ஆன்மீகப் பயணத்தில் மறுதரப்புகளை கற்றுக்கொள்ளவேண்டுமா?

உளம் கனிந்த ஜெக்கு ,

முதன் முதலாக  தங்களை பார்த்தது  விஷ்ணுபுர விழாவில்தான்  அன்றைய நாள் வீட்டில் உள்ளவர்களிடம் ஜெவை பார்த்துவிட்டேன் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டேன். பின்பு திருப்பூர் கட்டண உரை கேட்க வந்து தயக்கத்தால் உங்களை நெருங்கவோ பேசவோ முடியவில்லை. அடுத்ததாக நாமக்கல் கட்டண உரை பற்றிய  அறிவிப்பை கண்ட உடன் எப்படியும் போய்விட வேண்டும் என முடிவு எடுத்து வந்தும் விட்டேன். என் பேராசிரியரால் தயக்கம் என்ற அணை உடைந்தது, தங்களை நேரில் சந்தித்து சில நிமிடங்கள் பேசியது புகைப்படம் எடுத்து கொண்டது விடுதலை (பேரின்பம்) என்பது  என்ன என்ற உரையை கேட்பதற்கு முன்பே கிடைத்த பேரின்பம் அது. மீண்டும் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் மறக்கமுடியாத ஒன்று.

உரையில் ஆறு தரிசனங்களின்  சாராம்சம் அதன் வழி விடுதலை, ஆறு மதங்கள், புராணங்கள் மற்றும்  ஆசாரங்கள்  பற்றி எடுத்து கூறினீர்கள். அதிலிருந்து   உச்சியை சென்று அடைய இருக்கும்  பல வழிகளில்  எந்த வழியிலும் செல்லாம் என புரிந்து கொண்டேன். விடுவதே  விடுதலை  என ஆரம்பித்து திகழ்வதே விடுதலை  உரையை முடித்தது  புது திறவு கோலாக அமைந்தது. அற்புதமான உரைக்கு  நன்றிகள் ஜெ.  என் சந்தேகம், ஒரு வழியை (தரிசனம்/மதம்) பின்பற்றிக்கொண்டு இருப்பவர் மற்றவற்றையும்  உணர்ந்து தெளிய வேண்டுமா? எனில் அந்த தத்துவ கல்வியை எந்த இடத்தில் இருந்து தொடங்க வேண்டும்? கேள்விகளில் தவறு இருப்பின் மன்னிக்கவும்.

அன்புடன்
பவித்ரா, மசினகுடி

***

அன்புள்ள பவித்ரா

மசினகுடிக்கு ஒரு முறை வரவேண்டும், நித்யா நினைவுகளுடன்

அந்த உரையில் நான் சொன்னது வழிகளின் பன்முகத்தன்மையை. ஆகவே இக்கேள்விக்கான பதிலும் பன்முகத்தன்மையைச் சார்ந்ததே. ஒருவர் பக்தியை, வழிபாட்டைக் கைக்கொண்டு அவ்வழியே விடுதலையை நாடினால் அவர் பிற வழிகளைப் பற்றி அறிந்திருக்கவேண்டியதில்லை. யோகம் அவர் வழியாக இருந்தால் அறிந்திருக்கவேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஆனால் ஞானம் அதாவது அறிந்து கடத்தல் அவர் வழி என்றால் கட்டாயமாக அவர் தனக்கு மாற்றுத்தரப்புகளை, எதிர்த்தரப்புகளை நல்லெண்ணத்தை அளித்து ஓரளவேனும் கற்றிருத்தல்வேண்டும்.

பக்தி அல்லது சடங்கு அல்லது யோகம் ஒருவர் வழியாக இருக்கும் என்றால் அவர் தன் வழிக்கு மாறுபட்ட ஒன்றுடன் விவாதிக்கவே கூடாது. மதவிவாதம் போல ஆன்மிகத்திற்கு எதிரான இன்னொன்று இல்லை. ஞானம் அவர் வழி என்றால் முறையான கல்வியை அடைந்து, இணையான கல்வி கொண்டவருடன், தர்க்கத்துக்கான முறைமையை கடைப்பிடித்து விவாதிக்கலாம். கற்கும்பொருட்டு மட்டுமே அந்த விவாதம் நிகழவேண்டும். விவாதத்திற்குப்பின் விவாதிப்பவர் இருவரும் நிறைவடைந்திருக்கவேண்டும். குருவின் அனுமதி இன்றி விவாதிக்கலாகாது.

கற்பது வேறு, விவாதிப்பது வேறு. விவாதிப்பது வேறு பொதுவிவாதம் வேறு. நாம் நம்பிக்கை சார்ந்த வழிகளை தெரிவுசெய்தால் கற்கும்போதே நமக்குள் விவாதிக்க ஆரம்பித்துவிடுவோம். அந்த விவாதமே நம் நம்பிக்கையை குலைக்கும். பக்தி, உபாசனை, வேள்வி ஆகியவற்றில் விவாதம் என்பதே பாவம்தான். அறிவின் வழியில் நாம் நமக்குள் விவாதிக்கலாம். இணையான, அணுக்கமான இன்னொரு மாணவரிடம் தெளிவின்பொருட்டு விவாதிக்கலாம். பொதுவிவாதம் என்பது நாம் உறுதியாக நம்மை நிலைநிறுத்தியபின் செய்யவேண்டியது. விவாதத்தின் எந்த குழப்பமும் நம்மை சிதறடிக்காது என நாமும் நம் ஆசிரியரும் உணர்ந்தபின் நடத்தவேண்டியது.

விவாதத்திற்கென பல நெறிகள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றைக் கடைப்பிடிப்பது விவாதத்தை பயனுள்ளதாக ஆக்கும். நான் முன்பெல்லாம் அந்த முறைமைகள் இல்லா விவாதம் நேரவிரயம் என்னும் எண்ணத்தில் இருந்தேன். ஆனால் அவை நம் சிந்தனையையும் மழுங்கடிக்கின்றன என்று இன்று உணர்கிறேன். ஒரு மூர்க்கருடன் விவாதித்தால் மெல்லமெல்ல நீங்கள் மூர்க்கராவீர்கள். எத்தனை கூரியர் எனினும் ஒரு மழுங்கருடன் விவாதித்தால் மழுங்கி விடுவீர்கள்.

முன்பு விவாதங்கள் அரிதாக இருந்தன. நேர் அறிமுகம் உள்ளவர்களிடம் விவாதித்தோம். ஆனால் இன்று சமூக ஊடகவெளி விவாதக்களத்தை உலகளாவப்பெருக்குகிறது. எவரென்றே தெரியாதவர்களிடம் விவாதிக்கச் செய்கிறது. விளைவாக, கசப்பும் அறிவின்மையுமே எஞ்சுகிறது. அறிவார்ந்தவற்றையே அவ்வண்ணம் விவாதிக்கலாகாது. ஆன்மிகமானவற்றை விவாதிப்பது பெரும்பிழை. ஆன்மிகத் தற்கொலை அது. குறிப்பாக மதப்பிடிவாதம் கொண்டவர்கள் நம் உலகில் இல்லை என்றே சொல்லவேண்டும்.

மதப்பிடிவாதத்திற்கு நிகரானதே அரசியல்மூர்க்கமும். எதை பேசினாலும் ஒன்றிலேயே சென்று நிற்பார்கள். எதையுமே புரிந்துகொள்ள முடியாமலாகிவிடுவார்கள். அதற்கிணையானது, தன்னுள் சாதி,மதம் சார்ந்த ஒரு பற்றை வைத்துக்கொண்டு அதை சாதுரியமாக மறைத்து விவாதிப்பவர்கள். அவர்களுடன் விவாதிக்கையில் நாம் ஐயம் கொண்டவர்கள் ஆகிறோம். காலப்போக்கில் நமக்கு எதிராக விவாதிக்கும் அனைவரையும் ஐயப்படத் தொடங்கிவிடுவோம்.

இன்றைய சூழலில், விவாதித்து வெல்வதெல்லாம் இயல்வதே அல்ல.  நம் செய்யக்கூடுவது சூழலில் இருக்கும் பல்லாயிரம் முட்களில் நாம் கிழிபட்டுவிடாமல் கடந்துசெல்வது மட்டுமே.

ஜெ

***

முந்தைய கட்டுரைஆனந்த குமாரசாமி ஒரு ரிஷியா?
அடுத்த கட்டுரைமுதல் ஆறு -கடிதங்கள்