காதலும் இலக்கியமும்

Otakumommy SD ஃபோர்பீரியா

வாசகராக அறிமுகமாகி, எழுதத் தொடங்கியிருக்கும் சக்திவேல் ஒரு கடிதத்தில் இவ்வாறு கேட்டிருந்தார். அவருக்கு அஜிதன் எழுதிய மைத்ரி ஒரு பெரிய அனுபவமாக இருந்தது. மொழி வழியாகவே புலன்கள் அனைத்தையும் நிறைக்கும் அனுபவம். மெய்யான வாழ்வனுபவத்துக்கு மேல் ஒரு கனவனுபவம். அந்தப் பரவசம் என்பது அது காதல் கதை என்பதனால், அவர் இளைஞர் என்பதனால் வந்ததா? அவரால் அப்படி எண்ண முடியவில்லை. ஆனால் ஒருவர் அப்படிச் சொல்லக்கூடுமா?

நான் மைத்ரி பற்றி பேசப்போவதில்லை. காதல் என்னும் புனைவுக்கரு பற்றி சில சொல்லலாம் என்று தோன்றுகிறது. தமிழின் ஜெயகாந்தன் காதல் பற்றி எழுதியதில்லை. அவருக்கு அது எழுத உகந்ததாகவே தோன்றவில்லை. வாழ்க்கையில் காதலுக்கு மிக அற்பமான இடமே உள்ளது என்று அவர் சொன்னார். அவருடைய மூதாதையான புதுமைப்பித்தன் காதல் பற்றி எழுதவில்லை. சுந்தர ராமசாமி எழுதவில்லை. அசோகமித்திரன் எழுதுவதைப் பற்றி எண்ணிப்பார்க்கவே முடியாது. ஆனால் மௌனி பெரும்பாலும் காதல் பற்றியே எழுதினார். தி.ஜானகிராமன் காதலின் தாபத்தை  வெவ்வேறு களங்களில் திரும்பத்திரும்ப எழுதிக்கொண்டிருந்தார்.

காதல் எந்த அளவுக்கு புனைவுக்கு உரிய கரு? உலகில் எழுதப்பட்ட கவிதைகள், கதைகளில் மிகப்பெரும்பாலானவை காதல் பற்றியவை. தமிழின் மாபெரும் கவிஞனாகிய கபிலன் பெரும்பாலும் காதல்கவிதைகளை எழுதியவன். உண்மையில் நம் அன்றாட வாழ்க்கையில் காதலின் இடம் மிகச்சிறிது. காதலிப்பவர்கள், காதலித்தவவர்களே மிகக்குறைவானவர்கள். அவர்கள் வாழ்க்கையிலேயே காதலின் காலகட்டம் மிகக்குறுகியது. வாழ்க்கையில் காதலுக்கு எவ்வளவு இடம் என்று பார்த்தால் இலக்கியத்தில் காதலின் இடம் மிகமிக அதிகம். நம்பமுடியாத அளவுக்கு இலக்கியம் காதலை பெரிதாக்கியிருக்கிறது. கவிதைகளில் பெரும்பாலானவை காதலைப்பற்றியவையே. காதல் இல்லையேல் இசையே இல்லை என்பார்கள். எல்லா பாடல்களும் ஏதோ ஒருவடிவில் காதல்பாடல்களே என்று பி.கே.பாலகிருஷ்ணன் ஒரு கட்டுரையில் சொல்கிறார். 

யதார்த்த உணர்வு கொண்ட எழுத்தாளர்களைப் பொறுத்தவரை காதல் என்பது ஒருவகை மனமயக்கம், ஒரு வகை பொய்யான நெகிழ்ச்சி, அவ்வளவுதான். மிகக்கறாராகப் பார்த்தால் காதல் என்பது என்ன? ஒரு ஆண் பெண்ணிடம் உடலுறவு கொள்ள அவள் ஒப்புதலை கோருவதுதானே? அல்லது, பெண் ஆணிடம் கோருவது. பாலுணர்வின் ஒரு மென்மையான வெளிப்பாடு. எல்லா விலங்குகளிலும் ஆண் பெண்ணை வெல்லவும் பெண் ஆணை கவரவும் அந்த நாடகம் நடத்தப்படுகிறது. சரியான இணையை கண்டடைவதற்கான ஓர் உளவியல் போட்டிதான் அது. பாலுறவில் காதல் முடிவடைகிறது. அதற்குப்பின் உள்ளது காம உறவு. அதன் நீட்சியாக உருவாகும் குடும்பம் என்னும் அமைப்பும், அதற்குள் உள்ள உறவுகளும் பின்னர் தொடர்கின்றன. காதல் வெறுமொரு தொடக்கம், ஒரு முகாந்திரம்வேறென்ன?

எனில் அதை ஏன் இத்தனை தீவிரமாக இலக்கியம் பேசுகிறது? முப்பதாண்டுகளுக்கு முன் சுந்தர ராமசாமியுடன் நான் செம்மீன் நாவலை முன்வைத்து காதல் என்னும் பேசுபொருள் பற்றி பேசியதை நினைவுகூர்கிறேன். தமிழில் நல்ல காதல்கதைகள் ஏன் எழுதப்படவில்லை என நான் அன்று ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். தன்னால் ஒரு காதல் கதையை எழுத முடியாது என்று சுந்தர ராமசாமி சொன்னார் (ஆனால் அதன்பின் சில நல்ல காதல்கவிதைகளை எழுதினார்). நான் வாழ்நாள் முழுக்க காதல்கதைகளை எழுதிக்கொண்டே இருப்பேன் என்று நான் சொன்னேன். நான் நவீனத்துவ எழுத்தாளன் அல்ல, நான் யதார்த்தவாதி அல்ல, நான் கனவுகளில் திளைக்கவே எழுதுகிறேன் என்றேன். என்ன காரணத்துக்காக கபிலனுக்கும் நம்மாழ்வாருக்கும் காதல்கவிதை எழுதவேண்டிய தேவை இருந்ததோ அதே காரணத்துக்காகவே அவற்றை நான் எழுத விரும்புகிறேன் என்றேன்.

அந்தக் காரணங்கள் இருவகைப்பட்டவை. இலக்கியத்தின் பேசுபொருட்களில் முதன்மையானது மானுட உறவுதான். தந்தை மகன் உறவு, அன்னையுடனான குழந்தைகளின் உறவு,நட்புறவு, அரசனுடனான உறவு என மானுடர் கொள்ளும் உறவுகளை இலக்கியம் பேசிக்கொண்டே இருக்கிறது. அவ்வுறவுகளில் ஆண்பெண் உறவே மிகச் சிக்கலானது, நுட்பமானது. எல்லா உறவுகளும் அடிப்படையில் எளிமையானவை, உயிரியல் சார்ந்த அர்த்தம் மட்டுமே கொண்டவை. ஆனால் மானுட ஆணவம் இணைந்துகொள்ளும்போது உறவுகள் சிக்கலாகின்றன. அச்சிக்கலையே இலக்கியம் எழுதுகிறது. ஆண்பெண் உறவிலேயே உச்சகட்ட ஆணவ ஊடுருவல் உள்ளது. ஆண்பெண் உறவில் மிக நுண்ணிய தளம் காதலே.

ஏனென்றால் காதலில் ஒருவரை ஒருவர் அறியாத இருவர் அணுகுகிறார்கள். இரண்டு ஆணவங்கள் முட்டிக்கொள்கின்றன. இரண்டு பண்பாட்டுப்பின்னணிகள் மோதிக்கொள்கின்றன. மண்மேல் மானுடர் கொள்ளும் உறவுகளிலேயே மிகக் கூரியது, மிக மிக மென்மையானது, முடிவில்லாத வண்ணவேறுபாடுகள் கொண்டது காதலுறவே. ஆகவேதான் இலக்கியம் காதலை பேசுகிறது

இலக்கியம் காதலைப் பேசுவது உறவுகளில் ஒன்றாக அல்ல. அனைத்து உறவுகளுக்கும் உதாரணமாக திகழும் ஒன்றாகத்தான். காதலை மட்டுமே பேசும் படைப்புக்கு இலக்கிய மதிப்பில்லை. காதலை பேசுவதான பாவனையில் மானுட உறவின் உள்ளடுக்குகளை, அதன் உளவியல்நாடகங்களை, அதன் உணர்ச்சிநிலைகளைப் பேசும் படைப்புகளே இலக்கியத் தகுதி கொள்கின்றன. காதல் அங்கே ஒரு மானுட இருப்பு இன்னொரு மானுட இருப்புடன் கொள்ளும் உறவாடலின் ஒரு குறியீடாகவே நிகழ்கிறது. அதுவே காதல்கதைகள் அடையவேண்டிய ஆழம்.

தேடல், தவித்தல், கண்டடைதல், இணைதல்,பிரிதல், இழத்தல் என்று மானுட உறவின் நிலைகள் பல. அவை அனைத்தையுமே காதலைப் பேசும் ஒரு நல்ல இலக்கியப் படைப்பு பேசமுடியும். மானுட உறவில் என்றும் சொல்லித்தீராத சூட்சுமங்கள் உள்ளன. ஏன் ஒருவரிடம் முதற்கணத்திலே வாழ்நாள் முழுக்க நீடிக்கும் உறவை அடைகிறோம்? மிகமிக இறுக்கமாக இருக்கும் ஓர் உறவு எந்த மர்மப்புள்ளியில் சட்டென்று முழுமையாக உடைந்துவிடுகிறது? மிகமிக நேசிப்பவரை ஏன் வதைக்கிறோம்? வதைபடுவதே எப்படி களிப்பாக ஆகிறது? எல்லாமே எல்லா உறவுகளிலும் உள்ளவைதான், காதலில் அவை இன்னும் கூரியவை, இன்னும் துலக்கமானவை. ஆக்வேதான் காதல் கதைகள் எழுதப்படுகின்றன.

உலகிலுள்ள மகத்தான காதல்கதைகள் பலவும் இந்தவகையைச் சேர்ந்தவை. கதேயின் இளம் வெர்னரின் துயரங்கள் (தமிழில்,காதலின் துயரங்கள்) அலக்சாண்டர் குப்ரினின் ஒலேஸ்யா, இவான் துர்க்கனேவின் வசந்தகால வெள்ளம், நட் ஹாம்சனின் விக்டோரியா என நினைவிலெழும் காதல்கதைகள் பல. எல்லாமே மானுட உறவின் நுண்வடிவச் சித்தரிப்புகள். மரத்தின் நுண்வடிவே அதன் மலர் என்பதுபோல.

ஆனால் இது ஒரு தளம்தான். இதற்கும் அப்பால் ஒரு தளம் உண்டு. மானுடனுக்கு இங்கே விளங்கிக்கொள்ளவே முடியாத, வகுத்துரைக்கவே முடியாத, ஒரு தாபம் உள்ளது. ஒரு தவிப்பு. ஒருவகை தனிமையுணர்வு. ஒரு முழுமையின்மையுணர்வு அது. இயற்கையின் பேருருவைப் பார்க்கையில், வான்கீழ் நின்றிருக்கையில், மாபெரும் இசைக்கோலம் ஒன்றின் முடிவில், தன்னந்தனிமையில் அவன் அந்த தாபத்தை உணர்கிறான். தன்னை உடைத்து திறந்துவிடவேண்டும், கரைந்து அழிந்துவிடவேண்டும், துளியும் எஞ்சக்கூடாது என்னும் உணர்வு எழுகிறது. அல்லது உலகையே அள்ளி தன்னுள் நிறைத்துக்கொள்ளவேண்டும், தன் இடைவெளிகள் அனைத்தும் நிரம்பவேண்டும் என்னும் தவிப்பு ஓங்குகிறது.

உண்மை, அந்த உணர்வு அனைவருக்கும் எழுவது அல்ல. மானுடரில் தொண்ணூறு விழுக்காட்டினரும் அத்தகைய ஒன்றை உணர்ந்திருக்கவே மாட்டார்கள். அவர்கள் வாழ்வது பொருண்மையான யதார்த்தத்தில். அவர்களின் உலகம் வேறு, அவர்களால் இதை புரிந்துகொள்ளவே முடியாது. அந்த உணர்வை அடையும் சிலர் உண்டு, அவர்களே துறவிகளாகிறார்கள், நாடோடிகளாகிறார்கள், பித்தர் என அழைக்கப்படுகிறார்கள். அவர்களே கலையிலக்கியங்களை உருவாக்குகிறார்கள். அவர்களே இவ்வுலகின் அத்தனை பேரிலக்கியங்களையும் கலைகளையும் சமைத்தவர்கள்.  அவர்களே கலையிலக்கியத்தின் சாராம்சமாக உள்ள இந்த அகத்தனிமையை உணரும் ரசிகர்களும்.

அந்த தவிப்பைச் சொல்ல தூலமாக வாழ்க்கையில் இருந்து கிடைக்கும் உருவகம் என்பது காதலே. மகத்தான காதல்கவிதைகளில் முழுக்கமுழுக்க தர்க்கமற்ற பித்தாக வெளிப்படுவது அந்த தனிமையும் தவிப்பும்தான். உலகியலில் அதற்கு அர்த்தமே கிடையாது. மிகச்சிறந்த உதாரணம் ராபர்ட் பிரௌனிங் எழுதிய போர்ஃபீரியாவின் காதலன் என்னும் கவிதை. அச்செயலுக்கு உலகியல் விளக்கமே இல்லை. முழுப்பித்து. உலகநியாயத்தை கொண்டு அதை பேச ஆரம்பிப்பவன் அதன் முன் முட்டாள் ஆகிவிடுவான். ஆனால் அகத்தனிமையின் தவிப்பை உணர்ந்த வாசகன் அதை உடனே அடையாளம் கண்டுகொள்வான். அவனாலேயே அது உலகின் மகத்தான கவிதைகளில் ஒன்றாக நீடிக்கிறது.

ராபர்ட் பிரௌனிங்கின் உலகைச் சார்ந்தவை மௌனியின் சிறந்த கதைகள். அவை பேசுவது காதலை அல்ல, காதல் என்னும் வடிவில் அவை முன்வைப்பது என்றுமுள்ள மானுடத் தவிப்பொன்றை. அழியாச்சுடர் என, பிரபஞ்சகானம் என மௌனி பெயரிட்டுச் சுட்டுவதே அதைத்தான். முன்பு ஓர் இலக்கியப் பேராசிரியர் எழுதினார் , “நல்ல செவப்பா ஒரு பாப்பாத்திய அந்த ஹீரோவுக்கு சேத்துவிட்டிருந்தா தீந்துடற பிரச்சினைதான் மௌனி எழுதினதுஅவர் மௌனியை அவமதிப்பதாக நண்பர் கொதித்தார். நான் சொன்னேன். அந்த பேராசிரியர் உண்மையிலேயே அவருக்கு தோன்றியதைத்தான் சொல்கிறார். அவர் வாழும் உலகில் அந்த தவிப்பு அப்படித்தான் அர்த்தமாகும்.   

காதல்கதைகளில் இந்த இரண்டாம்வகை படைப்புகள் மானுட உறவின் வழக்கமான உளவியல்நாடகம், பாவனைகள், பலவகை படிநிலை வளர்ச்சிகள், ஆணவ மோதல்கள் ஆகிய தன்மைகள் இல்லாதவை. அவை காதல் என்னும்டெம்ப்ளேட்டை மட்டுமே எடுத்துக்கொள்கின்றன. யதார்த்தத்தை நம்புவதில்லை. உதாரணம் மௌனி கதைகள்தான். ஒருவன் ஒரு பெண் பாடுவதை கேட்கிறான். அவள் முகத்தில் ஏன் என்ற பாவனை இருக்கிறது. அவனை அந்த பாவனை அலைக்கழிக்கிறது. ‘பயங்கர வசீகரம்என்னும் சொல்லாட்சி அவனுள் எழுகிறது. அவள் பாடும்போதே இறந்துவிடுகிறாள். அந்த பாவனை அவள் முகத்தில் எஞ்சியிருக்கிறது. இது ஒரு மௌனி கதை.  “அதென்ன ஒருத்தி பாடும்போதே சாவது? நம்ப முடியவில்லை” என்பவர் மௌனி கதைகளைப் படிக்கக்கூடாது, அவ்வளவுதான்.

காதலின் தவிப்பை, கண்டடைதலை, இழத்தலை அருவமான மானுடநிறைவின்மையின் உருவகமாக ஆக்கிக்கொள்ளும் கதைகளுக்கு நிகழ்ச்சிகள் முக்கியமல்ல. பெரும்பாலான அத்தகைய கதைகள் எதுவுமே நிகழ்ந்திருக்காது.  உதாரணம், மீண்டும் மௌனி கதைகள்தான். அவற்றில் பெரும்பாலும் எதுவுமே நிகழ்வதில்லை. கதைநிகழ்வது பெரும்பாலும் அகத்தில்தான். ஏனென்றால் புறநிகழ்வுகளுக்கு உறவுச்சிக்கல்கள் தேவை. இத்தகைய கதைகளில் உறவுச்சிக்கல்கள் இருப்பதில்லை. இவற்றிலுள்ளது காதல் எனும் உருவகம். இரண்டு உயிர்கள் ஒன்றையொன்று ஈர்ப்பது, நிறைவுகொள்ள தவிப்பது, நிறைவுகொள்வது, அல்லது நிறைவுகொள்ளாமையை அடைவது மட்டும்தான். 

(மௌனி கதைகளில் எப்போதுமே மானுட நிறைவின்மையே எஞ்சுகிறது. பெரும்பாலும் எல்லா பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகளிலும் அந்த நிறைவின்மையே சாராம்சமாக எஞ்சுகிறது. அது ஒரு மேற்கத்திய தரிசனம். அடிப்படையான மானுடதாகம் தணிவதே இல்லை என்பது அப்பார்வை. தணியும் என்பது இந்திய  தரிசனம். அதையே சிவசக்தி லயம் என்கிறார்கள். அல்லது சத்யம் சிவம் சுந்தரம் என்கிறார்கள்)

நிகழ்வுகளை நம்பாத நிலையில் இத்தகைய கதைகள் இரண்டு இலக்கிய வழிமுறைகளையே தேர்வுசெய்தாகவேண்டும். ஒன்று, கவியுருவகம் மற்றும் படிமங்கள். (Metaphor, Images) , இரண்டு புறக்காட்சி வர்ணனை. 

மௌனி கதையில் ஒருவன் துயருற்றவனாக வந்து ஓர் அயலூரில் தங்குகிறான். பட்டுப்போய் நிற்கும் ஒரு மரத்தை பார்க்கிறான். ‘பாழ்பட்டஎன்னும் சொல் அவன் உள்ளத்தில் ஊறுகிறது. அச்சொல்லே அவனுள் ஓடிக்கொண்டிருக்கிறதுஅவ்வளவுதான் கதை.அந்த மையப்படிமமே அக்கதைக்கு போதுமானது.

கதை நடக்கும் சூழலை படிமப்பரப்பாக ஆக்கிக்கொள்ளும் கதைகள் உண்டு. மௌனி கதைகளே மீண்டும் உதாரணம். ஒருவன் கோயிலுக்குள் நுழைகிறான். யாளிகள் வெருண்டு பின்னடைகின்றன என்று தோன்றுகிறது.  

இரண்டாவது வழிமுறை புறவுலகை நுணுக்கமாகச் சித்தரிப்பது. அந்த உணர்வுகளை அப்புறவுலகம்காட்டஆரம்பிக்கும். இது எளிய வழி முறை அல்ல. ‘இந்த்ரிய ஜாக்ரதைஎன்று சம்ஸ்கிருத காவியயியல் சொல்லும் ஐம்புலன் விழிப்புணர்வு நிலை என்பது கவிஞர்களுக்குரிய பண்பு. வெயில், மழை, செடிகள், மலர்கள், வண்ணங்கள், நிழல்கள், மணங்கள், ஓசைகள் என ஐம்புலன் பதிவுகளையும் கற்பனையிலேயே உருவாக்கி, சொற்கள் வழியாக வாசகனும் அவற்றை உணரும்படிச் செய்யவேண்டும். 

அகவுலகைச் சித்தரிப்பதை விட கடினமானது புறவுலகைச் சித்தரிப்பது. ஒரு கத்தரிப்பூவின் வண்ணம் என்ன என்று எப்படிச் சொல்வது? அதை நுணுக்கமாக இன்னொன்றுடன் ஒப்பிட்டே சொல்ல முடியும். அந்தியின் மயங்கொளியை எப்படி சொல்ல முடியும்? பலவகையான நுண்தகவல்கள் வழியாக அதை வெளிப்படுத்த வேண்டும். அது மொழித்திறன் அல்ல. ஆசிரியரின் மெய்யான அனுபவம் வெளிப்பட்டால் மட்டுமே வாசகன் அந்த அனுபவத்தை அடைய முடியும்.

நவீனத்துவ படைப்புகள் புறவுலகை சுருக்கமாகச் சொல்கின்றன. ஏனென்றால் அவற்றுக்கு புறவுலகம் என்பது கதைநிகழும் இடம் மட்டுமே. இத்தகைய செவ்வியல்கற்பனாவாத படைப்புகளுக்கு அது கதை நிகழும் இடம் அல்ல. அது அகமே புறவுலகமாக விரிந்திருப்பது. அகத்தில் என்ன நிகழ்கிறது என்று சொல்லவே ஆசிரியர் புறவுலகைச் சொல்கிறார். வெயிலின் வண்ணம் மாறுவதை, ஒரு நிழல் இடம் மாறுவதைச் சொல்லும்போது அவர் அகத்தில் நிகழும் ஏதோ ஒன்றை உணர்த்த விரும்புகிறார்

ஆகவே இத்தகைய கதைகளில் வரும் புறவுலகம் ஒரு வழக்கமான கதையின்சூழல் சித்தரிப்புஅல்ல. அப்படி எடுத்துக்கொள்ளும் வாசகர்களுக்கு இக்கதைகள் எழுதப்படுவதுமில்லை. இவற்றின் பணியே வேறு. இதை எல்லா நுண்கலைகளிலும் காணலாம். வின்செண்ட் வான்காவின் நட்சத்திர இரவு ஓவியத்தில் நிழலுருவாக நின்றிருக்கும் செடார் மரம் வெறுமொரு மரம் அல்ல. அவர் தங்கியிருந்த ஆஸ்பத்திரியின் சன்னலுக்கு வெளியே அது நின்றிருந்தது மட்டுமே அந்த ஓவியத்தில் அது நின்றிருப்பத்ற்குக் காரணம் அல்ல. அது வான்காவை வதைத்த எத்தனையோ விஷயங்களின் அடையாளம். ஓர் ஓவிய விமர்சகர் சொன்னதுபோல அந்த நிழல் மரம் வான்காவை பலிகொள்ளாமல் அமையாது. அதுவே அவர் தற்கொலை செய்துகொள்ள காரணமாகியது.

ஒரு காதல் கதை இலக்கியமாவது அது பரபரப்பானஅடுத்தது என்ன?’ வகை கதையாக இருக்கும்போது அல்ல. அதுநம்பகமானகதையாக இருக்கும்போது அல்ல. அனைவரும் அறிந்த வாழ்க்கைநிகழ்வுகள் அதில் இடம்பெறும்போது அல்ல. திகைக்க வைக்கும் திருப்பங்களும் உச்சங்களும் நிகழும்போது அல்ல. அவை அனைத்துமே மில்ஸ் ஆண்ட் பூன் நாவல்களின் இயல்புகள்.

காதல் கதை இலக்கியமாவது இரண்டு நிலைகளில்தான். அ. அது மொத்த மானுட உறவின் சிக்கல்களையும் காதலென்னும் உறவினூடாகச் சித்தரிக்கையில். ஆ. அது மானுடனின் என்றுமுள்ள தவிப்ப்பைச் சொல்ல காதலை பயன்படுத்தும்போது. இலக்கியத்தின் இரண்டு பேசுபொருட்களின் உருவகமாக காதல் அங்கே அமைந்துள்ளது.

முந்தைய கட்டுரைகமல்ஹாசனுடன் ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைதஞ்சை பிரகாஷ் இலக்கிய வட்டம் தஞ்சை- மூன்று நிகழ்வுகள்