Stories of the True : கடிதம்

Stories of the True : Translated from the Tamil by Priyamvada

அன்புள்ள ஜெ

அறம் கதைகளின் ஆங்கில மொழியாக்கம் இன்றைய சூழலில் மிக மிக முக்கியமானது என நினைக்கிறேன். இந்தியாவில் ஆங்கிலத்தில் இன்றைய வாசகர்கள் பெரும்பாலும் ஆங்கிலம் வழியாகக் கல்விகற்ற நாற்பது வயதுக்கும் குறைவான வாசகர்கள். இன்று ஆங்கில மொழியில் இந்தியாவில் அழகியல் மதிப்பீடுகளை முன்வைக்கும் நல்ல விமர்சகர்கள் அனேகமாக யாரும் இல்லை. அவ்வப்போது சிலர் எழுதுவதுண்டு. ஆனால் ஓர் ஆளுமையாக எவரும் இல்லை. வட்டார மொழிகளில் எல்லாம் அப்படி அழகியலை முன்வைக்கும் முன்னோடிகள் இருக்கின்றனர். அவர்களே பெரும்பாலும் முன்னோடி எழுத்தாளர்களாகவும் உள்ளனர்.

இந்தச் சூழல் ஆங்கிலத்தில் இல்லை. ஆங்கிலத்தில் இன்று இந்தியா முழுக்கக் கேட்கும் குரல்கள் எல்லாமே இதழாளர்கள்தான். அவர்களுக்கு இலக்கியம் முக்கியமல்ல. இலக்கியம் அவர்களின் மேலதிக ஆர்வம் மட்டுமே.  அத்துடன் அவர்களின் தொழில் செய்தி சார்ந்தது, எனவே அவர்கள் அன்றாடச்சிக்கல்களையே முக்கியமாகக் கவனிக்கிறார்கள். அரசியல்பிரச்சினைகளும் சமூகப்பிரச்சினைகளும்தான் அவர்களுக்கு முக்கியமாக தெரிகின்றன.

இக்காரணத்தினால் இதுவரை ஆங்கிலச் சூழலில் பேசப்பட்ட எல்லா படைப்புகளுமே அரசியல் அல்லது சமூகவியல் சார்ந்தவைதான். சமகாலப்பிரச்சினை ஒன்றை எடுத்துக்கொண்டு மிகவும் சர்ச்சைக்குள்ளாகும்படிப் பேசுவதே இங்கே கவனிக்கப்படுவதற்கான வழி அல்லது அனைவரையும் சீண்டும்படி பேசுவது (லீனா மணிமேகலை போன்றவர்கள் இதைச் செய்கிறார்கள். மலையாள எழுத்தாளர்களின் வழக்கமே இதுதான்) ஆகவே ஒருவகை முற்போக்கு இலக்கியம் மட்டுமே இங்கே அதிகம் கவனிக்கப்படுகிறது. அவற்றைப் பற்றியே பேசப்படுகிறது. இதழ்களும் நூல்களை அந்தக்கோணத்திலேயே முன்னிலைப்படுத்துகின்றன.

என் பார்வையில் ஆங்கிலத்திலே வந்தாகவேண்டிய படைப்பு என்றால் கொற்றவை, குமரித்துறைவி எல்லாம்தான். அவைதான் தமிழ்க்கலாச்சாரத்தில் ஊறிய படைப்புகள். வாசிப்பவனின் ஆன்மிகத்துடன் உரையாடுபவை. ஆனால் அவற்றுக்கு இங்கே இடமில்லை. இன்றைய சூழல் இதுதான்.

அறம் கதைகளில் அரசியல், சமூகவியல் உள்ளது. யானைடாக்டர், நூறுநாற்காலிகள் எல்லாம் அத்தகைய கதைகள். ஆனால் இவற்றை எவராவது எடுத்துப் பேசவேண்டும். ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகளுக்காவது சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். இல்லாவிட்டால் கவனிக்கப்படாது. தமிழில் அப்படிச் சொல்லிக்கொண்டே இருக்கும் கனாய்ஸியர்கள் இன்றைக்கு இல்லை. தீவிரமான வாசகர்களும் இல்லை.

ஆங்கிலப்பதிப்புத்துறை என்பது இந்தியா முழுக்க விரிந்து கிடக்கும் ஒரு துறை. அன்றாடம் நூல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாகப் பேசப்படும் படைப்புக்கு மட்டுமே ஒரு தீவிரமான வாசிப்பு அமைய முடியும். இதுவரை தமிழின் எந்த நல்ல படைப்புக்கும் அப்படி ஒரு நல்ல வரவேற்பு அமையவில்லை. நான் அசோகமித்திரன், பூமணி, அம்பை ஆகியோருக்கு அப்படிப்பட்ட வாசிப்பு அமையும் என எதிர்பார்த்தேன். அறம் வாசிக்கப்படுமென்றால் ஒரு நல்ல தொடக்கமாக அமையும்

ராகவ்ராம்

முந்தைய கட்டுரைபி.எம்.கண்ணன்
அடுத்த கட்டுரைகுடவாயில் பாலசுப்ரமணியம், கோவை புத்தகக் கண்காட்சி