சொல்மயங்கும் வெளி, கடிதங்கள்

சொல்மயங்கும் வெளி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

சொல்மயங்கும் வெளிகட்டுரையை ஒட்டி ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.

நான் கல்லூரி விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது சுஜாதவின் கதைகளை (பெரும்பாலும் அறிவியல்)  வாங்கி படிப்பதுண்டு. அப்போது பார்வதிபுரத்தில் வசிக்கும் என் நண்பன் மணிரத்னம் பார்வதிபுரத்துக்கு வந்திருந்தார் என்று சொல்லிக்கொண்டிருந்தான். ஜெயமோகன் என்ற எழுத்தாளர் தன் வீட்டில் பக்கத்தில் தான் இருப்பதாகவும் அவரை பார்க்கத்தான் மணிரத்னம் வந்ததாகவும் சொன்னான். இது கடல் திரைப்படம் வெளியாவதற்கு ஓர் ஆண்டு முன்பு.

அடுத்த முறை நான் புத்தகக்கடைக்கு சென்றபோது ஜெயமோகன் புத்தகங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டேன். விஷ்ணுபுரம், கொற்றவை போன்றபெரியபுத்தகங்கள் மிரட்சியடைய செய்தன. அப்போது தான்விசும்புஅறிவியல் புனை கதை  தொகுப்பை வாங்கினேன். அதன் முதல் கதையான ஐந்தாவது மருந்தே என்னில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த தொகுப்பின் கதைகள் உருவாக்கிய தாக்கம் ஏன், அது ஏன் முன்பு படித்த கதைகளில் உருவாகவில்லை என்பதற்கான விடைகளைசொல்மயங்கும் வெளிகட்டுரையில் கண்டுகொண்டேன்எனக்கு தீவிர இலக்கியத்தின் அறிமுகமாக அமைந்ததுவிசும்புதொகுப்பு தான். இப்போது தொடர்ந்து கடந்த 8-9 வருடங்களாக உங்கள் எழுத்துக்களை படித்து வருகிறேன்.

தமிழ் சூழலில் தீவிர இலக்கியம் பெரும்பாலான மக்களுக்கு தற்செயலாகத்தான் அறிமுகமாகிறது என்று நீங்கள் ஒரு உரையில் சொல்லியிருப்பீர்கள். என் விஷயத்தில் அது முற்றிலும் உண்மை. பார்வதிபுரத்துக்கு வந்த மணிரத்தினத்திற்கும் அதை என்னிடம் சொன்ன என் நண்பனுக்கும் தான் நன்றி சொல்ல வேண்டும்.

அன்புடன்

கார்த்திக்

கிருஷ்ணன்கோயில், நாகர்கோயில்   

அன்புள்ள ஜெ

சொல் மயங்கும் வெளி வாசித்தேன். அறிவியல் புனைகதைகள் பற்றிய என் மிகப்பெரிய குழப்பம் ஒன்றுக்கான பதில் அதில் இருந்தது. அறிவியல்புனைகதைகள் ஏன் இலக்கியமாவதில்லை, அல்லது எப்படி இலக்கியமாகின்றன என்பது மிகப்பெரிய கேள்விதான். மேலைநாடுகளில் எல்லா ஃபேண்டஸிகளையும் அறிவியல்புனைவு பிரிவில் சேர்த்துவிடுகிறார்கள். அவை அறிவியலை பயன்படுத்தி எழுதப்பட்டால்தான், அறிவியல் கொள்கை ஒன்று அவற்றில் இருந்தால்தான் அவை அறிவியல்புனைகதைகள். அறிவியல் புனைகதைகள் இலக்கியமாவது அவை நாம் வாழும் வாழ்க்கையின் அடிப்படைகளை நிலைகுலையச் செய்து புதிய கேள்விகளை எழுப்பும்போதுதான். கௌதம சித்தார்த்தனின் நூலை படிக்கவேண்டும்

ஆர்.கே.சுந்தர்

முந்தைய கட்டுரைகாப்பியங்கள் தமிழில்
அடுத்த கட்டுரைமைத்ரி -எதிர்வினைகள்