நீலி மின்னிதழ்- ரம்யா

அன்பு ஆசிரியருக்கு,

தமிழ்விக்கி பணிக்காக “சக்ரவர்த்தினி” இதழ் பற்றிய பதிவு எழுதிக்கொண்டிருந்தபோது 1905லேயே பெண்களுக்காக மட்டும் இதழ் ஆரம்பித்திருந்தது வியப்பைத் தந்தது. பாரதி ஒரு வருடத்திற்குமேல் ஆசிரியராக இருந்திருக்கிறார். ஆனால் நீங்கள் அந்த பக்கத்தில் மேலும் தகவல்களைச் சேர்த்திருந்தீர்கள். அது பாரதியாரின் நோக்கத்தைச் சொல்லியிருந்தது.

“அறிவின்மை என்னும் பெருங்கடலில் தத்தளிக்கும் நமது பதினாயிரக் கணக்கான பெண்களைக் கரைசேர்ப்பதற்கும்ச் சில பெருங்கப்பல்கள் இருந்தபோதிலும், யாம் கொண்டுவரும் சிற்றோடம் அவசியமில்லை என்று யாவரே கூறுவார்?” என பெண்களுக்காக ஓர் இதழை நடத்தவேண்டும் என எண்ணியமைக்கான காரணத்தை பாரதியார் கூறியதாக இருந்தது.

பாரதியாருக்கு முன்பு அமிர்தவர்சனி, மகாராணி, சுகுணகுணபோதினி, மாதர் மித்திரி, பெண்மதிபோதினி, மாதர் மனோரஞ்சினி போன்ற பெண்களுக்கான இதழ்கள் வெளிவந்தன. அவருடைய காலகட்டத்தில் பெண்கல்வி, தமிழ்மாது முதலிய இதழ்கள் வந்துள்ளன. ஆனால் இந்த இதழ்களில் பெரும்பாலும் பெண்களுக்கு மரபான ஒழுக்கநெறிகளை உபதேசிப்பது, நோன்புகள் மற்றும் மதச்செய்திகளைச் சொல்வது போன்றவையே நிறைந்திருந்தன. தேசியச் செய்திகளுக்கும், பெண்கல்வி பெண்விடுதலை போன்றவற்றுக்கும் இடமளிக்கும் ஓர் இதழை தொடங்குவதே பாரதியின் நோக்கமாக இருந்தது. மேலும் சக்ரவர்த்தினி இதழ் மூலமாக பல முக்கியமான பெண் எழுத்தாளர்கள் உருவாகி வந்தார்கள். அவர்கள் சிறுகதைகள் எழுத ஊக்குவிக்கும் முயற்சியும் நடைபெற்றது.

அசலாம்பிகை அம்மாள், அலர்மேல்மங்கை அம்மாள், ராஜலஷ்மி அம்மாள், ஆர்.எஸ். சுப்பலஷ்மி அம்மாள், கஜாம்பிகை போன்றோர் பங்களித்த முக்கியமான பெண் எழுத்தாளர்கள். ஆண் எழுத்தாளர்களும் பெண்களுக்கான பல சிந்தனைக் கட்டுரைகள் எழுதியுள்ளனர். அது அன்றைய காலகட்டத்தின் தேவையாக இருந்துள்ளது. பாரதி இதில் எழுதிய பல கட்டுரைகள் பின்னத்தூரால் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்துள்ளது.

இன்றைய நவீன காலகட்டத்தில் பெண்களை எழுத ஊக்குவிக்க என தனி இதழ் அவசியமில்லை. இணைய காலகட்டத்தில் தனி வலைதளம், பல மின்னிதழ்களின் பெருக்கத்தாலும் பெண்கள் எழுத முடிகிறது. ஆக அதற்காக ஒரு மின்னிதழ் ஆரம்பிப்பது அவசியமற்றது. பெண் எழுத்தாளர்கள் பற்றிய தகவல்கள் யாவும் “தமிழ் விக்கி” யிலேயே தொகுக்கப்பட்டுவிடும். ஆனால் பெண் படைப்புகளைப் பற்றிய ரசனை, விமர்சனக் கட்டுரைகளை தொகுக்கும் முயற்சியில் ஒரு இதழ் ஆரம்பிக்க வேண்டுமென்று தோன்றியது. சங்க காலம் முதல் தற்போது வரை எழுதப்பட்டுள்ள அனைத்து பெண் எழுத்துக்களையும் தொகுக்கும் முயற்சியாகநீலி மின்னிதழ்” அமையப்பெறும்.

தமிழ் இலக்கிய காலகட்டத்தை சங்க காலம், சங்கம்மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், நவீன காலம் (விடுதலைக்கு முன், பின்) என்று பிரித்து, ஒவ்வொரு காலகட்டத்தையும் சில இதழ்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசூரிக்கலாம் என்று தோன்றியது.

நீலி இதழ் காலாண்டு இதழாக அமையும். நண்பர்கள் இணைந்து இந்த தொகுக்கும் பணியைச் செய்கிறோம். தமிழ் பெண் எழுத்தாளர்கள் என்று குறிக்கிவிடாமல், உலக இலக்கியத்தையும் இணைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினோம். அவை பற்றிய தொடர் கட்டுரைகளை நண்பர்கள் எழுதுகிறார்கள்.

சுசித்ரா நவீன இலக்கியத்தில் உலக பெண் எழுத்தாளர்களின் புனைவுலகம், பங்களிப்பு சார்ந்து தொடர் கட்டுரையாக எழுதுகிறார். ஜெ. சைதன்யா உலக பெண் எழுத்தாளர்களின் அபுனைவுலகம் சார்ந்து தொடர் கட்டுரை எழுதுகிறார். இதழுக்கு முதன் முதலில் இந்த கட்டுரைகள் எழுதுவதாக இறுதியான பின் தான் பிற நண்பர்களிடம் பேசினேன். அதையொட்டி தமிழ் நவீன இலக்கியம் சார்ந்து சுரேஷ் பிரதீப் தொடர் கட்டுரைகள் எழுதுவதாகச் சொன்னார். அனோஜன் ஈழத்து பெண் எழுத்தாளர்களை தொகுத்து தொடராக எழுதுவதாகச் சொன்னார். மலேசியா நவீன் மலேசிய பெண் எழுத்துலகம் பற்றிய கட்டுரைகள் தருவதாகச் சொன்னார். ’வனம்’ ஷதிர் ஈழத்து நாட்டுக்கூத்து பெண் கலைஞர்கள் பற்றி எழுதுவதாகச் சொன்னார். ஜி.எஸ்.எஸ்.வி நவீன் நட்டுப்புறவியலில், கலைகளில் பெண்கள் பங்கு பற்றி எழுதுவார். ஜெயராம் நவீன ஓவியக்கலையுலகில் குறிப்பிடத்தகுந்த பெண் கலைஞர்கள் பற்றி எழுதுவதாகச் சொன்னார்.

சங்க காலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து முதல் மூன்று இதழ்கள் வருகிறது. மொத்தம் இருக்கும் பத்து கட்டுரைகளில் மூன்று கட்டுரைகளும், தலையங்கமும் சங்க கால பெண்ணெழுத்து சார்ந்து வரும். கல்பனா ஜெயகாந்த், லோகமாதேவி, சீனு, இசை, வெண்பா, பார்கவி ஆகியோர் சங்க காலம் சார்ந்து எழுதுகிறார்கள். ஜா. தீபா திரைக்கதை, வசனம் சார்ந்த துறைகளில் பெண்களின் பங்களிப்பு சார்ந்த கட்டுரையை தொடராக எழுதுகிறார். நிக்கிதா பக்தி இலக்கியம் சார்ந்த பெண் படைப்புகள் பற்றி எழுதுகிறார். ஸ்வேதா சண்முகம் விடுதலைக்கு முந்தைய காலகட்டம் சார்ந்த பெண்களைப் பற்றியும், பெண் எழுத்தாளர்களின் குடும்பச் சூழல், ஆண் எழுத்தாளர்களுக்கு அவர்களின் மனைவிகளின் பங்களிப்பு சார்ந்த கட்டுரைகளையும் எழுதுவதாகச் சொல்லியிருக்கிறார். சாம்ராஜ், நரேன், கவிஞர் ஆனந்த் குமார், ஆனந்த் ஸ்ரீநிவாசன், தம்பி வீரபத்ரன், சக்திவேல், விக்னேஷ் ஹரிஹரன் ஆகியோரும் தொடர்ந்து பங்களிப்பு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

தற்போது எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கான விக்கி பக்கத்தை உருவாக்கும் போது “இலக்கிய இடம்” பகுதிக்காக பெரும்பான்மையாகச் சார்ந்திருந்தது உங்களுடைய தளம், எஸ்.ரா தளம் தான். மேலும் பா.வண்ணன், க. மோகனரங்கன், கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் புதியவர்களை நோக்கி தொடர்ந்து தங்கள் விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்கள். சுனில் சாருடைய தளத்தில் பெரும்பாலும் பலருக்கும் எழுதியிருக்கிறார். சுரேஷ்ப்ரதீப் பல இணைய இதழ்களில் புதியவர்களின் படைப்புகளைப் பற்றிய விமர்சனங்களை எழுதியுள்ளார். ஆனாலும் தமிழ் விக்கி பதிவு போடும்போது தான் இன்னும் எழுத வேண்டிய பல எழுத்தாளர்கள் இருப்பதை அறிய முடிந்தது. உதாரணமாக ரமேஷ் ரக்‌ஷனின் விக்கி பக்கம் எழுதும் போது இலக்கிய இடத்திற்காக எங்கும் கட்டுரைகள் கிடைக்கவில்லை. அவர் ஒரு நாவலும், நான்கு சிறுகதைத் தொகுப்புகளும் போட்டுள்ளார். பெரும்பாலும் எல்லா படைப்புகளையும் சுனில் சார் படித்திருக்கிறார். எந்த ஒன்றுக்கு இல்லையானாலும் மிக நேர்த்தியாக புதியவர்களுக்கான இலக்கிய இடத்தைச் சொல்லியிருக்கிறார். “ரமேஷ் ரக்‌ஷனுக்குல்லாம் ஒரு நல்ல கட்டுரை இருந்திருக்கனும். எழுதனும். இப்படி எழுதப்பட வேண்டியவர்கள் நிறைய இருக்கிறார்கள்” என்றார். சுனில் சாரின் வாசிப்பும், அதை தொகுப்பதும் உண்மையில் ஊக்கமாக இருந்தது ஜெ. விமர்சனக் கட்டுரைகள், ரசனைக் கட்டுரைகள் எழுதுவதென்பது ஒரு இயக்கமாக நடைபெற வேண்டும் என்றார்.

எத்தகைய படைப்பாயிருப்பினும் அது பற்றிய விமர்சனம் தேவை என்பது புரிந்தது. அந்தப் படைப்புகளின் பேசு பொருள் என்ன, நீண்ட இலக்கிய மரபில் அது வகிக்கும் இடம் என்ன என்பதையும் தொகுத்துக் கொள்வதன அவசியம் புரிகிறது. எண்ணிக்கை அளவில் பெண்கள் எழுதுவது குறைவாகத்தான் உள்ளது. இன்றைக்கு தீவிரமாக எழுதும் பெண்களின் படைப்புகளுக்குக் கூட இவ்வகையான ரசனை, விமர்சனக் கட்டுரைகள் குறைவாக உள்ளது அல்லது இல்லை. மிகச்சிலர் தான் பேசவும் செய்கிறார்கள். உதாரணமாக பெருந்தேவி அவர்கள் பதினேழு புத்தகங்களை எழுதியிருக்கிறார்கள். அவை அனைத்தையும் பற்றிய தனித்தனியான விமர்சன, ரசனைக் கட்டுரைகள் வர வேண்டும். அவரின் படைப்பிற்கு பல வகையான வாசிப்புப் பார்வை வேண்டும். ஒட்டுமொத்தமாக அவரின் எழுத்துக்களைப் பற்றிய ரசனை, விமர்சனக் கட்டுரைகள் வேண்டும். அவரைப் பற்றிய நேர்காணல் ஒன்று வேண்டும். இதன் வழி அவர் எதிர்கொண்ட சவால்கள், தனக்குப் பின் வரும் பெண்களுக்கு அவர் சொல்லவேண்டியவைகள் என யாவற்றையும் தொகுக்க வேண்டும். இன்றைக்கு நவீனச்சூழலில் எழுத வரும் பெண்களுக்கு ஒட்டுமொத்த இலக்கியத்தில் தங்கள் இடம் என்பதைத் தாண்டியும் சங்க காலத்திலிருந்து தற்போது வரை வந்த நிரையின் தொடர்ச்சியே நாம் என்ற பிரக்ஞை வேண்டும். இதுவரை என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது இனி எழுத வேண்டிய களங்களை அவர்கள் முன் திறந்து வைக்கும். கலை என்பது அப்படி தொடர்ச்சியைக் கண்டறிந்து எழுதுவதல்ல என்பதும் ஒரு தரப்பாகப் பார்க்கிறேன். என் அளவில் இவையாவும் விமர்சனங்களை மேலும் செறிவாக்கப் பயன்படும். அதற்கு “நீலி மின்னிதழ்” பயன்படும்.

கவிஞர் இசையிடம் அவருக்குப் பிடித்த பெண் கவிஞர்கள் பற்றி விமர்சன/ரசனைக் கட்டுரை எழுதித்தர கேட்டபோது தயங்காமல் “ஒவ்வையார்” பற்றி எழுதுவதாகச் சொன்னார். தமிழ் இலக்கியத்தில் ஒளவையார் என்ற பெயரில் பலரும் எழுதியிருக்கிறார்கள். அந்தப் பெயரில் எழுதிய அனைத்துப் பாடல்களும் தனக்கு விருப்பமானவை என்றார். பல்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த ஒளவையாரைத் தொகுப்பது பெண் கவிஞர்களுக்காக மட்டுமல்லாது ஒட்டுமொத்த இலக்கியத்தில் அவரின் இடத்தைச் சொல்லவும் பயன்படும். அவரிடம் தமிழ் விக்கியில் ஒருவாரம் முன்பு ஜா.தீபா அவர்களின் பரிந்துரையின் பேரில் எழுதிய தாயம்மாள் அறவாணன் பற்றி பகிர்ந்து அவரின் ஒளவையார் நூலைப் பற்றிச் சொன்னேன். அவர் மகடூ முன்னிலை, ஒளவை களஞ்சியம் என இரு புத்தகங்களையும் வாங்கி தன் பணியை ஆரம்பித்துவிடார். இரண்டாவது இதழிலிருந்து அவரின் கட்டுரை வரும்.

புனைவுகளைத்தாண்டியும், அபுனைவுகளில், ஆய்வுகளில் இயங்கும் பெண்களைப் பற்றியும் எழுத வேண்டும் ஜெ. நீங்கள் எங்களுக்கு அறிமுகப்படுத்திய கரசூர் பத்மபாரதி சிறந்த உதாரணம். மொழிபெயர்ப்புகளில் பெண்களின் பங்கு பெருகியிருக்கிறது. ஒரு புத்தகமானாலும் அதைப் பற்றிய விமர்சனம் வேண்டும் என்று தோன்றுகிறது. அது அவர்கள் பாதைக்கு உதவியாக இருக்கும். மோசமான மொழிபெயர்ப்புகளும் வருகிறது. யாவும் சொல்லப்பட வேண்டும் என்று தோன்றுகிறது. கலை, பண்பாடு, செயற்பாட்டாளர்கள் என இன்னும் விரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது ஜெ. மஞ்சரியின் நேர்காணல் முதல் இதழில் வருகிறது. அது ஒரு தொடக்கமாக அமையும். “ஆகஸ்ட் 1” லிருந்து நீலி மின்னிதழ் வருவதற்கான பணியில் இருக்கிறோம் ஜெ.

சீனு சாரிடம் இதழ் பற்றி பேசிக் கொண்டிருந்தபோது நீங்கள் ஆரம்பித்த “ஜன்னல்” இதழ் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதில் “காலம்தோறும் பெண்” என்ற கட்டுரைத் தொடரை நீங்கள் எழுதிக் கொண்டிருந்ததாகச் சொன்னார். அது சங்க காலம் தொடங்கி நவீன இலக்கியம் வரை பெண்களின் எழுத்துக்கள் பற்றிய ஒரு கோட்டை வரைவதான கட்டுரை என்றும் இந்த இதழுக்கு அந்தக் கட்டுரைகள் ஒரு வழிகாட்டியாக அமையும் என்றும் கூறினார். அதைப் பற்றிய முழு விவரம் தெரியவில்லை ஜெ. அந்தக் கட்டுரைகள் எங்களுக்கு கண்டிப்பாக வழிகாட்டியாக அமையும் ஜெ. நீலி மின்னிதழின் சிந்தனை உங்களிலிருந்து உருவானது தான் என்பதை தீர்க்கமாக நம்புகிறேன். என்னிலிருந்து பிறக்கும் அனைத்து சிந்தனையும் எங்கோ நீங்கள் விதைத்தது தான் என்றும் உளமாரக் கருதுகிறேன் ஜெ. இதழுக்கான பெயர் என்று சிந்தித்த கணம் என் முன் வந்தது “நீலி”; “காளிந்தி” என்ற இரு பெயர்கள் தான். ஆனால் அன்று கடிதம் எழுதும்போது இயல்பாகவே “நீலி” என்ற பெயர் வந்து அமைந்து கொண்டது. ஜன்னல் இதழுக்கு எழுதிய கட்டுரைகள் இருந்தால் அது நீலி மின்னிதழுக்காக நீங்கள் தர வேண்டும். ஒருவேளை எழுதி முடிக்கப்படாமல் இருந்தால் எங்களுக்காக நீங்கள் சங்ககாலம் முதல் தற்போது வரை உள்ள பெண் எழுத்துக்களைப் பற்றிய ஒரு சித்திரத்தை தொடர் கட்டுரைகளாகத் தர வேண்டும். நீலி மின்னிதழைப் பற்றிய விளக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்தக் கடிதம். இது சார்ந்த உங்களின் அறிவுறுத்தல்களும், வழிகாட்டுதல்களும் தேவை ஜெ.

பணிவன்புடன்

ரம்யா.

[email protected]

***

அன்புள்ள ரம்யா

மகத்தான முயற்சி. வாழ்க

எந்த பெருமுயற்சியும் ‘என்ன வந்தாலும் இதை நிகழ்த்துவோம்’ என்னும் உறுதிப்பாட்டில் இருந்தே வெற்றிநோக்கிச் செல்லமுடியும். எதிர்ப்புகள் வந்தாலும், அனைவருமே விலகிச் சென்றாலும், இது நிகழவேண்டும். எனக்கு நானே சொல்லிக்கொள்ளும் ஒரு வரி உண்டு. ‘நான் என்னிடம் எந்த சாக்குபோக்கையும் சொல்லிக்கொள்ள மாட்டேன்”

ஜெ

***

முந்தைய கட்டுரைநாமக்கல் கவிஞர்
அடுத்த கட்டுரைதமிழில் சிறுபான்மை இலக்கியம்