அசடனும் ஞானியும்

ஓர் உரையாடலில் நித்யா சொன்னார், சராசரித்தனத்துடன் இடைவெளியில்லாத மோதலையே ஞானத்தின் பாதை என்கிறோம் என. நம் உடல், நம் மூளை ,நம் சூழல் ஆகிய அனைத்தும் நம்மைப் பிறரைப்போல் ஆக்குகின்றன. ஆகவே அனைவரும் வாழும் சராசரி வாழ்க்கை ஒன்றையே நாமும் வாழ்ந்தாகவேண்டும்.

நித்யா

ஆனால் முமுட்சு என்பவன்,சராசரியில் ஒருவனல்ல. சராசரி மனிதன் வாழ நினைக்கும்போது வாழ்வை அறிய நினைப்பவன் அவன். சராசரி மனிதன் இன்பத்தை நாடும்போது அறிதலின் பேரின்பத்துக்காக அனைத்து இன்பங்களையும் கைவிடத் துணிந்தவன் அவன். அவனுக்குத்தடையாக இருப்பது அவனைச்சுற்றியுள்ள சராசரித்தனம். சராசரி மனிதர்கள் உருவாக்கி வைத்துள்ள சராசரி அமைப்புகள், சராசரிகளுக்கான பழக்கவழக்கங்கள், சராசரிகளுக்கான நம்பிக்கைகள்.

அதனுடன் முரண்பட்டு,உரசி உதிரம் கொட்டியபடிதான் அவன் தன் பயணத்தை ஆரம்பிக்கிறான். வித்தியாசமாக இருப்பதனாலேயே அவன் பழிக்கப்படலாம், தூக்கிலேற்றவும்படலாம். ஒருகட்டத்தில் முழுக்க முழுக்க அவன் தன்னை ஒதுக்கிக்கொள்கிறான். சரசரிகளில் இருந்து முழுமையாக மேலேறிக்கொண்டபின் குனிந்துபார்ப்பவனாக ஆகிவிடுகிறான்.

ஆனால் தனக்குள் இருக்கும் ஒரு சராசரித்தனத்துடன் அவன் மோதியாகவேண்டும். அவன் மூளை,சராசரிமூளைதானே? அதுவும் நல்ல சாப்பாட்டுக்கு ஏங்கலாமே. பொறாமையும் கோபமும் தனிமையும் கொள்ளலாமே. அந்தப் போராட்டம் இன்னும் உக்கிரமானது. அதற்காகவே தியானமரபில் ஒருவன் தன்னைக் கவனிக்கவும் தன் சராசரித்தனத்தை விலக்கவும் பயிற்றுவிக்கப்படுகிறது. அதன் பகுதியாகவே அவன் புறவாழ்க்கையிலும் அசாதாரணனாக இருக்கும்படி கற்பிக்கப்படுகிறது. மொட்டைபோட்டுக்கொண்டு அல்லது சடை வளர்த்துக்கொண்டு, கோவணம் உடுத்துக்கொண்டு குகையில் வாழச்செல்கிறான் அவன்.

அந்த உரையில் நித்யா மேலும் சொன்னார் ‘ஒருவன் பிறப்பிலேயே அசாதாரணமான சில அம்சங்களுடன் இருந்தால் சராசரித்தனத்துடன் மோதுவது எளிதாகிறது. பேரழகர்களும் பெரும் குரூபிகளும் ராட்சதர்களும் எல்லாம்  சட்டென்று அந்த வழியில் வெகுதூரம் சென்று விடுவார்கள்’ அவர் மேலும் சொன்னது,அன்று என்னை மிக உலுக்கிய ஒரு வரி ‘சிலர் இயல்பிலேயே மூளைச்சிக்கல்கள் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நம்முடைய கணிப்பில் குறைமூளைகள்.  அவர்கள் பலர் நம்மைவிட மிக எளிதாக தியானத்தின் படிகளில் செல்லமுடிந்திருக்கிறது’

அதை அவர் விளக்கினார். நம்முடைய மூளை சராசரியானது. கீழே விழுந்த நீர் போல எல்லா பக்கமும் சிதறிப்பரவுவது. அதற்கான ஆற்றலும் அதற்கான அமைப்பும் பிறப்பிலேயே இல்லாத மனிதர்கள் உண்டு. அவர்களின் மூளை ஒரே திசையில் முழுமையாகவே பாய்ந்து செல்லும். அந்தத் தளத்தில் மிக அபாரமான ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.  அதில் பிறவி மேதைகளாக ஆகக்கூடும். அது பெரும்பாலும் முழுமையான தர்க்கம் தேவைப்படாத துறையாகவே இருக்கும். இசை, ஓவியம் போன்ற கவின்கலைகள், கணிதம்.

ஒரு சிறு இசைத்துணுக்கைக் கேட்டாலே ராகங்களை அடையாளம் காணும் ஒருவர் குருகுலத்தில் இருந்தார். அவரால் சோறு வேண்டும் என்று கேட்க முடியாது. குருகுலத்தின் சுவர்களில் அற்புதமான ஓவியங்களை வரைந்த ஓர் இளைஞர் இருந்தார். அவரால் சாதாரணமாக ஒரு கேள்விக்குப் பதில் சொல்லிவிட முடியாது. அவர்களின் திறமை முழுக்க ஒரே புள்ளியில். ஒரு சிறு துளைவழியாக மொத்த ஏரியும் பீறிடும் ஆற்றலே அவர்களிடம் தெரிந்தது.

பரவ முடியாத காரணத்தாலேயே குவிந்த மூளைகள். அந்த மனக்குவிதலை உக்கிரமான தியானம்மூலமே நாம் அடைய முடியும். அவர்கள் மிக இயல்பாகவே ஆன்மீகமான பயணத்தை மேற்கொள்ளமுடியும். அவர்கள் தங்கள் சராசரித்தனத்துடன் போராடி அக ஆற்றலில் பெரும்பகுதியை வீணடிக்கவேண்டியதில்லை. இந்து மரபின் சில தளங்களில் எல்லைக்குட்பட்ட அளவில் கஞ்சா போன்றவற்றை அதற்குப் பயன்படுத்துவதும் அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

பி.கெ.பாலகிருஷ்ணன்

மலையாளச் சிந்தனையாளர் பி.கெ.பாலகிருஷ்ணன்,நாராயணகுரு பற்றி எழுதிய தொகைநூலில் தீர்க்கதரிசிகள் என்ற ஆளுமைக்கூறு பற்றிக் கூர்மையான சிலவிஷயங்களைச் சொல்லிச்செல்கிறார். ஒன்றில் மட்டும் முழு உயிர்ச்சக்தியும் குவிந்தவர்கள்.  அதனாலேயே சராசரித்தன்மையை முற்றிலுமாக இழந்தவர்கள். தங்கள் மெய்ஞ்ஞானத்தை நிறுவத் தங்கள் வாழ்க்கையை களபலியாகக் கொடுக்கிறார்கள். தியாகம் மூலம் தங்கள் கருத்துக்களுக்கு அடிக்கோடிடுகிறார்கள்.

அவர்களுடையது ஒரு வகை உளக்கோளாறு என்று சொல்லத்தக்கதே என்கிறார் பி.கெ.பாலகிருஷ்ணன். ஒரு வகை மிகைவிருப்பு [அப்ஸெஷன்] போல அவர்களிடம் சில விஷயங்கள் கூடிவிடுகின்றன. அவற்றை அவர்களால் தவிர்க்கமுடியாது. உண்மையில் அவர்களை விடப்பெரியது,அவர்களிடம் கூடும் அந்த விஷயம். அது அவர்களைத் தூக்கிச்செல்கிறது. அதாவது ஏசுவின் தரிசனம்,ஏசுவில் இருந்து வெளிப்பட்டது அல்ல. ஏசு அந்த தரிசனத்தால் இயக்கப்பட்டார், அடித்துச் செல்லப்பட்டார். காந்திக்கும் நாராயணகுருவுக்கும் எல்லாம் இது பொருந்தும் என்கிறார் பாலகிருஷ்ணன்.இந்த அம்சம் அவர்களின் இளமையிலேயே அவர்களின் ஆளுமையாகவே உருவாகிவந்துவிடுகிறது என்கிறார்.

நிகாஸ் கஸன்ட் ஸகீஸின் ‘கிறிஸ்துவின் கடைசி சபலம்’ நாவலை பி.கெ.பாலகிருஷ்ணனின் கருத்துக்களுடன் இணைத்து வாசித்திருக்கிறேன். பாலைவனத்தில் யகோவாவுக்குப் பலியாக ஆடுகளைக் கொண்டு சென்று விடுவது சமேரியர் வழக்கம். கழுத்தில் கொஞ்சம் வைக்கோல் கட்டிவிடுவார்கள். தன் உணவுடன் கொதிக்கும் பாலையில் வழிதவறி அலைந்து அது இறந்து உலரும்.  ஏசுவை அந்தக் களபலியாக அவர் அடையாளப்படுத்துகிறார். அதை ஏசுவே உணர்வதாகச் சொல்கிறார்

நிகாஸ் கசந்த்ஸகிஸ்
நிகாஸ் கசந்த்ஸகிஸ்

அந்நாவலின் ஆரம்ப அத்தியாயங்களில் வெறும் தச்சன்மகனாக இருக்கும் ஏசுவை அவரது தரிசனம் வந்து ‘கவ்விக்கொள்வதை ‘ உக்கிரமான மொழியில் சித்தரிக்கிறார் கசண்ட் ஸக்கீஸ். தவளையைத் தன் கூரிய உகிர்களால் கவ்விக்கொண்டுசெல்லும் பருந்து போல அந்த ஞானம் ஏசுவின் மூளையைக் கவ்விக்கொண்டு செல்கிறது. அந்த நகங்களின் ரத்தப்பிடியில் அவரது மூளை துடிக்கிறது. தப்ப விழைகிறது. முடிவதில்லை. அவர் தன்னை அதற்கு ஒப்புக்கொடுக்கிறார்.

ஆம், நோய்நிலை என்பதும் குறைநிலை என்பதும் சராசரித்தனத்தில் இருந்து விலகுவதனாலேயே நல்வாய்ப்பு ஆகலாம். ஞானிகளும் மேதைகளும் அந்த நல்வாய்ப்பால் உருவானவர்களாக இருக்கலாம். சிந்திக்கும்போது ஒருவகை அசௌகரியத்தை நமக்கு அளிக்கும் உண்மை இது

தஸ்தயேவ்ஸ்கி

[   2  ]

நெடுங்காலமாகவே இந்த நிலை, இயல்பான மெய்நிலை, சிந்தனையாளர்களைக் கவர்ந்து வந்துள்ளது. நம்முடைய புராணங்களில் , தொன்மங்களில் இந்தக்கதைகளை நிறையவே காணலாம். எட்டுக்கோணல்கள் உள்ள உடல் கொண்ட அஷ்டவக்ரர் என்ற ஞானியின் கதை ஓர் உதாரணம். ஏன் காளிதாசனின் கதையிலேயேகூட அசடனாகிய அவனுக்குக் காளி தென்பட்டு நாவில் அகரம் எழுதிக் காவியகர்த்தனாக ஆக்கியதாகச் சொல்லப்படுகிறது. பலநூல் கற்றுத் தவம்செய்தும் பண்டிதருக்குத் தென்படாத வாக்தேவி அசடனுக்கு முன் அவளே வந்து நின்றாள்.

மேலைநாட்டு மரபில்  கிறித்தவ மரபிற்கு முன்னரே எளிமையை ஞானத்துக்கான பாதையாகக் காணும் வழக்கம் இருந்ததுண்டு. கிறிஸ்தவ மதம் உருவானபோது அதிலிருந்து விலகி நின்ற ஞானவாத மரபுகள் [நாஸ்டிசம்] எளிமையையும், துறவையும்,அறியாமையையும் முக்கியமான ஆன்மீகப்பண்புகளாக முன்னிறுத்தின. அறிவு என்பது சாத்தானின்  முக்கியமான ஆயுதம். அறிதல்,மனிதனை தன்னை நோக்கிக் குவியச்செய்து இறைவனில் இருந்து பிரிக்கிறது. ஆகவே அறியாமை என்பது இயல்பாகவே இறைவனை நோக்கிக் கொண்டுசெல்லக்கூடியது. ’ஆன்மீகமாக அசடாக இருத்தல்’ என்பது முக்கியமான ஒரு பண்பாக இவர்களால் முன்வைக்கப்பட்டது

பின்னாளில் ஞானவாதக் கிறித்தவத்தின் பல கூறுகளை கத்தோலிக்க மதம் உள்ளிழுத்துக்கொண்டது. அதற்குள் தியானமையங்களுக்குள் ஒதுங்கிவாழும் வாழ்க்கையை முன்னிறுத்தும் போக்குகள் உருவாயின. பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகள் இந்த மதவிவாதங்கள் உச்சத்தில் நிகழ்ந்த காலகட்டம். விரிவான ஒரு வரலாற்றுப்பின்னணியில் வைத்தே அதைப் புரிந்துகொள்ளமுடியும்.  ஒருபக்கம் கத்தோலிக்க திருச்சபை ஒரு உலக வல்லரசாக ஆகிவிட்டிருந்தது. அதன் பிரம்மாண்டமான அமைப்பில் மானுடஞானமே கட்டுப்படுத்தப்பட்டது . இறையியல் ஒரு பெரும்சக்தியாக எழுந்து நின்றது

இந்த பிரம்மாண்டம் கிறிஸ்துவுக்கு எதிரானது என்றும் கிறிஸ்தவ மெய்மையை இந்த அமைப்புகளின் விரிவிலும் சிக்கலிலும் இருந்து மீட்கவேண்டும் என்றும் கிறித்தவ அறிஞர்களில் ஒரு சாரார் எண்ணினார்கள். இந்த அதிகாரத்தையும் ஞானத்தையும் உதறிவிட்டு ஓடும் பல்வேறு கிறித்தவ மதக்குழுக்கள் இக்காலகட்டத்தில் உருவாயின. அவற்றில் பல இன்றும் நீடிக்கின்றன.  துறவு முன்னிறுத்தப்பட்ட இந்த சபைகளில் பொதுவாகவே அறிவுக்கு எதிரான மனநிலை நிலவியது. ஆகவே அசட்டுத்தனம் புனிதமானதாகக் கருதப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டு ருஷ்யாவில் இந்த சிந்தனைக்கொந்தளிப்பு பெரிய அளவில் இருந்திருக்கிறது. அலெக்ஸி தல்ஸ்தோயின் சக்ரவர்த்தி பீட்டர் என்ற பெருநாவலில் பதினாறாம் நூற்றாண்டு ருஷ்யாவில் அரசமதமான கத்தோலிக்கம் [ருஷ்ய பழஞ்சபை] ஒருபக்கம் இருக்க,அதற்கு மாற்றாக அறிவு எதிர்ப்பு நோக்கும் துறவுப்போக்கும் கொண்ட உதிரி கிறித்தவக்குழுக்கள் எப்படி உருவாகிக்கொண்டிருந்தன, அவற்றைக் கத்தோலிக்க அரசமதம் எப்படி வேட்டையாடியது என்ற சித்திரத்தை நாம் காணலாம்.

தல்ஸ்தோய்,தஸ்தயேவ்ஸ்கி இருவருக்குமே இந்த ஈடுபாடு இருந்திருக்கிறது. இந்தச்சபைகளைப்பற்றி அவர்கள் ஆரய்ந்திருக்கிறார்கள். தல்ஸ்தோய்,குறுகிய காலம் அப்படி ஒன்றில் ஈடுபட்டிருக்கிறார். போரும் அமைதியும் நாவலில் பியர் அப்படிப்பட்ட ஒரு குழுவில் ஆவேசமாக ஈடுபட்டு மெல்லமெல்ல நம்பிக்கை இழப்பதன் சித்திரம் வருகிறது. அது தல்ஸ்தோயின் சொந்த வாழ்க்கையின் சித்திரமேயாகும்.

தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகளில் இந்த நோக்கு என்றுமே இருந்துவந்துள்ளது. அறிவின்மூலம் அல்லாமல் அறியாமை மூலம் கிறிஸ்துவை இன்னும் அதிகமாக நெருங்கமுடியும் என்று அவர் எண்ணியதுபோலத் தெரிகிறது. ஒழுக்கவாதியை விடப் பாவத்தின் விளைவான துயரத்தையும் புறக்கணிப்பையும் அனுபவித்தவன் இன்னும் எளிதாகக் கிறிஸ்துவைப் புரிந்துகொள்ளமுடியும் என்று அவரது பல கதாபாத்திரங்கள் காட்டுகின்றன.

உதாரணமாக அவரது ஆரம்பகால நாவலான ’நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும் ’[ The Insulted and Humiliated, 1861].அதன்  இரு முக்கியமான கதாபாத்திரங்களை எதிரெதிர் தன்மை கொண்டவர்களாகக் காட்டியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. இளவரசன் அலெக்ஸி அசட்டுத்தனமும் அதன் விளைவான தெய்வீகத்தன்மையும் கொண்டவனாக இருக்கிறான். அவன் தந்தை இளவரசர் வால்கோவ்ஸ்கி அதிபுத்திசாலியாக- அதன் விளைவான தீமை கொண்டவராக இருக்கிறார்.

குற்றமும் தண்டனையும் [1865 ]நாவலில் வரும் மர்மல்டோஃப் என்ற குடிகாரக் கதாபாத்திரம் ஒருவகையில் இங்கே இணைத்துப்பார்க்கவேண்டியது. அவன்,அசடன்;குடிகாரன். ஆனால் ஆன்மாவில் நல்லியல்புகள் கொண்டவன். அவனுடைய சாராயக்கடைப் பிரசங்கத்தில் தன்னையே ஏசு அதிகம் விரும்புவார் என்று அவன் சொல்கிறான். ஆனால் அந்நாவலில் கதைநாயகனாகிய ரஸ்கால்நிகாஃப் சிந்தனையாளன். சிந்தனை அவனைப் பாவம் நோக்கிக் கொண்டுசெல்கிறது. கள்ளமில்லாத அன்பு அவனை மீட்கிறது.

நெடுங்காலமாகவே தஸ்தயேவ்ஸ்கியை இந்த அடிப்படை வினா தொடர்ந்து வந்திருப்பதைக் காணலாம். பாவத்தையும் குற்றத்தையும் பற்றி எழுதியவர் அவர்.அவரது பாவிகளும் குற்றவாளிகளும் எப்போதும் அதிபுத்திசாலிகள். உதாரணமாகக் கரமசோவ் சகோதரர்கள் [1878 ]நாவலில் வரும் குற்றத்தன்மை கொண்டவர்களான திமித்ரி, இவான் இருவருமே இருவகையில் புத்திசாலிகள். அவர்களின் தந்தையும் நுட்பமான குற்றவாளியுமான தந்தை கரமஸோவ் அதிபுத்திசாலி.

ஆகவே, புத்தியில்லாதவர்கள் இயல்பாகப் பாவத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டிருக்கிறார்களா என்று அவரது சிந்தனை சென்றிருக்கலாம். குற்றமும் தண்டனையும் நாவலில்கூட ரஸ்கால்நிகாஃப் அவன் தங்கியிருக்கும் விடுதியின் உரிமையாளப்பெண்ணைப்பற்றிச் சொல்லும்போது ‘அறிவற்றவள், ஆகவே உறுதியான கற்புள்ளவள்’ என்ற ஒரு வரி வந்து விழுகிறது. அறிவு ஆசையைப் பெருக்குகிறது. அகந்தையை நிறுவுகிறது. அந்தவழி பாவத்துக்கானது.

ஹெர்மன் ஹெஸ்சி

இந்த எதிரீடுகளைக் கரமஸோவ் சகோதரர்கள் நாவலில் தஸ்தயேவ்ஸ்கி விரிவாகச் செய்து பார்த்தார். தந்தை மற்றும் சகோதரர்களின் பாவத்தன்மைக்கு எதிராக அல்யேஷாவைக் கொண்டுசெல்லும் ஆற்றல் என்பது அவனுடைய களங்கமின்மைதான். பாவத்தைச் செய்யும் ஆற்றல் இல்லாத தன்மை என அதைச் சொல்லலாம். அந்நாவலின் முக்கியமான கதாபாத்திரமான ஃபாதர் சோஷிமா அந்த ஆற்றலினாலேயே புனிதராக ஆனவர்.

1877ல் தஸ்தயேவ்ஸ்கி,’அப்பாவியின் கனவு ’[Dream of a Ridiculous Man] என்ற சிறுகதையை எழுதினார். இக்கதை அவரது மகத்தான ஆக்கமாகிய கரமஸோவ் சகோதரர்கள் எழுதப்பட்ட அதே காலகட்டத்தில் எழுதப்பட்டிருப்பதனாலேயே முக்கியமானது. பிறரால் அப்பாவி என்று எண்ணப்படும் ஒருவன் உலகின் தீமையால் மனம் வெறுத்து இறக்க முடிவெடுக்கிறான். தீமையற்ற ஓர் உலகைக் கனவு கண்டு எழுகிறான். தஸ்தயேவ்ஸ்கியின் அறிவிக்கை போலவே ஒலிக்கும் கதை இது.

’நான் ஒரு அப்பாவி. அவர்கள் இப்பொழுது என்னைப் பைத்தியக்காரன் என்று கூறுகிறார்கள். நான் எப்பொழுதும் போல் அவர்களுக்குக் கோமாளித்தனமாகத் தோன்றாமலிருந்தால் அது எனக்குக் கௌரவமாக இருக்கும் – ஆனால் நான் இனிமேல் அதைப் பொருட்படுத்துவதில்லை – அவர்கள் என்னைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தால் கூட இப்பொழுது அவர்கள் எல்லோருமே எனக்கு மிகவும் வேண்டியவர்கள் – ஏதோ ஒன்று அப்பொழுதுதான் அவர்களை எனக்கு மிகவும் நெருக்கமாகச் செய்கிறது என்பது உண்மையே. நான் அவர்களோடு சேர்ந்து சிரிப்பேன் – என்னைப் பார்த்து அல்ல, அதாவது அவர்களை நான் நேசிப்பதால் – அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது நான் மிகவும் வருத்தமடையாதிருந்தால் நானும் சிரிப்பேன். உண்மை என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை, ஆனால் அது எனக்குத் தெரிகிறது. ஓ! உண்மையைத் தெரிந்த ஒரே ஒரு நபராக இருப்பது எவ்வளவு கஷ்டமானது!’

என்று ஆரம்பிக்கும் அந்தக்கதை தஸ்தயேவ்ஸ்கியைச் சிந்திக்கச்செய்துகொண்டிருந்த ‘உன்னதமான அசடு’ என்ற கருத்து,எப்படி வலுவாக வளர்ந்து வந்துள்ளது என்பதற்கான ஆதாரம். தன்னை அவர்கள் அசடு என நினைப்பது அவனுக்குத் தெரியும். அந்த இடத்தை அங்கீகரித்துக்கொள்வதன் வழியாக அவன் இயல்பாகவே அந்த உரசல்களைத் தவிர்க்கிறான். அறிஞர்கள் அறிந்த உண்மைகள் உண்டு. ஆனால் அப்பாவி மட்டுமே அறிந்த உண்மை என்பது இன்னும் நுட்பமானதாக இருக்குமா என்ன?

1868ல் தஸ்தயேவ்ஸ்கி ’அசடன் ’[ The Idiot] நாவலை எழுதினார். குற்றமும் தண்டனையும் நாவலுக்குப் பின்னர். இதில் அவர் பாவம் செய்யத் தெரியாத அசடு ஒருவனை உருவகம் செய்தார். அவரது சொற்களில் ‘நேர்நிலையான முட்டாள்தனம் கொண்டவன்’. மனித அகஆற்றலில் பெரும்பகுதி வெறுமே இச்சைகளுடன் போராடி வீணாகிறது. அந்த சவாலில் இருந்து பிறவியிலேயே விடுவிக்கப்பட்டுவிட்ட மனிதன் அவன்.  அசடனின் நாயகனாகிய பிரின்ஸ் மிஷ்கின்,உண்மையில் அவரது ஆரம்பகட்ட நாவலில் வந்த பிரின்ஸ் அலெக்ஸியின் இன்னொரு வடிவம்தான்.

அதே போலப் பிரின்ஸ் மிஷ்கினின் இன்னொரு வடிவம்தான் கரமஸோவ் சகோதரர்கள் நாவலின் அலெக்ஸி. முதலில் எடுப்பார் கைப்பிள்ளையாக அசடனைச் சித்தரித்த தஸ்தயேவ்ஸ்கி பின்னர் அவனை இயல்பான நல்லியல்புகள் கொண்டவனாக, அதனாலேயே புனிதனாகச் சித்தரிக்கிறார். அதிலிருந்து மேலே சென்று அடுத்த நாவலில் அவனைத் தீமையின் மூன்று வலுவான தரப்புகள் நடுவே வைக்கிறார்.  காமத்தின் தீய ஆற்றல் நிறைந்த திமித்ரி, அறிவின் தீய ஆற்றல் நிறைந்த இவான், குரோதத்தின் தீய ஆற்றல் நிறைந்த கரமஸோவ். மூன்று ஆற்றல்களையும் களங்கமின்மையின் ஆற்றல் எப்படி எதிர்கொள்கிறது என்று காட்டும்போது அவரது கலை முழுமை பெறுகிறது

தஸ்தயேவ்ஸ்கியின் கதைகளில் எப்போதும் இந்தத் தொடர்ச்சி இருக்கும். ஒரு கதாபாத்திரம் என்பது அவருக்கு ஒரு கருத்துருவத்தின் அடையாளம். ஒரு மானுட நிலைமை. அதைப் பலகோணங்களில் சொல்லிச்சொல்லி அதன் எல்லாப் பக்கங்களையும் பார்க்கவே அவர் முயல்கிறார். இதேபோல ’நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும்’ நாவலில் வரும் நெல்லியையே நாம் குற்றமும் தண்டனையும் நாவலில் சோனியாவாகக் காண்கிறோம்.

எம்.ஏ.சுசீலா

[ 3 ]

எம்.ஏ.சுசீலா,தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளராக இதற்குள் அறியப்பட்டிருக்கிறார்.  பொதுவாக மொழியாக்கங்களில் இருந்துவரும் மொழிச்சிக்கல்கள் இவரில் இல்லை. சரளமான இனிய நடை. அதே சமயம் அந்த சரளத்துக்காக மூலத்தை எளிமைப்படுத்தவும் இல்லை. இவரது மொழியாக்கத்தில் வெளிவந்த ’குற்றமும் தண்டனையும்’[தஸ்தயேவ்ஸ்கி, பாரதி பதிப்பகம்] தமிழ் மொழியாக்கங்களில் ஒரு முன்னுதாரணமான சாதனை என்றே சொல்வேன்.

’அசடன்’என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் இந்நாவல், தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் மிகவும் பாவியல்பு கொண்டது என்று சொல்லப்படுகிறது. சுவிட்சர்லாந்தில் மனநல விடுதியில் இருந்து ருஷ்யாவிற்குத் திரும்பி வந்து ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முயலும் பிரின்ஸ் மிஷ்கின் [Prince Lyov Nikolayevich Myshkin] என்ற 17 வயது இளைஞனின் கதை இது. அவன் சந்திக்கும் மனிதர்கள் வழியாக மானுட உறவுகளின் சிக்கலான நெசவை அவன் கண்டுகொள்கிறான். அந்த உக்கிரமான வேட்டை விளையாட்டில் தன்னுடைய நல்லியல்புடன் ஒரு புனிதனாக அவன் கடந்துசெல்கிறான்.

இந்நாவல்,எனக்குச் சிறு வயதில் அளித்த மனப்பிம்பம் என்பது இன்றும் பொருத்தமானதாகவே இருக்கிறது. ஒரு இருண்ட வீட்டுக்குள் மிஷ்கின் கையில் ஒரு விளக்குடன் செல்கிறான். செல்லும் வழியில் உள்ள அழுக்கும் குப்பையும் கொலை ஆயுதங்களும் ஒட்டடையும் எல்லாம் அந்த ஒளியில் தெரிகின்றன. ஆனால் அவற்றுக்குத் தொடர்பற்றவனாகத் தன் ஒளியாலேயே முழுமை கொண்டவனாக அவன் அந்த இடத்தைக் கடந்துசென்று விடுகிறான்

மிஷ்கினுக்கு இருக்கும் கிறிஸ்துவின் சாயலைப்பற்றி மேலைநாட்டு இலக்கியவிமர்சகர்கள் நிறையவே எழுதியிருக்கிறார்கள். சகமனிதர்களின் துயரங்களுக்கும்,தன் சொந்தத் துயரங்களுக்கும் வேறுபாடு தெரியாதவன் அவன். அந்த இயல்பே அவனை அனைத்து மானுடத் துயரங்களுக்கும் மேலானவனாக, அவற்றில் இருந்து மீட்பளிப்பவனாக ஆக்கிவிட்டிருக்கிறது.

அவனுக்கு நேர்மாறாக  ரோகோஷின் . [Rogozhin] லூசிஃபரின் இயல்பு கொண்டவனாகச் சித்தரிக்கப்படுகிறான். இருண்டவன், அறிவாளி, பேச்சாளன். கிட்டத்தட்ட ’நிந்திக்கப்பட்டவர்களூம் அவமதிக்கப்பட்டவர்களும்’முன்வைக்கும் அந்த இருமை [இளவரசன் அலெக்ஸி x இளவரசர் வால்கோவ்ஸ்கி]   இங்கும் உள்ளது, இன்னும் தீவிரமாக. இந்தக் கூறு,கிறித்தவமெய்யியலில் இருந்து தஸ்தயேவ்ஸ்கி எடுத்துக்கொண்ட ஒன்று.  கள்ளமற்ற கிறிஸ்து x அறிவாளியான சாத்தான்

தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கையின் சாராம்சமான கேள்வியும் அதில்தான் இருந்தது. தீமைக்கும் அறிவுக்குமான இன்றியமையாத தொடர்பு, ஆகவே நல்லியல்புக்கும் அறியாமைக்குமான இணைவு. இந்த இருமையை இதேயளவுக்குத் தீவிரமாக ஹெர்மன் ஹெஸ்சிடமும் [சித்தார்த்தா]  நிகாஸ் கசண்ட் சகீஸிடமும் [ சோர்பா த கிரீக்] காணலாம்.  திரையில் கூட இரு வேறு கலைஞர்களிடம் நாம் இதைக் காணலாம். இங்க்மார் பர்க்மான், தர்கோவ்ஸ்கி. மேலைச்சிந்தனையின அடியில் எப்போதும் இருக்கும் ஒரு உருவகம் இது.

அசடன் நாவலைப்பற்றி இங்கே விவாதிக்கப்போவதில்லை. அது உருவான சாத்தியக்கூறு என்ன என்பதைப்பற்றி மட்டுமே இங்கே கவனம் கொண்டிருக்கிறேன். இந்நாவல் உலக அளவில் உருவாக்கிய பாதிப்பு மிக விரிவானது. நேர்நிலையான அசடுகளை நாம் அதன்பின் உலக இலக்கியத்தில் , சினிமாவில் ஏராளமாகப் பார்க்கலாம். எப்போதுமே மக்களைக் கவர்ந்த ஒரு உருவகமாக அது இருந்துள்ளது. சமீபத்தில்கூட நான் சாம் [I am Sam] என்ற படம்,நேரடியாக அசடன் நாவலை நினைவுறுத்தியது. தமிழில் கூடப் ‘படிக்காத மேதை ‘ முதல் ’சிப்பிக்குள் முத்து’ ‘பிதாமகன்’ வரையிலான திரைப்படங்கள் அந்நாவலின் தரிசனத்தைப் பிரதிபலிப்பவைதான்.

தமிழிலக்கியத் தளத்தில் இந்நாவலுடன் இணைத்து யோசிக்கவேண்டிய இருநாவல்கள் உண்டு . ஒன்று காசியபனின் ’அசடு’. ஆனால் அதில் உள்ள அசடு,வெறும் அசடுதான். வாழ்க்கைக்கு அப்பால் நிற்கும் ஒரு மனிதன். அதே சமயம் ஜெயகாந்தனின் ’ஒருமனிதன் ஒரு வீடு ஓர் உலகம்’ பெருமளவுக்கு அசடனை நெருங்கி வரும் அரிய படைப்பு. தெய்வீகமான களங்கமின்மை கொண்ட ஹென்றி பிரின்ஸ் மிஷ்கினுக்கு தூரத்துச் சொந்தம்தான்.

தன்னை வென்றவன்,ஞானியாகிறான். வெல்வதற்கென்று ஒரு தான் இல்லாமலேயே பிறந்தவன் அந்தப்பாதையில் மிக எளிதாக முன்னகரக்கூடும் என்று நித்யாவை நினைவுபடுத்திக் சொல்லிக்கொள்கிறேன்.

[எம்.ஏ.சுசீலா மொழியாக்கத்தில் பாரதிபுத்தகநிலைய வெளியீடாக வரவிருக்கும் ‘அசடன்‘ நூலுக்கு எழுதிய முன்னுரை.அசடன். ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி. தமிழாக்கம் எம்.ஏ.சுசீலா]

தஸ்தயேவ்ஸ்கி தமிழில்

குற்றமும் தண்டனையும்

குற்றமும் தண்டனையும்  மொழியாக்க விருது

இரண்டாம் மொழிபெயர்ப்பு

இரண்டு வானோக்கிய சாளரங்கள்

ஓர் எளிய கூழாங்கல்

பேரா நா தர்மராஜன்

மொழியாக்கம் கடிதங்கள்

மொழியாக்கம்:கடிதங்கள்

தஸ்தயேவ்ஸ்கி கடிதங்கள்

முந்தைய கட்டுரைகருணாமிர்த சாகரம்
அடுத்த கட்டுரைகுப்பை- கடிதங்கள்