இந்து என்னும் பெயர்

இந்து என உணர்தல்

அன்புள்ள ஜெ

பொதுவான எல்லா உரையாடல்களிலும் தங்களை நாத்திகர் என்று சொல்லிக்கொள்பவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன், அதற்கே உரிய சிரிப்புடன், “இந்து என்ற சொல் எந்த நூலிலும் இல்லை தெரியுமா? வேதங்களோ கீதையோ தேவாரமோ திருவாசகமோ அதைச் சொல்லவில்லை” என்பார்கள். திரும்பத் திரும்ப அவர்களிடம் விளக்க முயல்கிறேன். நீங்கள் ஒரு சுருக்கமான விளக்கம் அளித்தால் இதே கேள்வி கொண்ட பலருக்குச் சென்று சேரும்.

சாந்தகுமார், மும்பை

***

அன்புள்ள சாந்தகுமார்

அவ்வளவு சீக்கிரம் சென்று சேராது. அறியாமை என்பது ஒரு வகை ஓடு. மிக வலுவானது. அறியாமை சற்றேனும் அகலும்போதே தனக்கு தெரியாதோ என்னும் ஐயம் எழுகிறது. அதன்பின்னரே எதையாவது கவனிப்பார்கள். நம்மூர் நாத்திகர்கள் பொதுவாக நாத்திக வேடம் போடுவதே எதைப்பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருக்கும் வசதிக்காகத்தான்.

இந்து என்று அல்ல எந்த மதத்தின் பெயரும் அந்த மதம் உருவாகிய காலகட்டத்தில்  இருக்காது. எல்லா பெயர்களும் அந்த மதங்களுக்கு காலப்போக்கில் அமைந்தவையே. ஒரு தனிநபர் அல்லது தனிநூலில் இருந்து உருவான மதங்களுக்கு இயல்பாக அந்த தனிநபர் அல்லது தனிநூலின் பெயரே அமைந்துவிடும். பௌத்தம், கிறிஸ்தவம்போல.

சிலசமயம் உருவகப்பெயர் காலப்போக்கில் அமையும். அவர்கள் தங்களை வேறு பெயரில் சொல்லிக் கொள்வார்கள். சீடர்கள் என்று பொருள் கொண்ட சிக்கா (சிஷ்யா) என்னும் சொல் காலப்போக்கில் மருவி சீக்கியர் என்னும் பெயர் ஆகியது. அவர்கள் தங்கள் மதத்தை கல்ஸா (பாதை) என்றே அழைக்கிறார்கள்.

சில சமயம் மதங்களுக்கு இடம் சார்ந்து, காலம் சார்ந்து பெயர் மாறுபடும். ஜினர் (எய்தியவர்) என்னும் சொல்லில் இருந்து ஜைனம் என்னும் சொல் பிறந்தது. ஆனால் தமிழகத்தில் அது சமணம் என அழைக்கப்படுகிறது (சிரமணம் என்னும் சொல்லின் மரூவு அது. சிரமணம் என்றால் நோன்பு, உழைப்பு என்று பொருள்).

இப்படித்தான் மதங்களின் பெயர்கள் அமைகின்றனவே ஒழிய மதங்களுக்கு எவரும் மடியில் அமர்த்திப் பெயர் சூட்டுவதில்லை. இதையெல்லாம் கொஞ்சம் வரலாற்றுணர்வுடன் இவர்களால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் நாம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். 

உலகிலுள்ள மதங்கள் இருவகை. முதல்வகை, தீர்க்கதரிசன மதங்கள் ஒரு தீர்க்கதரிசியில் அல்லது இறைத்தூதரில் இருந்து தொடங்குபவை. சமணம், பௌத்தம், இஸ்லாம், கிறிஸ்தவம். இரண்டாம் வகை, பரிணாம மதங்கள். இவை பழங்குடி வாழ்க்கையில் தனித்தனி வழிபாடுகளாகவும் சடங்குகளாலகவும் தோன்றி, காலப்போக்கில் குறுமதங்களாக வளர்ந்து, தத்துவ அடிப்படையை உருவாக்கிக்கொண்டு ஒருங்கிணைந்து, பெருமதமாக ஆனவை. இரண்டாம் வகை மதம் இந்துமதம்.

கிரேக்க, ரோமானிய மதங்கள் அத்தகைய பரிணாம மதங்கள். ஐரோப்பிய பாகன் மதங்கள், ஆப்ரிக்க மதங்கள், ஜப்பானிய ஷிண்டோ மதம், சீனத்து தாவோ மதம் அத்தகையவை. இந்தியாவிலேயே திபெத்தில் போன் என்னும் மதம் அத்தகையது. அவை உருவாகி பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அவற்றுக்கு பெயர் அமைகிறது. அவை வளருந்தோறும் பெயர் மாறுபடுகிறது.

இந்துமதத்தின் தொடக்கம் பழங்குடி வாழ்க்கையில் உள்ளது. நாமறியாத வரலாறற்ற காலகட்டத்தில். இந்தியாவின் குகை ஓவியங்களிலும் பாறைச்செதுக்குகளிலும் அதன் தொடக்ககால சின்னங்கள் உள்ளன. இடக்கல் பாறைக்குடைவு ஓவியங்கள் முதல் பிம்பேட்கா குகை ஓவியங்கள் வரை உதாரணம். பின்னர் அவை எளிய வழிபாட்டுமுறைகளாயின. குறுமதங்கள் ஆயின.

வரலாற்றை நாம் அறியத் தொடங்கும் காலகட்டத்திலேயே இந்தியாவின் குறுமதங்கள் ஒன்றாக இணையத் தொடங்கிவிட்டன. அந்த தொகுப்புக்காலமே  இந்துமதத்தின் தொடக்கம். அவை ஆறுமதங்களும் ஆறு தரிசனங்களும் ஆக தொகுக்கப்பட்டன. (தரிசனங்கள் வழிபாட்டுமுறை இல்லாத மதங்கள். அவையும் பழங்காலத்தில் மதங்கள் என்றே சொல்லப்பட்டன) பின்னர் தத்துவ விவாதங்கள் உருவாயின. அவை மூன்று தத்துவமுறைமைகள் என தொகுக்கப்பட்டன.

ஆகவே வேதங்கள், ஆறுமதங்கள் (சைவம், வைணவம், சாக்தம்,காணபத்யம், கௌமாரம், சௌரம்) ஆறு தரிசனங்கள் (சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம்) மூன்று தத்துவமுறைமைகள் (உபநிடதங்கள், பிரம்மசூத்திரம், கீதை) ஆகியவை அடங்கியதே இந்துமதத்தின் முதன்மையான அடிப்படை வடிவம். இது மிக நீண்ட ஆன்மிக- தத்துவ உரையாடல் வழியாக உருவாகி வந்த அமைப்பு. இது உருவாகி இரண்டாயிரத்துக்கு மேல் ஆண்டுகள் ஆகிறது.

இந்த தொகுப்புத்தன்மை தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. ஆறுமதங்கள் காலப்போக்கில் சைவம், வைணவம், சாக்தம் என மூன்றாகக் குறைந்தன. சௌரம் வைணவத்தில் இணைந்தது. கௌமாரமும் காணபத்யமும் சைவத்தில் இணைந்தன. பின்னர் சாக்தமும் சைவத்தில் இணைந்தது. சைவமும் வைணவமும் எஞ்சின. இந்த இணைவுக்குரிய கதைகளே புராணங்கள் ஆயின.

சைவமும் வைணவமும் பெருமதங்கள் ஆயின. அவற்றில் பல புதிய வழிபாட்டுப்பிரிவுகள் வந்து இணைந்துகொண்டே இருந்தன.அந்த புதிய வழிபாட்டுப் பிரிவுகளை இணைக்கும் பொருட்டு ஆகமங்கள் உருவாகிக்கொண்டே இருந்தன. சைவத்திலும் வைணவத்திலும் உள்ள பல குறுந்தெய்வங்கள் அவ்வாறு இணைந்தவை. அவற்றைப் பற்றி டி.டி.கோசாம்பி முதல் சுவீரா ஜெயஸ்வால் வரை இடதுசாரி வரலாற்றாசிரியர்களே விரிவாக எழுதியுள்ளனர்

அதேபோல, உள்ளிருந்து சடங்கு சார்ந்தும் தத்துவம் சார்ந்தும் புதிய பிரிவுகள் தோன்றிக்கொண்டே இருந்தன. அத்வைதமும், அதை மறுத்து உருவான விசிஷ்டாத்வைதமும் துவைதமும் உதாரணங்கள். அண்மையில்கூட ஷிர்டி சாய்பாபா வழிபாடு இந்துமதத்திற்குள் உருவாகி தனிப்பிரிவாக மிக வலுவாக நீடிக்கிறது. அது இஸ்லாமிய மரபிலிருந்து கிளைத்தது. இன்னும் அதுபோல பல மரபுகள் உருவாகலாம்.

பொயு ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஆறுமதங்களையும் ஒற்றை அமைப்பாக ஆக்கினார். அதுவே இன்றைய இந்துமதத்தின் அடிப்படை. ஷன்மத சம்கிரகம் (ஆறுமதத் தொகுப்பு) செய்த சங்கரரின் வழிவந்தவர்களால் மேலும் மேலும் வழிபாடுகள் தொகுக்கப்பட்டன. பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் அதுவே இந்து மதம் என பெயர் பெற்றது. இன்றும் நீடிக்கிறது.

இந்த பெருங்கட்டமைப்புக்குள் தங்கள் தனித்தன்மையை தக்கவைத்துக் கொள்ளும் தனிமரபுகள் பல உள்ளன. ஒன்றுடன் ஒன்று முரண்படும் பல தரப்புகள் உள்ளன. அந்த சுதந்திரத்தை இந்த மரபு அளிக்கிறது. வழிபாட்டு மரபுகளும் வழிபாட்டை நிராகரிக்கும் அத்வைதமும் இதற்குள் உண்டு. மங்கலச்சடங்குகள் மட்டுமே கொண்ட வைணவமும் சரி, எல்லாவகையான எதிர்மறைச் சடங்குகளும் கொண்ட வாமமார்க்க பூசைகளும் சரி இதற்குள் அமைபவைதான்.

இந்து மதம் என்பது இன்று, இவ்வாறு ஒரு வரலாற்றுப்பரிணாமத்தின் விளைவாக உருவாகி வந்திருக்கும் ஒரு மெய்ஞானமரபுக்கு நாம் அளிக்கும் பெயர். நூறாண்டுகளுக்கு பின் இது இன்னும் மாறுபடலாம், புதிய பெயர் சூட்டப்படலாம். ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் முற்றிலும் புதிய பெயரில் இது நீடிக்கலாம். இது ஒன்றும் பெயர் சூட்டி பதிவுசெய்யப்பட்ட லிமிட்டட் கம்பெனி அல்ல.

ஜெ

***

முந்தைய கட்டுரைம.தி. பானு கவி, ஒரு காவிய வாழ்க்கை
அடுத்த கட்டுரைஓர் உடன்தங்கல்