மைத்ரியும் மோட்டார்சைக்கிளும்- கடிதம்

மைத்ரி – அ.முத்துலிங்கம்
மைத்ரி – லோகமாதேவி
அவரவர் வழிகள்
மைத்ரி துளியின் பூரணம் – கிஷோர் குமார்

அன்புள்ள ஜெ

மைத்ரியை முன்வைத்து காதலும் இலக்கியமும் பற்றி நீங்கள் எழுதியிருந்த குறிப்பு வழக்கம்போல ஆழமானது. ஆனால் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் எழுதப்பட்டது. பிரௌனிங் கவிதை உக்கிரமானது. மௌனி கதைகளின் உதாரணமும் நன்று.

முன்பு நீங்கள் இலக்கியமும் சல்லாபமும் என்னும் கட்டுரையை எழுதியபோது நான் இதை நினைத்துக் கொண்டேன். அப்போது நீங்கள் இலக்கியத்தில் காதலை நிராகரிக்கிறீர்கள் என எண்ணினேன். அதெப்படி நிராகரிக்க முடியும் என்ற எண்ணம் வந்தது. இன்று தெரிகிறது, அது காதல் மட்டுமேயாக இருப்பதையே நிராகரிக்கிறீர்கள். நீங்கள் சொல்லும் இருவகை இலக்கியங்களிலும் ஆணும்பெண்ணும் சல்லாபம் செய்வதை எழுதமுடியாது. செக்ஸை எழுதமுடியும். வன்முறைகூட வரமுடியும். கொஞ்சிக்கொண்டிருப்பதை எழுத முடியாது.

அஜிதனின் மைத்ரி மௌனி வகை கதை. அது காதலைப் பற்றிப் பேசவில்லை. காதலை முன்வைத்து என்றுமுள்ள ஒரு தவிப்பைப் பற்றிப் பேசுகிறது. இந்த அம்சம் எங்கும் இருக்கிறது. நான் ஜப்பானில் இருக்கும்போது ஃப்யூஜியாமா பற்றிய ஜப்பானிய மித்துகளைப் பற்றி சொன்னார்கள். அதன் சாரலில்தான் தற்கொலைப்பள்ளத்தாக்கு உள்ளது. கிளம்பிச்சென்று அந்த மலையில் கரைந்துவிடுவது பெரிய அப்செஷன் ஆக உள்ளது. இதேபோல அமெரிக்காவில் மௌண்ட் சாஸ்தாவில் போய் மறைவது சிவப்பிந்தியர்களின் காலம் முதல் ஒரு வழக்கமாக உள்ளது.

அந்த தவிப்பை நான் உணர்ந்திருக்கிறேன். 1996ல் நான் பைக்கர் ஆக லடாக் சென்றபோது குதிக்காமல் தப்பி வந்தது ஒரு பெரிய அதிசயம். அதன்பின் தனியாகச் செல்வதில்லை. ஆழம் நம்மை ஈர்க்கிறது. அந்த ஆழம்தான் மைத்ரி. மைத்ரி என்றால் கலந்துவிடுவதுதானே? மைத்ரி நாவலிலும் அந்தப்பெண் அவனை ஆழத்துக்குத்தான் கொண்டுசெல்கிறாள். டைம்லெஸ் ஆன, மாறாத ஒரு ஆழம்தான் அவர்களின் கிராமம்.

இந்நாவலை பைக்கர்கள்தான் புரிந்துகொள்ள முடியும். பைக்கில் போனால் மட்டும்தான் அந்த கரைந்துவிடவேண்டும் என்னும் வெறி வருகிறது. அப்போதுதான் நம்மைச்சூழ்ந்து இயற்கை இருக்கிறது. பைக்கில் போகாதவர்களுக்கு இந்நாவல் கொஞ்சம் கம்மியாகவே பிடிபடும் என நினைக்கிறேன்

கா.பாரி அறிவழகன்

அன்புள்ள பாரி,

நீங்கள் சொல்வதை ஒருவகையில் Zen and the Art of Motorcycle Maintenance ( Robert M. Pirsig) என்ற நூலும் சொல்கிறது. இது ஒருவகை அதீத நிலை. கட்டற்ற, கற்பனை கொண்ட இளமையில் ஒருவகையாக அது பொருள்படுகிறது. ஐம்பதுக்குமேல் இன்னொருவகையாக பொருள்படுகிறது, ஐம்பதுக்குமேல் தங்கப்புத்தகம் போல பொருள்படலாம்

ஜெ

முந்தைய கட்டுரைகுருபூர்ணிமா, ஒரு வினா
அடுத்த கட்டுரைவி.கிருஷ்ணசாமி ஐயர்