தேடலின் ஆடல்- விஜய் கிருஷ்ணா

வளியில் ஒரு விந்தை – ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி

ஆதிகாலத்தில் இருந்தே மனிதகுலம் வானத்தைக் கண்டு பிரம்மித்த வண்ணமே உள்ளது. அதன் நீட்சியாக விஞ்ஞானிகள் குழு ஒன்று JWST என்ற பெயரில் பூமியிலிருந்து வெகு தொலைவில் ஒரு தொலைநோக்கியை விண்வெளியில் மிதக்க விட்டு எடுத்த படங்களை சமீபத்தில் பகிர்ந்தனர். இது விண்வெளியை நமக்கு காட்டும் அதி தொழில்நுட்பம் வாய்ந்த சாளரம் என்றும் சொல்லலாம். இந்த சாளரத்தின் வழியே நமக்கு கிடைத்த அனைத்து படங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவைதான் என்றாலும் முதல் படமாக அவர்கள் வெளியிட்டது Deep field என்னும் படம் தான்.

தரையில் இருந்து ஒருவர் கைக்கு எட்டிய தூரத்தில் வைத்திருக்கும் ஒரு மணல் துகள் அளவுக்கு வானத்தின் சிறு பகுதியை உள்ளடக்கியது இந்த படம். ஒரு முக்கியமற்ற புள்ளி போல் தோன்றினாலும் அதற்கு பின்னால் மறைந்திருப்பது சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்மீன் மண்டலங்கள் (galaxyகள்) என்று இந்த படம் நமக்கு காட்டுகிறது. அதாவது ஒளியின் துகள் என இந்த படத்தில் இருப்பது ஒவ்வொன்றும் நட்சத்திரங்கள் அல்ல விண்மீன் மண்டலங்கள்.

நாம் இருக்கும் பால்வழி மண்டலத்தில் மட்டும் சுமார் பத்தாயிரம் கோடி நட்சத்திரங்கள் இருக்கலாம். அதன் விளிம்பில், அளவில் சராசரியான ஒரு நட்சத்திரத்தை தான் சூரியன் என்று பெயரிட்டு அதை சுற்றி வரும் எட்டுக் கோள்களில் மூன்றாவதிற்கு பூமி என்று பெயரிட்டு அதில் பார்க்கும் கேட்கும் உணரும் தொடர்பு கொள்ளும் கைகால் கொண்ட 800 கோடி தூசிகளாக ஒட்டி வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு இந்த விஞ்ஞானிகள் தரும் செய்தி என்னவென்றால், வானத்தில் ஒரு புள்ளிக்கு பின்னால் சுமார் ஒரு லட்சம் கோடி நட்சத்திரங்கள் உள்ளன என்பதும் இதைப் போல் பல லட்சம் புள்ளிகள் நோக்க காத்துக் கொண்டிருக்கிறது என்பதும் தான்.

இந்த ஒவ்வொரு புள்ளியிலும் எவ்வளவு விண்மீன் மண்டலங்கள் உள்ளன, ஒவ்வொரு மண்டலத்திலும் எவ்வளவு நட்சத்திரங்கள் உள்ளன, அதில் எத்தனை நட்சத்திரங்களை எத்தனை கோள்கள் சுற்றுகின்றன, அதில் எவ்வளவு நகரும் மற்றும் நகரா உயிரினங்கள் உள்ளன, அதில் எத்தனை உயிருக்கு சிந்திக்கும் திறனும் தான் என்ற உணர்வும் உள்ளன என்பது இன்னும் அவிழ்க்கப்படாத ஒரு புதிர் தான். இப்போதைக்கு நாம் மட்டும் தான் இந்த வகைக்குள் அடங்கும் ஒரே உயிரினம் என்பதே விடையாக உள்ளது.

இந்த உயிரினத்தில் 1889ல் வாழ்ந்த ஒருவன் தான் இருந்த பைத்தியக்கார விடுதியின் சாளரத்தில் தெரிந்த காட்சியை கற்பனையையும் வண்ணங்களையும் தனது தூரிகையால் தொட்டுத் தொட்டு வரைந்த உலக புகழ் பெற்ற ஓவியம் தான்விண்மீன்கள் நிறைந்த இரவு‘. நாசா குழு வெளியிட்ட திகைப்பூட்டும் அந்த முதல் படமும் வின்சென்ட் வான் கோ வரைந்த அந்த மகத்தான ஓவியமும் மனித குலத்தின் பொதுப் பிரக்ஞையின் ஆழத்தில் என்றும் நிலைத்திருக்கும் என்னும் ஒரு புள்ளியில் இணைகின்றன.

ஒன்று கலைஞன் என்னும் தனி மனிதனால் வரையப்பட்டது. மற்றொன்று அறிவு ஜீவிகள் குழுவால் உருவாக்கப்பட்டது. ஒன்று இயற்கையை அவதானித்து எந்த சட்ட திட்டத்திற்கும் கட்டுப்படாமல் வெளிப்படுத்துவது. மற்றொன்று இயற்கையின் விதிக்கு கட்டுப்பட்டு அதன் சாத்திய எல்லைக்குள் நின்று செயலாற்றுவது. ஒன்றிலோ அகப்பயண ஆழங்களும் அது தரும் அலைக்கழிப்புகளும் மேலோங்க மற்றொன்றிலோ புறப் பொருட்களின் இயல்பும் அதுவரையிலான கண்டுபிடிப்புகளின் அறிவும்  மேலோங்குகிறது.

முரணான இருவேறு வழிகள். ஒன்று கலை மற்றொன்று அறிவியல். மானுட உச்சங்களான இவை போன்றவை இந்த நிலையில்லா பிரபஞ்சத்தில் மனித குலம் பிழைத்திருக்கும் வரை நிலைக்க இருப்பவை. இதெல்லாம்உண்மைதேடலின் தணியாத தாகத்தில் இருந்து பிறந்தவை என்று மட்டும் உறுதியாக சொல்லலாம். மனிதனுக்கே உண்டான தனித்துவ உணர்வு இது

என்றோ ஒரு நாள் இந்த நிலையற்ற காலவெளியும் அதில் வாழும் மனித குலமும் இருந்த தடையமே இல்லாமல் ஆகிவிடும் என்று சில மனிதர்களின் ஆழ் உள்ளத்திற்கு தெரியுமோ என்னவோ. அதனால் தான் குறைந்தது தான் வாழும் காலத்தை தாண்டி நிலைத்து இருப்பவற்றை விட்டுச் செல்லும் செயலில் தீவிரமாக இறங்குகிறார்கள் அவர்கள். வாழும் காலத்தில் வெகு சிலரால் மட்டுமே புரிந்துக்கொள்ள முடிந்த இவர்களே வரலாற்று நாயகர்களாக என்றென்றும் நினைவு கூரப்படுபவர்களாக பரிணமித்தும் உள்ளார்கள்.

காணக்கூடிய பிரபஞ்சம் என்பதைப் பற்றி மட்டும் தான் நாம் அண்டவியல் என்ற பெயரில் ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். பிரபஞ்சத்தின் விரிவு கணம் கணம் அதிகரித்துக் கொண்டே இருப்பதனால் ஓர் எல்லைக்கு மேல் இருக்கும் ஒளிகள் நம்மை என்றுமே வந்து அடையாது என்பதே அதற்கு காரணமாகும். பிரபஞ்சத்திற்கு எல்லை உண்டா இல்லை அது முடிவிலியா என்ற கேள்விக்கு நிச்சயமான பதில் எப்படி இல்லையோ அதேபோல் மனித குலத்தின் தேடலுக்கும் எல்லை உண்டா இல்லை அது ஒரு முடிவில்லாச் செயல்பாட என்றும் நிச்சயமாக சொல்லிவிட முடியாது

சிலரோ ஆடும் தன்னை பற்றிய ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். சிலர் தாங்கள் ஆடும் மேடையின் தன்மையை அறிவதில் அதிக விருப்பம் கொண்டிருக்கிறார்கள். இரண்டுமே ஒருவகை ஆடலாகதானே வெளிப்படுகிறது. ஆடினால் உண்மை புலப்படும் என்று ஏன் நம்புகிறோம்? ஒருவேளை ஆடலை நிறுத்தி விட்டால் உன்மையை தானாக உணர்ந்துகொள்ள முடியுமா? அமர முடியாததால் தானே ஆடுகிறோம். அந்த தேடலின் ஆடலை கொண்டாடுவோம். 

வியப்புடன்,

விஜய் கிருஷ்ணா.

முந்தைய கட்டுரைஅறம் ஆங்கிலத்தில்…கடிதம்
அடுத்த கட்டுரையுவன், பேட்டி- கமலதேவி