மைத்ரி – லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்

அஜிதனை நான் முதலில் பார்த்தது பல வருடங்களுக்கு முன்னர் ஊட்டி காவிய முகாமில், அப்போதுதான் அருண்மொழியை முதலில் பார்த்ததும்.

நானும், அடர் நீலச் சதுரங்கள் கொண்ட வெண் பருத்தி புடவையில் அருண்மொழியும் குருகுலத்தின் உணவுக் கூடத்திற்கு செல்லும் வழியில் இருந்த ஒரு மண் மேட்டில் அமர்ந்திருந்தோம், உணவுக் கூடத்திலிருந்து நண்பர்களுடன் மேலேறி வந்து கொண்டிருந்த நீங்கள் அருணாவின் முதுதில் ஒரு தட்டு தட்டிவா நேரமாச்சுஎன்றபடியே கடந்து சென்றீர்கள். அடி கொஞ்சம் பலமாக விழுந்துவிட்டது. அருணாஇதை பிடிங்கஎன்று என்னிடம்  கைப்பையை  கொடுத்துவிட்டு எழுந்து, உங்களை தொடர்ந்து வந்து பலமாக ஒரு அடி முதுகில் வைத்துஎதுக்கு ஜெயன் அடிச்சே’? என்றார்கள். நீங்கள் திரும்பி’ ’இல்லடி செஷனுக்கு நேரமாச்சு அதான்என்றதும்அதுக்கு? அடிப்பியா? வலிக்குது தெரியுமா? என்று  சொல்லிக் கொண்டிருக்கையில் இருவருக்கும் இடையில் எங்கிருந்தோ அஜிதன் வந்து நின்றான்.  (வெண்முரசில் இதுபோலவே பீமனும் இடும்பியும் பேசிக்கொண்டிருக்கையில் கடோத்கஜன் இருவருக்கும் இடையில் வந்து நிற்பான்). பின்னர் விஷ்ணுபுரம் விழாக்களில் சில சமயம் அஜிதனை பார்த்திருக்கிறேன்

அஜிதன் எடுத்த குறும்படத்தை பார்த்தபோது அந்த அஜிதனா என்று பிரமிப்பாக இருந்தது. சென்ற மாதம் ஒரு கூடுகையில் தத்துவ விளக்கங்கள் குறித்து உரையாற்றிய அஜிதன் அதுவரை நான் பார்த்திருந்த, நான் கொஞ்சமாக வேணும் அறிந்திருந்த அஜிதனே இல்லை.

அஜிதன் அன்று பேசியவை அனைத்தும் மிகப்பெரிய விஷயங்கள் என்பது மட்டும்தான் எனக்கு புரிந்தது. அவற்றை பேசுகையில் அஜிதனின் உடல்மொழியும் ஆச்சர்யமூட்டியது மிக மிக சாதாரணமாக, எளிய அன்றாட நிகழ்வுகளை நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது போல தான் அத்தனை தீவிரமான விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தான்.

இளைஞர்கள் முக்கியமான, தீவிரமான விஷயங்களை பேசிக் கேட்கையில் நான் பிறரைக் காட்டிலும் மிக அதிகம் மகிழ்ச்சியடைவேன். ஏனெனில் ஏழாயிரம் இளைஞர்கள் படிக்கும் கல்லூரியில் பல வருடங்களாக பணியிலிருக்கிறேன். தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டு கொஞ்சம் அதிகப்படியான அறிவுடன் இருப்பவர்கள் என்றுகூட விரல்விட்டு எண்ணிச் சொல்லக் கூடிய அளவில்தான் சிலர் இருக்கிறார்கள். எனவே அஜிதனை போன்ற அரிதினும் அரிய இளைஞர்கள் எனக்களிக்கும் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் அளப்பரியது.

ஆனால் மைத்ரியில் கண்ட அஜிதன் முற்றிலும் வேறு. ஹரனின் பேருந்து பயணத்தின் தொடக்கத்திலேயே அஜிதன் என்னும் அரிய  படைப்பாளியை கண்டுகொள்ள முடிந்ததுஹரனின் பயணம் வாசிப்பவர்களின் பயணமும் ஆகிவிடுகிறது.

உடல் சூட்டை இருக்கைக்கு அளித்து அதை வாழ்விடமாக்க வேண்டும் என்னும் வரியில் இது நான் முன்பு அறிந்திருந்த அஜிதனல்ல என்று மீண்டும் எனக்கே சொல்லிக்கொண்டேன் .

மிக புதிய நிலப்பரப்பில் நாவல் விரிவதால் அக்கதையுடன் இன்னும் அணுக்கமாகி கதையையும் நிலப்பரப்பையும் சேர்ந்தே ரசிக்கவும் முடிந்தது அது மேலும் சுவாரஸ்யம் ஆக்கிவிடுகிறது வாசிப்பனுபவத்தை.

முழுவதும் வாசித்து முடித்த பின்னர் சில நாட்கள்தான் அந்த பயணமும் அக்கதை நிகழ்வதும் என்பதை நம்ப முடியவில்லை. பல நூறு வருடங்களுக்கான பயணம் அது. கதையை முழுக்க சொல்லி இன்னும் வாசிக்காதவர்களுக்கு வாசிப்பின்பத்தை குலைக்கவிரும்பவில்லை.

ஹரனை பசுமைப் பெருக்கும் பெண்மைப்பெருக்கும் தொடர்ந்து சூழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. கெளரியும், அன்னையும், ரிது பெரியம்மாவும், சிவப்பு ஆடை அணிந்த சிறுமிகளும், மணப்பெண்ணும் மைத்ரியும் இன்னும் பலருமாக.

உணவை, கட்டிடங்களை, மனிதர்களை, நிலப்பரப்பை, வசந்த காலத்தை, காதலை, உறவுகளை, பிரிவை, வலியை என்று  ஹரன் வாழ்வை முழுக்க அறிந்துகொள்ளும் அந்த அழகிய அரிய பயணத்தில் அஜிதன் எங்களையும் கைப்பிடித்தும் கச்சரில் ஏற்றியும், பேருந்திலும், ஜீப்பிலும் கூட்டி செல்கிறான்.

பைன் மரங்களின் ஊசியிலை சருகுகளும், கோன்களும் நிறைந்த அந்த பாதை வழியே சோனியாவின் கடிவாளக் கயிற்றை பிடித்துகொண்டு ஹரனையும் அவன் மொத்த வாழ்வையும் அத்தனை அழகாக அவள் எடுத்துச் செல்கிறாள்மறக்க முடியாத பயணம் எனக்கும்.

அன்னையை நினைத்துக் கொள்கையில் ’’தூய அன்பென்னும் திரைக்கு அப்பால் தன்னை மறைத்து வைத்திருந்தார்’’ என்னும் வரிகள்  கண்ணீர் விடச் செய்தன.

குழந்தை போன்ற உடல் கொண்ட தெய்வ வடிவங்களைகாதில் கேட்கும் இசையை, புதிய உணவை, கண்கூசும் பின்னொளியில்  நிழலுருவாக  தெரியும் கோவிலை சொல்லுகையிலும். இளமைக்காலத்தை சொல்லிக்கொண்டிருக்கும் மைத்ரியை  மேய்ச்சல் நிலமகள் என்கையிலும் அஜிதன் என்னும் திரைவிலகி  நீங்கள் தெரிந்தீர்கள்.

மைத்ரி முழுவதுமே எனக்கு தனித்த பிரியத்தை உண்டாக்கி இருக்கும் படைப்பு தான் எனினும் ஹரன் நினைப்பதுபோல் ’’ஒளியாலான, மனதில் என்றும் தங்கிவிடும் தருணமாக’’ எனக்கிருப்பது இருவரும் திரும்பும் வழியில் அந்த உன்னத  பின்மதியவேளையில் பொன்மழையின் ஆயிரம் ஊசிகள் புல்வெளியில் பெய்திறங்குவதை பார்த்தபடி குளிரில் இனிப்பை கொரித்துக்கொண்டு  நெருங்கி அவர்கள் இருவரும் அமர்ந்திருக்கும்  அந்த சித்திரம்தான்  கூடவே .ஃபெர்ன்களின் அந்த சுருண்ட இளம் குருத்திலை உணவும், அந்த புக்யால் புல்வெளியும்.

மைத்ரிக்கு ஹரன் கஸ்தூரி மிருகு, மாயப்பொன்மான். அவனுக்கு அவள் வனதேவதை ஜீதுவைப்போல  அந்த 3 நாட்கள் ஹரனுக்கும் பலநூறு வருட வாழ்வு. அந்த நினைவுகளுடன் அந்த பெரு வலியுடன் ஹரன் வாழ்ந்துவிடுவான். அவனுக்கான மீதமிருக்கும் வாழ்வை என்றும், மைத்ரி மற்றுமொரு ரிது என்றும் எனக்கே நான் சொல்லிக்கொள்கிறேன்.

கோட் பைக்குள் ஹரனறியாமல் மைத்ரி வைத்திருந்த  வாடியிருந்தும் நிறம் இழக்காமலிருந்த  புல்வெளியின் பலவண்ண மலர்கள் மைத்ரி அவனுக்கு மீட்டுக்கொடுத்த கெளரி 

இந்த வாசிப்பனுபவம் எனக்கும் ஒரு பெருங்கனவுதான். எழில் நிறைந்த கனவு, என்றென்றும் மனதில் எஞ்சி நிற்கும் கனவு.

அன்பும் ஆசிகளும் அஜிதனுக்கு

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைகாடையூர் வெள்ளையம்மாள்
அடுத்த கட்டுரைதேவநேயப் பாவாணர், சந்திரசேகர சரஸ்வதி, மொழியியல்