சகா, அமெரிக்கத் தலைமுறை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலம். உங்களிடம், அமெரிக்கப் பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு எப்படித் தமிழ் கற்றுக்கொடுப்பது என்று கேட்டார்கள்ஆஸ்டின் இல்லத்தில் நீங்கள் தங்கியிருந்தபொழுது, உங்களையும் அருண்மொழி  நங்கை அவர்களையும் பார்க்க வந்த  நண்பர்கள், சகா, தமிழ் பேசுவதையும், அவன் பண்பாக அவர்களிடம் நடந்துகொண்டதையும் பார்த்து, இதை எப்படிச் சாத்தியப்படுத்தினீர்கள் என்று கேட்டார்கள். எதற்கும் இப்படித்தான் என்று புத்தகம் போடமுடியாது என்பது எனது எண்ணம். ஒரு framework கொடுக்கலாம். ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு மாதிரி. அவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று நாம் முடிந்ததைச் செய்யலாம், தோழனாக தோள் கொடுக்கலாம். பதில் என்று இல்லாமல், சகாவைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி நண்பர்களுக்குப் பகிர்ந்தேன். இது, அமெரிக்கக் குழந்தைகள் கட்டுரை வருவதற்கு முன்னரே எழுதப்பட்டதுநண்பர்கள், தங்கள் கட்டுரையையும் வாசித்துவிட்டு, நீங்கள் சொல்லும் அந்த பத்து சதக் குழந்தைகளில், சகாவும் ஒருவன் என்றார்கள். ஸ்ரேயா சந்திரனும், மேகனாவும் அந்த பத்து சதத்தில் உள்ளவர்கள் என்றார்கள்அவன் எனக்கும் ராதாவுக்கும் மகன் மட்டுமல்ல. நாங்கள் எடுத்திருக்கும் இலக்கியப் பயணத்திற்கு  உறுதுணையாக நிற்பவன்ராதாவும் சகாவும் , நமது அமெரிக்கக் குழந்தைகள் கட்டுரையை மொழியாக்கம் செய்யும் பணியில் உள்ளனர். இது எழுதும் சமயம் முதல் பாகத்தை முடித்து விட்டிருக்கிறார்கள். சகா, mainereview எனும் பத்திரிகையில் staff reader வேலையில் இருக்கிறான். அந்தப் பத்திரிகைக்கு வரும் கதைகளை வாசித்து தரம் பிரித்தல் அவனது அன்றாட வேலை.   ஒரு வளர்ந்துவிட்ட அமெரிக்க குழந்தையை மேலும் பல நண்பர்களும் அறிந்துகொள்ள எனது கட்டுரையை இங்கே பகிர்கிறேன்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

***

அன்புள்ள சௌந்தர்

சகா நான் முன்னுதாரணமாகக் கொள்ளும் அமெரிக்கத் தமிழ் இளைஞன். அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்கனாகவே ஆகிவிட்டவர். ஆனால் தமிழ் மரபு, தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் கொண்டவர். தமிழர், இந்தியர் என்பதை தாழ்வுணர்ச்சியாகக் கொண்டு அதை மறைக்க முயல்வதில்லை, அதை பொய்யான உயர்வுணர்ச்சியாக ஆக்கிக்கொள்ளவுமில்லை. இயல்பாக இருக்கிறார். கி.ரா.நூலின் மொழியாக்கத்தில் அவருடைய பங்களிப்புதான் இன்று மிகமிகத் தேவையாகும் விஷயம். நம் பண்பாட்டை, இலக்கியத்தை அமெரிக்க ஆங்கிலத்துக்கு கொண்டுசெல்லும் மொழியாக்கநிபுணர்கள் நமக்குத்தேவை.நான் எதிர்பார்க்கும் எதிர்கால தமிழ் அமெரிக்கக் குழந்தைகள் அப்படி இருக்கவேண்டும். அவர்களால்தான் நாம் உலக அரங்குக்குச் செல்லவேண்டும்

ஜெ

***

அனைவரின் நல்வாழ்த்துக்களுடன்

ஆஸ்டின் சௌந்தர்

வருடாந்திர ஊர்ப்பயணம் ஒன்றின் பொழுது, குலதெய்வக் கோவில் சென்று குடும்பமாக கும்பிட்டோம். எனது சகோதரன், அது சமயம் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என் மகனை, தம்பி என்ன வேண்டிக்கொண்டாய் என்று கேட்டார்.  நான் மருத்தவனாகி, புற்றுநோய் இல்லாமல் ஆக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் என்றான். தனது இரண்டாம் வகுப்பிலிருந்து புத்தகமாக வாசித்துத் தள்ளும் அவன், Barnes & Noble- புத்தகக் கடையில், மனித உடலின் பாகங்களை விளக்கும் புத்தகம் ஒன்றை வாங்கச் சொல்லிக் கேட்டான். வருங்கால டாக்டருக்கு, 90 டாலர்கள் மதிப்புள்ள அந்தப் புத்தகத்தை வாங்கிக்கொடுக்க, தகப்பனாக எனக்கு எந்த யோசனையும் இருக்கவில்லை. பத்து / பதினொன்றாம் வகுப்பு படிக்கும்பொழுது, அவனது நண்பன் ஒருவன் இவனுக்கு போன் செய்து பௌதிகத்திலும், வேதியியலிலும் சந்தேகங்கள் கேட்பான். பள்ளியில் படிக்கும்பொழுது கல்லூரி கல்லூரியாக சென்று, எங்கு படிக்கலாம் என்று உலா வரும் காலத்தில், UT Dallas-ல், ஐந்து வயதில் இருந்தே தான் மருத்துவன் ஆகவேண்டும் என்று சொல்லும் மாணவர்களுக்கான கல்லூரி இது என்றார் விளக்கங்கள் சொன்ன விரிவுரையாளர் ஒருவர். கனவுகளுடன் அதைக் கேட்டுக்கொண்டிருந்த பெற்றோர்களின் கூட்டத்தில். நானும், ராதாவும், நம்ம பையனை பற்றி அப்படியே சொல்கிறார் என்று ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். பன்னிரெண்டாம் வகுப்பு முடிக்கும் முன்னரே, எந்தக் கல்லூரி என்று குழந்தைகளுக்குத் தெரிந்துவிடும். சகாவிற்கு, UT Dallas-ல் முழு உதவித்தொகையுடன் படிக்க இடம் கிடைத்தது. வருடத்திற்கு எனக்கு பத்தாயிரம் டாலர்களே செலவு. எதற்கு under graduate-கெல்லாம் ஐம்பதாயிரம் அறுபதாயிரம் டாலர்கள் செலவு செய்வது ஸ்டேன்ஃபோர்ட் போன்ற கல்லூரிகளில் படிக்கவேண்டும் என்று அதுபோன்ற கல்லூரிகளுக்கு அப்பளை செய்யவேண்டாம் என்று பொருளாதர ரீதியில் பேசி என்னை கன்வின்ஸ் செய்தான். இவனிடம் சந்தேகம் கேட்கும் பள்ளி நண்பன் , ஸ்டேன்ஃபோர்ட் கிடைத்து சென்றான்.

ஐந்தாம் / ஆறாம் வகுப்பிலிருந்து அவனுடன் ஒன்றாக படித்த நண்பர்கள் படைசூழ, UT Dallas-ற்கு சென்று ஒரு வருடம் BioTechnology படித்தான். வருட விடுமுறையில் வந்தவன், நோயாளியின் நிலையில் நின்று விடும் தனது மனநிலைக்கு மருத்தவப் படிப்பு ஒத்துவராது என்று முடிவு செய்திருந்தான். அப்புறம் வீட்டிலிருந்தபடியே அருகில் உள்ள கல்லூரிக்கு சென்று BBA Finance படித்து பட்டம் வாங்கினான்.

இரண்டாம் வகுப்பு படிக்கும்பொழுது, Feeling என்றால் என்ன என்று கேட்டதற்கு அவ்வளவு அழகாக பதில் சொன்னான். Photosynthesis பற்றிக் கேட்க, அதற்கும் ஒரு தெளிவான பதில். Costco-வில், ‘I Can Read A Book’ என்ற புத்தகம் வாங்கிக்கொடுத்தோம். அது மட்டுமே நாங்கள் வாசிக்க, அவனும் எழுத்துக்கூட்டி வாசித்தான். பிறகு வந்த வார நாட்களில் பத்து அல்லது பதின்மூன்று புத்தகங்கள் நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுக்கவேண்டியதாகியது. Grand Canyon சென்று சூரியோதயம் பார்த்து வந்ததை , கனடாவில் சூரியோதயம் என்று படம்போட்டு மூன்று வரிகள் எழுதி அவன் வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தான்.  ஐந்தாம் வகுப்பில் வருடம் 200 புத்தகங்களுக்கு மேல் வாசிக்கும் முதல் மூன்று மாணவர்களில் ஒருவனாக இருப்பான்.

அறிவியலில் Student of the Month என்று ஏழாம் வகுப்பில் படிக்கும்பொழுது அறிவிப்பு வர,  நானும் ராதாவும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டோம். அரங்கத்தில் பார்த்த அவனது ஆங்கில ஆசிரியை எங்களை நோக்கி வந்தார். இப்பொழுது தெரிகிறது அவனுக்கு அந்த சிரிப்பு யாரிடமிருந்து வந்தது என்று எனக்கு ஐஸ் வைத்துவிட்டு, “உங்கள் மகனின் ஆங்கில பேப்பர் வந்தால், நான், ஆவலுடன் படிப்பேன்’ என்றார். அவன் கலிஃபோர்னியாவை மிஸ் பண்ணுவதாக எழுதிய கவிதை நன்றாக இருந்தது என்றார்.

அப்பொழுதெல்லாம், வீட்டில் எல்லோருக்கும் ஒரே கணினிதான். அவனது டைரக்டரியில் சென்று அவன் எழுதிவைத்திருந்ததையெல்லாம் வாசித்துப் பார்த்தேன். Bullying பற்றி அவன் எழுதியிருந்த கட்டுரை என்னை உருக்கிவிட்டது. Bullying-ல் ஈடுபடுவது மட்டுமல்ல, பார்த்துக்கொண்டு, நடவடிக்கை எடுக்காமல் இருப்பவர்களும் குற்றவாளிகளே என்று சிறுவனாக அவன் கட்டுரையில் அவன் வைத்த கேள்வி என்னை சீண்டியது. ஒரு வாசகனாக, அவன் எழுத்தாளன் என்று உணர்ந்த தருணம் அது. அதை நான் தமிழில் மொழிபெயர்த்து காற்றின்நிழல் பக்கத்தில் நண்பர்களுக்கு ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன்.

கணிதமும் ஆங்கிலமும் நன்றாக இருக்கவேண்டும் என்று kuumon பயிற்சிக் கூடத்திற்கு அழைத்துச் சென்றோம். மாதிரி தேர்வுகளை திருத்திய kumon பள்ளியை நடத்துபவர், இவனுக்கு ஆங்கிலத்தில் பயிற்சி தேவையில்லை என்று சொல்லிவிட்டார். கணிதத்திற்கு  மட்டும் சில வருடங்கள் Kumon-ல் பயிற்சி பெற்றான்.

மகனுக்கு சேமிப்பு, முதலீடு போன்றவற்றை இளவயதிலேயே கற்பிக்கும் தந்தையாக, அவனை அது சம்பந்தப்பட்ட புத்தகங்களை வாசிக்க சொல்லி கட்டுரைகள் எழுதச் சொல்வேன்.  நான் எழுதும் கட்டுரைகளை அவன் மேற்பார்வை பார்க்க, அவன் எழுதும் கட்டுரைகளை நான் மேற்பார்வை பார்க்க, இருவரும் இருபது கட்டுரைகளாவது எழுதியிருப்போம். வருடங்கள் ஓட, அவனது பரிந்துரையின்படி,  நான் திருத்துவது அதிகமாகிவிட்டிருந்தது.

படித்து பட்டம் வாங்குவது,  பிழைக்க ஏதோ ஒரு வேலை வேண்டும். மற்றபடி தனக்குப் பிடித்தது எழுதுவதுதான் என்று ஆகிவிட்டிருந்தான். Lord of the Rings-ஐ பார்க்கும்பொழுதெல்லாம் வாசித்துக்கொண்டிருப்பான். அவனுடன் சேர்ந்து நானும் Neil Gaiman ரசிகனானேன். Fantacy நாவல்களும் இலக்கியம் ஆகலாம் என்றான். பேய்க்கதைகள் சொல்லும் படமும் கலைப்படமாக இருக்கலாம் என்றான். Fantacy நாவல் எழுதுவதே தனது கனவு என்று சொல்ல ஆரம்பித்தான். அடுத்த என்ன வேலைக்கு முயற்சிக்கிறேன் என்பதைவிட, எந்தக் கதையை எந்த பத்திரிகைக்கு அனுப்பியுள்ளேன் என்று சொல்ல ஆரம்பித்தான்.

எனக்குத் தமிழ் எழுத்தாளர்களின் மேல் உள்ள பிரியத்தை பார்த்துவிட்டு, அவனாக முன்வந்து, எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்  நாவலை மொழியாக்கம் செய்து கொடுத்தான். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா), இலாப  நோக்கமற்ற நிறுவனமாக இயங்குவதற்கு அவனது உழைப்பும் பங்கும் முக்கியமானது. மொழியாக்கங்களுக்கென்று உள்ள குழுவில் அவனையும் இணைத்துக்கொண்டு தனது சேவையை தொடர்கிறான்.

2020-ல், நோய்த்தொற்று காலத்தில் வீட்டிலேயே இருந்து வேலை பார்க்கும்படியாக , அவன் எழுதியதையெல்லாம் தொகுத்து சொந்தமாக Hireath புத்தகத்தை வெளியிட்டான். ‘Friends’ கதையில் வரும் பெண்ணை, சரியாக சித்திரத்திருக்கிறாய் என்று வாசித்த பெண்கள் எல்லாம் சொல்லி பாராட்டினார்கள். அவன் தோழிகள், இதெல்லாம் உனக்கெப்படித் தெரியும் என்று முகம் சிவந்தார்கள். ‘Waltz’ கதையில் மேஜிகல் ரியலிஷம் உள்ளது என இலக்கிய வாசகர்கள் சொல்ல வாய்ப்பிருக்கிறது. தங்கை, சுபாங்கி, இந்தக் கதையிலிருக்கும் வரிகளை மனப்பாடமாக சொல்வாள். அவன் எழுதிய கதை ஒன்றில் பர்ட் என்ற பாத்திரம் இறப்பதை வாசித்துவிட்டு, உனக்கு குமுதம் ஆசிரியர் புனிதன் எப்படி இறந்தார் என்று தெரியுமா எனக் கேட்டேன். நிஜத்தின் அருகில் நிறைய யோசிக்க ஆரம்பித்துவிட்டான் என என்னை உணரவைத்த குறுங்கதையது.

சகா, சிறுவனாக சுழன்று வந்த காலத்தில் Teakwondo விரும்பி கற்றுக்கொண்டான். அவனது ப்ளாக் பெல்ட் தேர்வின்போது ஒரு சிறுவன் மிகவும் சிரமப்பட்டான். சகா, அவனுக்கு நன்றாக பயிற்சி கொடுத்து வெற்றிபெற மிகவும் உதவி செய்தான். அந்தச் சிறுவனின் தகப்பன் என்னிடம் வந்து, ‘நல்லதொரு மகனைப் பெற்றுள்ளீர்கள்’ என்று பாராட்டிவிட்டு சென்றார்.

2006-ல் என் தந்தை எங்களுடன் வந்து ஆறு மாதங்கள் தங்கியிருந்தார். மூவரும் சேர்ந்து வீட்டுத்தோட்டத்தில் வேலை செய்வோம். ‘சொன்னா கேட்கறானல்லப்பா உன் பிள்ளை, அப்புறம் என்ன?’ என்றார்.

நாங்கள் வசிக்கும் காம்ப்ளெக்ஸில், இரண்டு வயது, ஐந்து வயது, எட்டு வயது என குழந்தைகள்  விளையாட, பத்து வயது பையனாக எப்படி இரண்டு வயது குழந்தையை பார்த்துக்கொள்கிறான் என்று குழந்தைகளின் அன்னைகள் வந்து எங்களிடம் பாராட்டிவிட்டுச் செல்வதுண்டு.

எழுத்தாளர்கள் ஜெயமோகனும், அருண்மொழியும், தங்களது அமெரிக்கப் பயணத்தில், நண்பர்களுடன் ஆஸ்டின் வீட்டிற்கு வந்து இரண்டு நாட்கள் தங்கிச் சென்றார்கள். ஜெயமோகன் அவர்களை பார்க்க வாசகர்களும் வந்திருந்தார்கள். வந்தவர்கள் எல்லாம் சகாவிடம் என்ன பார்த்தார்கள் என்று தெரியவில்லை. அவனைப்பற்றி ஒரே பாராட்டு மழை. ஊருக்கு சென்று, நல்லபடியாக வந்து சேர்ந்துவிட்டோம் என்று ஆடியோ செய்தியனுப்பிய அருண்மொழி அவர்களும், சகாவின் பொறுமையை பாராட்டிப் பேசியிருந்தார்கள்.

எங்கள் மகன் படிப்பில் B+. வளர்ந்த சகாவாக, நல்ல மானுடனாக, அன்னையர்களிடம் A+. அனைவரின் ஆசியிலும், எழுத்தாளனாக A+  வாங்குவான் என்று நானும் ராதாவும் காத்திருக்கிறோம்.

முந்தைய கட்டுரைகி.ராஜநாராயணன், கடிதங்கள்
அடுத்த கட்டுரைகுடவாயில், கடிதங்கள்