அறம் ஆங்கிலத்தில்…கடிதம்

அன்புள்ள ஜெ

அறம் கதைகள் ஆங்கிலத்தில் முதன்மைமுக்கியத்துவத்துடன் வருவது மிகமிக நல்ல ஒரு தொடக்கம். உங்கள் கதைகள் வருவதற்கும் இன்னொரு ஆசிரியர் எழுதிய கதைகள் வெளிவருவதற்கும் மிகப்பெரிய வேறுபாடுண்டு. நீங்கள் ஒரு தனிநபர் அல்ல. ஒரு வெறும் எழுத்தாளர் அல்ல. இங்கே மொழியாக்கம் செய்யப்படும் பல எழுத்தாளர்களுக்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அவர்கள் ஒருவகையில் naive ஆன , எளிமையான எழுத்தாளர்கள். இலக்கிய வாசிப்பு கிடையாது. எதைப்பற்றியும் பேசவும் தெரியாது. எங்கேயும் வெள்ளந்தியாக தான் எழுதியதைப் பற்றி மட்டும் சொல்வார்கள். தமிழில் ஓர் இலக்கிய இயக்கம் இருப்பதையே சொல்ல மாட்டார்கள். சொல்லவும் முடியாது. இதுவரை இத்தனைபேர் தமிழில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். யாருமே புதுமைப்பித்தன் பெயரைக்கூட சொல்வதில்லை. ஆகவே உண்மையில் தமிழில் இலக்கியம் இருக்கும் செய்தியே தமிழகத்துக்கு வெளியே (நான் பணியாற்றும் கல்லூரியில்கூட) எவருக்கும் தெரியாது. தமிழகம் இலக்கியத்தில் பின்னடைவு கொண்ட ஒரு மாநிலம், இங்கே இருந்து எப்படியோ ஒன்றிரண்டுபேர் எழுதி வந்துவிட்டார்கள் என நினைப்பார்கள்.அல்லது அப்படி நினைக்க விரும்புவார்கள். (அவர்களில் ஒருவர் இலக்கியம் என்றால் என்னவென்றே தெரியாத தமிழர்கள் தன்னை அடிக்க வருகிறார்கள் என்றுதான் எல்லா மேடைகளிலும் அழுவார்) அந்த கூட்டு அறியாமையை உங்கள் வருகை உடைக்க முடியும். நீங்கள் கவனிக்கப்பட்டால் தமிழ் நவீன இலக்கியத்தையே கொண்டுசெல்வீர்கள். 1992 வாக்கில் மலையாளத்தில் அகிலன் தவிர எவர் பெயரும் தெரியாது.  இன்றைக்கு தமிழ் எழுத்தாளர் அனைவருமே அறியப்பட்டவர்கள். அது நீங்கள் சலிக்காமல் அவர்கள் அனைவரைப்பற்றியும் எழுதியமையால்தான். எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட பலர் பற்றி நீங்கள் எழுதியதையும், பேசியதையும் கேட்டிருக்கிறேன். அது இப்போதும் நடக்கட்டும்

சந்திரசேகர்

முந்தைய கட்டுரைStories of the True
அடுத்த கட்டுரைதேடலின் ஆடல்- விஜய் கிருஷ்ணா