குடவாயில் பாலசுப்ரமணியம் -கோவை புத்தகத் திருவிழா விருது

குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழ் விக்கி

சோழர்வரலாற்று ஆய்வாளரும், தமிழக ஆலயக்கலை அறிஞருமான குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டுக்கான கோவை புத்தகக் கண்காட்சி வாழ்நாள் சாதனை விருது அளிக்கப்படவுள்ளது.

நான் இருபதாண்டுகளாக தொடர்ச்சியாக குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களை வாசிப்பவன். என் அறைக்குள் என்னைச் சுற்றி இப்போதுகூட அவருடைய நூல்கள் பாதி திறந்தும் கவிழ்ந்தும் கிடக்கின்றன. நான் வாழும் உலகில் இருக்கும் பெரும் ஆளுமை அவர்

குடவாயில் பாலசுப்ரமணியம் சென்ற ஆண்டுகளில் மாபெரும் ஆக்கங்கள் என்று சொல்லத்தக்க சில படைப்புகளை அளித்தவர். ராஜராஜசோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் ஆலயம் பற்றிய இராஜராஜேச்சரம் , தஞ்சையை பற்றிய தஞ்சாவூர் அவன் மகன் ராஜேந்திர சோழன் பற்றிய இராஜேந்திர சோழன் , தஞ்சைமரபின் அடுத்த கலைச்சாதனையான தாராசுரம் பற்றிய தாராசுரம் ஐராவதீசுவரர் திருக்கோயில் , தமிழகக் கோபுரக்கலை மரபு பற்றிய தமிழகக் கோபுரக்கலை மரபு தமிழக பண்ணிசை மரபு பற்றிய பெரும்படைப்பான தேவார மாண்பும் ஓதுவார் மரபும் என ஒவ்வொரு நூலுமே ஒரு வாழ்நாள் சாதனை என தனித்தனியாகச் சொல்லத்தக்கவை

குடவாயில் பாலசுப்ரமணியம் அவர்களை இத்தலைமுறையின் தலைசிறந்த வரலாற்று – பண்பாட்டு ஆராய்ச்சியாளராக எண்ணுகிறேன். இன்னும் இன்னுமென தஞ்சை சோழர் வரலாற்றில் என்னென்ன எஞ்சியுள்ளன என்னும் தீரா வியப்பை அளிப்பவை அவருடைய நூல்கள்.

அவருக்கு கோவையில் ஜூலை 23 ஆம் தேதி விருது வழங்கப்படுகிறது.அவருக்கு என் வணக்கம்

முந்தைய கட்டுரைமேகனாவும் ஷ்ரேயாவும் -கடிதம்
அடுத்த கட்டுரைஎம்.சி.மதுரைப் பிள்ளை,முன்னோடிகளில் ஒரு முகம்