விஷால்ராஜாவும் ஒரு மொக்கையும்

விஷால்ராஜா

விஷால் ராஜா

அன்புள்ள ஜெ

நான் தொடக்கத்தில் உங்களை வாசிக்கும்போது உங்களிடமிருக்கும் எரிச்சல் எனக்கு ஒவ்வாமையை அளித்தது. இது எதற்கு என நினைப்பேன். பெரிய நினைப்பு என்றும் சிலசமயம் தோன்றும். இப்போது நானே எரிச்சலடைய ஆரம்பித்துவிட்டேன். மொண்ணைத்தனம், அறியாமை, அறியாமையையே ஒரு தகுதியாகக் கொண்டு துள்ளிக்கொண்டே இருப்பது, மொண்ணைத்தனம் மட்டுமே கொடுக்கும் தன்னம்பிக்கை…. நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்று இப்போது நினைக்கிறேன்.

கிருஷ்ணா

***

அன்புள்ள கிருஷ்ணா,

நான் இப்போது அந்த எரிச்சலை பெருமளவு கடந்துவிட்டேன். பதிவுகளில் அனேகமாக அந்த எரிச்சல் இல்லை. இடித்துரைப்பதே குறைந்துவிட்டது. மாறாக, பொறுமையாக மீண்டும் மீண்டும் சொல்வோம் என்னும் மனநிலைக்கு வந்துவிட்டேன்.

அதையும் மீறி அண்மையில் அடங்காத சீற்றம் வந்தது காலச்சுவடு இதழில் எந்த பங்களிப்பும், எந்த அடிப்படை அறிதலும் இல்லாத ஓருவர் தமிழ்விக்கி பற்றி எழுதியிருந்ததை வாசித்தபோது. அவருக்கு ஒன்றும் தெரியாது. முழுமையான அறியாமையின் தன்னம்பிக்கை என்பது இங்கே சாதாரணம். காலச்சுவடு தமிழ் விக்கியை அடிக்க ஆசைப்பட்டு அவரை தேர்வு செய்திருக்கிறது. ஐம்பதுரூபாய்க்கு அடியாள் தேற்றுவது அவ்விதழின் வழக்கம். அவர்கள் அடித்து ஒரு புல்கூட இதுவரை சாய்ந்ததில்லை என அவர்களுக்குப் புரியவே போவதில்லை. ஆகவே அப்படியே கடந்துவிட்டேன்.

என்ன சிக்கல் என்றால் அதிலுள்ள ஒரு மனநிலை. தமிழ் விக்கிப்பீடியாவை ஆட்சி செய்வதே அந்த மனநிலைதான். அதற்கு எதிராகத்தான் தமிழ்விக்கி தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் விக்கியில் விஷால்ராஜா பற்றி ஒரு பதிவு உள்ளது. தமிழின் இளைய தலைமுறையின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவர் அவர். ஆனால் இங்கே அவரைப்போன்றவர்களுக்கு ஊடகக்கவனம் இல்லை. அவர்களும் முண்டியடிப்பவர்கள் அல்ல. அது சிற்றிதழ் இலக்கிய இயக்கத்தின் பொதுமனநிலை. அத்தகையோரை அடையாளம் கண்டு முன்வைக்கவேண்டும் என்பதே தமிழ் விக்கியின் நோக்கம். அவர்களிடம் நம் பொதுசூழல் அடையாள அட்டை கேட்கும். தமிழ்விக்கி அவர்களை தேடிச்செல்லும். இதுவே வேறுபாடு.

தமிழ்விக்கியில் ஓர் ஆசிரியர் குழு உள்ளது. ஒரு பங்களிப்பாளர் குழு உள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கியவாதிகளாலும் ஆய்வாளர்களாலும் ஆனது அது. இன்று அதை வாசிக்கும் எவரைவிடவும் மேலதிகத் தகுதிகள் கொண்டவர்கள் அதன் ஆசிரியர்கள். எவருக்கும் கற்பிக்கும் நிலையில் இருப்பவர்கள். அவர்கள் சொல்லி தெரிந்துகொள்ளவேண்டியவர்களே இங்கே பெரும்பாலானவர்கள். தமிழ்விக்கி பதிவுகளை மேலோட்டமாக பார்க்கும் கொஞ்சம் அறிவுத்திறன் கொண்ட எவருக்கும் அது கண்கூடாகத் தெரியும்.

ஆனால் அந்தக் காலச்சுவடுக் கட்டுரை எழுதிய மொக்கைக்கு அவருக்கு முன்னரே தெரியாத ஒருவருக்கு எப்படி விக்கி பதிவு இருக்கமுடியும் என்று தோன்றுகிறது. ‘சரி, உனக்கு அப்படி எவரை தெரியும்?’ என்று கேட்டால் குண்டு கல்யாணம் வரை எல்லா நடிகர்களையும் தெரிந்து வைத்திருப்பார். அதற்குமேல் ஆர்வமோ முயற்சியோ இருக்காது. ஒரு கூகிள் தேடல் செய்து பார்க்கும் அளவுக்குக்கூட அடிப்படைப் புரிதல் இருக்காது. நானும் அந்த ஆளுக்கு ஏதாவது வாசிப்புப் பின்னணி இருக்குமா என தேடிப்பார்த்தேன். சரியான முன்னுதாரண மொக்கை. காலச்சுவடிலேயே விஷால்ராஜாவின் முக்கியமான கதைகள் வெளியாகியிருக்கின்றன. அடுத்த இதழிலும் வெளியாகியிருக்கின்றன. இந்த மொக்கை காலச்சுவடையே படிப்பதில்லை.

உண்மையில் எப்படியாவது இவர்களைப் போன்ற சிலருக்கு இலக்கியத்தை, பண்பாட்டாய்வுகளை கொண்டு சென்று சேர்த்துவிடலாம் என்பதே எங்கள் முயற்சி. அதற்கு இவர்களின் பதில் ‘எங்களுக்கு ஏற்கனவே தெரியாததை மேற்கொண்டு தெரிந்துகொள்ளவேண்டிய தேவை இல்லை’. இதற்கிணையான ஒரு மொக்கைத்தனம் எங்காவது உண்டா தெரியவில்லை. இதுதான் தமிழ் விக்கிப்பீடியாவிலும். அசோகமித்திரன் பற்றி ஒரு பதிவு போட்டால் ‘யாரது, ஊர்பேர் தெரியாத ஆளுக்கு எதற்கு பதிவு?’ என்று கேட்பவர்கள் அதில் ஏறி அமர்ந்திருக்கிறார்கள்.

அறிவுச்செயல்பாடு எப்போதுமே அறியாமையுடன் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அறியாமையை மணிமுடியாகச் சூடிக்கொண்டிருக்கும் கூட்டத்திடம் அறிவுச்செயல்பாடு தோற்று திகைத்துவிடும். அப்போது எழும் எரிச்சலை விழுங்குவது அரைலிட்டர் அமிலத்தை ஜீரணித்துக்கொள்வதற்கு நிகர்.

ஜெ

***

முந்தைய கட்டுரைஅகரமுதல்வன், காதல் மானம் வீரம்!
அடுத்த கட்டுரைபி.எம்.கண்ணன்