அமெரிக்கா, சிங்கப்பூர் -கல்வி

தமிழ் விக்கி 

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 1

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 2

நமது அமெரிக்கக் குழந்தைகள் பகுதி 3

நமது குழந்தைகளின் முன்…

அமெரிக்கத் தமிழர்களுக்குச் சொன்னவை…

அன்புள்ள ஜெ,

அமெரிக்கக் குழந்தைகள் பற்றிய உங்கள் கருத்தை வாசித்தேன். இந்தியக் கல்விமுறை பற்றிய கடுமையான விமர்சனமும் அதில் இருந்தது. என் கேள்வி, நீங்கள் சிங்கப்பூரில் மூன்றுமாதம் இருந்தீர்கள். அங்கே பல்கலைக்கழகத்தில் பணியாற்றினீர்கள். சிங்கப்பூர் குழந்தைகள், கல்விமுறை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

(பெயர் வேண்டாம்)

 

அன்புள்ள நண்பருக்கு

பெயர் சுட்டி இக்கேள்வியை ஒரு சிங்கை குடிமகன் கேட்டிருந்தால்தான் ஆச்சரியம்.

நான் சிங்கப்பூரில் கவனித்தவை.

சிங்கப்பூரில் இருந்த நாட்களில் பள்ளிமாணவர்களுக்கான வகுப்புகள் இருந்தன. ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான வகுப்புகளும் இருந்தன.

பள்ளி மாணவர்களைப் பொறுத்தவரை முற்றிலும் எதிர்மறையான உளப்பதிவே எனக்கு உருவாகியது. சிங்கப்பூர் கல்விமுறை என்பது ஜப்பானைப் பார்த்து நகலெடுத்தது. மிகமிகக் கடுமையான வீட்டுப்பாடங்கள் வழியாக நிகழ்வது. ஆகவே மாணவர்கள் பயிற்சிக்குத் தயாராக இருந்தனர். மிகப்பணிவானவர்களாகவும் இருந்தனர். ஆனால் கவனிக்கும் பயிற்சி அறவே இல்லை. இந்திய மாணவர்களில் பத்துக்கு ஒருவர் சற்று கவனிப்பார்கள். சிங்கப்பூரில் சொல்லப்படுவதை கவனித்த ஒரு மாணவரைக்கூட நான் பார்க்கவில்லை. அது தேர்வுக்கான பாடம் அல்ல, அதில் வீட்டுப்பாடம் இல்லை என்று சொன்னதுமே முழுமையாக ‘ஆஃப்’ ஆகிவிட்டனர்.

அமெரிக்கா போல மொழியால் சிங்கப்பூர் குழந்தைகள் அகன்றுவிடவில்லை. தமிழ் பேசுகிறார்கள், தமிழ் புரிகிறது. அவர்களின் ஆங்கிலம் மிகப்பலவீனமானதும்கூட. மிகக்குறைவான சொற்களைக்கொண்டு பேசப்படும் ஒரு பேச்சுமொழிதான் அது. அங்குள்ள சிக்கல் அங்குள்ள கல்விமுறை புத்தகங்களை வாசிப்பதை ஊக்குவிப்பதில்லை. அமெரிக்கக் கல்விமுறை முழுக்கமுழுக்க மாணவர்களின் சொந்த வாசிப்பை ஊக்குவிப்பது. சிங்கப்பூர் கல்விமுறை குறிப்பிட்ட பாடங்களை ஓர் உச்சகட்ட பயிற்சியாக பயில்வது. ஜப்பானிய, கொரிய கல்விமுறை அது

(ஆனால் கொரியாவும் சிங்கப்பூரும் இப்போது கல்விமுறையை அமெரிக்க பாணிக்கு மாற்ற  மிகத்தீவிரமாக முயல்கிறார்கள். வாசிப்பை ஊக்குவிக்கிறார்கள். அதனால்தான் நான் அழைக்கப்பட்டேன். அங்கே இந்த தகவல்தொழில்நுட்ப யுகத்தின் கல்வி எப்படி இருக்கவேண்டும் என்னும் தெளிவும் அதற்கான திட்டங்களும் கொண்ட கல்வியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஆசிரியர், மாணவர் , பெற்றோர் நிலைகளில் அதன் விளைவுகள் தெரிய பல ஆண்டுகளாகும்).

இன்று சிங்கப்பூர் மாணவர்களில்  ஒருவருக்குக் கூட கதைகளில் ஆர்வமில்லை. கதை எழுத, வாசிக்க நான் சொல்லித்தரவேண்டும். கதை என்னும் வடிவம் பற்றி பேசவேண்டும் என ஜுராசிக் பார்க் படத்தில் இருந்து தொடங்கினேன். அதுகூட எவருக்கும் நினைவில்லை. அவர்கள் ஜுராசிக் பார்க் என சொன்னது ஒரு வீடியோ விளையாட்டு. ஒவ்வொரு குழந்தையிடமும் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடியோ விளையாட்டுக்கள் இருந்தன.

அவர்கள் கவனிக்காமைக்கு ஒரு காரணம் பெற்றோர். சிங்கப்பூர் பெற்றோர் தங்கள் பிள்ளைகள் மிக உயர்தரமான கல்வியை அடைவதாக நினைக்கிறார்கள். அவ்வெண்ணத்தை குழந்தைகளுக்கும் அளித்துவிட்டிருக்கிறார்கள். ஆகவே குழந்தைகள் தன்னம்பிக்கையுடன், மேற்கொண்டு கற்கும் ஆர்வமில்லாமல் உள்ளன. ஏற்கனவே உயர்தரக்கல்வியை பெறுவதாக எண்ணுகின்றன. அது உண்மை அல்ல. சிங்கப்பூரின் பள்ளிகள் மிக உயர்தரமான கட்டமைப்பு கொண்டவை, ஆனால் பயிற்றுமுறை மிகப்பின்தங்கியது.

இந்திய மாணவர் அளவுக்குக்கூட நூல்களை வாசிப்பவர்கள் அல்ல சிங்கப்பூர் மாணவர்கள். சிங்கப்பூரின் பல்கலைக் கழக நூலகத்திலேயே ஒரு மாணவன் புத்தகம் எடுப்பதும் வாசிப்பதும் மிக அரிது.சிங்கப்பூர் இளைஞர்கள் பெரும்பாலானவர்கள் தொழில்நுட்ப அடிமைகள். பலவகை விளையாட்டுகள், சூதாட்டங்கள், தொடர்புத் தொழில்நுட்பங்களில்தான் ஆர்வம். சிங்கப்பூரின் சீன மாணவர்கள் வகுப்பிலேயே பங்குமார்க்கெட்டில் பல ஆயிரங்களை சம்பாதித்துவிடுகிறார்கள் என்பதை கண்டேன்.

ஆனால் ஆசிரியப் பயிற்சி மாணவர்கள் வேறுவகையில் இருந்தனர். அவர்களுக்கு இலக்கிய அறிமுகம் பெரும்பாலும் இல்லை. பாடங்களை மட்டுமே அறிந்திருந்தனர். தமிழகத்து கல்லூரி மாணவர்களின் அதே தரநிலை. ஆனால் கவனித்தனர், ஆர்வமாக முயன்றனர், இரண்டு மாதங்களில் முப்பதுபேரை கதை எழுதச்செய்தேன். பிரசுரத் தகுதி கொண்ட பன்னிரு கதைகள் தேறின. மூன்று கதைகள் சிறந்த கலைப்படைப்புகள்.

சிங்கப்பூர் பள்ளி மாணவர்கள் தங்களைப் பற்றி கொண்டிருக்கும் அசாதாரணமான  திருப்தியே பெரியதடை. குறைபாடு இருப்பதை எவரும் அவர்களிடமோ, பெற்றோரிடமோ சொல்வதில்லை. சிங்கப்பூர் வாழ்க்கை வசதிகளில் முதல் உலகைச் சேர்ந்த நாடு. ஆனால் அமெரிக்காவும் ஐரோப்பாவும் முதல் உலகமாக திகழ்வது அந்த உலகியல் வசதிகளால் அல்ல. அங்குள்ள முதன்மையான கல்விமுறையாலும், மிக விரிவான பண்பாட்டுச் செயல்பாடுகளாலும்தான். அமெரிக்காவும் ஐரோப்பாவும் அவற்றின் மகத்தான பல்கலைக்கழகங்களால் உருவாக்கப்பட்டவை. அந்நாடுகளை கோலம் என்றால் புள்ளிகள் அப்பல்கலைக்கழகங்களே.

முதல் உலக நாடுகளில் உள்ள கல்விமுறை உருவாக்கிய ஒரு ‘கலாச்சார பதப்படுத்தல்’ அங்குண்டு. அமெரிக்கா சென்றவர்கள் அறிவார்கள், அங்கே வாசிப்பு ஒரு மாபெரும் சமூகச்செயல்பாடாக நடந்துகொண்டிருக்கிறது. நான் பார்ப்பது கண்ணில்படும் பத்துபேரில் ஒருவர் எதையேனும் வாசிப்பதைத்தான். அந்த வாசிப்பே அவர்களை முதல் உலகமாக வைத்துள்ளது. அம்மக்களை அந்த வாசிப்பு கற்பனையில், ஆராய்ச்சியில் முன்னிலையில் நிறுத்துகிறது. அதுவே அவர்களின் வெற்றிக்கு அடிப்படை.

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் கலையிலக்கியங்களில் படைப்பாக்கம் செய்வதற்கான, சிந்தனைக்கான அத்தனை நெறிகளும் மிக இளமையிலேயே அறிமுகமாகிவிடுகின்றன. சிந்தனைக்கான எல்லா வாய்ப்புகளும் அளிக்கப்படுகின்றன. சிந்தனையில் ஈவிரக்கமில்லாத போட்டியும் உள்ளது. அதில் வெல்லாதவர்களை தவிர்த்துவிட்டு, அந்தப் பண்பாடு வெல்பவர்களை நம்பி முன் செல்கிறது. ஆகவே அதன் விசை மிக அதிகம்.

(ஆனால் அமெரிக்க இந்தியர்கள், குறிப்பாக தெலுங்கர்களும் தமிழர்களும், பெரும்பாலும் எதையும் படிப்பதில்லை. அமெரிக்க மலையாளிகள்கூட உள்ளூர் மலையாளிகளை விட வாசிப்பு மிகக்குறைவானவர்கள். அவர்கள் இந்திய மனநிலையை அங்கே அப்படியே தக்கவைத்துக் கொள்கிறார்கள்.  அந்த நாடுகள் அளிக்கும் மாபெரும் வாய்ப்புகளை பெரும்பாலும் அவர்கள் அறிவதே இல்லை. அங்குள்ள இந்தியர்களை, அங்குள்ள சூழலின் பின்னணியில் சந்தித்தால் மிக வெள்ளந்தியானவர்களாக தெரிகிறார்கள்)

அப்பட்டமாகச் சொன்னால், இன்றுள்ள சூழலில் மேகனாவோ ஸ்ரேயாவோ சிங்கப்பூர் கல்விச்சூழலில் இருந்து உருவாகவே முடியாது. அதற்கான ஒரு சின்ன சான்றைக்கூட சிங்கப்பூரில் நான் சந்தித்த ஏறத்தாழ இருநுறு குழந்தைகளில் நான் காணவில்லை. இந்தியாவோ சிங்கப்பூரோ அமெரிக்காவை, ஐரோப்பாவைச் சென்றடைய இன்னும் நூறாண்டுகள் ஆகும் – இப்போதே முழுமூச்சாக முயன்றால்…

ஆனால் இந்திய நிலைமை நேர் எதிர். நேற்று என்னை ஒரு கல்லூரிப்பேராசிரியர் வந்து சந்தித்தார். அவர் சொன்னார் பாடத்திட்டத்தில் அவர் கொஞ்சம் வாசிக்கத்தக்க ஒரு நூலை பரிந்துரை செய்தாலே ‘பிள்ளைகளுக்கு புரியாது சார்’ என தவிர்க்கச் சொல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டம் மேலும் மேலும் எளிமையாக ஆக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. சொந்தமாக ஒரு பத்தி எழுதத்தெரியாமல் இன்று தமிழ், ஆங்கில மொழிகளில் முனைவர் பட்டம் பெற்றுவிட முடியும்.

(தமிழகம் முழுக்க ஏறத்தாழ முந்நூறு கல்லூரிகளில் ஆங்கிலம் முதுகலைப் படிப்பு உள்ளது. ஆண்டுக்கு ஐந்தாயிரம் பேர் வரை முதுகலை ஆங்கிலம் பட்டம் பெறுகிறார்கள். தேடிக்கொண்டே இருக்கிறோம், ஒருசில ஆங்கில மொழிபெயர்ப்பாளர்களை கண்டுபிடிப்பது திகைப்பூட்டும் அளவு அரிதாக இருக்கிறது. தமிழகத்தில்  ஆங்கிலக் கல்வி அனேகமாக இல்லாமலேயே ஆகிவிட்டிருக்கிறது. எவருக்கும் ஆங்கிலத்தில் உரைநடை எழுத தெரியவில்லை. தேர்வு ஆங்கிலமும், முகநூல் ஆங்கிலமும் மட்டுமே தெரிகிறது)

என்ன காரணம்? இன்று கல்லூரிகள் தங்களுக்கான நிதியை தாங்களே தேடவேண்டும். அதற்கு எளிமையான கல்வி அளித்து பட்டங்களை அள்ளி வீசவேண்டும். அப்போதுதான் மாணவர் எண்ணிக்கை பெருகும். கல்லூரிக்கு நிதி வரும். அந்தப் பட்டங்களால் எப்பயனும் இல்லை. ஆனால் இது ஒரு வகை ‘கல்விப்பெருக்கம்’ என்றும் ‘ஜனநாயக வளர்ச்சி’ என்றும் கருதப்படுகிறது. இதற்காக வாதிட பெரிய ‘நிபுணர்குழு’வே உள்ளது.

சிங்கப்பூரில் நான் பள்ளி மாணவர்களுக்கு கருக்களை அளித்து மறுநாள் கதையாக எழுதிவரச்சொன்னேன். அனேகமாக எவருமே எதையுமே எழுதிவரவில்லை. நாலைந்துபேர் கொண்டுவந்த கதைகளை பார்த்ததுமே தெரிந்தது, அவர்களின் பெற்றோரால் எழுதப்பட்டவை. அப்பெற்றோரிடம் பேசி, அந்தக்குழந்தை பயில்வதற்காகவே அப்பயிற்சியை அளித்தேன் என விளக்கமுயன்றேன். தோல்விதான். ஒரு மாணவர்கூட சாமானியமாக படிக்கத்தக்க உரைநடையில் ஒரு பத்தி கூட எழுதவில்லை. தேர்வு ஆங்கிலம்தான்.  இத்தனைக்கும் நான் சந்தித்தவர்கள் தெரிவுசெய்யப்பட்ட நல்ல மாணவர்கள்.

அமெரிக்கப் பெற்றோருக்கு சொல்வது இது, உங்கள் பிள்ளைகள் உலகின் மிகச்சிறந்த கல்விமுறையில் பயில்பவர்கள், அவர்களுக்கு மிகச்சிறந்ததை அளிக்க நீங்கள் தயாராகிக்கொள்ளுங்கள். சிங்கப்பூர் பெற்றோருக்கு கொஞ்சம் மாற்றிச் சொல்வேன். உங்கள் குழந்தைகள் மூன்றாமுலகத் தரம் கொண்ட ஒரு கல்விமுறையில்தான் பயில்கிறார்கள். அதை தரமான கல்வி என எண்ணி மயங்காதீர்கள். அவர்களுக்கு அக்கல்விக்குமேல் ஒரு தற்கல்வியும் தேவை. அவர்களை வாசிக்கப்பழக்குங்கள். நூல்களை அளியுங்கள். அதற்கு நீங்கள் தயாராகிக்கொள்ளுங்கள்.

ஜெ

 

முந்தைய கட்டுரைகுமுதினி, எல்லாமே அற்புதங்கள்.
அடுத்த கட்டுரை பதேர் பாஞ்சாலி வாசிப்பு.