Stories of the True : Translated from the Tamil by Priyamvada
அன்புள்ள ஜெ,
என் நண்பர் வட்டாரத்தில் ஒரு கேலி தொடங்கிவிட்டது. அதாவது தமிழிலிருந்து மொழியாக்கம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் கிடைக்கும் நூல்களை தமிழ்ச்சமூகம் வாங்கவேண்டும் என்று நீங்கள் எழுதியிருந்தீர்கள். அது அறம் ஆங்கிலத்தில் வருவதை ஒட்டிய விளம்பரம்தான் என்று சொல்கிறார்கள்….
அர்விந்த்
***
அன்புள்ள அர்விந்த்,
அப்படியே இருக்கட்டும், அதிலென்ன பிழை? என் ஏழாம் உலகம், வெள்ளையானை, குமரித்துறைவி, புனைவுக்களியாட்டுச் சிறுகதைகள் எல்லாமே ஆங்கிலத்தில் வெளிவரவுள்ளன. அவற்றை தமிழறியாத பிறர் வாங்கவேண்டும் என விரும்புகிறேன். அவர்களுக்காகவே அவை மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.
ஆனால் என் முதன்மை ஆர்வம் எப்போதும் தமிழ்ச்சமூகத்துடன்தான். நான் அவர்களிடமே பேசுகிறேன். அவர்களிடம் செல்வாக்கு செலுத்த விரும்புகிறேன். இன்று தமிழகத்தில் நன்றாகத் தமிழ் வாசிக்க முடியாத ஒரு தலைமுறை உருவாகியுள்ளது. அவர்களுக்கு தமிழ்ப்பண்பாடு, தமிழ் அறிவுச்சூழல் எதுவுமே அறிமுகமில்லை. தமிழக அரசியல் மட்டுமே மேலோட்டமாக தெரியும். அவர்களுக்கு இத்தகைய நூல்கள் மிக உதவியானவை என்பது என் எண்ணம். அவர்களிடம் இந்நூல்கள் சென்றடையவேண்டும் என விரும்புகிறேன்.
ஆம், அனைவருக்கும் அல்ல. இலக்கியம் அனைவருக்குமானது அல்ல. மிகமேலோட்டமான, மிக உலகியல்தனமான, மிகக் கேளிக்கைத்தனமான இளைஞர்கள் உண்டு. அவர்களால் வாசிக்கமுடியாது. ஆனால் ஆங்கிலத்தில் கொஞ்சம் கனவும், கொஞ்சம் லட்சியவாதமும் கொண்ட இளைஞர்களுக்கு இந்நூல் மிகமிகத் தீவிரமான அனுபவத்தை அளிப்பதாக இருக்கும். ஆகவே அதை பரிந்துரை செய்யவேண்டியது என் கடமை.
ஒரு நவீன இலக்கிய நூலைப்போல ஏற்கனவே இலக்கிய அறிமுகம் கொண்டவர்களுக்கான நூல் அல்ல இது. இது ஒருவகை ‘லெஜெண்ட்’களால் ஆனது. ஆகவே அனைவருக்கும் உரியது
ஜெ