உறவுகளின் ஆடல்

ச. முத்துவேல் அவரது  இணையதளத்தில் எழுதியிருந்த இந்தக் கவிதை என்னை கவர்ந்தது. எளிமையான நேரடியான படிமம். உறவுகளில் புழங்குவதை ஒரு கச்சிதமான விளையாட்டாக முன்வைக்கிறது இந்தக்கவிதை. எதையும் தொடாமல் எதையும் வெல்லாமல் எதையும் இலக்குகொள்ளாமல் ‘ஆடி’த்திரும்பும் ஒரு வட்டு.

 

 

[இடப்பக்கம் ச.முத்துவேல். வலப்பக்கம் கவிஞர் உமா சக்தி]

 

நீ-யும்

கேரம் போர்டில்

இப்போது உன்முறை

நீ

வெற்றிகளை அடுக்கவில்லை

வெற்றியை நோக்கி முன் நகரவில்லை

எதிராளியின் வெற்றிக்கு தடைபோடவில்லை

துணை போகவில்லை

ஒருமுறை சுண்டிவிட்டாய்

எதிலும் தொட்டுக்கொள்ளாமல்

சென்றுவந்தது

 

இம்முறை

விளையாடிவிட்டாய்

நீயும்

[ச. முத்துவேல் ]

இந்தக் கவிதையுடன் ஒப்பிடத்தக்க இன்னொரு கவிதை தேவதேவன் எழுதியது. தேவதேவனின் கவிதையும் உறவுகளை ஆட்டமாக உருவகிக்கிறது. சீட்டாட்டமாக. ஆனால் சீட்டாட்டத்தின் முடிவில் அது ஒரு அபூர்வ மலரை மலரச்செய்துவிடுகிறது

சீட்டாட்டம்

இடையறாத இயக்கத்தின் மடியில்

[உண்பதற்கும் கழிப்பதற்கும் மட்டுமே
இடம் பெயர்ந்தோம் ]
இரவு பகலற்ற விழிப்பில்
ஆறு இதயங்களுக்கிடையே
ஓர் உரையாடல்

அகாலத்திலிருந்து காலத்துக்கு
சீட்டுகளை இறக்கினோம்
காலமோ விலகி எங்கள் விளையாட்டை
கவனித்துக் கொண்டிருந்தது
காபி போட்டுத் தந்தது
சோறு சாப்பிட அழைத்தது
ஆக எங்கள் சீட்டுக்கள் விழுந்தது
வெறுமையின் மீது

காலாதீத பிரமிப்புடன் சீட்டுக்கள்
எங்கள் சொற்களாயின
எனினும் வெல்ல வெல்ல என துடித்தன
ஒவ்வொருவர் கைகளுக்குமாய்
அவை கழன்று விழுந்தவுடன்
எனினும்
என்னை வெல்லு என்று
தோற்றுக் கலையவே துடித்தன.
ஒவ்வொருவரிடமிருந்தும்
அவை கழன்று விழுந்தவுடன்

அப்போது இப்போது என்று
சுட்டமுடியாத ஒருபோது
என்றோ புதைந்து
துயில் கொண்டிருந்த ஒரு விதை
திடீரென்று வளர்ந்து
ஒரு மலர் காம்பை நீட்டியது
அங்கே
சீட்டாடும் அறுவர்
ஆறு இதழ்கள் உடைய ஒரு மலர்

[தேவதேவன்]

இந்தக்கவிதைகளுடன் எங்கோ இணைந்துகொள்கிறது கல்பற்றா நாராயணனின் இந்த கவிதை. ஆட்டத்தின் நடுவே ஆடாமல் அப்புறம் ஏகும் புத்தர். ஆட்டத்தில் இருக்கும் ஆடாத மனிதரே புத்தர்.  எல்லா ஆட்டங்களிலும் புத்தருக்கு ஓர் இடமுண்டு போலும்

நெடுஞ்சாலை புத்தர்

நேற்று நான்

நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும்போது
புத்தரைக் கண்டேன்.
சாயங்காலப் பரபரப்பில்
கடக்கமுடியாமல்
இப்பக்கம்
வெகுநேரமாக நின்றிருந்தேன்.
ஐம்பதோ அறுபதோ எழுபதோ
வருட நீளமுள்ள இவ்வாழ்வில்
எப்படிப்பார்த்தாலும் ஒரு ஒன்றரைவருடம்
இப்படிக் கடக்கமுடியாமல்
காத்து நிற்பதிலேயே போவதை எண்ணியபடி.
அப்போது ஒருவர்
சற்றும் தயங்காமல்
மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன்
அவரை பின்தொடர தொடங்குகையில்
ஒருவண்டி
குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது.
எந்த வண்டியும்
அவருக்காக வேகத்தைக் குறைக்கவில்லை
இயல்பான
அகன்ற
தனித்த
எப்போதுமே அங்கிருக்கும் பாதையில்
அவர் நடந்து மறுபக்கம் சேர்ந்தார்

[கல்பற்றா நாராயணன்]

உறவுகளைப்பற்றி  மூன்று உசாவல்கள்.  எங்கும் எதிலும் உரசாமல் தன் வழியே சென்று மீளும் ஒரு அந்தரங்கப்பாதையை முத்துவேல் சொல்கிறார்.  எதையும் வெல்லமுயலாமல் எதையும் அடையாமல்.

தேவதேவனின் கவிதை அந்தபடிமத்துக்குள் இன்னொரு படிமத்துக்காக முயல்கிறது. அறுவர் ஆடும் சீட்டாட்டம். அகாலத்தில் பிறந்து காலத்தில் வந்து விழும் சொற்கள். உன்னை வெல்வேன் என்றும்  என்னை வெல்லு என்றும் ஒரே சமயம் அவை கூவுகின்றன. காலம் வெளியே விலகி அன்றாட வாழ்க்கையாக இயல்கிறது.

அந்த ஆட்டத்தின் உச்சம் ஒன்றுண்டு. ஆறு ஆழங்களிலும் உறையும் சதுப்பில் புதைந்துகிடக்கும் ஒரு விதை முளைத்து  மலர்ந்து இதழ்விரிக்கும் ஒரு கணம். அதுவே உறவின் சாரம்.

ஆனால் கவனியுங்கள், அதுவும் இன்னொரு சீட்டாட்டம்தான். அந்த ஆறு இதழ்களில் சீட்டாடிக்கொண்டிருக்கிறார்கள் அதே ஆறுபேர்

கல்பற்றா நாராயணன் உறவுகளை ஒட்டுமொத்த உலகியலாக, முச்சந்தியாக ஆக்கிவிடுகிறார். நம்மை முட்டவரும் குரோதங்கள் ஓடும் நதி அது. அந்த உறவுவலைப்பெருவெளி இருப்பதையே அறியாமல் மறுபுறம் சென்றுவிடுகிறது புத்த நிலை.

மூன்று தளங்களில் மூன்று ஊர்களில் வாழும் கவிஞர்கள். இரண்டு வெவ்வேறு  தலைமுறைக்காரர்கள்.  ஒரே முனை நோக்கிக் குவியும் தேடல் வழியாக அவர்கள் கண்டடைவது அவரவர் உண்மைகளை

ஆனால் கவனியுங்கள் அதுவும் ஒரு சீட்டாட்டமே. மூன்று சீட்டுகளும் அகாலத்தில் இருது காலத்துக்கு வந்து விழும் ஆட்டத்தில் ஒரு உச்சியில், அவர் இவர் என்ற பேதமற்ற வெளியில்,  முடிவிலியின் சதுப்பில் புதைந்து கிடந்த ஒரு விதை முளைத்து மலர்விடுகிறது.

ஆம், அந்த மலரின் மூன்று இதழ்களில் மூன்று கவிஞர்கள், மூன்று வெவ்வேறு கவிதைகள்.

தேவதேவன் இணையதளம் http://poetdevadevan.blogspot.com

ச முத்துவேல் இணையதளம் http://thooralkavithai.blogspot.com/

 


மலையாளக்கவிதைகள் சில

 

 

முந்தைய கட்டுரைபருந்து
அடுத்த கட்டுரைசுஜாதா-கடிதம்