலேயே பல பெயர்கள், ஆளுமைகள், மகத்தான சந்தர்ப்பங்கள் உள்ளன. அறிய ஆர்வம் இருக்கும் வாசகருக்கு இவை அனைத்துமே தமிழுக்கு நல்ல அறிமுகமாக அமையும்.

*

அறம் தொகுப்பை நான் 2014-ல் படித்தேன். மீண்டும் இந்த ஆண்டு ப்ரியம்வதாவின் பிரதியை மேம்படுத்த அவர் அனுப்பியபோது மொழியாக்கத்தில் படித்தேன். ஒவ்வொரு கதையிலும் மீண்டும் மீண்டும் மூலத்தின் அந்த உணர்வுகளை அடைந்தேன். அறம் கதைகளின் தனித்துவம் அவற்றின் உணர்ச்சிகரம். அறத்தை வலுவான நாடகத்தருணங்கள் வழியாக மனதில் நிலைநிறுத்தும் தருணங்கள் கதைகளில் உள்ளன. மொழிதாண்டினாலும் அந்த தார்மீகமான உணர்ச்சிகரம் என்னை பாதித்தது. கதைகளுக்குள் உள் சென்றேன், கண்கள் நிறைந்து வெளிவந்தேன். யானை டாக்டர் ஓலைச்சிலுவை நூறு நாற்காலிகள் போன்ற அதிகம் வாசிக்கப்பட்ட கதைகள் மட்டுமல்ல, மேலும் நுண்மையான தளங்களில் அறத்தைப் பேசும் மத்துறு தயிர், உலகம் யாவையும், மயில் கழுத்து போன்ற கதைகளிலும் ப்ரியம்வதா அந்த ஆதார உணர்வை கொண்டுவந்துள்ளார். அறம் கதைகளின் இன்னொரு சிறப்பம்சம் அவை உணர்ச்சிகரமாக இருக்கும் அதே சமயத்தில் ஆழமான, அந்தக்கதைக்கே பிரத்யேகமான மெய்ப்பாடு ஒன்றை தீண்டுவது. பெருவலி கதையின் வீரமும் யானை டாக்டர் கதையின் அற்புதமும் அறம் கதையின் ரௌத்திரமும் அந்தக் கதையின் உணர்ச்சிகரத்திலிருந்து பிரித்துவிடமுடியாத அங்கம். மொழியாக்கம் செய்கையில் அந்த அழகுணர்வை கடத்துவது அத்தியாவசியம். இந்த விஷயங்களை ப்ரியம்வதா உணர்ந்திருக்கிறார். தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். இந்த அறைகூவல்களை அவர் சந்தித்து வென்றுள்ளார் என்பதை நூலை படிப்பவர்கள் உணரலாம். நவீன மொழிநடையில், மூலக்கதைகளின் த்வனியிலிருந்து சிறிதும் விலகாமல், மிகச்சிறப்பாக செய்யப்பட்ட மொழியாக்கம் இது

இந்த நூல் வெளிவருவதை பற்றிய அறிவிப்பு வரும் நாள் முதலாகவே இதன் தலைப்பைப் பற்றி சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். Stories of the True என்பது இலக்கணரீதியாக சரியான பிரயோகமா? அறம் என்ற சொல்லின் நேரடி மொழியாக்கமாக தர்மம், Dharma, Righteousness போன்ற சொற்களை பயன்படுத்தியிருக்கலாமே? போன்ற கேள்விகள். மொழியாக்கத்தில் மக்களுக்கு இத்தனை ஆர்வம் இருப்பது நிறைவளிக்கிறது. இவர்களில் சிலர் தமிழ் விக்கியின் பக்கம் வந்தால் மேலும் சந்தோஷப்படுவேன்.

படைப்பிலக்கியத்தை மொழியாக்கம் செய்கையில் ஒரு சொல்லின்சரியானஅர்த்தத்தை கண்டுபிடித்து எழுதுவது மட்டும் போதாது. அந்த சொல் அந்தக்கதையின் களத்தில் பயன்படுத்தப்பட்ட காரணத்தை, அது உணர்த்தும் உணர்வை, அதன் த்வனியை எடுத்துச்சொல்லும் வகையில் அமைய வேண்டும். ‘சரியானஅர்த்தத்தை பேராசிரியர்கள் சொல்லலாம். ஆனால் படைப்பிலக்கியத்தில் உயிர் இருக்க வேண்டும். மொழியை உயிர் தக்கவைத்து பயன்படுத்த வேண்டும். நவீன மொழிநடை என்று நான் சுட்டுவது இதைத்தான்

ப்ரியம்வதா தன் நூலின் முன்னுரையில் ஏன் இந்த புத்தகத்துக்கு தர்மம் போன்ற வடமொழிச்சொல்லையோ வேறு சொற்களையோ பயன்படுத்தவில்லை, ஏன் Stories of the True என்ற தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று எழுதியிருக்கிறார். Stories of the True என்ற பிரயோகத்தில் இலக்கணரீதியாக எந்தத்தவறும் இல்லை. இந்தக்கதைகள் சுட்டுவது உண்மையை (Truth) மட்டும் அல்ல. என்றும் உள்ள உண்மையை. எல்லா சந்தர்ப்பங்களிலும் எல்லா நியாயங்களுக்கு அப்பால் மேலோங்கும் உண்மையை. கிறுக்குத்தனமாகவும் தோன்றக்கூடிய சரிகளை. ஆகவே The True. அனைத்திலும் ஆன உண்மை. அதுமட்டுமே ஆன உண்மை. ஆங்கிலத்தில் அதுமட்டுமேயான விஷயத்தை குறிக்க The (definite article) பயன்படுத்தப்படும்

ஆனால் இவை கதைகள். அறம் தொகுப்பின் உப தலைப்பும் இதுவே – ‘உண்மை மனிதர்களின் கதைகள்’. உண்மையின் சாரத்தை உணர்த்தவேண்டும் என்றால் கதை தேவையாகிறது. அந்த அழகிய முரணை ப்ரியம்வதாவின் தலைப்பு கொண்டுவந்துள்ளது

மேலும் இதன் ஒலியும் முரணும் தான் நவீன நாவல் தலைப்புகளின் இயல்பு. வெண்முரசு நாவல் தலைப்புகளே கூட சான்றுநீர்ச்சுடர், தீயின் எடை போல. சமீபத்தில் சர்வதேச புக்கர் விருது வாங்கிய ஹிந்தி புத்தகத்தின் தலைப்புரேட் சமாதி‘. ஆங்கிலத்தில் ‘Tomb of Sand’. கல்லரை எப்படி மண்ணால் அமைந்திருக்க முடியும் என்று கேள்வி கேட்கிறார்கள். அவர்களுக்கு உருவகமொழி புரியவில்லை. ‘சமாதிஎன்ற சொல்லை ‘tomb’ என்று மொழியாக்கம் செய்யலாமா என்று கேட்கிறார்கள். அதற்கு நாவலை வாசிக்க வேண்டும். இப்படி முரண்பாடுள்ள, உருவகமான தலைப்புகள் கவிதை தலைப்புகளைப்போன்றவை. படித்து முடித்ததும் தலைப்பு ஆழம் கூடி மனதில் மந்திரமாகிவிடுகின்றன. இன்னொரு தளத்தில் அவை புதிய வாசகரின் ஆர்வத்தைத் தூண்டி அவர்களை நாவலுக்கு உள்ளே கொண்டு வர ஒரு யுக்தி. இதையெல்லாம் உணர்ந்து தான் ப்ரியம்வதா இந்த நூலுக்கு Stories of the True என்று தலைப்பிட்டிருக்கிறார்.

இந்த நூலுக்கு வெளிநாட்டு பதிப்பு கிடையாதா என்று நண்பர்கள் கேட்டிருந்தார்கள். வெளிநாட்டு பதிப்பாளர்களை நேரடியாக அணுகுவது ஒரு வழி. ஆனால் ஒரு நூல் இந்தியாவில் நல்ல வரவேற்ப்பு பெற்றாலே அதன் அடிப்படையில் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல முடியும். அடுத்த ஓர் ஆண்டில் Stories of the True இந்தியாவில் 50,000 பிரதிகள் விற்றால் அது ஒரு bestseller. அறம் அதற்குத் தகுதியான நூல். Stories of the True வடிவத்தில் மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்குள்ளேயே ஆங்கிலத்தில் மட்டும் வாசிக்கும் அடுத்தத் தலைமுறையினர் இந்த நூலை ஒரு பெரிய எழுச்சியாக கண்டுகொள்ளக்கூடும். தமிழில் அறம் கதைகள் புதிய வாசகர்நிரையை உருவாக்கியது போல் ஆங்கிலத்திலும் இந்தியாவெங்கும் சென்று சேற வேண்டும் என்பது என் விருப்பம், கனவுஉங்களுக்கும் ப்ரியம்வதாவுக்கும் வாழ்த்துக்கள்.

அன்புடன்,

சுசித்ரா

முந்தைய கட்டுரைமைத்ரியுடன் இரண்டு நாட்கள்
அடுத்த கட்டுரைஆனந்த குமாரசாமி ஒரு ரிஷியா?