பெண்களின் காதல்

தி.ஜானகிராமன் விக்கி

ஜெ அவர்களுக்கு ,

அன்பு வணக்கம். உங்களைப் பற்றி அறியும் வாய்ப்பினைச் சில நாட்கள் முன்புதான் பெற்றேன். படித்தேன், உங்களது படைப்புகளை. மனதில் இனம் புரியாத அழுத்தம். காரணம் உங்கள் எழுத்தின் வலிமை தந்த வலி. பாராட்ட வயதில்லை. பரவசத்தைப் பகிர்ந்து கொள்ளத் தந்த வாய்ப்பிற்கு நன்றி .

நேற்று இரவு இமை உறங்கி மனம் உறங்கா நேரத்தில் எழுந்த ஒரு கேள்வி! ஆண்களின் காதல் பகிரங்கமாகப் பலர் மத்தியில் பேசப்படும்போது, ஏன் பெண்களின் காதல் மட்டும் பலரால் புழுதி அளவு கூடப் பேசப்படவில்லை. ஒருவேளை என் அறிவிற்கு எட்டாமல் இருக்குமோ?

பெண்களின் காதல் பற்றி நீங்கள் எழுதிய கதை, உங்களைக் கவர்ந்த கதை, உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் எழுதிய கதை பற்றி எனக்குச் சொல்லுங்களேன். இதை நான் காதல் மீது கொண்ட ஆர்வத்தால் மட்டும் அல்ல, பெண்கள் மீது கொண்ட ஆர்வத்தால் கேட்கிறேன் எனக்குள் எழுந்த எண்ணத்திற்கு உங்களிடம் இருந்து பதில் எதிர் பார்க்கின்றேன்

உங்கள் எழுத்தால் கவரப்பட்ட தோழியாக.

குறிப்பு : பிழை இருந்தால் இச்சிறுமியை மன்னிக்கவும்.

அன்புடன்,

சிவரஞ்சனி.

கும்பகோணம்.

 

தி.ஜானகிராமன்

அன்புள்ள சிவரஞ்சனி

உண்மையில் இந்தக்கோணத்தில் நான் அதிகமும் யோசித்ததில்லை. ஏனென்றால் காதல் எனக்கு அத்தனை முக்கியமான பேசுபொருளாகத் தோன்றியதில்லை. ஒப்பீட்டளவில் நான் காதலைப்பற்றிக் குறைவாகவே எழுதியிருக்கிறேன். என் இலக்கு எப்போதுமே வரலாறாக, ஒட்டுமொத்த மனிதக்கதையாகவே இருந்துள்ளது. அந்த ஒட்டுமொத்தத்தின் ஓர் அம்சமாகவே காதலை நான் பார்க்கிறேன். அப்போதுகூடக் காமத்தையே அதிகமும் பேசுபொருளாகக் கொண்டிருக்கிறேன். காதலை அதன் உன்னதமாக்கப்பட்ட ஒரு நிலை என்றே பலசமயம் முன்வைத்திருக்கிறேன்.

காதலைப்பற்றி நான் எழுதிய முக்கியமான நூல் என்றால் ’காடு’ தான். அது முதிரா இளமையின் காதலைப்பற்றியது. ஒரு சிறிய ஒளியாக வாழ்க்கையில் பரவி அணைந்து மொத்த வாழ்நாளுக்கும் நீளும் கனவாக அது இருக்கிறது. ஆனால் அதுகூடக் காதலை உன்னதமாக்கும் நூல் அல்ல. காதலின் வசீகரமும் அதன் நடைமுறைப்பக்கமும் ஒரேசமயம் அதில் விரிகிறது.

தன் அடிப்படை இச்சைகளை உன்னதப்படுத்திக் கொள்வதன் மூலம் அவற்றைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான் மனிதன். காமமும், வன்முறையும் அடிப்படை இச்சைகள். காதலாகவும் வீரமாகவும் அவை உன்னதப்படுத்தப்படுகின்றன. காதலும் வீரமும் மனிதனை அவனுடைய மிகச்சிறந்த சில தளங்களைக் காணச் செய்யும் உச்சநிலைகள். அந்த உச்சநிலைகளை இன்னும் மகத்தான சில உச்சநிலைகளுக்கான குறியீடுகளாகப் பேரிலக்கியங்கள் கையாள்கின்றன. அவ்வாறுதான் சாலமனும், ஆண்டாளும் நித்ய காதலர்கள். யுலிஸஸும் வர்த்தமானரும் மகாவீரர்கள்.

உலக இலக்கியத்தில் ஒரு குறிப்பிட்ட பரிணாம வளர்ச்சியைக் காணலாம். அவை ஆரம்பத்தில் காதலை வெறும் காமமாகப் பார்க்கின்றன. இரு உடல்கள் இணைவதற்காகக் கொள்ளும் விழைவாகவும், பிரிவதன் வலியாகவும், கூடுதலின் உவகையாகவும் மட்டுமே சித்தரிக்கின்றன. பின்னர் காதலை அவை உடல்சாராத ஒன்றாக உன்னதப்படுத்திக் கொள்கின்றன. இரு நெஞ்சங்கள் ஒன்றில் ஒன்று நிறைவு காண விழையும் தூய தவிப்பாக, சுயமிழந்து கரையும் பரவசமாக, தனித்திருப்பதன் ஆறாத நிறைவின்மையாகக் காட்டுகின்றன. பின்னர் அந்தத் தூய காதல் ஒருவகை உச்ச அனுபவமாகக் காட்டப்படுகிறது. இறையனுபவமாக, பிரபஞ்ச அனுபவமாக ஆகிறது.

தமிழே சிறந்த உதாரணம். சங்க இலக்கியங்களில் உடல்சார்ந்த காமமே உள்ளது. காதல் என்ற சொல்லேகூட விருப்பம் என்ற பொருளிலே உள்ளது. நான் இன்று சொல்லக்கூடிய எந்த உன்னததளமும் அந்தக் காதலுக்கு இருப்பதாகத் தெரிவதில்லை. ஆனால் சங்ககால அழகியலை நாலாயிர திவ்யப் பிரபந்தம் பக்திக்காக விரித்தெடுத்த போது உடல்சாராத தூய காதல், இரண்டின்மையை நோக்கித் தாவி எழும் ஆன்மாவின் தவிப்பு, தன்னிலையழிவின் உச்சகணம் முன்வைக்கப்பட்டது.

ஆஷாபூர்ணா தேவி

 

அன்றுமுதல் இன்று வரை தமிழில் காதல் பற்றிய பற்றிய எல்லா ஆக்கங்களும் இந்த இரு வகை மாதிரிகளுக்குள் செல்பவையாக உள்ளன. இந்த இரு சரடுகளையும் கொண்டு எல்லா ஆக்கங்களையும் நாம் ஒருவகையில் புரிந்துகொள்ளமுடியும். சிலசமயம் படைப்புகள் இவ்விரு சரடுகளையும் பின்னிக்கொள்கின்றன. உடல் வழியாக ஆன்மாவைக் கண்டுகொள்கின்றன, அல்லது ஆன்மாவின் காதலில் ஊடுருவும் உடலைக் கண்டுகொள்கின்றன.

முதல்வகைப் பார்வை, யதார்த்தப் பிரக்ஞை கொண்டதாக உள்ளது. இரண்டாம் வகைப்பார்வை கற்பனாவாதப் பண்புள்ளதாக உள்ளது. முதல் வகையைச் சார்ந்தவையே நாம் அதிகமும் வாசிக்கும் வணிக இலக்கியங்கள். வணிக சினிமாக்கள். தூய ஆன்மீகக் காதலை அவை இலட்சிய வடிவமாக முன்வைக்கின்றன. அவற்றை விட்டுவிடுவோம். இலக்கியமாகக் கொள்ளத்தக்கவற்றில் அத்தகைய காதல் கதைகளுக்குச் சிறந்த உதாரணம் வண்ணநிலவனின் ‘கடல்புரத்தில்’.

நவீன இலக்கியம் என்பது இங்கே நவீனத்துவ இலக்கியமாகவே இருந்தது. நவீனத்துவம் என்பது தர்க்க நோக்கை அடிப்படைவிதியாக முன்வைக்கும் ஒரு அறிவியக்கம், அழகியல் மரபு. ஆகவே யதார்த்தபோதம் என்பது அதில் மையமாக இருக்கிறது. அங்கே தூய அகம் சார்ந்த எழுச்சிகளுக்கு இடமில்லை. அந்த எழுச்சிகளை ஐயப்பட்டுத் தர்க்கபுத்தியால் அணுகக்கூடியது அது. காதலைக் காமமாகவே அதனால் காணமுடியும். காமத்தின் மிக அதி நுட்பமான ஆடலாக அது காதலை வகுத்துக்கொள்ளும்.

நவீனத்துவப் படைப்புகளில் கணிசமானவை காமத்தின் நுண்தளங்களைப் பற்றியவைதான். ஆர்..ஷண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’, ஆ.மாதவனின் கிருஷ்ணப்பருந்து’ போன்று பல உதாரணங்கள் சொல்லமுடியும். அவற்றில் காதலை மிக யதார்த்தமான சூழலில் நிறுத்திக் கறாராகப் பேசிய ஆக்கம் என்றால் ப.சிங்காரத்தின் ’கடலுக்கு அப்பால்’ நாவலை உதாரணமாகச் சொல்லலாம்.

தி.ஜானகிராமனின் படைப்புகள் உணர்ச்சிகரமான கற்பனாவாதத்தன்மை கொண்டவை. ஆனால் அவற்றின் மையத்தரிசனம் எப்போதும் காமத்தைப்பற்றிய யதார்த்தம் சார்ந்த ஒரு விவேகமாகவே உள்ளது. மிகச்சிறந்த உதாரணம் ’மோகமுள்’ . நுண்மையான ஒரு காதலைச் சொல்லிச்செல்லும் அந்நாவல் அதைக் காமத்தின் நுண்வடிவம் மட்டுமே என்று சொல்லி அமைகிறது. ’செம்பருத்தி’யும் அப்படிப்பட்ட நாவலே..

 

MTE5NTU2MzI0OTQxMDA2MzQ3

 

உங்கள் வினா பெண்களின் காதல் எழுதப்படவில்லையே என்பது. ஒரு கவிதை, பாதசாரி எழுதியது.

முத்தத்தில் உண்டோடி

உன்முத்தம் என்முத்தம்

இது நம் முத்தம்

காதலைப்பற்றிப் பேசும்போது ஆணின் காதல் பெண்ணின் காதல் எனப் பிரிக்கமுடியுமா என்ன? காதலில் ஆணும் பெண்ணும் சந்திக்கும் புள்ளிதானே பேசப்படுகிறது? ஆண் எழுத்தாளர்கள் எழுதியவையும் பெண்களைப்பற்றித்தானே? ஆண் எழுத்து பெண் எழுத்து என்று முழுமுற்றாகப் பிரிக்கும் அசட்டு விமர்சன நோக்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அடிப்படையில் அவை, இலக்கியத்துக்கே எதிரானவை.

ஏனென்றால் கற்பனை மூலம் ஒரு மனித மனம் இன்னொரு மனிதமனத்தை உள்ளே சென்று அறியமுடியும் என்ற சாத்தியக்கூறில் இருந்தே இலக்கியம் என்ற கலைவடிவம் உருவாகி இருக்கிறது. எந்த எழுத்தாளனும் தன்னுடைய சொந்த அனுபவத்தை மட்டும் எழுதுவதில்லை. அப்படி எழுதுபவன் இலக்கிய எழுத்தாளன் அல்ல, செய்தியாளன் மட்டுமே. இலக்கியவாதி எழுதுவது பிறரது அனுபவங்களை. கற்பனைமூலம் அவன் அந்தப் பிற உலகங்களில் புகுந்து அந்த அனுபவங்களைத் தான் அடைந்து அதை எழுதுகிறான்.

வாசிப்பு என்பது இச்செயலின் மறுபக்கம் மட்டுமே. யாரோ ஒரு மனிதன் எழுதி மொழியில் பதிவாக உங்களுக்குக் கிடைக்கும் ஒரு ஆக்கத்தை வைத்துக்கொண்டு நீங்கள் அந்த மனிதனின் அந்தரங்கத்தில் நுழைய முடிகிறது. அவன் காட்டும் யதார்த்தங்களுக்குள் செல்ல முடிகிறது. அந்தக் கதைமாந்தருடைய அகங்களுக்குள் செல்ல முடிகிறது. அந்தச் சாத்தியமே இலக்கியத்தை உருவாக்குகிறது.

 

 

குர் அதுல் ஐன் ஹைதர்

 

இந்த சாத்தியத்தை வாழ்நாளில் ஒருமுறைகூடச் சந்திக்காதவர்கள் உண்டு. தினமும் இலக்கியம் வாசித்தாலும் சுட்டசட்டி சட்டுவமாகவே அதில் கிடப்பார்கள். இலக்கியத்தை வைத்துக்கொண்டு கற்பனை செய்ய அவர்களால் இயலாது. இலக்கியத்தை வெறும் தகவல் குவியலாக மட்டுமே அவர்களால் பார்க்க முடியும். அவர்களுக்கு ஒரு ஆணின் அகத்தைப் பெண் எழுத முடியும் என்றோ, ஒரு பெண் குழந்தையின் அகத்தை ஒரு கிழவர் எழுதிவிட முடியும் என்றோ நம்ப முடியாது.

இந்த ஆசாமிகள்தான் ஆண் எழுத்து, பெண் எழுத்து என்பது போன்ற பிரிவினைகளைப் போடுகிறார்கள். இப்பிரிவினைகளால் ஒரு இலக்கிய ஆக்கத்தின் உருவாக்கச் சூழலையோ அதன் மேலோட்டமான மொழி மற்றும் அமைப்பையோ பற்றி சில புதிய தகவல்களைச் சொல்லிவிட முடியும். ஆனால் ஒருபோதும் இலக்கியத்தின் சாராம்சமான இடத்துக்குச் செல்லமுடியாது. நீங்கள் இளம் வாசகர் என்றால் இந்தக் குரல்களை முழுமையாகவே தவிர்த்துவிடுங்கள். நீங்கள் எழுத்தாளர் என்றால் இவர்கள் இருப்பதையே கண்டுகொள்ளாதீர்கள்.

என் நோக்கில் தல்ஸ்தோயின் நடாலியாவோ, தஸ்தயேவ்ஸ்கியின் சோனியாவோ, தி.ஜானகிராமனின் யமுனாவோ ஆண்களால் படைக்கப்பட்ட பெண் பொம்மைகள் அல்ல. அவர்கள் உண்மையான மனிதர்கள். மனிதர்களுக்குரிய எல்லாச் சிக்கல்களும், எல்லாப் பிரச்சினைகளும், எல்லா முரண்பாடுகளும் கொண்டவர்கள். அவர்கள் உண்மையான மனிதர்கள்தான்; புனைவெனும் கண்ணாடிப்பிம்பம் வழியாக அவர்களை நாம் காண்கிறோம், அவ்வளவுதான்.

அப்படி உயிருள்ள உண்மையான மனிதர்களாக அவர்களை நாம் பார்த்தால் மட்டுமே அவர்களை நாம் அறிய முடியும். அவர்களுடன் வாழமுடியும். அவர்களுக்குள் செல்லமுடியும். அவர்களை யாரோ ஓர் எழுத்தாளன் அவனுடைய சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயற்கையாகச் செய்தான் என நினைத்தால் அக்கணமே அந்தக் கதாபாத்திரங்கள் செத்துச் சடலவடிவங்களாக ஆகிவிடும். நீங்கள் அதைப் பிணப்பரிசோதனை மட்டுமே செய்யமுடியும்

இலக்கிய ஆக்கங்கள் கற்பனை மூலம் உருவாக்கப்படுபவை. வாசகனின் கற்பனையை நோக்கி முன்வைக்கப்படுபவை. அந்தக்கற்பனையை ரத்து செய்துவிட்டு அவற்றை அணுகுவதென்பது நிறக்குருடன் ஓவியத்தைப் பார்ப்பது போன்றது. இன்று இளம் வாசகிகளில் கணிசமானவர்கள் நம்முடைய அசட்டுப்பெண்ணியர்களால் ஆரம்பத்திலேயே பார்வை திரிக்கப்பட்டு இலக்கியத்திற்குள் நுழையவே முடியாதவர்களாக ஆகிவிட்டிருக்கிறார்கள். உண்மையான இலக்கிய அனுபவம் என்றால் என்னவென்றே தெரியாதவர்களாக இருக்கிறார்கள்.

இங்கே பெண்ணியம் பேசும் பெண் எழுத்தாளர்கள் பலரை நான் கவனித்து வருகிறேன். பொருட்படுத்தும் அளவுக்கு அடிப்படை வாசிப்புள்ள எவரையுமே நான் பார்த்ததில்லை. அவர்களிடம் ஒரு எளிய விவாதத்தை முன்னெடுக்கக்கூடத் தோன்றியதில்லை. அவர்களால் ஒரு சிறு சலசலப்புக்கு அப்பால் பொருட்படுத்தும் இலக்கிய ஆக்கங்கள் எதையுமே உருவாக்க முடியாமல் போனமைக்குக் காரணம் இதுவே. இவர்கள் பேசும் பெண்ணியம் என்பது இலக்கியவாசகனின் எதிர்பார்ப்பு என்ற சவாலைச் சந்திக்க முடியாமல், தங்கள் சொத்தைப் படைப்புகளைப் பொத்திக்கொள்ள உருவாக்கிக் கொள்ளும் ஒரு எளிய தற்காப்பு முறை மட்டுமே.

 

அநுத்தமா

 

இந்தச் சல்லிக்குரல்களை முழுக்கத் தூக்கி வீசிவிட்டு வரும் உண்மையான படைப்பூக்கமும் அதற்கான படைப்புத்திமிரும் கொண்ட பெண்ணெழுத்தாளர்களுக்காகத் தமிழ் காத்திருக்கிறது. ஆஷாபூர்ணா தேவி போல, குர் அதுல் ஐன் ஹைதர் போல. ஒரு பெண்ணாக அல்ல, ஒரு மனித உயிராகத் தன்னை உணர முடிந்தால் மட்டுமே முக்கியமான ஆக்கங்களை எழுத முடியும். அப்படி உணரக்கூடிய ஓர் எழுத்தாளன் எந்த மானுட அனுபவத்திற்குள்ளும் தன் கற்பனைமூலம், கருணை மூலம் சென்று விட முடியும்.

எந்த ஆண் இலக்கியவாதியும் தன்னை- தான் எழுதும் கணத்தில்-ஆண் என உணர்ந்து எழுதுவதில்லை. அதேபோல எந்தப் பெண் இலக்கியவாதியும் தன்னை எழுதும் கணத்தில் பெண் என உணர்ந்து எழுதுவதில்லை. உண்மையான படைப்பூக்கத்தை எழுத்திலோ வாசிப்பிலோ உணர்ந்த எவருக்கும் இது புரியும். பிறரிடம் சொல்லிப் புரியவைக்கவே முடியாது. படைப்பெழுச்சியின் கணம் என்பது மகத்தான ஒரு தன்னிலையழிவு நிகழும் தருணம். அப்போது இலக்கியவாதி இல்லை. அவன் [அல்லது அவள்] எவரைப்பற்றி எழுதுகிறானோ அவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். அவன் ஒவ்வொரு கதைமாந்தருக்குள்ளும் குடிபுகுந்து அந்தக்கதாபாத்திரங்களாகத் தன்னை உணர்ந்து அதை எழுதுகிறான். அப்படி எழுதினால் மட்டுமே அது எழுத்து.

தல்ஸ்தோய், வெளியே ஒரு கிழவனாக நின்று அன்னா கரீனினாவைப் பார்த்து எழுதவில்லை. அவர் அன்னாவாக வாழ்ந்து அதை எழுதினார். யமுனா என்ற பெண், தி.ஜானகிராமன் தன் விருப்பப்படி உருவாக்கிய ஒரு செய் பொருள் அல்ல. அவளுக்குள் சென்று அவர் அவள் வழியாக உலகைப் பார்த்திருக்கிறார். பாபுவும் ராஜமும் ரங்கண்ணாவுமாக அவரே வாழ்ந்திருக்கிறார். தமிழில் காதலைப்பற்றி நன்றாக எழுதிய எல்லா எழுத்தாளர்களும் பெண்களின் காதலைப்பற்றிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்கள்.

 

ஜார்ஜ் எலியட்
ஜார்ஜ் எலியட்

 

உலகில் மகத்தான பெண்ணெழுத்தாளர்கள் பலர் உள்ளனர். அவர்களின் எழுத்துக்களுக்கும் மகத்தான் ஆண் எழுத்தாளர்களின் எழுத்துக்களுக்கும் ஒரு வாசகனாக எந்த வேறுபாட்டையும் நாம் காணமுடியாது. ஓர் உதாரணம் சொல்கிறேன். எண்ணூறுகளில் ஆங்கிலத்தில் ஜார்ஜ் எலியட் என்ற ஆண் பேரில் அற்புதமான ஆக்கங்களை எழுதியவர் ஒரு பெண்- மேரி ஆன் என்று பெயர். அவர் பெண் என்பதே ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. அது தெரியாமலே போயிருந்தால் எவருமே அவரது ஆக்கங்களில் பெண்கூறுகளைக் கண்டுகொண்டிருக்கமாட்டார்கள்.

தமிழில் காதலைப்பற்றி எழுதிய பெண்களில் குறிப்பிடத்தக்க இரு ஆக்கங்கள் என நான் நினைப்பவை ஹெப்சிபா ஜேசுதாசனின் ’புத்தம்வீடு’, அநுத்தமாவின் ‘கேட்டவரம்’ ஆகியவை. அவற்றை நாம் தமிழில் ஆண்களால் எழுதப்பட்ட எந்த ஆக்கத்தில் இருந்தும் எவ்வகையிலும் தனித்துக்காண முடியாது.

ஆணோ பெண்ணோ, எழுத்தாளன் எழுதும் உச்சநிலை என்பது ஒன்றுதான் – மொத்த மானுடத்திற்கும் பிரதிநிதியாக நின்று வாழ்க்கையைப் பார்ப்பது அது.

ஜெ

அக்னிநதி -குர் அதுலைன் ஹைதர்

அநுத்தமா

மறுபிரசுரம் முதற்பிரசுரம் Oct 22, 2012

முந்தைய கட்டுரைகரைந்த நிழல்கள் வாசிப்பனுபவம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 86