பருந்து

அன்புள்ள ஜெ

நேற்று உங்கள் இணையதளம் வழியாகத் தேவதேவனின் கவிதைப்பக்கங்களுக்குச் சென்றேன். கவிதைகளை விடியற்காலை மூன்றுமணியளவில் வாசித்துக்கொண்டிருந்தேன். நான் என்னுடைய சிக்கல்களைப்பற்றி உங்களுக்கு எழுதியிருக்கிறேன். என்னென்ன மனக்கொந்தளிப்புகள் எனக்கு இருந்தன என்று என்னாலே சொல்லிவிடமுடியாது ஜெ. சாவுக்கு அருகே நிற்கும் ஒரு தருணம் என்று சொன்னால்போதும். தூக்கமே இல்லாமல் இரவு முழுக்க ஏதேதோ செய்துவிட்டு இந்தப்பக்கங்களைப் படித்தேன். இந்தக் கவிதை பருந்து, என்னைப் பதற்றமும் பின்பு பரவசமும் கொள்ளச் செய்தது

நான் வாசித்தவரை தேவதேவனின் மிகமிகக் குரூரமான கவிதை. அதேசமயம் மிக அழகான கவிதையும் கூட. மரணம், வெளியேற்றம், மீட்பு எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்டு நிறையக் கவிதைகள் தமிழிலே எழுதப்பட்டிருந்தாலும் இதுதான் எனக்கு சிறப்பானதாகத் தோன்றுகிறது. நான் ஒருகாலத்திலே நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறேன். சில கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன. ஒரு கவிதைகூட நினைவில் இல்லை. இந்தக்கவிதை என்னுடைய கவிதைபோல இருக்கிறது. கடைசிக்கணம் வரை அந்தப்பருந்து என்னுடன் இருக்கும்

எஸ்

 

அன்புள்ள எஸ்

உங்கள் மனம் இப்போது ஒரு கடிதம்போலத் திறந்து என் முன் கிடக்கிறது.

கவிஞரின் இன்னொரு கவிதையையே பதிலாகச் சொல்கிறேன்

அதன்பின்

அதன்பின் ஒரு கணம் இருக்கிறது. மழை விட்டபின் அப்பாடா எனத் துளியுதிர்த்து ஓய்ந்த கிளை மேலெழும் தருணம். வான்வெளி நோக்கிப் புள் எழும் தருணம்

வேறென்ன?

ஜெ

 

http://poetdevadevan.blogspot.com/2011/06/blog-post_04.html

http://poetdevadevan.blogspot.com/2011/06/blog-post_10.html

 

 

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஉறவுகளின் ஆடல்