நீர்ச்சுடர் வருகை

அன்புள்ள ஜெ,

நீர்ச்சுடர் செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப்பெற்றேன். எஸ்.பாகுலேயன் பிள்ளை அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட நூலில், எஸ்.பாலகிருஷ்ணனுக்கு அன்புடன் என்று உங்கள் கையெழுத்தில் பார்த்ததும் மனதில் இனிமை நிறைந்தது. நாள் சிறப்புற்றது. நன்றி.

உங்கள் கையெழுத்து முன்பிருந்ததைவிட இப்போது ஒரு குறியீடுபோல மாறிவருகிறது. பேனா உபயோகிப்பது மிகவும் குறைந்ததனால் இருக்கலாம்.

இந்நூல் விஷ்ணுபுரம் பதிப்பகத்தின் முதல் செம்பதிப்பு. சிறப்பாக வந்துள்ளது. நூல் எப்போது வரும் என்பது பற்றிய தகவல்களை தொடர்ந்து மின்னஞ்சல், வாட்ஸப்பில் தெரிவித்துவந்த மீனாம்பிகை அவர்களுக்கு நன்றி. பதிப்பகத்தை நடத்தி வரும் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

ஒரு மாபெரும் அழிவிற்குப் பிறகு நடக்கும் நீர்க்கடன் பற்றிய விரிவான சித்திரத்தை நாவல் அளிக்கிறது. திவ்யாஸ்திரங்கள் ஏதுமின்றி அஸ்வத்தாமனும் அர்ஜுனனும் நடத்தும் இறுதி யுத்தம் ஒரு உச்ச கலைவடிவாக வர்ணிக்கப்பட்டுள்ளது. கங்கையில் பாய்ந்து உயிர் துறக்கும் பொதுமக்கள், இளவரசிகள், ஈமச் சடங்குகள் நடக்கும் இடத்தில் கர்ணனைத் தன் மகன் என குந்தி உலகுக்கு அறிவிக்கும் இடம் என நாவல் முழுதும் உணர்வு உச்சங்களே.

ஒரு பாத்திரத்தைப் பற்றி உயர்வாகவும் தாழ்வாகவும் இரு வேறு எல்லைகளில் வர்ணிக்கும்போது, அவை உண்மையில் உங்கள் மனதின் அடிஆழத்தில் இருந்து வருவதாகவே தோன்றும். இந்த மாற்றம் உங்கள்மீது செலுத்தும் தாக்கத்தை எப்படித் தாங்கிக்கொள்கிறீர்கள் என்று எப்போதும் ஆச்சரியமாக இருக்கும். இந்த நாவலில் கனகர் இளைய யாதவரைக் கண்ட சிறிது நேரத்தில் இந்த மாற்றத்தை அடைகிறார்.

கனகர் இளைய யாதவரை விழியசையாது நோக்கிக்கொண்டு நின்றிருந்தார். முன்பு ஒருமுறையும் அவரை அவ்வண்ணம் பார்த்ததில்லை என்று தோன்றியது. பார்க்கும்தோறும் முன்பொருமுறையும் அவரை மெய்யாகவே பார்த்ததில்லை என்ற நம்பிக்கை உறுதிப்பட்டபடி வந்தது. ஒவ்வொரு முறையும் தொலைவில் அவரை பார்க்கையில் முதற்கணம் எழும் அகத்திடுக்கிடல், அவர் அணுகி வருகையில் எழும் சொல்லில்லா உளக்கொந்தளிப்பு, அணுகியபின் மெய்மறைய உளமழிய இன்மையென்றே உணரும் இருப்பு, அகன்றபின் விழிக்குள் எஞ்சும் பாவையென அவரை மீண்டும் காணுதல், எண்ணம் தொடுந்தோறும் கரையும் அவ்விழிப் பாவையை உள்ளத்தில் அழியாது சேர்த்து வைத்துக்கொள்ளும் பொருட்டு எழும் பதற்றம், பின்பு அவரை பார்க்கவே இல்லை எனும் ஏக்கம், பிறிதொருமுறை பார்த்தாகவேண்டும் எனும் தவிப்பு, பார்க்கவே முடியாதோ என்னும் துயரம்ஒவ்வொருமுறையும் அது மலைப்பாறை உருண்டு வந்து நீரில் விழுவதுபோன்ற ஒரு கொந்தளிப்பு. அறிந்த எந்த இன்பத்துடனும் அதற்கு தொடர்பில்லை. ஆயினும் அறிந்த இன்பங்களில் எல்லாம் அதுவே தலையாயது

கனகர் நடுங்கி எழுந்த உரத்த குரலில்அரசே, நான் எளிய அந்தணன். அறமுணர்ந்தவன் அல்ல. அரசுசூழ்தல் அறிந்தவனும் அல்ல. அரண்மனைக் கடையூழியன். வாழ்நாளெல்லாம் அடிபணிதல், ஆணைபேணுதல் அன்றி வேறேதும் அறியாது வாழ்ந்து இன்று கீழ்மையன்றி எதுவும் எஞ்சாமல் இங்கு நின்றிருக்கிறேன். எனினும் இதோ இதை சொல்லத் துணிகிறேன். ஏனென்றால் இப்புவியில் வாழும் எக்கடையனை விடவும் கடையனாக உங்களை இத்தருணத்தில் உணர்கிறேன். மானுடரை வைத்தாடும் இழிந்தோன் நீங்கள். இதோ இக்குருதி அனைத்திற்கும் பொறுப்பேற்கவேண்டிய கொடுந்தெய்வம்!” என்றார்

வெண்முரசின் ஆசிரியருக்கு நன்றியும் வணக்கமும்.

அன்புடன்,

S பாலகிருஷ்ணன், சென்னை

முந்தைய கட்டுரைசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் – தேசிய விருதுகள்
அடுத்த கட்டுரைஇந்திரஜாலம்