நாமக்கல் உரை, ஒரு நாள்

கட்டண உரைகளை தேர்ந்தெடுத்த பங்கேற்பாளர்கள் மட்டுமே அமைந்த அரங்கு தேவை என்பதற்காகவே அமைக்கிறோம். அந்த முடிவு மிகச்சரியானது என்பதையே திரும்பத் திரும்ப கட்டண உரைகள் நிரூபிக்கின்றன. நான் இன்றுவரை எந்த உரையையும் போதிய தயாரிப்பு இல்லாமல், அடிப்படையான ஒரு கட்டமைப்பு இல்லாமல், அதுவரை சொல்லாத புதிய பார்வை ஒன்று இல்லாமல், நிகழ்த்தியதில்லை. ஆனால் அந்த தயாரிப்பு அரங்கினர் பக்கத்தில் இருந்து இருந்ததா என்றால் பல இடங்களில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

ஆகவே நான் பலசமயம் அரங்கினரைச் சினந்துகொண்டிருக்கிறேன். சிலரை அரங்கில் இருந்து வெளியே அனுப்பியதும் உண்டு. உரை தொடங்கியபின் சாவகாசமாக உள்ளே வருவதென்பது தமிழகத்தின் பொதுப்பண்பாடு. அரங்கில் இருக்கும் பெரியமனிதர்களை கும்பிடுவதற்காகவே கூட்டங்களுக்கு வருபவர்கள் உண்டு. முன்வரிசையில் அமர்ந்து பேப்பர் படிப்பவர்கள், பேச்சு நடுவே செல்போனில் பேசுபவர்கள், பாதியில் கும்பலாக எழுந்து செல்பவர்கள் எங்கும் உண்டு. அரங்கை கருத்தில்கொள்ளாமலேயே முழங்குபவர்களுக்கு அது பிரச்சினையாக இல்லாமலிருக்கலாம். எனக்குப் பெரிய பிரச்சினை.அரங்கினர் கவனிக்கவில்லை என்றால் என்னால் பேசமுடியாது.

நாமக்கல்லில் கட்டண உரையை நடத்துவதைப் பற்றி நாமக்கல் நண்பர்கள் வாசு, வரதராஜன் மற்றும் எங்கள் பயணங்களில் எப்போதுமே பத்தடி முன்னால் பாய்ந்த்செல்பவரான ‘காங்கோ’ மகேஷ் ஆகியோர் சொன்னார்கள். ஆனால் அவர்களுக்கே கூட்டம் வருமா என்னும் சந்தேகம் இருந்தது. நான் அமெரிக்கா செல்வதனால் உரையை மார்ச்சில் வைக்கலாம் என்று சொன்னபோது இரண்டுமாத தயாரிப்புக்காலம் தேவை என்றனர். அவ்வுரை திருப்பூரில் நிகழ்ந்தது.

ஆனால் நாமக்கல் உரை தளத்தில் அறிவிக்கப்பட்டபோது சிலநாட்களிலேயே அரங்கு  நிறைந்துவிட்டது. தளத்தில் அறிவிப்பை எடுக்கச் சொல்லி எனக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலை நான் மூன்றுநாட்கள் பார்க்கவில்லை. அதன் பின் அறிவிப்பை நீக்கினேன். அதற்குள் முப்பதுபேர் பணம் கட்டியிருந்தனர். இன்னும் பெரிய அரங்குக்குச் செல்லலாம் என்றால் அவகாசம் இல்லை. ஆகவே அரங்கில் கையில்லாத நாற்காலிகள் போட்டு இருக்கைகளைக் கூட்டினார்கள். மேடையின் அளவை பாதியாக்கி இடத்தை கூட்டினர். பக்கவாட்டில் இருக்கைகளைப் போட்டனர். விண்ணப்பித்த அனைவரையும் அமரச்செய்ய முடிந்தது. ஆயினும்  ஐம்பது பேர் வரை வரவேண்டாம் என்று சொல்லப்பட்டார்கள். வேறு வழியில்லை.

ஆறுமணிக்கு நான் மேடையேறும்போது அரங்கு நிறைந்து அமைதியாகிக் காத்திருந்தது. ஆசிரியர் மகேஷ் என்னை அறிமுகம் செய்து பேசும்படி அழைத்தார். இளம்நண்பர் ராம் யஜூர்வேதத்தின் அறிதல் பற்றிய பகுதி ஒன்றை ஓதி விழாவை தொடங்கிவைத்தார். முறைப்படி வேதம் கற்றவர். தமிழகத்தில் சரியான உச்சரிப்புடன், பொருளும் உணர்ந்து வேதம் ஓதப்படுவதை அரிதாகவே கேட்கமுடிகிறது. ராமின் அற்புதமான குரலில் அழியாச்சொல், மானுடத்தின் தொன்மையான சொல் அதே இசையுடன் ஒலிப்பதென்பது அந்த அரங்கை இந்த மண்ணில் நடந்த பல்லாயிரமாண்டுக்கால ஞானப்பயணங்களுடன் இணைத்தது.

பைபிள் ஆதியாகமத்தில் கடவுள் ஒளியுண்டாகக் கடவது என்று ஆணையிட்டு ஒளியை உருவாக்கிய பகுதியை வாசித்தபடி என் உரையை தொடங்கினேன். நான் அது வரை ஆற்றிய உரைகள் பண்பாடு என்றால் என்ன என்பதை வெவ்வேறு கோணங்களில் வகுத்துக்கொள்வதற்கான முயற்சிகள். அவை பீடம். நாமக்கல் உரையே சிலை. என் முதல் ஆன்மிக உரை. அல்லது மெய்யியல் உரை. ‘விடுதலை என்பது என்ன?’ மோட்சம், முக்தி, வீடுபேறு, சொற்கம் என்றெல்லாம் சொல்லப்படுவது என்ன என வரலாற்றின் வழியாகவும் தத்துவத்தின் வழியாகவும் விளக்கும் முயற்சி.

முதற்பகுதி உரை அவற்றைப் பற்றிய பொதுவான கற்பிதங்கள், உருவகங்கள் ஆகியவற்றை விலக்கி அக்கேள்வியை எதிர்கொள்வதற்கான பயிற்சி. வஸ்தி என்று ஆயுர்வேதத்தில் சொல்வார்கள். பொதுவாக குடல்தூய்மையாக்கலைக் குறிப்பிடும் சொல், உடலை எல்லாவகையிலும் தூய்மையாக்குவதை சொல்கிறது. அதன்பின்னரே ஆயுர்வேத மருந்துகள் அளிக்கப்படும். முக்தி, மோட்சம், வீடுபேறு பற்றி பொதுநம்பிக்கையில் உள்ள மாயமந்திரத் தன்மை, மிகைத்தன்மை ஆகியவற்றை அத்தனை எளிதாகக் கடக்கமுடியாது. அது ஒரு வழிகாட்டல் மட்டுமே.

அதன்பின் தத்துவார்த்தமாக வெவ்வேறு ஞானமரபுகளில் சொல்லப்படும் விடுதலைகள் என்னென்ன என விளக்கி வேதாந்தத்தை அவற்றிலொன்றாக நிறுத்தி முடித்தேன். இந்த உரையின் இறுதி என்பது ஒரே வரியில் ‘விடுதலை என்பது எய்துவது அல்ல, திகழ்வது’. அங்கிருந்தே இன்னொரு உரையை தொடங்கவேண்டும். நித்ய சைதன்ய யதியின் சொற்களில் வேதாந்தத்தின் விடுதலை என்பது என்ன என்பதை ஐந்து நிமிடத்தில் சொல்லிவிடமுடியும். வாழ்நாள் முழுக்க பயின்றால்தான் அதில் அமைய முடியும். இதன் அடுத்த உரை ‘சாதனா’ பற்றியதாக இருக்கலாம்.

இந்த உரைகளை நான் முப்பதாண்டுகளுக்கு முன்னரே நிகழ்த்தியிருக்கலாம். உண்மையில் இந்த தத்துவ நூல்களை நான் ஆழ்ந்து கற்றது அப்போதுதான். இன்று அந்நூல்கள் பல நினைவில் சற்று மங்கலாகி விட்டிருக்கின்றன. அவற்றை இன்று அதே தீவிரத்துடன் ஆழ்ந்து பயில்வேன் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இந்த உரையை ஆற்றும் தன்னுணர்வு அல்லது தெளிவு இப்போதுதான் வந்துள்ளது. அதை நானே உணர்ந்தபின் இந்த உரை.

அதாவது வெண்முரசுக்குப் பின். அது என் யோகம். என் சாதனா. இன்று பேசுகையில் நான் என் அறிதல்களை சொல்லவில்லை. என் நூலறிவைச் சொல்லவில்லை. என் ஐயங்களை முன்வைக்கவில்லை. நான் சொல்வன என்னால் நன்கறியப்பட்டவை. கண்முன் உள்ள உண்மைகள் போல துலங்கியவை. ஆகவே எந்த ஐயமும் இன்றி முன்வைக்கப்படுபவை.

ராம்

ஆனால் ஒரு மேடையின் எல்லைக்குள் உள்ளவற்றையே மேடையுரையாக ஆற்ற முடியும். அப்பால் உரிய செவிக்கென மட்டும் சொல்லப்படும் சில எப்போதும் எஞ்சியிருக்கும். அது ஆன்மிகத்தில் மட்டுமல்ல, கலையிலக்கியம் அனைத்திலும் அப்படித்தான். உரை ஓர் அழைப்பு மட்டுமே. உரையின் வழியாக முழுமையாக ஒன்றை சொல்லவோ கற்கவோ முடியாது.

இந்த எல்லையை நான் மிக உணர்ந்தே இவ்வுரைகளை ஆற்றுகிறேன். அத்துடன் ஒன்று, நான் திரும்பத் திரும்ப இதை வலியுறுத்துகிறேன். இது ஓர் ஆன்மிக குருவின் அருளுரை அல்ல. இது சில மெய்யியல்புரிதல்களை உருவாக்குவதற்கான ஒரு தொடக்க வழிகாட்டல் மட்டுமே. ஓர் எழுத்தாளனாக, மெய்யியல் மாணவனாக, நித்ய சைதன்ய யதியின் மாணவனாக, ஒரு குறிப்பிட்ட மெய்மரபின் தொடர்ச்சியாக நின்று நான் உரைப்பவை மட்டுமே. நான் என்னை முன்வைக்கவே மாட்டேன்.

இந்த வகையான உரைகளை ஆற்றுவதற்கான தேவை என்ன? அதை நித்ய சைதன்ய யதி உணர்ந்திருந்தார். இன்று இரண்டு எல்லைகள் உள்ளன. ஒன்று சர்வசாதாரணமான உலகியலை நாத்திகவாதமாக முன்வைக்கும் போக்கு. நாத்திகம் என்பதே ஓர் உயர்விடுதலை தத்துவ நிலைபாடாக இருக்கமுடியும். ஆனால் அது தனக்கான தத்துவம், தனக்கான இலட்சியவாதம் ஆகியவற்றை எய்தியிருக்கவேண்டும். அது இங்கில்லை. இருப்பது எதிர்மறைப் பண்பு ஓங்கிய சல்லிசான ஒரு உலகியல் பார்வை மட்டுமே

மறுபக்கம், மிக எளிமையான, சொல்லப்போனால் பாமரத்தனமான ஆன்மிகம். சில்லறை அற்புதங்களை நம்புவது. எளிய தொன்மங்களில் உழல்வது. முதலில் சொன்னதைவிட இதுவே ஆபத்தானது.மெய்யான ஞானத்தேடல் கொண்டவர்களைக்கூட பொய்யான நம்பிக்கைகளை நோக்கி கொண்டுசெல்கிறது. அவர்களே எளிமையான பாவனைகளுக்குள் விழுந்துவிடுகிறார்கள். நம்பிக்கை ஒரு கல்திரை. பாவனை இரும்புத்திரை.

அத்தகையவர்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஆகவே இந்த உரைகளை முடிந்தவரை ‘நிலத்தில் நின்று’ ஆற்றுகிறேன். அப்பட்டமான யதார்த்தத்தில் இருந்தே தொடங்குகிறேன். பெரும்பாலான மாயைகளை, பாவனைகளை கலைக்கிறேன். நம்பிக்கைகளை அவற்றின் மெய்யான மதிப்பை உணர்ந்து கொள்ளும்படிச் சொல்கிறேன்.

உண்மையில் செவிகொள்ளும் ஒருவர் தன் வழி என்ன என தானே தேர்வுசெய்துகொள்ள முடியும். தன்னை தானே ஆற்றுப்படுத்திக்கொள்ள முடியும். என் இலக்கு அவ்வளவே. ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என்பதையும் அறிவேன். இதன் வழியாக என்னிடம் வருபவர்களை விட என்னைவிட்டு விலகிச்செல்பவர்களே அதிகம் இருப்பார்கள் என்று தெரிந்திருக்கிறேன். ஆனாலும் இது ஓர் ஆணை. நான் ஒரு கருவி.

புகைப்படங்கள்- மோகன் தனிஷ்க்

முந்தைய கட்டுரைஉறையூர் அப்பாவுசுந்தரம் பிள்ளை
அடுத்த கட்டுரைசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் – தேசிய விருதுகள்