லோலோ, கடிதம்

லோலோ

அன்பு ஜெ,

லோலோ பற்றிய பதிவில் அவரின் புகைப்படத்தை பார்த்ததும் கண்களை திருப்பிக்கொண்டேன். வலியாலான புகைப்படங்கள் சில உண்டு. பசியாலான ஒரு புகைப்படம் உலகம் முழுவதும் பார்க்கப்பட்டது. அஃப்பிரிகாவின் செத்துக்கொண்டிருக்கும் குழந்தை மற்றும் கழுகின் படம். இது அந்த வரிசையில் ஒரு முறைக்கு மேல் பார்க்க முடியாத ஒரு படம். இவரை எனக்குத்தெரியாது. கட்டுரையை வாசிக்கும் முன்பே புகைப்படத்திலேயே அந்த வலியை உணர முடிந்தது.

சுற்றி நின்று புகைப்படம் எடுப்பவர்கள், அவரை வைத்து படம் எடுத்தவர்கள், அவரின் படங்களை எல்லாம் பார்த்தவர்களை நினைத்துக்கொள்கிறேன். எழுத்தாளர் ஜீ.நாகராஜன் கண்முன் முன்னால் வந்து புன்னகைத்தார். மனதினுள் அவருடன் எனக்கு தீராத விவாதம் உண்டு.

எங்கள் வீட்டருகே ஒரு பசு இருந்தது. நல்ல ஆஜானுபாகுவான பசு. அதை கண்ணெடுத்து பார்க்க மனம் பதறும். பெரும்பாலும் நிறைய ஆட்கள் அதைப்பார்ப்பதை தவிர்ப்பதை அது வீதியில் நடந்து செல்லும் போது கவனிக்கலாம். வீட்டுக்கொட்டிலில் இருக்கும் பசு. தினமும் மேய்ச்சலுக்கு அழைத்து செல்லப்படும். அவ்வளவு பெரிய மடி. அதன் கனம் குறித்து பார்ப்பவர்களின் மனம் பதறிக்கொண்டே இருக்கும். பெரும் சுமையுடன் நடக்கும் மெதுவான நடை. கலப்பின பசு. அதிகமான பால் உற்பத்திக்காகவே உருவாக்கப்பட்டது.

அதே மாதிரி கோழி சில ஆண்டுகளுக்கு முன் ஒன்று சோதனை செய்யப்பட்டது. இறகுகள் சிறகுகள் என்று எதுவும் இல்லாமல். நம் ஊரில் சமைக்கும் முன்  கோழிக்கு தலைகீழாக பிடித்து மஞ்சள் தடவுவார்களே அதே போல சிவப்பு நிறத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. ஒருமுறைக்கு மேல் பார்க்க முடியாது. அதன் உற்பத்தி தடைசெய்யப்பட்டது.

அந்தபசு தீவிபத்தில் இறந்தது. அதை சிறிய க்ரைன் வைத்து கயிற்றால் கட்டி தான் தூக்க முடிந்தது. வழியெங்கும் பால் வழிந்து கொண்டே சென்றது.

அது வீதியின் மனதை தட்டி எழுப்பிய ஒரு நிகழ்வு. அந்த மாதிரி பசு அதற்கு பின் எங்கள் தெருவில் இல்லை. இன்னமுமே யாருக்கும் வாங்கி வளர்க்கும் துணிவு இல்லை என்றே நினைக்கிறேன்.

இலக்கியம் சார்ந்து இது தான் செய்யப்படுகிறது என்று நினைத்துக்கொள்கிறேன். இந்த பதிவு அது மாதிரியான ஒன்று. இதை வாசிப்பவர்கள், லோலோவை பார்ப்பவர்கள் மனம் தட்டப்படும் இல்லையா? ரசித்தல், துய்த்தல் வேறு. வன்மம் என்பது வேறு என்று.

 

அன்புடன்,

கமலதேவி

 

அன்புள்ள கமலதேவி

உங்கள் கடிதத்தில் அந்தப்பசு நான் எழுதிய ஒரு கதையை நினைவூட்டியது.

செல்வம், காமம், அதிகாரம் மூன்றிலும் மனிதனுக்கு பேராசை உள்ளது. அது அனைத்தையும் திரிபடையச் செய்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைஅரசியலின்மை
அடுத்த கட்டுரைதர்மபுரி பூர்வ சரித்திரம் -கடிதம்