கௌதம சித்தார்த்தன், கடிதம்

சொல்மயங்கும் வெளி

அன்பு ஜெயமோகன்,

எழுதி நீண்ட நாட்கள் ஆகின்றன. எதனாலோ, எழுதத் தோன்றவில்லை. வாசிப்பில் தீவிரமாய் இருக்கிறேன். யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் அவஸ்த நாவலும், புதுமைப்பித்தன் தொடர்பான விமர்சனக்கட்டுரை நூலும்(தொ.மு.சி.ரகுநாதன்) சமீபமாய் வாசித்தவற்றில் குறிப்பிடத்தக்கவை. .நா.சு மொழிபெயர்ப்பில் வெளியான சில மொழியாக்கக்கதைகளோடு, தஸ்தாயெவ்ஸ்கியின் நிலவறைக் குறிப்புகள்(எம்..சுசீலா) படைப்பையும் இப்போது வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இவ்வாசிப்பு மனோநிலை அபாரமாய் இருக்கிறது.

நிலவறைக் குறிப்புகள் வாசிக்கத் துவங்கிய நாளன்று ஒரு ஆச்சர்யம். எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் அவர்களின் நூலுக்கான தங்களின் முன்னுரை தளத்தில் வெளியாகி இருந்தது. அந்நாவலுக்கு ஒரு  அறிமுகச்சாளரமாக உங்கள் முன்னுரை அமைந்திருக்கிறது. உங்கள் படைப்புகள் அறிமுகம் ஆகும் முன்பே எனக்கு அறிமுகமானவர் அவர். நீங்கள் முன்னுரை கொடுத்து விட்டதாக கெளதம சித்தார்த்தன் முன்னரே தெரிவித்திருந்த போதிலும், அதை எதிர்பாராமல் வாசித்ததில் மகிழ்ச்சி. அம்மகிழ்ச்சி நீர்த்துப்போவதற்குள் எழுதிவிட வேண்டும் என்றுதான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

பெரும்பாலான வாசகர்களுக்கு கெளதம சித்தார்த்தன் அவர்களைத் தெரியாது. எங்கள் கொங்கு மண்ணின் முக்கியப்படைப்பாளிகளில் ஒருவர் அவர். பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அவரை நான் அறிவேன். என்னை விட வாசிப்பும் இலக்கிய அனுபவமும் மிகுந்தவராயினும் எங்கள் ஆரம்பகால வாசிப்புப் பிதற்றல்களைப் பொறுத்துக் கொண்டவர். வாய்ப்பு அமையும் போதெல்லாம் அவரைச் சந்திப்பேன். அவரின் உப்புக்காரப்பள்ள(கவுந்தப்பாடி, ஈரோடு) இல்லம் அமைந்திருக்கும் புளியமர நிழத்தடிகளே எங்களின் உரையாடல் களங்கள். சிலநேரங்களில் நண்பர்களுடன், பலசமயங்களில் தனியாகவும் அவரைச் சந்திப்பேன். முன்முடிவுகளோ, முன்திட்டமிடலோ இல்லாத எங்கள் உரையாடல்களின் வழியேதான் நான் இலக்கியப்படைப்பு என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாய் விளங்கிக் கொள்ள ஆரம்பித்தேன்.

அப்போது அவரின் படைப்புகளை வாசிக்கக்கூட அறியாதவன் நான். அதற்காக எங்களைப் புறக்கணிக்க மாட்டார். பல சமகால எழுத்தாளுமைகளின் படைப்புகளைச் சிலாகித்து அறிமுகப்படுத்துவார். புதியவர்களின் நல்ல படைப்புகளை ஆதரித்து உன்னதம் இதழில் வெளியிடுவார். இயக்குனர் பா.ரஞ்சித் ஆரம்பகாலத்தில் எழுதிய கதை ஒன்று உன்னதம் இதழில் வெளியாகி இருக்கிறது. உமாபதியின் கவிதைகளை நெடுஞ்சாலை மனிதன் எனும் பெயரில் பதிப்பித்திருக்கிறார். மொழிபெயர்ப்பிலும். மொழியாக்கங்களிலும் அளவில்லா ஆர்வம் கொண்டவர் அவர். அதற்கென்று தமிழி என்றொரு இணைய இதழையும் நடத்தியவர்.

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை நடத்திய காலகட்டத்தில், முருக வழிபாடு பற்றி நானும் அவரும் பல மணிநேரங்கள் பேசி இருக்கிறோம். அப்போது நான் முருக வழிபாட்டை தனித்தமிழ்ச்சமூக நெறியின் அடையாளமாகக் காட்டும் ஆர்வத்தில் இருந்தேன். சொல்லப்போனால், பண்பாட்டுத்தமிழ்த்தேசியம் ஒன்றுக்கான அரசியல் வரையறையே என்னிடம் இருந்தது. ஒரு கோடி மக்களை முருகனடியார்களாக மாற்றிக் காட்டுவதான வெறியும் என்னிடம் இருந்தது. கடுமையான சமஸ்கிருத வெறுப்பாளனாகவும், முற்போக்கு பீரங்கியாகவும் என்னை அடையாளப்படுத்தி இருந்த காலம் அது. முருக வழிபாடு குறித்து நான் வாசிக்க ஆரம்பித்த போதே என் முட்டாள்தனங்களை விளங்கிக் கொள்ள ஆரம்பித்தேன். பண்பாட்டை இடதுசாரி அல்லது வலதுசாரித் தரப்பாக மாற்றும்அரசியல் பித்தலாட்டங்கள்புரிபடத் துவங்கின. இருவாக்கியங்களில் சொல்லிவிட்டாலும், எனக்குள் வலுக்காட்டாயமாய் உட்கார்ந்திருந்த அபத்த முற்போக்குத்தனங்களில் இருந்து விடுபடுவதற்குப் பல ஆண்டுகள் பிடித்தன.

பிற்போக்குத்தனத்துக்கு எதிரானதாய்த் தன்னைக் காட்டிக் கொண்ட முற்போக்குக் கொள்கைகள், தங்களுக்கு என்று தனித்த அடையாளம் இல்லாதவையாக இருந்தன. பிற்போக்கைச் சாடுவதே முற்போக்கு என்பதாக அறியப்பட்டது. கடவுள் இருக்கிறார் என்பது பிற்போக்கு என்றால், கடவுள் இல்லை என்பது முற்போக்கு. இதை விளங்கிக் கொள்வது இன்றைக்கு இன்னும் சிரமம். இரண்டையும் கடந்து கடவுள் பற்றிய மேலதிக ஆய்வுக்கு ஒருவர் சென்றுவிடவே முடியாதபடி அடைத்துக் கொண்டு நிற்கும்அறிவுஜீவிச் செயல்பாடுகளால்மொண்ணைத்தனமான சிந்தனை முறைக்கு இளைஞர்கள் மயங்கி விட்டார்களோ என கவலை கொள்கிறேன். சமூகவலைதளங்களைத் திறந்தாலே தென்படும் விமர்சனங்களைப் பார்த்தால், நடுக்கமாக இருக்கிறதுபிற்போக்கு எதிர் முற்போக்கு என்பதாக சமூக அரசியல் களத்தைச் சுருக்கி வைத்துக்கொண்டு நம்மவர்கள் செய்யும் அட்டகாசங்களை என்னவென்று சொல்வது?

இருமைகளுக்குள் சமூகச்சிந்தனையைச் சிறைப்படுத்தி இருந்த அறிவுஜீவிகளின் பிடியில் இருந்து விடுபடுவது அவ்வளவு எளிதானது அல்ல. ஒன்று பெரியாரை ஆதரிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும். இரண்டுக்கும் அப்பால் நின்று பெரியாரின் சமூகவரலாற்றுத் தேவை, அவரின் சிந்தனை முறைமை, அம்முறைமையின் நடைமுறைக் கோளாறுகள் போன்றவற்றை நான் விளங்கிக் கொண்டு விடவே கூடாது. இன்றைக்கும் சொல்கிறேன். பெரியார் எனக்கு முன்னோடிதான். பெரியாரை முழுக்கப் புறக்கணிக்கும் முட்டாள்தனத்தைச் செய்திடவே மாட்டேன். அதேபோன்று, அவரின் கோட்பாட்டில் இருக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் காலமாற்றத்துக்குத் தகுந்தவாறு பரிசீலித்துப்பார்க்கவும் தயங்க மாட்டேன். அதுவே நாம் அவருக்குச் செய்யும் நன்றியாக இருக்க முடியும்.

கோட்பாடுகள் என்பவைச் சமூகச் சீர்திருத்தத்துக்காகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட அறிவியல் முறைமைகள் என்பதான கருத்து இன்றைய இளந்தலைமுறையிடம் வலுவாக ஊன்றப்பட்டிருக்கிறது. அது நவீன அறிவுஜீவித்தோற்றம். இத்தோற்றத்தைச் சமகாலத் தலைமுறை அறிந்து கொண்டாக வேண்டும். இல்லை என்றால், செக்குமாடு போலச் சுற்றிக் கொண்டே இருக்க வேண்டியதுதான். சொல்லப்போனால், அவையும் தேய்வழக்காகிப் பிற்போக்கு வறட்டுத்தனத்தைப் போலச் சலிக்கச் செய்துவிடும்.

மார்க்சின் காலகட்டப் பின்புலத்தைக் கொண்டு புரிந்து கொள்ளப்படாத மார்க்சியம் வறட்டுத்தனமாகவே இருக்கும். இதை மார்க்சின் வரலாற்று வாதத்தின் வழிதான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். மார்க்சியம் பெரியாரியம் அம்பேத்கரியம் காந்தியம் போன்ற சமூகஅறிதல்முறைமைகளை நிரூபண அறிவியல் முறைமைகளாக நம்பும் அபாயச்சூழலில் இருந்து வெளியே வருவது இன்றைக்கு முக்கியமானது.

திரும்பவும் சொல்கிறேன். கோட்பாடுகளோ, சமூகநலச் சிந்தனைமுறைமைகளோ உதறப்பட வேண்டியவை அல்ல. சிந்தித்து நம்மை விளங்கிக்கொள்ளப் பயன்படுபவை. அவற்றை நிரூபண அறிவியல் முறைமைகள் போன்று சமூகச்சூழலில் பரப்புரை செய்துஅரசியல் லாபங்களுக்குப்பயன்படுத்திக் கொள்ளும் போக்கைத்தெளிந்து கொள்ளவேண்டியதே இன்றைக்கு மிக முக்கியம்.

மார்க்சியம் முதல் இலக்கியம் வரையிலான தெளிவுக்கு வருவதற்கு பல ஆண்டுகள் வாசிப்பும், கெளதம் சித்தார்த்தன் போன்ற தீவிர இலக்கியவாதிகளிடம் நிகழ்த்திய உரையாடல்களும் முக்கியக் காரணங்கள். சமீபமாய், என் சிந்தனைப் போக்கைச் செழுமைப்படுத்தியவர் பேராசிரியர் டி.தருமராஜ் அவர்கள். அவரின் அயோத்திதாசர் நூல் என்னளவில் முக்கியமான ஒன்று. அவரின் நாட்டுப்புற வழக்காறுகள் தொடர்பான கட்டுரைகளும் முக்கியமானவை.    

உன்னதம் இதழின் கட்டுரைகள், கதைகள் மிரட்சியைத் தரும்படி இருக்கும் என்றாலும்.. அவற்றைப் புறக்கணிக்க மாட்டேன். திரும்பத்திரும்ப அவற்றை வாசித்துப் பார்ப்பேன். பெரும்பாலும் மொழியாக்கங்கள் அதிகம் இருக்கும். போர்ஹேஸ், மாக்ஸ்வெல் போன்ற பெயர்களை எல்லாம் உன்னதம் வழியாகத்தான் அறிந்தேன். இப்போது கூட சில உன்னதம் இதழ்கள் கைவசம் இருக்கின்றன.

நாங்கள் சந்தித்த காலத்திலேயே புதுவகை எழுத்து பற்றி எங்களிடம் பேசுவார். அது பற்றி இன்றுவரை எனக்கு விமர்சனங்கள் இருக்கின்றன என்றாலும், அவரின் சமீபத்திய நாவலான இப்போது என்ன நேரம் மிஸ்ட குதிரை நாவலை அவ்வகைமைக்கான நல்ல உதாரணமாகச் சுட்டலாம். அந்நாவலைப் பற்றிய எனது வாசிப்பனுபவத்தை நாவல் வந்த பிறகு எழுதுவதாக இருக்கிறேன். இப்போதைக்கு அவருக்கு என் மனம் உவந்த வணக்கங்கள்.

சென்ற மாதத்தில் ஒருநாள் கெளதம சித்தார்த்தன் அவர்களை, அவரின் பெருந்துறை இல்லத்தில் சந்தித்தேன். பல மணி நேரங்கள் பேசிக் கொண்டிருந்தோம். முகத்தில் தளர்வு தெரிந்தபோதும் உற்சாகம் குறையாமல் பேசினார். ஆனால், அவரிடம் ஒருவிதச் சலிப்பு தெரிந்தது. அச்சலிப்பு பற்றிக் கேட்டும் விட்டேன். “ஆமாம் தலைவரே.. ஒரு மாதிரி வெறுமையாய் இருக்கு!” என்றார். அடுத்த நாள் காலை, சாலையோரம் கூடை முடைந்து கொண்டிருக்கும் ஒருவனைப் பற்றிப் பகிர்ந்து கொண்டேன். அவன் ஒருபோதும் சலிக்காமல் கூடை முடைவது(கூடையை யாரும் கண்டுகொண்டு பாராட்டவோ வாங்கவோ செய்யாவிட்டாலும்) எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது எனக் குறிப்பிட்டு, அவனை முன்னோடியாகக் கொண்டிருப்பதாகவும் சொன்னேன். அதை அவர் எப்படி எடுத்துக் கொண்டார் எனத் தெரியவில்லை. என்னளவில், அவர் எழுத்து முடைபவர்; முடைந்து கொண்டேதான் இருப்பார்.

முருகவேலன்,

கோபிசெட்டிபாளையம்.

முந்தைய கட்டுரைஇந்திரஜாலம்
அடுத்த கட்டுரைஎம்.கே.தியாகராஜ பாகவதர்