அன்புள்ள ஜெ,
இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று தோன்றியது.
ஒருவேளை தமிழ் விக்கியில் பயனர் கணக்கு தொடங்கினால் Biography-ல் என்ன எழுதுவது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஒற்றை சொல்லில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நான் கண்டடைந்த சொல் (?!) : சொல்வதற்கேதுமில்லையாதலாலிங்கேதுமில்லை!!! இது தமிழ் இலக்கண விதிகளின்படி சரியா என்று எனக்கு தெரியவில்லை. (கடைசியாக இலக்கணம் படித்தது பள்ளி இறுதியாண்டில்.)
இதை Google Translate-ல் முயற்சித்தால் என்ன என்று நினைத்தேன். முதலில் “சொல்வதற்கு ஏதுமில்லை. ஆதலால் இங்கு ஏதுமில்லை.” என்று கொடுத்தேன். “Nothing to say. So there is nothing here.” என்று, சரியாகவே, மாற்றப்பட்டது. பின் “சொல்வதற்கேதுமில்லையாதலாலிங்கேதுமில்லை” என்று கொடுத்தேன்.
நான் Google தடுமாறலாம் என்று நினைத்தேன். ஆனால் மிக சுருக்கமாக “There is nothing to say.” என்று மொழிபெயர்த்துவிட்டது. நேரடி மொழிபெயர்ப்பாக “Since there is nothing to say, there is nothing here” என்று கொடுத்திருக்கலாம். ஆனால் இவனிடம் சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்பதை புரிந்து கொண்டு செறிவாக (succinctly) மொழிபெயர்த்தது மகிழ்ச்சியாகவே இருந்தது!
(அது மொழிபெயர்த்ததா இல்லை அதை பற்றி சொல்வதற்கு தன்னிடம் ஏதும் இல்லை என்று சொல்கிறதா என்ற ஐயம் எழாமல் இல்லை.)
நன்றி
டி.கார்த்திகேயன்
அன்புள்ள கார்த்திகேயன்
கூகிள் மொழியாக்கம் ஆண்டுக்கு ஆண்டு மேம்பட்டே வருகிறது. அது தமிழ் கற்றுக்கொண்டு வருகிறது.
ஆகவே அது சரியாகத்தான் வேலைபார்க்கிறது. நீங்கள்தான் ரொம்பவும் வெட்டியாக இருக்கிறீர்கள் போல
வெட்டியாக இருப்பவர்கள் தமிழ் விக்கிக்கு ஏதாவது செய்யலாமே?
ஜெ