சோழர்களும் பிராமணர்களும்

பர்ட்டன் ஸ்டெயின்

கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி

குடவாயில் பாலசுப்ரமணியம் 

அன்புள்ள ஜெ

பொன்னியின் செல்வன் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன, கவனித்திருப்பீர்கள். சோழர் காலம் ஒன்றும் பொற்காலம் அல்ல என்று ஆங்கிலத்தில் (கடுமையான தமிழ்வெறுப்புடன்) எழுதிக்கொண்டிருக்கிறார்கள். இங்கும் அதை பலர் எழுதுகிறார்கள். சோழர் காலத்தில் பிராமணர்களுக்கு கொடுக்கப்பட்ட கிராமங்களின் பட்டியலை போட்டு ஒருவர் ‘இதில் ஒருவராவது வேறு சாதி உள்ளனரா?’ என்று கேட்டிருந்தார். இரு சாராரும் ஒரே குரலில் பேசுவதுதான் ஆச்சரியமாக உள்ளது

சக்தி

பொன்னியின் செல்வன் நாவல் 

யவனராணி- சாண்டில்யன்

உடையார் -பாலகுமாரன்

அன்புள்ள சக்தி,

சோழர் காலத்தை ஏன் பொற்காலம் என்று சொல்லலாம் என விரிவாக எழுதிவிட்டேன். அது இன்றைய காலகட்டத்தை விட மேலானது என்னும் பொருளில் அல்ல. இன்றையகாலமே வரலாற்றின் பொற்காலம். பொற்காலங்கள் வருங்காலத்திலேயே இன்னும் உள்ளன. சென்றகாலங்களில் பொற்காலங்களை தேடுவதில் எனக்கு உடன்பாடில்லை. சென்றகாலம் பொற்காலம் என்றால் சிந்தனையாளர்களின் பங்களிப்பு என ஒன்றுமே இல்லை என பொருள்படுகிறது.

சோழர்காலம் பொற்காலம் என்பது அன்றைய வரலாற்றுச் சூழலில் வைத்துப் பார்ப்பதனால்தான். அது தமிழர்கள் எதிரிகளின் தாக்குதல்கள் இல்லாமல், பாசனக்கட்டுமானங்களும் சாலைகளும் சந்தைகளும் உருவானமையால் பொருளியல் வளர்ச்சி அடைந்து, கலையிலக்கிய வளர்ச்சி பெற்று வாழ்ந்தனர் என்பதனால்தான். பத்தாம் நூற்றாண்டில் உலகில் இருந்த எந்த ஒரு அரசை விடவும் நல்ல நோக்கமும், நல்லாட்சியும் சோழர்களால் அளிக்கப்பட்டன என்பதனால் மட்டுமே. (பார்க்க பொன்னியின் செல்வன், சோழர்கள்ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா? )

பிராமணர்களுக்கான நிபந்தங்கள் பற்றியும் சொல்லிவிட்டேன். எந்த பேரரசும் அப்பேரரசின் அடிப்படைக் கொள்கையை உருவாக்கி நிலைநிறுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும். அப்படித்தான் இந்தியாவில் வெவ்வேறு மன்னர்கள் சமணர்களையும் பௌத்தர்களையும் பெரும் கொடைகள் அளித்து பேணினர். சோழர்களின் காலத்தில் அடிப்படைக் கொள்கை என்பது சைவம். அதை நிலைநிறுத்தியவர்கள் அந்தணர்கள். சங்க காலத்திலேயே பிராமணர்கள் முதன்மைக்குடிகளாக, மிகமிக உயர்நிலையில் வைக்கப்பட்டிருந்ததையே நமக்கு இலக்கியங்கள் காட்டுகின்றன. சோழர், பாண்டியர், சேரர், பல்லவர் எல்லாருமே அவ்வாறுதான் பிராமணர்களுக்கு கொடையளித்துள்ளனர்.

ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் எல்லாம் கொடுக்கப்பட்டது, மற்றவர்களுக்கு ஒன்றும் கொடுக்கப்படவில்லை என்பதெல்லாம் வரலாறே அறியாத ஒருவகை பேதமையின் வெளிப்பாடு. இதைப்பற்றியெல்லாம் நொபுரு கரஷிமா, பர்ட்டன் ஸ்டெயின் எல்லாம் விரிவாக எழுதிவிட்டனர். பிராமணர்கள் வரிவசூலின் ஒரு பகுதியை கொடையாக அளித்து பேணப்படவேண்டியவர்கள். ஏனென்றால் அவர்கள் நேரடியாக நிலவுடைமையாளர்கள் அல்ல. விவசாயிகள் அல்ல. ஆகவே அக்கொடைகள் பதிவுசெய்யப்பட்டன. அவற்றை நிலவுடைமையாளர்கள் மீறக்கூடாது என்பதனால்.

சோழர்காலத்தில் உருவான நிலவுடைமைச் சாதிகளே இன்றும் தமிழகத்தில் ஆதிக்கச் சாதியினர். சோழர் காலகட்டத்தில் முதன்மையாக வேளாளர்கள், முதலியார்கள் ஆதிக்கம் பெற்றனர். அகமுடையார், கள்ளர், மறவர், வன்னியர் போன்ற தமிழகத்து இன்றைய இடைநிலைச் சாதிகள் ஆதிக்கமும் அடையாளமும் பெற்றது அப்போதுதான். அது இயல்பு. அவர்களே அன்றைய போர்வீரர்கள். சோழர்களின் காலகட்டத்தில் மாபெரும் ஏரிகள் வழியாக புதிய விளைநிலங்கள் உருவானபோது அவர்களின் பங்களிப்புக்கு ஊதியமாக அந்நிலங்கள் அவர்களுக்கே அளிக்கப்பட்டன. உருவாகி வந்த புதிய நிலங்களின் ஆட்சியுரிமையும் அவர்களுக்கு பட்டங்கள் வழியாக அளிக்கப்பட்டன. நூற்றுக்கணக்கான சாசனங்களில் இதெல்லாம் ஆதாரபூர்வமாக பதிவாகியுள்ளது

வேளாளர் வரலாற்றை எடுத்துப் பாருங்கள். நிலவுடைமையாளர்களும் குறுநிலமன்னர்களுமாக இருந்த கொங்குவேளாளர் கூட்டங்களின் ஆட்சியுரிமைகள், வானவராயர் உட்பட்ட குலப்பட்டங்கள் எல்லாமே சோழர் காலத்தையவை. மன்றாடியார், வாண்டையார் போன்ற முக்குலத்தோரின் குலப்பட்டங்கள் , குடும்ப நிலவுடைமை ஆவணங்கள் எல்லாமே சோழர் காலத்தையவை. முதலியார்கள், மூப்பனார்கள் பெருநிலக்கிழார்களாக ஆனது சோழர்காலத்தில்தான். தினத்தந்தி ஆதித்தனார் பட்டமே சோழர் காலத்தையதுதான்.

உண்மை, சோழர் காலத்தில் சில சாதிகள் வீழ்ச்சி அடைந்தன. இன்றைய ஆதிக்க சாதிகளான வேளாளர், முதலியார், முக்குலத்தோர் போன்றவர்கள்  மேலெழுந்தனர். அதிகாரமும் செல்வமும் அடைந்தனர். இன்றைய தலித் சாதியினர் அதிகாரம் இழந்து அடிமை ஆயினர். எந்தப் பேரரசிலும் அப்படி கீழே அடக்கப்பட்டவர்கள் இருப்பார்கள். நிலவுடைமை முறை என்பதே ஒருவகையில் ஆண்டை – அடிமை முறைதான். அது வரலாறு வளர்ந்து வந்த முறை. உலகம் முழுக்க அவ்வாறுதான் இருந்தது.

சோழர் ஆட்சியை தலித் மக்கள் எதிர்த்தால் அது இயல்பே. ஆனால் ‘அய்யய்யோ சோழர்கள் சுரண்டல்காரர்கள்’ என்று கூச்சலிடுபவர்களில் முக்கால்வாசிப்பேர் சோழப்பேரரசின் அடிப்படைச் சக்தியாக விளங்கிய சாதியைச் சேர்ந்தவர்கள். சோழப்பேரரசை உருவாக்கி அதனால் லாபம் அடைந்தவர்கள். வேளாளர், கள்ளர், அகமுடையார், மறவர், வன்னியர் எல்லாம் சோழப்பேரரசை எண்ணி பெருமைப்படலாம். ஏனென்றால் அவர்களே அதை உருவாக்கினர். ஆகவே அதன் பிழைகளுக்கும் அவர்களே பொறுப்பு.

ஆனால் சோழர்களின் குலப்பட்டம், நிலம் எல்லாம் தேவை என நினைப்பவர்கள் சோழப்பேரரசின் பிழைகளுக்கு மட்டும் பிராமணர் மட்டும் பொறுப்பேற்கவேண்டும் என நினைக்கிறார்கள். அதுதான் மோசடியானது. இன்றைய நிலவுடைமையாளர் சாதிகள் எல்லாமே நேற்றைய ஒடுக்குமுறைக்கும் பொறுப்பானவர்களே. நான் உட்பட.

நம் மரபின் வெற்றிகளைக் கண்டு பெருமைப்படுவோம். தப்பில்லை. கூடவே அதிலுள்ள இருண்ட பக்கங்களுக்கு பொறுப்பேற்போம். அப்பிழைகளை இனிமேல் களைவோம். அதுதான் செய்யவேண்டியது

ஜெ

முந்தைய கட்டுரைசூளை சோமசுந்தர நாயகர்- விதை
அடுத்த கட்டுரைகீதை பக்கம்