தமிழ்விக்கி,நண்பர்களும் பகைவர்களும்

தமிழ்விக்கி தொடங்கப்பட்டபின் வந்துகொண்டிருக்கும் எதிர்வினைகள் வேடிக்கையானவை. ஆனால் சிரிக்கப் பழகவில்லை என்றால் நாம் தமிழ்ச்சமூகத்தின் மீதான நம்பிக்கையையே இழந்துவிடுவோம்.

இத்தனைக்கும் இதை படிப்பவர்கள் தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த சிறுபான்மையினர் என்பதை மறக்கக்கூடாது. அவர்களில் உள்ள மனநிலைகளைச் சொல்லவருகிறேன்.

தமிழ் விக்கி வெளியான சிலநாட்களிலேயே ஒரு நண்பர் பதில் போட்டிருந்தார். அவர் வெளிநாட்டில் வசிப்பவர். நன்றாகவே படிப்பவர். ஆனால் வாழ்நாளின் கடைசித்துளி உழைப்பையும் ஒரே விஷயத்துக்காகச் செலவிடுகிறார். அவர் பிறந்த சாதிதான் ’உலகிலேயே உசத்தி’ என நிறுவ.

நான் அவருக்கு முன்பொரு முறை எழுதினேன். மெய்யாகவே அவ்வாறு தன் உழைப்பால் அவர் அதை நிறுவிட்டாரென்றால்கூட அதனாலென்ன நன்மை? அவர் பிறந்தமையால் அச்சாதி உலகிலேயே உயர்ந்தது என ஆனால் என்னதான் கிடைக்கும் அவருக்கு?

அவர் என்னை அவருடைய சாதிக்கு எதிரானவன் என்று முத்திரை குத்தி வசைபாடி எழுதினார். நான் அவரை மேற்கொண்டு கவனிப்பதை விட்டுவிட்டேன். ஆனால் என் உள்ளம் மலைப்படைந்துவிட்டிருந்தது. எவ்வளவு பிரம்மாண்டமான வாழ்க்கை விரயம். எவ்வளவு பெரிய மாயை.

தமிழ் விக்கி வந்ததும் அவர் கடிதங்கள் எழுதலானார். பிழைசுட்டும் கடிதங்கள். எஸ்.வையாபுரிப்பிள்ளை அகராதிக்குழுவின் தலைவர்தான், அவருக்கு அகராதி தயாரிப்பில் பங்கில்லை, அதைச் செய்தவர்கள் கீழே இருந்தவர்கள். ஒரு பட்டியல் அனுப்பியிருந்தார். அங்கே பிழைதிருத்துநர் பணி செய்த நாலைந்து பிராமணர்கள்.

நான் அவருக்கு வையாபுரிப் பிள்ளை அகராதி நினைவுகள் என்னும் நூலில் எழுதிய செய்திகளை அனுப்பினேன்.  ‘இருட்டடிப்பு செய்றார்’ என ஒரே வரி பதில். அடுத்த கடிதம். காஞ்சிப் பெரியவர் ஆசியால்தான் பெரியசாமி தூரன் கலைக்களஞ்சியம் தயாரித்தார். அவரே அதைச் சொல்லியிருக்கிறார். அதை அவரைப்பற்றிய பதிவில் சேர்க்கவேண்டும். நான் அவருக்கு விளக்கம் அளிக்கவில்லை. அவர் தமிழ்விக்கி ஒரு நசிவு சக்தி என்றும், அதை எதிர்ப்பது தன் கடமை என்றும் சொல்லி நீண்ட பதில் எழுதினார்

மறுபக்கம் தினம் ஒரு கடிதம்.பாலகுமாரன், லா.ச.ரா ,சுந்தர ராமசாமி, க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா  போன்ற ’பார்ப்பனர்களை’ தமிழ் விக்கி ‘பிரமோட்’ செய்கிறது. அதற்கு  பணம் அளிக்கப்பட்டுள்ளது. அவர்களை ‘வைக்கவேண்டிய இடத்தில்’ தமிழ் சமூகம் வைத்திருந்தது. அதை முறியடிக்க சூழ்ச்சி நடக்கிறது- இப்படி.  இந்தப் பட்டியலில் சுவாமி விபுலானந்தரையும் பார்ப்பனப் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள்.

இங்கே எல்லாருக்கும் பிரச்சினை புறவயத்தன்மைதான். தகவல்கள்தான் எதிரி. அவரவர் கூச்சலை அவரவர் போட இடம் ஒதுக்குவதை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள்.

லா.ச.ராமாமிர்தம்

பாலகுமாரன்

சுந்தர ராமசாமி

க.நா.சுப்ரமணியம்

சி.சு.செல்லப்பா

முந்தைய கட்டுரைசௌராஷ்டிரர் வரலாறு -கடிதம்
அடுத்த கட்டுரைகி.வா.ஜகந்நாதன், நாட்டாரியல் முன்னோடியா?