எம்.எஃப்.ஹுசெய்ன்

எம்.எஃ.ஹுசெய்ன் பற்றி நான் இந்த இணையதளத்தில் முன்பு எழுதிய கட்டுரைக்கு எதிராக எழுதியிருந்த அரவிந்தன் நீலகண்டன் சர்வேஷ் திவாரி எழுதிய இக்கட்டுரையின் இணைப்பை அனுப்பியிருந்தார். முக்கியமான கட்டுரை. ஏறத்தாழ நான் முன்பு வைத்த கருத்துக்களை இன்னமும் தீர்க்கமான ஓவியவரலாற்றுப் பயிற்சியுடன் அளிக்கிறது. இப்போது இக்கட்டுரையின் கோணத்துடன் அவர் ஒத்துப்போவதாக சொல்லியிருக்கிறார்.

பொதுவாகக் கலை என்பது அதன் குறியீட்டுப்புலத்தைப் புரிந்துகொள்பவர்களுக்கானது. ஆகவே அதை ஒருபோதும் வெகுஜன தளத்துக்கு இழுக்கக்கூடாது. அந்தக்கலையை நோக்கிய ஆர்வத்துடன் சென்று, அக்கலையை நுணுகிக் கற்று , ரசிக்கும் மிகச்சிறுபான்மையினரிடம் மட்டுமே அது இருக்கவேண்டும். அனைவருக்கும் முன்பாக அதை வைப்பதென்பது அதை அழிப்பதற்குச் சமம்

உதாரணமாக விஷ்ணுபுரம் நாவலில் இருந்து சில பக்கங்களைப் பிய்த்து ஒரு மதச்சூழலில் / ஒழுக்கச் சூழலில் வைத்து விரிக்க ஆரம்பித்தால் ஹுசெய்ன் போன்ற மோசமான அவமதிப்புகளுக்கு நானும் ஆளாகக்கூடும். புதுமைப்பித்தன் முதல் எந்த ஒரு படைப்பாளிக்கும் அந்த அபாயம் உள்ளது.

இந்தியகலைப்பாணி ஒன்றுக்கான தேடலுக்காக சுவாமி விவேகானந்தர் அறைகூவினார்.அதை ஏற்றுக்கொண்டு அவனீந்திரநாத் தாகூர், ஜைமினி ராய் போன்றவர்களின் வங்க ஓவியப்பள்ளி ஒன்று உருவானது [நான் அதைப்பற்றி ஒரு நல்ல கட்டுரை சுபமங்களாவில் எழுதியிருக்கிறேன்]  அஜந்தா குகை ஓவியங்கள், ராஜபுதன சிறு ஓவியங்கள், பழங்குடிகளின் கோலங்கள் போன்றவற்றில் தங்கள் தொடர்ச்சியைக் கண்டுகொண்டு அதை முன்னெடுத்தனர். அவர்கள் இந்திய ஓவியக்கலையில் முக்கியமான முன்னோடிகள். மாபெரும் சாதனையாளர்கள்.

ஆனால் வங்க ஓவியப்பள்ளி இந்தியமரபை மீட்டெடுப்பதிலேயே குறியாக இருந்தது. அதை ஒரு அழியாத தொடர்ச்சியாக மட்டுமே அவர்கள் பார்த்தார்கள். அதைக்கொண்டு நவீன ஓவியப்போக்கு ஒன்றை உருவாக்க முயலவில்லை. சொல்லப்போனால் அதைவைத்துக்கொண்டு ‘விளையாடவில்லை’. அந்த சுதந்திரத்தை எடுத்துக்கொண்டால் மட்டுமே கலை அடுத்த கட்டத்துக்கு நகர முடியும். அந்தச்சவாலை ஏற்றுக்கொண்டது மும்பை பள்ளி. அவர்கள் வங்கப்பள்ளியை நிராகரித்து இந்தியக் கலைமரபின் வடிவங்களையும் குறியீடுகளையும் எடுத்துக்கொண்டு தங்கள் அந்தரங்க உலகைப் படைக்க முற்பட்டார்கள்.

அவர்களில் முக்கியமானவர்  எம்.எஃப் ஹுசெய்ன். இந்திய ஞானமரபில் பயிற்சியும் இந்து ஆன்மீகத்தேடலில் ஆர்வமும் கொண்டவன் என்ற முறையில் எனக்கு அற்புதமான மன உச்சங்களை அளித்த மிகச்சிறந்த ஓவியங்களை ஹுசெய்ன் அளித்திருக்கிறார். என் அகத்தில் உறையும் இந்திய ஞானமரபின் குறியீடுகளை வளர்ந்து மலரச்செய்திருக்கிறார். அவரை இந்தியக் கலைமரபின் முன்னோடி என்ற வகையில் மதிப்புடன் வழிபாட்டுடன் மட்டுமே என்னால் பார்க்கமுடிகிறது.

ஹுசெய்னின் ஓவியங்களைப்பற்றி விரிவான விவாதங்கள் என்னால் செய்ய இயலாது. ஏனென்றால் எனக்கு ஓவியத்தில் எளிய ரசனைப்பயிற்சி மட்டுமே உண்டு.  என் ஆர்வம் அதை ஒட்டிய பண்பாட்டுவரலாற்றில் மட்டுமே.

ஹுசெய்ன் இந்து தெய்வங்களை நிர்வாணமாக வரைந்தார் என்று சொல்லப்படும் ஓவியங்களெல்லாம் மிகவும் பழையவை. இருபதாண்டுகளுக்கும் மேலாக ஓவியக்காட்சிசாலைகளிலும் ஏன் பலரது பூஜையறைகளில்கூட இடம்பிடித்தவை. அவரது சரஸ்வதி ஓவியத்தைக் கேரளக் களமெழுத்து மரபைக் கண்டு வளர்ந்தவனாகிய நான் என் பூஜையறையில் பக்தியுடன் வைக்கத் தயங்கமாட்டேன்.

கலையையோ இந்திய மரபையோ அறியாதவர்களான தெருக்குண்டர்களால் ஹுசெய்னின் ஓவியங்கள் சர்ச்சைக்கிடமாக்கப்பட்டன. அதற்கு அவரது காங்கிரஸ் சார்பும் அவர் நெருக்கடிநிலையை ஆதரித்ததும் எல்லாம் கூட காரணம். அவர் அச்சுறுத்தப்பட்டதும் புகலிடம் தேடநேர்ந்ததும் மிக மிகக் கண்டிக்கத்தக்கவை. மிக வெட்கப்படவேண்டியவை.

இந்தச்செயல்பாடு இந்து மரபையும் மத்தியகால பொறுமையற்ற பழமைவாதங்களில் ஒன்றாகச் சித்தரிக்க விழையும் மேற்கத்திய ஊடகங்களுக்கும் இங்குள்ள இடதுசாரிகளுக்கும் மிக வாகான ஆயுதமாக ஆகியது என்பதுதான் மேலும் வருந்தத்தக்கது. பல்லாயிரம் ஞானவழிகளும் அவற்றுக்குள் நுண்ணிய உரையாடல்களும் கொண்ட ஒரு மகத்தான ஞானமரபு அவ்வாறு திரிக்கப்பட்டது , அவமதிக்கப்பட்டது. அதற்கு வழியமைத்தவர்கள் விரல்விட்டு எண்ணத்தக்க சில குண்டர்கள் என்பதும்,இந்து ஞான மரபின் அறிஞர்களும் ஞானிகளும் அதன் கோடானுகோடி நம்பிக்கையாளர்களும் அதை ஆதரிக்கவில்லை என்பதும் திட்டமிட்டு மறைக்கப்பட்டது.

இப்போது ஹுசெய்ன் இறந்த தருணத்தை இடதுசாரிகளும் ஊடகங்களும் அவரைச் சரியானபடி புரிந்துகொள்ளச்செய்யவோ இந்து மரபின் உண்மையான தளத்தை முன்வைக்கவோ பயன்படுத்திக்கொள்ளவில்லை. இதைப்பயன்படுத்தி ஒட்டுமொத்த இந்துமரபையே கீழ்மைப்படுத்தவே அவர்கள் முயல்கிறார்கள்.  தமிழ்ச் சிற்றிதழ்களில் எழுதப்பட்ட, எழுதப்படப்போகும் எல்லா கட்டுரைகளும் அந்தக் கோணத்திலே அமையும் என்பது வெளிப்படை

ஒருபக்கம் இந்து மரபைப்பற்றிய அறிவோ கலைசார் நுண்ணுணர்வோ அற்ற இந்து அடிப்படைவாத வெறியர்களாலும் மறுபக்கம் உள்நோக்கமும் குரோதமும் கொண்டவர்களாலும் வேட்டையாடப்படுவது, சிறுமைக்குள்ளாவது இந்து ஞான மரபுதான். பிரஹஸ்பதியின், யாக்ஜவால்க்யரின், கபிலரின், கணாதரின், சங்கரரின், ராமானுஜரின், விவேகானந்தரின், நாராயணகுருவின், நித்யசைதன்ய யதியின் மரபு.

சர்வேஷ் திவாரியின் கட்டுரை சிலருக்காவது தெளிவை அளிக்கக்கூடும். அவருக்கு நன்றி

எம்.எஃப்.ஹுசெய்னுக்கு சிரம் பணிந்த அஞ்சலி

=====================

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jun 26, 2011

http://www.jeyamohan.in/?p=5135 ஹுசெய்ன் கடிதங்கள்

http://www.jeyamohan.in/?p=6897 தேவியர் உடல்கள்

http://www.jeyamohan.in/?p=5109 ஹூசேய்ன் கடிதங்கள்

http://www.jeyamohan.in/?p=4864 ஹூசெய்ன் இந்துதாலிபானியம்

 

http://www.jeyamohan.in/?p=2493 விவேகானந்தர் ராஜா ரவிவர்மா கடிதம்

http://www.jeyamohan.in/?p=2442 ராஜாரவிவர்மா

 

 

http://www.jeyamohan.in/?p=15390 நமது கட்டிடங்கள்

http://www.jeyamohan.in/?p=2052 சோழர் கலை

http://www.jeyamohan.in/?p=4071 லாரி பேக்கர்

http://www.jeyamohan.in/?p=1535 அசைவைக் கைப்பற்றுதல்

முந்தைய கட்டுரைரீங்கா ஆனந்த் திருமணம்
அடுத்த கட்டுரைகடவுளின் உருவம்-கடிதம்