அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
நடு நிசியில் தான் பொன்னியின் செல்வன் டீசர் லான்ச் நிகழ்ச்சியில் நீங்கள் பேசியதை கேட்டேன். சிலிர்ப்பாக இருந்தது.
பல வருடங்களாக இங்கு ஏராளமான எழுத்தாளர்களின் பெயர் கூட நில்லாமல் மறைந்திருக்கிறது. இன்றும் சுந்தர ராமசாமி என்ற பெயரை பலர் அறிந்திலர். புதுமைப்பித்தன் சிகிச்சைக்கு கூட பொருளின்றி துயர்ப்படும் நிலை இருந்தது. அப்படியிருக்க, இன்று நீங்கள் ஒரு எழுத்தாளராக அம்மேடையில் நின்று பேசினீர்கள். மனதில் தோன்றியது ஒன்றுதான். பகீரதன் தன் முன்னோர்களுக்கு நீர்க்கடன் செய்ய கங்கையை பல காலம் தவமிருந்து உலகிற்கு கொணர்ந்தான். இன்று நீங்கள் செய்ததும் அதை தான்.
நீங்கள் அங்கு ஜெயமோகனாக நிற்கவில்லை, மொத்த எழுத்தாளர்களின் ஓர் வடிவாக நின்றிருந்தீர்கள். விஷால் ராஜா தங்களைப் பற்றி எழுதிய கட்டுரையில் ஒரே நேரத்தில் நீங்கள் எளிதில் அணுகமுடிகிற அதே சமயத்தில் நெருங்கவே முடியாத ஆளுமையாக இருப்பதை சுட்டிக்காட்டி இருந்தார். அது மீண்டும் மீண்டும் ஊர்ஜிதமாகிக்கொண்டே வருகிறது. சாணி குழைத்து வைத்தால் நம்மருகே அசையாமல் அமர்ந்திருக்கும் பிள்ளையார், சற்று உற்று நோக்கினால் வியாசன் சொல்ல தந்தமுடைத்து எழுதும் பேராசான். வெண்முரசு மற்றும் தமிழ் விக்கி இவ்வெற்றியை விட மிகப்பெரியவை. ஆனால் பொன்னியின் செல்வன் பொதுமக்களிடம் விரைவில் சென்றடைகிறது. இன்று நீங்கள் பேசிய அந்த ஏழு நிமிடங்கள் மூலம் அவ்வளவாக வாசிப்பு பழக்கம் இல்லாத பலர் வெண்முரசின் மீதும் தமிழ் விக்கியின் மீதும் திரும்ப வாய்ப்பிருக்கிறது.
பொது மேடைகளில் பேசுகையில் நீங்கள் முதலிலேயே அவையின் கவனத்தை பெற்றுவிட அவர்களுக்கு அறிமுகமில்லாத பெயருடன் தொடங்குகிறீர்கள் என்று நினைக்கிறேன். முதல் வார்த்தையே பாலா சாம்ராஜ்யம் என்று ஆரம்பித்தீர்கள். ஒரு பொறியியல் கல்லூரியில் ரோஜர் பென்ரோஸ் என்று தொடங்கியதாக சொன்னீர்கள். இன்றே பலர் பாலா சாம்ராஜ்யம் மேல் ஆவல் கொண்டிருப்பர்(நான் உட்பட). ‘வெந்து தணிந்தது காடு‘ டீசரில் தங்களின் பெயர் முதலில் வந்தது. சினிமா அனைவரிடமும் எழுத்தாளரை முன்னிறுத்தும் ஊடகமாக திகழ்கிறது. எழுத்துலகைப் பற்றி சொல்லாப் பிழை உங்களால் அகல வேண்டும்.
நன்றி
அன்புடன்
சீரா
***
அன்புள்ள ஜெ
பொன்னியின் செல்வன் டீசர் வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசியது சிறப்பாக இருந்தது. மிகக்குறைவான நேரத்தில், மிகச்சுருக்கமாகவும் ஒன்றும் விட்டுப்போகாமலும் பேசினீர்கள். பொன்னியின் செல்வன் ஏன் சினிமாவாக எடுக்கப்படவேண்டும், அதன் விளைவு என்னவாக இருக்கும், அதை திரைக்கதையாக ஆக்குவதன் சிக்கல்கள், அது சினிமாவாக ஆனால் என்ன கூடுதலாகச் சேரும் ஆகிய அனைத்தும் அந்த ஆறு நிமிட உரையில் இருந்தன. வாழ்த்துக்கள்
செல்வ பிரபாகரன்
***
அன்புள்ள செல்வ பிரபாகரன்
ஏழு நிமிட உரை என்பது இன்று உலகளாவ புகழ்பெற்று வரும் ஒன்று. ஏழுநிமிட உரைகளை ஆற்றுவதற்கு சில நெறிகள், சில உத்திகள் உள்ளன.
ஏழுநிமிட உரைக்கான ஒரு பயிற்சி முகாம் நடத்தினாலென்ன என்னும் எண்ணம் உள்ளது. பார்ப்போம்
ஜெ