நீலகண்ட சாஸ்திரி, கடிதங்கள்

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி தமிழ்விக்கி

அன்புள்ள ஜெ

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி பற்றிய தமிழ் விக்கி கட்டுரை ஓர் அற்புதமான பதிவு. அத்தனை விவாதங்களையும் ஒருங்கிணைக்கிறது. அத்தனை தரவுகளையும் ஒருங்கிணைக்கிறது. ஆனால் கத்திமுனைமேல் நடந்து செல்கிறது. 360 டிகிரிப் பார்வை என்பது இதுதான். இனி கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி பற்றி எந்த கட்டுரை எழுதப்பட்டாலும் இக்கட்டுரையின் தொடர்ச்சியாகவே அமையும்.

அதேசமயம் வெறும் செய்திகளாக இல்லாமல் சரளமான நல்ல நடையில் இனிய வாசிப்பை அளிக்கும்படியும் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்

மாணிக்கவாசகம் எம்.ஆர்

*

அன்புள்ள ஜெ

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி பற்றிய கட்டுரையில் அவர் தமிழில் வரலாற்றாய்வை எழுத முடியாது என்று சொன்னதும், அதை தமிழார்வலர் கடுமையாக எதிர்த்ததும் பதிவாகியுள்ளது. அப்படி எதிர்த்தவர்கள் தமிழில் மகத்தான வரலாற்றாய்வுநூல்களை எழுதிக் காட்டியிருக்கவேண்டும், இல்லையா? அரைநூற்றாண்டு தாண்டியும் அப்படி ஒன்று நிகழவே இல்லை. இன்றும் தமிழில் முக்கியமான வரலாற்றாய்வுகள் ஆங்கிலத்திலேயே எழுதப்படுகின்றன. தமிழ் விக்கி கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ளவர்களும் ஆங்கிலத்தில் எழுதியவர்களே. நீலகண்ட சாஸ்திரியின் கிளாஸிக் எனப்படும் அடிப்படை வரலாற்றாய்வு நூல்கள் இன்னமும்கூட தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. அப்படியென்றால் தமிழ் மட்டுமே தெரிந்த ஒருவர் என்ன வரலாற்றாய்வைச் செய்துவிட முடியும்? நம்முடைய மொழிப்பற்றெல்லாம் வெறுமே கூச்சலிடுவது, பழிப்புக்காட்டுவது ஆகியவற்றுடன் நின்றுவிடுகிறது இல்லையா?

மகேஷ் நாராயணன்

முந்தைய கட்டுரைநகர்நடுவே நடுக்காடு
அடுத்த கட்டுரைபெண்ணியம், அதற்கு அப்பால் -கடிதம்