பொன்னியின் செல்வன், சோழர்கள்
பொன்னியின் செல்வன் விழா உரை
பொன்னியின் செல்வன், ஏன் சினிமா தேவை?
பொன்னியின் செல்வன் பற்றி முழுமையாக அறிய….
பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க வேண்டும் என்று மணிரத்னம் சொன்னபோது என்ன நினைத்தீர்கள்? அது ஒரு வெகுஜனப் படைப்பு என்று சொல்லியிருக்கிறீர்கள்.
ஆமாம், நாங்கள் எடுத்திருக்கும் சினிமாவும் ஒரு வெகுஜனப்படைப்புதான். பத்து வயது பையன் முதல் அத்தனைபேரும் ரசித்துப் பார்க்கலாம். கல்கியின் பொன்னியின் செல்வன் தமிழ் வெகுஜனப்படைப்புகளில் ஒரு கிளாஸிக். வெகுஜனப்படைப்புகளில் ஒன்று எப்படி கிளாஸிக் ஆகிறதென்றால், வெகுஜனங்கள் அதை ஏற்றுக்கொள்வதன் வழியாகத்தான். பொன்னியின் செல்வன் வெளிவந்து எழுபது ஆண்டுகள் ஆகப்போகிறது. இன்றைக்கும் அதுதான் தமிழ் வெகுஜனப்படைப்புகளில் முதலிடத்தில் இருக்கிறது.
அதற்கு என்ன காரணம் என நினைக்கிறீர்கள்?
ஒரு வெகுஜனப்படைப்பு எப்படி அந்த அளவுக்குச் செல்வாக்கை அடைகிறது என்று சொல்லவே முடியாது. முடிந்தால் எல்லாரும் ஒன்றை எழுதிவிடலாமே. ஒரு படைப்பு அப்படி ஒரு பெரிய செல்வாக்கை அடைந்தபின்னர் அது எப்படி அப்படி ஆயிற்று என்று நாம் யோசிக்கலாம். இதெல்லாமே நம் எண்ணங்கள்தானே ஒழிய உண்மையாக ஆகவேண்டும் என்பதில்லை.
பொன்னியின் செல்வனின் மகத்தான வெற்றிக்குக் காரணம் அதிலுள்ள குட்நெஸ்(goodness) தான் என்பது என் எண்ணம். அதில் கெட்டவர்கள் இல்லை. மிகப்பெரிய சதிகாரர்களான பாண்டிய ஆபத்துதவிகளும் ரவிதாசனும்கூட அவர்களுக்கென ஓர் உயர்ந்த இலட்சியம் கொண்டவர்கள்தான். பெரிய பழுவேட்டரையர் செய்வதெல்லாமே சோழநாட்டு நன்மைக்காக என்று உண்மையிலேயே நம்பித்தான். ஓர் உச்சகட்ட பெருந்தன்மையில் அந்நாவல் முடிகிறது.
அடுத்தபடியாக பொன்னியின் செல்வனில் உள்ள இளமை. சிறுவன் என்றே சொல்லத்தக்க வந்தியத்தேவன் கண்வழியாகவே நாவல் செல்கிறது. அவன் துடுக்கானவன். இளமைக்குரிய எல்லா மடத்தனமும் கையில் உண்டு. அருண்மொழியும் மிக இளமையானவன். அந்நாவலை படிப்பவர்கள் பெரும்பாலும் வந்தியத்தேவனின் அதே வயதில் அதை படிக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் வந்தியத்தேவனும் குந்தவையும் வானதியும் அருண்மொழியும் ஆக மாறிவிடுவார்கள்.
பொன்னியின் செல்வன் தமிழர்களின் ஒரு பொற்காலத்தைச் சித்தரிக்கிறது. ஆகவே நமக்கு அந்தக் காலகட்டத்தை வாசிக்க பிடித்திருக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமானது அதிலுள்ள இதிகாசச்சாயல். அருண்மொழி ராமன் போலிருக்கிறான். பெரிய பழுவேட்டரையர் பீஷ்மர் போலிருக்கிறார்.
பொன்னியின்செல்வனை திரைக்கதையாக ஆக்குவதில் என்ன சிக்கல்களை சந்தித்தீர்கள்?
பொன்னியின்செல்வன் மிக நீளமானநாவல். ஆகவே அதில் முக்கியமான பகுதிகளை மட்டும் எடுத்துத்தான் திரைப்படமாக ஆக்கமுடியும். அதில் எல்லாருமே கதாநாயகர்கள், கதாநாயகிகள். பூங்குழலி, மணிமேகலை, குந்தவை எல்லாருமே பெரிய கதாபாத்திரங்கள். ஆகவே எதை வைப்பது, எதை தவிர்ப்பது என்பதுதான் பெரிய சிக்கல்.
நாவலை வாசித்தவர்களுக்குத் தெரியும். அந்நாவலில் மிக நீளமான வசனங்கள் உண்டு. ஏராளமான விஷயங்கள் உரையாடல் வழியாகவே நாவலுக்குள் சொல்லப்படுகின்றன. இன்றைய சினிமாவில் நீளமான உரையாடல்களுக்கு இடமில்லை. உணர்ச்சிகளை வெளிக்காட்டும் முகபாவனைகளுக்கு நீண்ட வசனங்கள் தடையாக அமையும். ஆகவே உரையாடல்கள் வழியாக கல்கி வெளிப்படுத்தும் உணர்ச்சிகளை எப்படி காட்சியாக ஆக்குவது என்பது மிகப்பெரிய சவால்.
கல்கியின் நாவலில் நிறைய பகுதிகள் விளையாட்டுத்தனம், சாகசம் என்று சென்றுகொண்டே இருக்கும். அவற்றை அப்படியே சினிமாவில் வைக்கமுடியாது. சினிமாவுக்கு சரிவிகிதம் முக்கியம். எல்லா கதாபாத்திரங்களுக்கும் இடம் அளிக்கவேண்டும். நாவலில் ஆதித்தகரிகாலன் மற்றவர்கள் அவனைப்பற்றிச் சொல்வதன் வழியாகவே அதிகமும் வருகிறான். சினிமாவுக்கு அது சரிவராது. அவர் வரும் நேரடிக் காட்சிகள் வேண்டும்.
அத்துடன் கல்கியின் நாவலில் நேரடியாக போர்களே வரவில்லை. போர்களைப்பற்றி பேசிக்கொள்கிறார்கள். சினிமாவில் பேசினால் போதாது, காட்டவேண்டும். அவற்றை எப்படி கதையோட்டத்தில் அமைப்பது என்பதும் பெரிய கேள்வி. அத்துடன் சினிமாவுக்கு ஒரு கட்டமைப்பு உண்டு. ஓப்பனிங் கிளைமாக்ஸ் என்பார்கள், படம் தொடங்கும்போதே வரும் உத்வேகமான காட்சி. அதன்பின் திருப்பங்கள். இடைவேளை முடிச்சு. கிளைமாக்ஸ். அதற்குள் நாவலின் கதையை அமைக்கவேண்டும்.
இந்தமாதிரி படத்தில் திரைக்கதை என்பது ஒரு தொடக்கநிலைதான். எடுக்க எடுக்க மாறும். இறுதியாக ஒரு வடிவம் அமைந்து வரும்.
இப்போது பொன்னியின்செல்வன் போன்ற ஒரு நாவலை ஏன் சினிமாவாக எடுக்கவேண்டும்? அதன் அவசியம் என்ன?
இன்று ஹெர்குலிஸ் பற்றி உங்களுக்கு தெரியும். டிராய் பற்றி தெரியும். தோர் பற்றி தெரியும். நீங்கள் வரலாற்றை படித்தா தெரிந்துகொண்டீர்கள்? கட்டபொம்மன் பற்றி எப்படி தெரியும்? சினிமா வழியாகத்தானே? ஒரு பண்பாட்டின் வரலாறு அதன் அடுத்த தலைமுறைக்கு சினிமா வழியாகத்தான் இன்று சென்று சேரமுடியும். நூறு வருடம் முன்பு நாடகம் வழியாகச் சென்றது. அதற்கு முன் கூத்து வழியாகச் சென்றது.
நம் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு இப்படித்தான் கொண்டுசெல்லமுடியும். இப்படித்தான் உலகம் முழுக்க நம் மரபை எடுத்துச் சொல்லமுடியும். நாம் நமக்கும் பிறருக்கும் நாம் யார் என்று சொல்கிறோம். இப்படித்தான் பண்பாட்டு அடையாளங்கள் உருவாகின்றன.
சரி, அதற்கு வரலாற்றைச் சொல்லலாமே, ஏன் நாவலை சினிமாவாக எடுக்கவேண்டும் என்று கேட்கலாம். வரலாறு சினிமாவாக ஆகாது. ஆவணப்படமாக வேண்டுமென்றால் எடுக்கலாம். அமெரிக்க உள்நாட்டுப்போர் அவர்கள் அறிந்த சமீபகால வரலாறு. ஆனால் கோன் வித் த விண்ட் என்னும் நாவலை சினிமாவாக ஆக்கி, அதன்வழியாகவே அந்த வரலாற்றை இன்றுவரை தலைமுறைகளின் நினைவில் நிறுத்துகிறார்கள். இதுதான் ஒரே வழி.
இதில் காட்டப்படுவது உண்மையான வரலாறா?
இல்லை. ஆனால் உண்மையான வரலாறு என்ன என்று எப்படி தெரிந்துகொள்ள முடியும்? நமக்கு சோழர்காலம் பற்றி கிடைப்பவை சில கல்வெட்டுச்செய்திகளும் சில செப்பேடுகளும், சில இலக்கியப்படைப்புகளும்தான். அவற்றை வைத்து நாம் பெரும்பகுதி ஊகித்து எழுதியதுதான் சோழர் வரலாறு. கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியும் சதாசிவப் பண்டாரத்தாரும் எழுதினர். அது வரலாற்று ஊகம். மிச்சமெல்லாம் நம் கற்பனைதான்.
சோழர்காலத்து உடைகள் நகைகள் பற்றியெல்லாம் பொன்னியின் செல்வன் எழுதப்பட்டபோது கல்கியும், ஓவியர் மணியனும் கற்பனை செய்து உருவாக்கினர். பொன்னியின் செல்வன் சினிமாவுக்கு மேலும் ஆராய்ச்சிகள் செய்திருக்கிறோம். சோழர்கால கோயில்களில் உள்ள சிற்பங்களை மாதிரியாகக் கொண்டு ஆடைகளையும் ஆபரணங்களையும் அமைத்திருக்கிறோம். இன்னும் கொஞ்சம் சரியான வரலாற்றுத்தன்மை கொண்டுவந்திருக்கிறோம். ஆனாலும் கற்பனையில்தான் பெரும்பகுதி விரித்தெடுக்கப்பட்டிருக்கிறது. ஏனென்றால் நமக்கு ஆயிரம் ஆண்டுக்கு முந்தைய வரலாறு பற்றி ஒன்றுமே தெரியாது.
சிலவிஷயங்களை மிகைப்படுத்தியே ஆகவேண்டும். சோழர்கால அரண்மனைகள் எல்லாம் மரத்தாலானவையாக இருக்கவேண்டும். அவை எவற்றுக்கும் நம்மிடம் மாதிரி வடிவங்கள் இல்லை. கங்கைகொண்ட சோழபுரத்தில் மாளிகைமேடு என்னும் இடத்தில் ராஜேந்திர சோழனின் அரண்மனையின் மண்ணாலான அடித்தளம் உள்ளது. அது பெரிய அஸ்திவாரமே அல்ல. அப்படியென்றால் அன்றைய அரண்மனைகள் எல்லாம் இன்றைய நம் வீடுகள் அளவுக்குத்தான் இருந்திருக்கும். ஆனால் அதை அப்படியே எடுக்க முடியாது. அதை கற்பனையில் பிரம்மாண்டமாக ஆக்கித்தான் எடுக்கமுடியும்.
உலகம் முழுக்க அப்படித்தான் எடுக்கிறார்கள். டிராய் நகரை எப்படி படமாக்குகிறார்கள்? அலக்சாண்டரின் அரண்மனையை எப்படி சினிமாவில் காட்டுகிறார்கள்? கற்பனைதானே? அதேபோன்ற கற்பனைதான் இதுவும். வெறும் கற்பனை அல்ல. உண்மையான தகவல்களை ஒட்டி கொஞ்சம் விரிவுபடுத்திக்கொண்ட கற்பனை.
பொன்னியின் செல்வன் பாகுபலிக்குப் போட்டியான படமாக இருக்குமா?
பாகுபலி நாமெல்லாம் இளம்வயதில் படித்துப் பழகிய அம்புலிமாமா கதைகளில் இருந்து உருவாக்கப்பட்டது. ஓர் ஊரில் ஒரு ராஜா என்றவகையான கதை. அதில் ஃபேண்டஸி அம்சம் அதிகம். அருவிமேல் ஏறுவது, ஆயிரம் கிலோ எடையை தூக்குவது, காட்டெருதை தேரில் கட்டுவது எல்லாம் அதிலுண்டு. இது உண்மையான சரித்திரத்தை ஒட்டிய படம். ஆகவே இது யதார்த்தமாகவே இருக்க முடியும். யதார்த்தத்தின் பிரம்மாண்டம்தான் இதிலுள்ளது. இதில் சாகசம், சதி, உணர்ச்சிகரமான காட்சிகள் ஆகியவற்றுடன் போர்க்களக் காட்சிகளும் உண்டு.
பொன்னியின் செல்வன் போன்று மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்த கதைகளை எடுக்கும்போது நடிகர்களை அந்த கதாபாத்திரத்தில் பொருத்திக்கொள்வது கடினமாக இருக்கிறது என்கிறார்களே?
நாம் நன்றாக ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். இலக்கியங்களின் கலைவடிவங்கள் இலக்கியங்களில் இருந்து வேறுபட்டுத்தான் இருக்கும். வியாசமகாபாரதம் எட்டாயிரம் பக்கம் வரும். பாரதம் தெருக்கூத்து ஐந்து மணிநேரம்தான். நம் முன்னோர் அதை ரசித்தார்கள் அல்லவா? உள்ளூர் நடிகர்தான் அர்ஜுனனாக நடித்தார். அவரை அர்ஜுனன் என நம்பினார்கள் அல்லவா? மகாபாரதமும் ராமாயணமும் கூத்து, நாடகம், சினிமா வழியாகவே அடுத்தடுத்த தலைமுறைக்குச் சென்று சேர்ந்தன.
கலைவடிவமாகும்போது பெரிய இதிகாசங்கள் சுருக்கமாக ஆகின்றன. அவற்றில் நாடகத்துக்கு உரிய பகுதிகள் மட்டும் இடம்பெறுகின்றன. நாம் அந்த நடிகர்கள்தான் அந்த கதாபாத்திரங்கள் என்று நம்பித்தான் ஆகவேண்டும். அதுதான் கலையை ரசிக்கும் வழி. அப்படித்தான் உலகம் முழுக்க கலைகள் ரசிக்கப்படுகின்றன.
மேலும் பொன்னியின் செல்வன் சினிமா பார்க்கப்போகிறவர்களில் 99 சதவீதம்பேரும் அந்நாவலை படிக்காதவர்கள். அவர்களுக்கு எந்த தடையும் இருக்காது. கதையை படித்துவிட்டு சினிமாவில் எதைக் காட்டினாலும் பிடிக்காது என்று பிடிவாதமாக இருக்கும் பழைமைவாதிகள் சிலர் இருக்கலாம். அவர்கள் மற்றவர்களின் ரசனையை கெடுக்காமலிருக்கவேண்டும். அதுதான் நாகரீகம்.
பொன்னியின் தமிழர்பெருமையைச் சொல்லும் படமா?
இது உணர்ச்சிகரமான கதை. கொண்டாட்டமான கதையோட்டம் கொண்டது. அனைவரும் ரசித்துப் பார்க்கலாம். பார்ப்பவர்களுக்கு சோழர்களின் பேரரசு பற்றியும் ராஜராஜசோழனின் சிறப்பு பற்றியும் தெரியும். மேற்கொண்டு அவர்கள் ஆர்வமிருந்தால் வரலாற்று நூல்களை வாசித்து புரிந்துகொள்ளலாம்.
ஆனால் இது புனைவுதானே?
நான் சொன்னேனே, வரலாற்றை ஆவணப்படமாகவே எடுக்க முடியும். கதையைத்தான் சினிமாவாக எடுக்க முடியும். உலகம் முழுக்க அப்படித்தான்…
இந்தப்படத்தின் வசனங்கள் எப்படி இருக்கும்?
வசனங்கள் அச்சுமொழியில்தான் இருக்கும். பேச்சுமொழியில் இருக்காது. ஆனால் அடுக்குமொழியோ அலங்கார மொழியோ இருக்காது. நாடகத்தன்மை வந்துவிடும். மணிரத்னம் சினிமாவுக்கு அது சரிவராது. ஆகவே பேச்சுமொழிக்கு மிக நெருக்கமாக, மிகச்சுருக்கமான வசனங்களே இருக்கும்.
பொன்னியின் செல்வன் சினிமாவில் அரசியல் கண்டுபிடிக்கிறார்களே?
நம் முன்னோர்களுக்கு பெருமையான ஒரு வரலாறு இருந்தது. அந்த வரலாற்றைச் சொல்லக்கூடாது என்று சொல்வதுதானே அரசியல்? கொஞ்சநாள்முன் மரக்கார், அரபிக்கடலின் சிம்மம் என்று ஒரு படம் வந்தது. எல்லா படங்களும் வரட்டும். எனக்கு இதில் பேதமே இல்லை. பத்தாண்டுகளுக்கு முன் கோகுலம் ஃபிலிம்ஸ் சார்பில் திப்புசுல்தான் பற்றி ஒரு சினிமா எடுக்க யோசித்தோம். ஆரியா திப்புசுல்தானாக நடிப்பதாக இருந்தது. அதற்கும் நான்தான் எழுத்தாளன். இதெல்லாம் அன்றாடக் கட்சியரசியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்…
சோழர்காலம் பொற்காலம் அல்ல என்று சொல்லப்படுகிறதே?
நான் விரிவாக இதைப்பற்றி எழுதியிருக்கிறேன். எந்தக் காலகட்டத்திலும் பெருமையும் உண்டு, இருண்ட பக்கங்களும் உண்டு. எந்த வரலாறும் அப்படித்தான். நமது இன்றைய வரலாறும் அப்படித்தான். இவ்வளவு நவநாகரீக சென்னையில்தானே ஆயிரக்கணக்கான குடிசைப்பகுதிகளும் உள்ளன? ஆனால் தமிழகத்தில் இன்று இருக்கும் பாசனக் கட்டமைப்பே சோழர்கள் உருவாக்கியதுதான். இன்று நம்மிடமிருக்கும் ஏரிகளில் முக்கால்வாசி ஏரிகள் சோழர்கள் வெட்டியவை. சென்னைக்கு குடிநீர் வருவதே சோழர் வெட்டிய ஏரிகளில் இருந்துதான் இன்று நாம் சாப்பிடும் சோறு சோழர்கள் போடுவது. முந்நூறாண்டுகள் அவர்கள் உள்ளூரில் அமைதியை உருவாக்கினர். அன்னியப்படையெடுப்பு நிகழாமல் காத்தனர். சோழர்கள் வீட்சி அடைந்தபிறகு முந்நூறாண்டுகளில் பதினைந்துக்கும் மேற்பட்ட அன்னியப்படையெடுப்புகள் நடந்து தமிழகத்தில் பெரும் அழிவும் மாபெரும்பஞ்சங்களும் வந்தன. லட்சக்கணக்கானவர்கள் போர்களிலும் பஞ்சங்களிலும் போர்களிலும் மறைந்தனர். லட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக வேறு நாடுகளுக்கு சென்றனர். அப்படி நம்மை காத்து, நமக்கு இன்றும் பயன்படும் பணிகளை செய்த சோழர்களின் காலம் பொற்காலம் என்று சொல்வதில் எந்த பிழையும் இல்லை.
குமுதம் இதழில் வெளிவந்த பேட்டி
பேட்டி திருவட்டார் சிந்துகுமார்
***