கி.ராஜநாராயணன், கடிதங்கள்

அன்புள்ள ஜெ.,

உடல் ஊனம் ஒருவரை எழுத்தாளராக ஆக்க முடியுமா? ஆக்கியிருக்கிறது. ‘ஒத்தக்கை ஒச்சமாப் போனதுனால பள்ளிக்கூடத்துல போட்டாரு அவங்கப்பா. இல்லாட்டி இன்னொரு தட்டானாப் போக்களிஞ்சு போயிருப்பான்என்று தன்னுடைய நண்பரும் எழுத்தாளருமாகிய கு.அழகிரிசாமியைக் குறித்து ஒரு கடிதத்தில் எழுதுகிறார் கி.ரா. இப்படி கடிதம் தோறும் செய்தித் தெறிப்புகள். போன புத்தகச் சந்தையில் வாங்கியகி.ராஜநாராயணன் கடிதங்கள்‘ (அன்னம் வெளியீடு) சமீபத்தில் படித்து முடித்தேன். ஏற்கனவே புத்தகமாக வந்த கடிதங்கள் தவிர்த்து, 60 களிலிருந்து 2002 முடிய (2003 ல் 501 ரூபாய்க்கு ரிலையன்ஸ் கைபேசி வந்து விட்டது. ‘விட்டதுடா இந்தசீண்ரம்புடிச்சவேலைனு மொத ஆளாப் போயி வாங்கிருப்பாரா இருக்கும்) ‘நைனாஎழுதிய கடிதங்களின் பெரும் தொகுப்பு. ஒரு பெரும் கதைசொல்லியின், விவசாயியின், வயசாளியின் வாழ்க்கைத் தொகுப்பு. கிட்டத்தட்ட எண்ணூறு பக்கங்கள். ஆனால் வாயில் போட்டதும் காணாமல் போகிற பஞ்சு மிட்டாய் போல பக்கம் பறக்கிறது. மனசு இனிக்கிறது.

பதிப்பாளருக்கு எழுதிய கடிதங்கள்இவர் கேசில்மீராஒருவர்தான், ‘கதை சொல்லியின் ஆசிரியராக கதை கேட்டு சக எழுத்தாளர்களுக்கான கடிதங்கள், நாட்டுப்புறக் கதைகளைத் திரட்ட பாரத தேவி, கழனியூரன் போன்றவர்களுக்கு எழுதிய கடிதங்கள், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத் துணைவேந்தர் கி.வே.சு அய்யருக்கு எழுதிய கடிதங்கள் என்று பலவகையில் கடிதஇலக்கியம் பரிமளிக்கிறது.ஆரம்பத்தில் ரசிகமணி டி.கே.சி., தி..சி என்று ஆரம்பித்து அவர்கள் பேரப்பிள்ளைகள் வரை எழுதிக்கொண்டிருந்திருக்கிறார். அதேபோல முதலில் குறுகிய வட்டத்தில் கரிசல் எழுத்தாளர்களோடுதான் கடிதத் தொடர்பிருந்திருக்கிறது. பிறகு வட்டம் மாவட்டமாகிசாகித்ய அகாடமிவாங்கிய பிறகு சினிமா, தொலைக்காட்சி என்று தொடர்புகள் பெருகிப் பெருகிபோதுமடா சாமிஎன்றொரு அலுப்பு வந்து விடுகிறது நைனாவிற்கு. அதை கடிதங்களிலும் பதிவு செய்கிறார். பல கடிதங்களில் காலம் தாழ்த்தி பதில் எழுதுவதற்கான மன்னிப்புக்கோரலும் உண்டு.

நீங்க ஒரு காரியம் பண்ணணுமே, நல்ல கதையா ரெண்டு கதை அனுப்பணுமேஎன்று இவர்கதைசொல்லிக்கு கதை கேட்காத கரிசல் எழுத்தாளர்களே இல்லை. ‘உங்க சிறுகதைத் தொகுப்பு வந்துருச்சாம், கேள்விப்பட்டேன். நான் படிக்கிறதாக இல்லை. நாவல் எழுதுமய்யாஎன்று கந்தர்வனைக் கடிந்து கொள்கிறார். கொஞ்ச நாட்களே பழகினாலும் நெறைய உரிமை எடுத்துக்கொள்ளும் வெள்ளந்தி கிராமத்தானாக பல இடங்களில் வெளிப்படுகிறார். கர்நாடக சங்கீதத்தில் ராகங்களைத் தொகுத்து அமைப்பது சம்பந்தமாக இளையராஜாவிடம் கூறியதை அவர்சீரியஸாக எடுத்துக்கொள்ளாதது குறித்து வருத்தப்படுகிறார். ‘முதல் மரியாதைபடத்தில் அவர் கதையை உபயோகப்படுத்திக்கொண்டதற்குதகுந்த மரியாதை செய்து அனுமதி வாங்கிச் சென்றாரகள்‘     என்றொரு கடிதத்தில் குறிப்பிடுகிறார். சுந்தரராமசாமி வீட்டில் ராத்திரி மட்டும் வாசனை வரும் அதிசய மரம்அந்த வாசனை வருவது இலைகளில் இருந்து, தஞ்சாவூர் பகுதியில் விளையும் பூக்காத, இலை மட்டும் தரும் வாழை, தென்காசிப் பக்கம் பழுக்காத சின்னச் சின்ன காய்கள் மட்டும் தரும் பலா மரங்கள் என்று பல செய்திகள். 93 ஆம் வருட தீ விபத்தில் சென்னை புத்தகக் கண்காட்சியில்அன்னம்கடை எரிந்தது, தி.ஜானகிராமன், ஆதவன், கிருஷ்ணன் நம்பி ஆகியோரின் மறைவு போன்ற பல செய்திகள் பதிவாகியிருக்கின்றன.   

எழுத்தாளர் பாரத தேவியை (இப்படித் தான் அழைக்கப்பட வேண்டுமென்பது பாரததேவியின் வாழ்நாள் ஆசை) தன்னுடைய மகளாகவே கருதுகிறார். ‘பெறாம, வளத்துக் கட்டிக்குடுக்காம பேரனோட மக கிடைக்கறதுன்னா, கசக்குதா‘. நாட்டுப்புறக் கதைகளை சேகரித்துக் கொடுப்பதன் மூலம் கி.ரா வுக்கு அறிமுகமாகிறார் ராஜபாளையம் அருகிலுள்ள சொக்கலிங்கபுரம் பாரததேவி. தொடர்ந்து சேகரித்த கதைகளை அனுப்பியவண்ணம் இருக்கும் அவருக்கு ஒரு ஆசை. தன்னுடைய கதை  பத்திரிகையில் வரவேண்டும், தான் எழுத்தாளராக அறியப்படவேண்டுமென்று. அப்பாவும் ஊக்குவிக்கிறார். கதைகளை எழுதி அனுப்புகிறார் பாரதா. கி.ரா வுக்கு திருப்தி இல்லை. கு.அழகிரிசாமி, .வே.சா முதலியவர்களைப் படிக்கச் சொல்கிறார். ஒரு கட்டத்தில் மகளின் அன்புத்தொல்லை தாங்கமுடியாமல்அப்பா உண்மையச் சொல்லணும், உண்மையச் சொல்லணும் என்கிறாய், சொன்னால் கோவிக்கக்கூடாது, உனக்கு சிறுகதைகள் சரியாக எழுத வரவில்லை. அதனால் ஒன்றும் குறைந்துபோகவில்லை. நீதான் மணி மணியாக நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து அனுப்புகிறாயே, அதற்காகவே இந்த உலகம் உன்னைப் போற்றும். எனக்குமே இந்த வேலையில்தான் பூரண திருப்திஎன்று எழுதினாலும் அவர் சமாதானமாவதில்லை. ‘சரி, பொன்னீலனோட அம்மா அழகிய நாயகியம்மாள் எழுதின மாதிரி தன்வரலாறா எழுதிப்பாரேன் அல்லது நடிகை பானுமதி அவரோட அத்தையைப் பத்தி எழுதி பரிசெல்லாம் வாங்குச்சே அந்த மாதிரி ஏதாவது எழுது. நம்ம கதைகள யாரும் எழுதலாம். நீ அனுப்புற கதைகள் தான் எப்பிடி இருக்கு தெரியுமா? கடவுள் உன்னைப் படைச்சதே இப்பிடி கதைகளை சேகரிக்கத்தான்என்கிறார். இது ஏதோ பாரததேவியைச் சமாதானப் படுத்த எழுதினார் என்றுதான் நினைத்தேன். தன்னுடைய பெரிய பங்களிப்பாக கி.ரா கருதுவதும் நாட்டுப்புறக் கதைகள் சேகரிப்பைத்தான் என்பதை பல கடிதங்களில் பதிவு செய்கிறார். ‘ பாலியல் கதைகளெல்லாம் அவர்கள் என்ன, எப்படிச் சொல்கிறார்களோ அப்படியே பதிவு செய்யவேண்டும் கெட்ட வார்த்தை உட்பட. இதில் கூச்சப்படவோ, மாச்சப்படவோ ஒண்ணும் கிடையாது. உன் வார்த்தைகளைப் போட்டு உன் கதையாய் ஆக்கிப்புடாதேஅப்பாவுக்கு எல்லாம் தெரியும்‘  என்று மகளாக இருந்தாலும் வேலையில்கறாலாக இருந்திருக்கிறார்.  

ஒரு முறை கரிசல் எழுத்தாளர்கள் ஒரு விழாவில் ஒன்றுசேர ஒரு போட்டி.கி.ரா வுக்குத் தெரியாத நாட்டுப்புறத்துக் கதை ஒன்றை யார் சொல்வதென்று. ஒருவர் கதையை ஆரம்பிக்கவேண்டியது, இதுதானே என்று கி.ரா முடிக்கவேண்டியது. ஒருவராலும் அவருக்குத் தெரியாத ஒரே ஒரு கதை சொல்ல முடியவில்லை.  ‘அந்தப் பெருமாவையும் முருகனையும் விட்டுறாத, என்ன அருமையாச் சொல்றாங்க..காமாட்சியாபுரம் காளீஸ்வரிக்கு தனி ஃபைலே போட்டுட்டேன். எங்கதான் புடிச்சாளோ இம்புட்டுக் கதையை..’,’ கதை சொல்றவ பொம்பளையா இருந்தா, இந்தக் கதையை பொறந்த வீட்டுல கேட்டாளா, புகுந்த வீட்டுல கேட்டாளான்னு கேளு, கதையை சொன்னது யாரு, எந்த ஊரு எல்லாம்அந்த வயதான காலத்திலும் பம்பரமாக இயங்கி, பத்து தொகுப்புகள் நாட்டுப்புறக் கதைகள் மட்டும் கொண்டுவந்திருக்கிறார். அதில் பாரததேவியின் பங்கு மிகஅதிகம். ‘உன்னை உலகம் மறக்காதுஎன்று கி.ரா சொன்னாலும், பாரத தேவி பற்றிய ஒரு பதிவு கூட இல்லை. அவர் பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்திருக்கிறார். ஒரு கடிதத்தில் அவர் மகன் அமெரிக்காவிற்கு மேற்படிப்புக்கு செல்வது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருந்தார் கி.ராஎழுத்தாளர் சோ.தருமனுக்குத் தெரிந்திருக்கலாம். ஒரு கடிதத்தில் அவர் பற்றிய குறிப்பு வருகிறது.

உடம்பால் நிறைய அவதிப்பட்டிருக்கிறார். ‘நடுவுல ஆச்சு போச்சுண்னு ஆயிப்போச்சு. ஜிப்மர்ல போயி ஸ்டே ஆர்டர் வாங்கிட்டு வந்தோம். எத்தனை நாளைக்குத்தான் இந்த ஒடம்ப கண்ணாடிப் பாத்திரம் மாதிரிப் பாத்துக்கிறதுஎன்கிறார். அவருக்கு சிறுவயதில் காசநோய் தாக்கியபோது மருந்தே கிடையாது. ‘தைரிய லட்சுமி இருந்ததால பொளச்சேன்என்கிறார். பயணங்கள் அவரைச் சலிப்படையச் செய்கின்றன. சாகித்ய அகாடமி கிடைத்தவுடன்அவ்வளவு தூரம் போயி வாங்கிட்டு வர்றத நெனச்சாத்தான் மலைப்பா இருக்குஎன்கிறார். தன்னுடைய எண்பது வயதுவரை கடுமையாக உழைத்திருக்கிறார். உஷா, பாக்யா, போலீஸ் செய்தி என்று ஒரு பத்திரிகை விடாமல் எழுதித் தள்ளியிருக்கிறார்

கடிதங்களைப் பிரசுரிக்கும்போது ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்கிறார். பாரததேவியிடம்அந்தக் குடிமகன் கதையெல்லாம் பத்திரிகைல போட முடியாது. பிரச்சினை வரும். தொகுப்புல கொண்டுவருவோம்என்கிறார். கடிதங்களைப் பிரசுரிக்கும்போது இரண்டு பக்கத்துக் கடிதங்களையும் பிரசுரிக்கவேண்டும்கு.அழகிரிசாமி எழுதுன கடிதம் எத்தனை இருக்கு. நான் எழுதினது ஒண்ணாவது இருக்கா?’ என்கிறார். அப்படிப் பிரசுரமான ஒரே தொகுப்பு பாண்டிச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் கி.வே.சு அய்யருக்கு எழுதிய கடிதங்கள்தான்.

கடிதம் மிகவும் நீண்டுவிட்டது என்று இவர் சொல்லுவதே நாலு பக்கக் கடிதம்தான். நீங்கள் நீண்ட கடிதங்கள் பல எழுதியிருப்பீர்கள். உங்கள் கடிதங்கள் தொகுப்பாக வர வாய்ப்புண்டா?     

அன்புடன்,

கிருஷ்ணன் சங்கரன்

***

முந்தைய கட்டுரைஅறிதல்-அறிதலுக்கு அப்பால்
அடுத்த கட்டுரைசகா, அமெரிக்கத் தலைமுறை