இந்தியா என்னும் குப்பைக் கூடை

அன்பிற்கினிய ஜெ

நலமா? இன்றைய செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். லண்டன் தெருக் குப்பைகள்,கடல்  வழியே தூத்துக்குடிக்கு ஏற்றுமதியாகி மீண்டும் லண்டனுக்குத் திருப்பி அனுப்பப்போவதாக அரசு அதிகாரிகள் சொல்லியிருப்பதும், இறக்குமதி செய்த சிவகாசி அச்சுக்கூட அதிபர் மீது வழக்கு போடப்பட்டிருப்பதாகவும்…

1 . இது போன்ற இழிவான பொறுப்பற்ற செயலைச் செய்த லண்டன் மாநகர நிர்வாகத்தின் மீதோ அல்லது ஏற்றுமதியாளர் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழக்கு எதுவும் இல்லை.

2  . இதுகுறித்துத் தூதரக வாயிலாக எந்தக் கண்டனமும் தெரிவிக்கப்படவில்லை, கீழ்மட்ட அதிகாரிகள் மட்டுமே பெயருக்குத் தலையிட்டிருப்பதாக தெரிகிறது.

3 . கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் இந்தக் குப்பைகள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் துறைமுகத்திலேயே இருந்துள்ளன.

I feel that this is very shame to us, and convey it to you J

கண்ணன் கெ கெ

அன்புள்ள கண்ணன்,

நான் அமெரிக்கா கனடா நாடுகளில் பயணம்செய்யும்போது அங்கே  காகிதம் பிளாஸ்டிக் போன்றவை மிதமிஞ்சிப் பயன்படுத்தப்படுவதைக் கண்டிருக்கிறேன். அவற்றைத் தனித்தனியாகப் பிரித்துக் குப்பையில் போடும்படி அறிவுறுத்துகிறார்கள். மக்களும் செய்கிறார்கள். அவை 95 சதம் மறுசுழற்சி செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சொல்லப்பட்டு அவர்கள் நம்புகிறார்கள். அதைப் பலரும் சொன்னார்கள்.

ஆனால் அது உண்மையல்ல. அம்மக்கள் குற்றவுணர்ச்சி இல்லாமல் மிகையாக  வாங்கிப் பயன்படுத்தவேண்டும் என்ற நோக்கிலேயே அப்படி பிரச்சாரம்செய்யப்படுகிறது. அங்குள்ள சூழியலாளர்களும் அதை நம்பிப் பேசாமலிருக்கிறார்கள். உண்மையில் அந்தக் குப்பைகள் அப்படியே கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டு மலைமலையாக ஆப்பிரிக்க ,ஆசிய நாடுகளுக்குக் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன. ஐரோப்பிய மக்கள் அக்கறையாகப் பிரித்துக்கொட்டியவை ஒரேயடியாகக் கலக்கப்பட்டுப் பலமாதம் கழித்து அழுகல் குப்பையாகக் கொண்டு கொட்டப்படுகின்றன. இது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சோமாலியா போன்ற நாடுகள் அதிகாரபூர்வமாக இப்படிக் குப்பைகொட்டச்சொல்லியுள்ளன. அந்த நாட்டு அரசுகள் அதற்காகப் பணம்பெற்றுக்கொள்கின்றன. அங்குள்ள மக்கள் எதிர்க்கவில்லை. ஆனால் அங்கே உருவாகி வந்துள்ள கடல்கொள்ளையர் பிரச்சினையாக உள்ளனர். ஆகவே கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக  இந்தியாவுக்கு இந்தக் குப்பைகள் அனுப்பபப்டுகின்றன.

இவை கப்பலில் வந்து இறங்கி சிறிய அலகுகளாகப் பிரிக்கப்பட்டு லாரிகளில் ஏற்றப்பட்டு நம் கிராமப்புறங்களில் கொட்டப்படுகின்றன. வடசென்னையிலும், நெல்லை, மதுரையிலும் குவிந்துள்ள குப்பைகளில் 70 சதவீதம் அமெரிக்க, பிரிட்டன், கனடா நாட்டுக் குப்பைகளே என்று என்னிடம் ஒரு ஏற்றுமதி- இறக்குமதியாளர் சொன்னார். அவற்றில் 70 சதவீதம் மோசமான ஆஸ்பத்திரிக்கழிவுகள், ரசாயனக்கழிவுகள்.

வடக்கே கண்டலா, டாமன், கல்கத்தா துறைமுகங்களைச் சுற்றி இந்தக் குப்பைமலைகள் பெருகி வருகின்றன. ஆட்சியாளர்கள் பெரும் வருவாய் ஈட்டுகிறார்கள். தூத்துக்குடியில் ஆட்சியாளர்- மக்கள் பிரதிநிதிகளின் முக்கியமான வருவாய்களில் ஒன்று இந்த இறக்குமதியாளர்களின் கப்பம்.

இதைமீறித் தற்செயலாகக் குப்பைகள் பிடிபடுகின்றன. பெரும்பாலும் தனியார் முயற்சியால். அப்போது தாசில்தாரை அனுப்பி ஒரு சாதாரண வழக்கைப் பதிவு செய்து அபராதம் போட்டு விட்டுவிடுகிறார்கள். தூத்துக்குடியில் குப்பை மலைபிடிபடுவது இது நாலாவது முறை. முந்தைய வழக்குகள் என்னாயின? எப்படி தைரியமாக மீண்டும் கொண்டு வருகிறார்கள்? ஏன் உயர்மட்டத்தில் எவருமே இதை ஒரு பிரச்சினையாகவே நினைப்பதில்லை? ஏன் தினமணி தவிர எந்த நாளிதழுக்கும் இது ஒரு பெரியசெய்தியாகப் படுவதில்லை?

இப்போது ஒரு முழுமையான சோதனை செய்தால் நம் துறைமுகங்களிலும் ஒட்டியுள்ள கிடங்குகளிலும் பல ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்குக் குப்பைகள் பிடிபடும் என்கிறார்கள் நண்பர்கள். ஆனால் இப்படி ஒரு கப்பல் பிடிபட்டபோதும்கூட மேற்கொண்டு எந்த சோதனையும் போடப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் அளவுக்குக்கூட எவரும் வந்து பார்க்கவில்லை.

ஏன் குற்ற வழக்குகள் போடப்படவில்லை, பொருளாதாரக்குற்ற வழக்குகளே போடப்படுகின்றன. அதாவது சொல்லப்படாத பொருளை இறக்குமதி செய்த வழக்கு! சென்ற முறை இப்படிப் பல ஆயிரம் மெட்ரிக் டன் எடையுள்ள குப்பையைத் தூத்துக்குடிக்குக் கொண்டுவந்தது இந்தியப் புகையிலை நிறுவனம்.

இந்த இறக்குமதியாளர்களின் தனிப்பட்ட அடையாளங்கள் பிரசுரிக்கப்படவேண்டும். அவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையேயான தொடர்பு வெளிக்கொண்டுவரப்படவேண்டும். சில்லறைக்காசுகளுக்காகப் பிறந்த மண்ணைக் குப்பைமலையாக்குபவர்கள் மக்கள்முன் நிறுத்தப்படவேண்டும். அதற்கு நம் சூழலில் இன்னும் விழிப்புணர்ச்சி தேவை.

சென்றமுறை தூத்துக்குடிக்கு வந்தது சிக்காகோ நகரக் கழிவு.  இது பிரித்தானியக் கழிவு. அதாவது அங்குள்ள அரசுகளே இதைச் செய்கின்றன. குப்பைகளை அகற்றும்பொறுப்பைத் தனியாருக்கு அளித்துத் தனியார் அவற்றை ஏற்றுமதிசெய்ய ஊக்குவிக்கின்றன அவ்வரசுகள். ஆகவே நம் அரசு மட்டத்தில் ஒரு ஆமோதிப்பு இல்லாமல் இது நிகழாது. இந்த மாபெரும் அநீதிக்கு எதிராக அங்கும் இங்கும் மக்கள் திரளாவிட்டால் வாழ்க்கையே கடினமாகிவிடும்.

ஜெ

முந்தைய கட்டுரைமுராத்தியின் பீர்புட்டிகள்
அடுத்த கட்டுரைவசைகள்