மதங்களின் தொகுப்புத்தன்மை

 

என் பெயர் கிரிதரன். சென்னையில் சாப்ட்வேர் எஞ்சினீயர் . நான் தங்களுடைய இந்திய ஞானம் படித்தேன். என்னைப் போன்றவர்களுக்கு இது ஒரு eye opener.
நான் தங்களுடைய இணைய தளத்தில் வடகிழக்கு நோக்கி 9,ஒரு மாவீரரின் நினைவில் வாசித்தேன்.தங்களுடைய இந்தக் கட்டுரையில் பத்மசம்பவர் எப்படி திபெத்திய பௌத்தத்தை நிறுவினார் என்று எழுதியிருந்தீர்கள்.

’இந்திய ஞானம்’நூலில் இந்து மதம் எப்படிக் காலத்திற்கேற்ப உருமாறித் தன்னைத் தக்க வைத்துக் கொண்டது என்பதை விளக்கி இருந்தீர்கள். இந்து மதம் ஆரம்பம் முதலே ஒரு dynamic மதமாகவே இருந்திருக்கிறது. ஆனால் பௌத்தம் அப்படி இல்லை, அது ஓறிரை வழிபாடு. அப்படி இருக்கையில் பலவகையான பௌத்தம் இருக்கும்பொருட்டு இந்து மதத்தின் தாக்கம் பௌத்தம் மீது அதிகமாக இருந்திருக்கிறதா ?

நன்றி
வ.கிரிதரன்

 

காந்தார புத்தர்

அன்புள்ள கிரிதரன்,

மதங்களின் இயல்புகளைக் கொண்டு இருபெரும் பிரிவுகளாக அவற்றைப் பிரிக்கலாம். பழங்குடி வாழ்க்கையின் தொன்மையான வாழ்க்கைக்கூறுகளில் இருந்து இயல்பாகவே உருவாகி வளர்ந்த மதங்களுக்குச் சிறந்த உதாரணம் இந்துமதம். அது பல்வேறு நம்பிக்கைகளை, வழிபாட்டுமுறைகளைத் தொகுப்பதாகவே எப்போதும் இருந்துள்ளது. அதன் தத்துவமும் அழகியலும் சடங்குகளும் – எல்லாமே முரண்பாடுகளை ஒரு சாராம்சத்தின் அடிப்படையில் தொகுத்துக்கொண்டு முன்னகர்வதாக அமைந்துள்ளதைக் காணலாம். இந்த அம்சமே இந்தியா என்ற நிலப்பரப்பை  இன்றைய ஒற்றைச்சமூகமாக ஆக்கிய முக்கியமான பண்பாட்டுக்கூறு.

பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறித்தவம் போன்றவை தீர்க்கதரிசன மதங்கள். அவற்றுக்கு ஒரு மையக்கட்டுமானம் அவற்றை நிறுவியவர்களாலேயே அளிக்கப்பட்டுவிட்டது. மூலநூல்கள் வகுக்கப்பட்டுவிட்டன. அவை  தங்களின் மையக்கருத்தியலை எப்போதுமே மாற்றாமல் வைத்திருக்கின்றன. அவற்றையே அவை உலகமெங்கும் கொண்டு செல்கின்றன. அவற்றுக்கு  இயல்பான தொகுப்புத்தன்மை கிடையாது.

ஆனால் எந்த மதமும் ‘அப்படியே’ இருந்துவிட முடியாது.  அது பரவ வேண்டுமானால் பல்வேறு பண்பாடுகளை வென்று உள்ளடக்கியாகவேண்டும். அப்போது வேறு வழியே இல்லாமல் சிலவற்றையாவது ஏற்றுக்கொண்டாகவேண்டும். இந்தக்கட்டாயம் எல்லா மதங்களையும் பாதித்துள்ளது.

உலக அளவில் மையக்கருத்தியலை ஆவேசமாக வலியுறுத்தி அதில் சமரசமே இல்லாமல் இருக்கும் மதமென்றால் இஸ்லாம்தான். அவர்களுக்கு அவர்களின் தீர்க்கதரிசி தான் கடைசி இறைத்தூதர். அவர் முன்வைத்தவை இறைவனின் நேரடி வார்த்தைகள். ஆகவே அதில் ஒவ்வொரு சொல்லும் முழுமுதல் உண்மைகள். அவர் வகுத்த சடங்குகள் மட்டுமே உண்மையான ஒரே சடங்குகள். அவருடைய வாழ்க்கை மட்டுமே ஒரே முன்னுதாரணம். அவரது வழிகாட்டுதல்கள் மட்டுமே ஒழுக்கம்.இதில் எந்த விவாதத்துக்கும் சமரசத்துக்கும் இடமில்லை.  ஐயமோ விவாதமோ மரணதண்டனைக்குரிய பாவம். அந்த மத மையக்கருத்துக்கு இணையாக இன்னொன்றைச் சொல்வதும் மரணதண்டனைக்குரிய பாவம்.

மிக உறுதியான மத அமைப்புகளை உருவாக்கி இந்தக் கடுமையான நிலைப்பாட்டைப் பேணியது இஸ்லாம். இது ஒரே உண்மை, பிற எல்லாமே தவறுகள்  என்றுதான் அது எப்போதுமே பேசிவந்தது. வருகிறது.

ஆனாலும் இஸ்லாம் ஒரே அமைப்பாக இன்று இல்லை. அதற்குள் பல பிரிவுகளும் போக்குகளும் உள்ளன. அவற்றுக்குள் நபி இறந்த மறுநாள் முதல் இன்று வரை குருதி கொப்பளிக்கும் போர் நடந்துகொண்டே இருக்கிறது.

வரலாற்றை பார்த்தால் இஸ்லாம் எங்கெல்லாம் சென்றதோ அங்கெல்லாம் அங்குள்ள பண்பாட்டுக்கூறுகளை ஏற்றுக்கொண்டு அப்பகுதிக்குரிய தனித்தன்மையை அடைவதில் இருந்து எதுவுமே தடுக்கமுடியவில்லை என்பதைக் காணலாம். இந்தியாவில் உள்ள சூஃபி மரபையே சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். அது இஸ்லாமின் சாரமான அராபிய பண்பாட்டுக்கூறுகளுடன் பாரசீக-இந்திய தத்துவ ஞானமும் பண்பாடும் கொண்ட உரையாடலின் விளைவு. அப்படி ஆப்ரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பல்வேறு பண்பாட்டு வேறுபாடுகள் இஸ்லாமுக்குள் உள்ளன.

இந்தப் பண்பாட்டுத் தொகுப்புத்தன்மை மிக இயல்பானது, தவிர்க்கமுடியாதது என்ற எண்ணம் இல்லாத காரணத்தால் இன்று வஹாபியம் என்ற தூய்மைவாத இயக்கம் உருவாகியிருக்கிறது. அது  அராபிய பண்பாட்டுக்கூறுகள் அல்லாத அனைத்தையும் திரிபுகள் என்று சொல்லி ஒடுக்கவும் அழிக்கவும் முயல்கிறது. இந்தியாவில் வஹாபிய நோக்குள்ள முஸ்லீம் முன்னேற்றக்கழகம், தௌஹீத் ஜமா அத் போன்ற அமைப்புகள் சூஃபி மரபைக் கடுமையாக நிராகரிக்கின்றன. ஆப்ரிக்காவில் கறுப்பு இஸ்லாமியர்களை மதநிந்தனையாளர்கள் என்று குற்றம்சாட்டிய அராபிய முஸ்லீம்கள் பல்லாயிரக்கணக்கில் கொன்றழித்தார்கள் சென்ற சில வருடங்களில். இன்றும் அவ்வன்முறை தொடர்கிறது

அப்படி இருக்கையில் பிற மதங்களைப்பற்றிச் சொல்லவே வேண்டியதில்லையே. கிறித்தவ மதத்துக்கு அப்படிப் பலவகையான பண்பாட்டுமுகங்கள்,பல்வேறு ஞானவழிகள் உள்ளன. பிற பண்பாட்டு, ஞானக்கூறுகளை ஏற்றுக்கொள்வதையும் சூழலுக்கு ஏற்ப நெகிழ்வு கொள்வதையும் சிதைவல்ல என்று ஏற்றுக்கொள்ளும் நிலையில் அங்கே வன்முறை இல்லாமலாகிறது.

 

*

 

 

 

இந்திய மதங்களில் ஒப்புநோக்க சமணம் மட்டுமே இறுக்கமானது. ஆகவே அது இந்தியாவுக்கு வெளியே செல்லவே முடியவில்லை. ஆனாலும் அதற்குள் பல்வேறு உப வழிகள் உள்ளன.

பௌத்தம் அப்படி அல்ல. அது உலகம் முழுக்கச் சென்ற மதம். ஆகவே செல்லுமிடங்களில் உள்ள பல்வேறு பண்பாட்டுக்கூறுகளை உள்ளிழுத்துக்கொண்டு தன்னைப் புதியதாகப் பிறப்பித்துக்கொண்டே இருந்தது. பௌத்தம் உருவான சில வருடங்களுக்குள்ளாகவே இந்தப்  பிரிந்து வளரும் இயல்பு ஆரம்பித்துவிட்டது. இந்திய -இந்துப் பண்பாட்டின் கூறுகளை உள்ளிழுத்துக்கொண்ட பௌத்தம் பெரும்போக்கு [மகாயானம்] என்றும் மூலவடிவிலேயே இறுக்கமாக இருக்கவிரும்பிய பௌத்தம் சிறுபோக்கு [ஹீனயானம்] என்றும் சொல்லப்பட்டது.

 

கீழை புத்தர்

 

மகாயானமே பிரபலம் அடைந்தது. மகாயானத்தின் புராணநூல்களான புத்த ஜாதக கதைகளில் புத்தரின் அவதாரங்களாகவே ராமனும் கிருஷ்ணனும் சொல்லப்பட்டார்கள். மகாயானம் மேலும் மேலும் பிரிந்து வளர்ந்தது.  எட்டாம் நூற்றாண்டு வாக்கில் இந்து மதத்தில் தாந்த்ரீகம் அதிக செல்வாக்குடன் இருந்தது. அந்த தாந்த்ரீகம் பௌத்தத்திற்குள் நுழைந்தமையால் வஜ்ராயனம் போன்ற தாந்த்ரீக பௌத்தம் உருவானது. பத்ம சம்பவர் அந்த மரபைச் சேர்ந்தவர்.

 

தாந்த்ரீக பௌத்தம் திபெத்துக்குச் சென்றது. ஏற்கனவே பல்வேறு பழங்குடி வழிபாட்டுமுறைகள், மந்திரவாதச் சடங்குகள் கொண்டிருந்த மலைமக்களிடம் பௌத்தம் சென்று சேர்ந்தபோது அந்த அம்சங்களை உள்ளிழுத்துக்கொண்டு திபெத்திய பௌத்தமாக ஆகியது

 

திபெத்திய புத்தர்

வேதாந்தத்துடன் உரையாடி அதன் மாயை முதலிய கோட்பாடுகளை உள்ளிழுத்துக்கொண்ட பௌத்தம்,யோகாசார மரபு என்ற தனி சிந்தனைமுறையாக வளர்ந்தது. அதேபோல சீனா சென்று அங்கிருந்த தாவோ மதத்துடன் உரையாடிய பௌத்தம் அதை உள்ளிழுத்துக்கொண்டு சீன பௌத்தமாகியது.

தாவோ கலந்த சீன பௌத்தம் ஜப்பான் சென்று அங்கிருந்த ஷிண்டோ  மதத்துடன் கலந்து ஜென் பௌத்தம் போன்ற வழிகளை உருவாக்கியது.

ஏன்,தமிழகத்தில் வந்த பௌத்தம்,இங்கிருந்த சாத்தன் போன்ற கடவுள்களை உள்ளிழுத்துக்கொண்டது. தமிழக பூர்வகுடிகளின் தெய்வங்களை போதிசத்வர்களாக ஆக்கி அதற்குள் எடுத்துக்கொண்டது

இப்படித்தான்  பௌத்தம் பரவியது. அது நெகிழ்ச்சியான மதமாகவே இருந்தது, அதில் அதீத இறுக்கத்திற்கு இடமிருக்கவில்லை.

 

சீன புத்தர்

 

ஜப்பானிய புத்தர்

உலகமெங்கும் உள்ள சிந்தனைகளை ஒன்று திரட்டி ஒரு தத்துவார்த்த ’உயரழுத்தமைய’த்தை உருவாக்கியது பௌத்தம். இன்றுவரை மானுடம் அடைந்த தத்துவ உச்சம் என்றால் பௌத்தசிந்தனைதான். நவீன இயற்பியலறிஞர்கள் ,நவீன மொழியியலறிஞர்கள், நவீன தர்க்கவியலாளர்கள் பெரும்பாலும் அனைவருமே ஏற்கும் உண்மை இது.

பலநூற்றாண்டுக்காலம்  உலகளாவ நடந்த அந்த பிரம்மாண்டமான ஞான விவாதமே  பௌத்தம் உலகுக்களித்த கொடை

ஜெ

மறுபிரசுரம் முதற்பிரசுரம் செப்டெம்பர் 2011
 

சிரிக்காத புத்தர்

 

மனிதாபிமானமும் தத்துவமும்

 

தூய அத்வைதம்

 

இந்துமதம் நாத்திகம் ஆத்திகம்

 

புத்தரின் வரலாற்றில்

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 66
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67