சுஜாதா-கடிதம்

சுஜாதா அறிமுகம்

அன்புள்ள ஜெமோ,

தங்கள் “சுஜாதா” பதிவைப்படித்தேன்.
புதிதாக எதுவும் சொல்லிவிடவில்லை. உணர்ச்சிபூர்வமாக அணுகாத முறையில் நீங்கள் ஏற்கனவே பலமுறை சொன்னதுதான்.

ஆனால் அவரது ரசிகர்கள் பதின்பருவத்தில் அவரை வாசித்து அதன் பின் அந்த வாசகத்தரத்திலேயே நின்றுவிட்டவர்கள் என்றது கொஞ்சம் நெருடலாய்ப் படுகிறது.
அவரது அனைத்து ரசிகர்களையும் இப்படிச்சொல்லிவிடமுடியாது என்று தோன்றுகிறது.

அவர் பலமுறை நல்ல எழுத்துக்களை, எழுத்தாளர்களை அடையாளம் காட்டியிருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்ததுதானே?

மாதவன், திஜா, சுரா, நீங்கள் இந்த மாதிரி பலபெயர்களை வாசிக்கிற ஆர்வமுள்ளவர்கள் முதன்முதலில் அறிந்தது இந்த வணிக எழுத்தாளரின் மூலமாகத்தானே?

இப்போது கடந்த பத்து வருடங்களாக இணையம் மூலமாக நல்ல எழுத்துக்கள் எளிதில் அடையாளம் கண்டுகொள்ளப்படுகின்றன.
அதற்கு முன்னால்? இவர் மாதிரி யாராவது ஒருவர்தானே சொல்லவேண்டியது இருந்தது? அதுவரை நல்ல எழுத்துக்கள் ஒரு சின்ன வட்டத்திற்குள்தானே இருந்தது, அப்புறம் அதற்குள்ளே ஆயிரம் சண்டைகள், அடிபிடி…

கணையாழி என்ற பத்திரிக்கை இருந்தது நிறைய பேருக்கு தெரிந்தது இவரது கடைசிப்பக்கத்து எழுத்தினால் தானே?
எனவே நல்ல எழுத்துக்களை சுஜாதா வழியாக அறிந்து வாசகத்தரத்தை (எல்லாரும் இல்லையென்றாலும்)விரிவுபடுத்திக்கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மேலும் நீங்கள் சொன்னமாதிரி அவரது யதார்த்தச் சித்தரிப்பை அளிக்கும் சிறுகதைகள், நாடகங்கள் கொஞ்சமாக இருக்கலாம், ஆனால் மனதில் நிற்பதற்கு எண்ணிக்கையா முக்கியம்? அந்தக் “கொஞ்சமே” போதுமே?

இலக்கிய உலகில் திஜாவிற்கு என்ன இடம் என்று கேட்டதிற்கு அசோகமித்திரன் “இட்ஸ் டூ ஏர்லி டு கமெண்ட்’ என்றார் சமீபத்தில்.

ஐம்பதுகளில் வந்த எழுத்துக்களுக்கே இந்த பதில். அப்பறம் வந்த எழுத்துக்களுக்கு என்ன சொல்வது? (அட்லீஸ்ட் இந்த உலகில்!)இருந்து பார்க்க நாமிருக்கப் போவதில்லை (என்ன இன்னும் ஒரு இருபது, முப்பது வருஷங்கள் இருப்போமா?!)
உங்கள் அளவிற்கு வாசிப்புத் திறன், அனுபவம், முதிர்ச்சி எனக்குக் கிடையாது. எனவே ஏதேனும் தவறாக இருந்தால் எனது முதிர்ச்சியின்மை மட்டுமே, மன்னிக்கவும்!

Essex சிவா

அன்புள்ள சிவா,

இந்த வினாக்களுக்கெல்லாம் ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். பலமுறை. நீங்களே உங்கள் கேள்விகளைக் கொஞ்சம் திரும்ப யோசித்துப் பார்த்தால் புரியும் அவற்றின் அடிப்படையே தவறு என.

நீங்கள் சொல்வதைப்போலப் பார்த்தால் இலக்கிய விமரிசனமோ மதிப்பீடோ இருக்கக் கூடாது, நூறுவருடம் பொறுமையாகக் காத்திருக்க வேண்டியதுதான், இல்லையா?   இலக்கியவிமர்சனம் என்ற துறையை உருவாக்கியவர்கள் எல்லாம் மூடர்கள் இல்லையா?

சுஜாதா நல்ல இலக்கியப்படைப்புகளை அறிமுகம் செய்தார் என்பது உண்மை. அதை நானும் சொல்லியிருக்கிறேன். ஆனால்  சுஜாதாவைத் தமிழின் பெரும்படைப்பாளி  என்பவர்கள் அவற்றை வாசித்திருப்பார்களா என்ன?

மேலும் நான் இங்கே பேசுவது அவரது இலக்கிய இடத்தைப்பற்றி. அவரது படைப்புகளின் தரத்தைப்பற்றி. அதைப்பற்றி பேசும்போது அவர் சிபாரிசு செய்யவில்லையா என்பது என்னவகை பதில்?

கடைசியாக நல்ல கதைகள் -நாடகங்கள் சில எழுதியிருக்கிறார் . அந்த இடத்தை அவருக்குக் கொடுக்கலாம் என்றே சொல்கிறேன். தமிழின் பெரும்படைப்பாளிகள், முன்னோடிகள் இடத்துக்கு அவரைக் கொண்டு சென்றுவைத்து இலக்கியமதிப்பீடுகளை மழுங்கடிக்க வேண்டாம் என்று சொல்கிறேன்.

உடனே ஒருசில நல்ல கதைகள் எழுதினால் போதாதா என்று பதில். என்ன பதில் இது? யோசித்துத்தான் எழுதுகிறீர்களா? ஒரு இலக்கிய மேதையும் நாலைந்து நல்ல கதை எழுதியவரும் சமமா? வேறுபாடு இல்லையா?  அல்லது சுட்டிக்காட்டலாகாதா?

பொதுவாக இலக்கியமதிப்பீடு பற்றி பேச வரும்போது இந்த மாதிரி’எல்லாமே இலக்கியம்தான்’ ‘இலக்கியத்திலே ஒப்பிடப்படாது’ ‘கருத்து சொல்ல நாம யாரு’ ‘காலம் தீர்மானிக்கட்டும்’  போன்ற மழுப்பல் பேச்சுகளுடன் வருபவர்களுக்குப் பலமுறை பதில் சொல்லியிருக்கிறேன். மீண்டும்.

சலிப்பாகவே இருக்கிறது
ஜெ

அன்புள்ள ஜெ,

முதலில் தங்கள் பொறுமையான பதிலுக்கு, நேரத்திற்கு நன்றி!

சுஜாதா எழுத்துக்களின் இலக்கிய இடத்தை விமரிசித்தது தவறு என்று சொல்லவில்லை (அப்படி என் கடிதம் தொனித்திருந்தால் என் தவறுதான்; சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்ல இன்னும் கற்க வேண்டும்).

உங்கள் பாணியிலேயே சொன்னால் அவர் எழுத்துக்கள் விமரிசனத்தினால் உடைந்துவிடும் கண்ணாடிப்பொருளல்ல; விமரிசனமே செய்யாது மியூசியத்தில் வைத்துக்காக்க வேண்டியவைகளும் அல்ல.

நீங்கள் சொல்லியிருந்தீர்களில்லையா அவரது ரசிகர்கள் பதின்பருவத்தில் அவரை வாசித்து அதன் பின் அந்த வாசகத்தரத்திலேயே நின்றுவிட்டவர்கள் என்று…

நான் சொல்ல வந்தது அவர் ரசிகர்கள்,வாசகத்தரத்தை அவரோடு, அந்த வாசகத்தரத்தோடு நிறுத்திக்கொள்ளவில்லை என்றுதான்.
அனைவரும் இல்லையென்றாலும் மிகக் குறைந்த சதவீதமாகவாது அவர் மூலமாகத் தாண்டியிருப்பார்கள். எத்தனை சதவீதம் என்றெல்லாம் தெரியாது.

அவர் நிறையப் பெயர்களை அறிமுகம் செய்திருந்தாலும் எல்லாரும் அவர்களைப் படிப்பார்கள் என்று நிச்சயம் இல்லை; கொஞ்சம் பேராவது?

மற்றவர்களைச்சொல்வதைக்காட்டிலும் என்னையே எடுத்துக்கொள்கிறேனே..

நிறையப் பேரைப்போல அவரது வசந்த், கணேஷ் வழியாக ஈர்க்கப்பட்டு பின் அபுனைவு, எல்லாவற்றையும் வாசித்துத் தொடர்ந்திருந்தேன்.

அப்புறம் திஜா, பின்  கல்யாண்ஜி – “கருப்புச்சட்டைக்காரி வாசலில் பெருக்கினாள்” (என்ன ரசனையோ என்று இப்போது பட்டாலும் எனது அப்போதைய வயதை எடுத்துக்கொள்ள வேண்டும்).

பின் ஒரு 1954 கலைமகள் தீபாவளி இதழ் என்று நினைக்கிறேன் – கிடைத்தபோது அதில் கரிச்சான் குஞ்சு என்ற பெயரைப்பார்த்த போது (‘இன்னொரு செருப்பு’?) இந்தப்பெயரைப் பார்த்திருக்கிறேன், தலைவர் சொல்லியிருக்கிறார் என்று துள்ளிக்குதித்தேன்.

அப்புறம் ஆதவன், கு.பா.ரா நிறையப் பெயர்களைப் பின்னால் படித்தபோது எதுவுமே புதிதாய் இல்லை;
உங்கள் பெயரும் அப்படித்தான். “சங்க சித்திரங்கள்” வந்தபோது பெயர் மிக அறிமுகம். ஆனால் இன்னொன்றும் உணர வேண்டும். குதிரைக்குத் தண்ணீர்த்தொட்டியைத்தான் காட்டமுடியும்; குடிப்பது குதிரையின் பொறுப்பு.

நான் எல்லாரையும் தொடரவில்லைதான். ஒருவேளை அவ்வளவுதான் என் ரசனையோ என்னவோ; குத்தலாகவோ, தாழ்வு மனப்பான்மையிலோ இல்லை. அவ்வளவுதான் நான்; இதுதான் என் தோலின் நிறம்; இதுதான் என் கண்களின் நிறம் என்பது போல…

நீங்கள் மெனக்கெட்டு சொன்ன சித்திரங்கள் எதுவும் மனதில் பதியவில்லை; ஆனால் அந்த இலங்கைத்தமிழர், அவரது மனைவியின் கனவில் பள்ளிஉடையுடன் வந்த மகன் மட்டும் நினைவில் தங்கிவிட்டது – ஆறாத்துயரம் புறா, ஜோ மாதிரி.
(அப்புறம் இரு சகோதரர்கள் – உலகெல்லாம் வீடு, வீடே உலகம்)
பின்னர் நீங்களும் சுராவும் காந்தியைப்பற்றி பேசிக்கொண்டே போனதைப்பற்றி படித்தது (“இருளப்பப்பபுரம் பக்கம், மலங்களைத்தாண்டி”) நினைவில் இருக்கிறது.

தாய்நாடு வரும்போதெல்லாம் நிறையப் புத்தகங்கள் வாங்கினாலும் உங்கள் பக்கம் போவதில் தயக்கம். பெயரைப்பார்க்கும்போதெல்லாம் இருண்ட பச்சையும், அடர்ந்த, மிக அடர்ந்த காடும்தான் தோன்றும்.

தங்கள் தளத்தில் “தோசைக்கல்லை புக் ஷெல்பில் வைத்தது யாரு” பதிவைப்படித்ததும் தான் “ஓ இவர் இப்படியெல்லாம் எழுதுவாரா, நம்மை மாதிரி சாதாரண மனிதர் தான் போல, இரண்டு கால்களில் நடந்து, வாய் வழியாக சாப்பிட்டு… குடும்பமெல்லாம் இருக்கு!” என்று தோன்றியது.

பின் தொடர்ந்து முதலில் உங்கள் பகடிப்பதிவுகள்தான் சுலபமாகக் கவர்ந்தது (சர்க்கஸில் மிருகங்களைப்பார்க்க அல்லாது கோழியைப்பார்த்து வீறிட்ட மகள்). பின் மெல்ல, மெல்ல…உங்கள் மூலமாக அ.முத்துலிங்கம், நாஞ்சில்…

நீங்கள் உங்கள் ரசிகர்களுக்கு இப்படி சிபாரிசு செய்கிறீர்கள், உங்கள் ரசிகர்கள் உங்களோடு நின்றுவிட்டவர்கள் என்று சொல்வது பிழையில்லையா?
இப்போதுதான்,சிறிது சிறிதாக எனக்கே என் வாசிப்பின் எல்லை விரிகிறது (மிக சிறிதாகத்தான்) படுகிறது. இன்னும் போகவேண்டும் பலகாத தூரம்.

வாசிப்புத்தரம், எல்லை,  தோல், கண்களின் நிறம் மாதிரியில்லை, மாறலாம் என்று சமீப காலமாகத்தான் படுகிறது.
வயதாவதும், அனுபவங்கள் பெறுவதும் இதற்கு உதவுகிறது போல.

சொல்வனத்தில் அசோகமித்திரன் திஜாவைப்பற்றிச் சொன்னபோது என்ன விமரிசனம் செய்யாமல் இப்படிச்சொல்கிறார் என்றுதான் நினைத்தேன். அல்லது எனது புரிதல் அவ்வளவுதானோ என்னமோ.

கடிதம் பெரியதாகி விட்டது போல; நிறுத்திக்கொள்கிறேன்.

சுருக்கமாக, அவரது ரசிகர்கள் எல்லோரும் அதோடு நிற்கவில்லை, அவர் வழியாக வேறு நல்ல எழுத்துக்களுக்கும் போயிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வந்தேன்.

பெரும் படைப்பாளி என்று சொன்னால் அது அவர்களின் ரசனை, அவ்வளவுதான்.

நிறைய தடவை நீங்கள் சொன்னது முதலில் எரிச்சலாக இருந்திருக்கிறது; பின் பொறுமையாக மறு வாசிப்பில் புரிதல் வேறாகியிருக்கிறது.

முன்னர் ஒரு முறை நீங்கள் சுஜாதா பாணி நல்ல எழுத்து இல்லை என்ற போது கோபம் வந்தது. பின் மறு பல வாசிப்புகளில் அந்தக் கோபம் மாறி நீங்கள் சொல்ல வந்தது பிடிபட்டிருக்கிறது (அந்த முதல் வாசிப்பில் எழுந்த அபிப்பிராயத்தை மாற்றிக்கொள்ளாதவர்கள் நிறையப் பேர்கள் இருப்பார்கள்)

சரி ஜெ, ஒரு அருமையான பளீர் வெளிச்ச மாலையில் மனதில் பட்டதைக் கொட்டிவிட்டேன் (இவ்வளவு பெரிய கடிதத்தை யாருக்கும் எழுதியதில்லை, மனைவிக்குக் கூட!).

நீங்கள் என்ன நினைத்தாலும் சரி!

“சரிடே, என்ன சொன்னாலும் உனக்கு புரியாதுடே! உங்க ஊரில் பசு மாடு எத்தனை, எருமை மாடு எத்தனை? உன் கூட இப்படித்தான் பேச முடியும்” என்று கேட்டாலும் சரி! (இந்த ஊரில் எருமை மாட்டையே பார்த்ததில்லையே…ம்ம்ம்!)

இன்று வரை எந்த எழுத்தாளரையும் நேரில், தொலைபேசி, கடிதம் என்ற எந்த வழியாகவும் தொடர்பு கொண்டதில்லை (சுஜாதா ஒரு முறை மெரினாவில் கடந்து போனபிறகு உறைத்தது; திரும்பப் போய்ப் பேசத்தயக்கம்!)

வாசகர்களுக்கு இவ்வளவு பொறுப்பாய், பொறுமையாய்ப் பதில் சொல்வதனால் நான் முதன் முதலில் தொடர்பு கொண்ட எழுத்தாளர் நீங்கள்தான்;  (என்னையும் திருப்பித் தொடர்பு கொண்டதவல்லவா முக்கியம்!)
இந்தத் திருப்தி எனக்கு என்றும் இருக்கும்!

கண்டிப்பாய் நாகர்கோவில் வீட்டிற்குத் தயக்கம் இல்லாமல் வருவேன்; நெடுநாள் நண்பரிடம் இலக்கியம்தான் பேசவேண்டுமா என்ன?! தெரிந்ததைத்தானே பேச முடியும்!

சிவா

அன்புள்ள சிவா

நீங்கள் எழுதிய கடிதத்துக்கு ஒரு சிறு எரிச்சலுடன் பதில் சொன்னதற்குக் காரணம் முந்தைய பதிவுகள் என அளிக்கப்பட்டிருந்த கட்டுரைகளில் அந்தக் கேள்விகளுக்கு மிக விளக்கமான பதில் இருந்தது. என்னிடம் விவாதிக்க வருபவர்களில் பெரும்பாலானவர்கள் நான் சொல்லும் கருத்துக்கள் ஒரு நீண்ட விவாதத்தின், உரையாடலின் பகுதியாகச் சொல்லப்படுபவை என்பதை கவனிப்பதில்லை. இணைப்புகளை, பழைய ஆக்கங்களை வாசிப்பதில்லை. பெரும்பாலும் ஒரு வரி, ஒரு கருத்து என எடுத்துக்கொண்டு எதிர்வினையாற்றுகிறார்கள். அதை ஒரு புதிய வாசகன் செய்தால் பரவாயில்லை. நீங்கள் தொடர் வாசகர். ஒட்டுமொத்தமாகவே கருத்துக்களை எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். கல்கி பற்றியும் இதே கேள்வியும் பதிலும் பிரசுரமாகியிருக்கிறது.

மேலும் ஓர் வாசகராக நான் சொல்ல விரும்புவது ஒன்றுண்டு. நாம் பொதுவெளியில் விவாதிக்கும்போது அந்த விவாதம் அதை வாசிப்பவர்களையும் உத்தேசித்துச் சொல்லப்படுகிறது. ஆகவே வெறுமே நம் உணர்ச்சிகளையோ அந்தத் தருணத்தில் மனதில் தோன்றுவதையோ பதிவு செய்வதாக இருக்கக் கூடாது. சொல்லப்படுவதை ஒரு தரப்பாக முழுமையாக எல்லாப் பக்கங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதை ஒரு நிலைப்பாடாகத் தொகுத்துப்பார்த்து, அந்தத் தரப்புக்கான முழுமையான சரியான மறுப்பாக நம் தரப்பை முன்வைக்கவேண்டும். இல்லையேல் பெரும்பாலும் சம்பந்தமில்லாத பேச்சாகவே அது முடியும்.

சுஜாதா பற்றிய அந்தப் பதிவை மீண்டும் வாசியுங்கள். அது சொல்வது இதுதான். 1.  சுஜாதாவின் பெரும்பாலான எழுத்துக்கள் மகிழ்விப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட வணிக எழுத்துக்களே 2 .சில கதைகளும் நாடகங்களும் முக்கியமானவை ஆகவே அப்படி முழுமையாக வணிக எழுத்து என்றும் சொல்லிவிடமுடியாது. 3.இன்று சுஜாதா ஓர் முக்கியமான இலக்கியவாதி என்று சொல்பவர்கள் சுஜாதாவைப் பதின்பருவத்தில் வாசித்து அங்கே நின்று விட்டவர்கள். [அவர்களைப்பற்றித்தான் அந்தக் கேள்வியே இருக்கிறது]

இதில் என்னதான் குழப்பம் இருக்கிறது? இதைவிடத் தெளிவாக எவர்தான் தமிழில் எழுதுகிறார்கள்?

நீங்கள் சொன்ன பதிலுக்கும் நான் எழுதிய கருத்துக்களுக்கும் என்ன சம்பந்தம்?  ‘சுஜாதாவை வாசிப்பவர்கள் வேறு எதையுமே வாசிப்பதில்லை’ என நான் சொன்னதாக எடுத்துக்கொண்டு அதற்குப் பதில் சொல்கிறீர்கள். அவர் இலக்கியத்தை அறிமுகம் செய்ததனால் அவரை இலக்கியவாதி எனலாம் என்று சொல்கிறீர்கள்.

இணையத்தில் நம்மவர்கள் விவாதிப்பதைப் பார்க்கிறேன். புரிந்துகொள்ள முயல்வதே இல்லை. வாசித்ததும் என்ன மனதில் படுகிறதோ அதற்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள்.

உங்களுக்கு ஒரு  ‘கடி’ தேவை என்றுதான் பட்டது. ஆகவேதான் அந்த பதில். யோசித்துப்பாருங்கள்.

நீங்கள் எப்போதும் என்னைப்பார்க்க வரலாம். பேசலாம். என் நண்பர்களைப்போல விமர்சிக்கவும் கிண்டல் செய்யவும் செய்யலாம். எந்தப்பிரச்சினையும் இல்லை. இந்தக்கடிதம்கூட உங்கள் மீதான நம்பிக்கையால் பிரியத்தால் எழுதப்படுவது. என்றாவது அதையும் உணர்வீர்கள்.

ஜெ

மு வ

புதுமைப்பித்தனின் வாள்

இலக்கிய விமர்சனம் என்பது… | jeyamohan.in

முந்தைய கட்டுரைஉறவுகளின் ஆடல்
அடுத்த கட்டுரைஒரு தற்கொலை