எழுத்தாளனின் பிம்பம், கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று உங்கள் தளத்தில் மனம் சென்ற போக்கில் வாசித்துக்கொண்டிருந்தேன். எழுத்தாளனின் பிம்பமும் உண்மையும் பதிவின் கடைசி வரி [ஓர் எழுத்தாளனை நேரில் சந்திக்கும்போது உங்கள் மனதில் உள்ள சித்திரம் மாறவில்லை என்றால் அவன் எழுத்தாளன் அல்ல, நடிகன்] இந்தக் கடிதத்தை எழுதத் தூண்டியது. இந்த வரியை என்னால் உணரமுடிகிறது. உங்களை முதலில் பார்த்தது சிங்கப்பூரில் 2016ம் ஆண்டு. அந்தவார ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் சந்திக்கலாமென்று எழுதியிருந்தீர்கள். அன்று உங்களை இன்றளவு அணுக்கமாய் உணர்ந்ததில்லை. நான் வாசகர்களும் சந்திக்க வரலாமாவென்று கேட்டு எழுதினேன். வரலாமென்று சொல்லி முகவரி அனுப்புனீர்கள்.

புது மனிதரை அவர் இல்லத்தில் ஒரு கூட்டத்தின் மத்தியில் சந்திக்கப்போகும் தயக்கம் மிகுந்திருந்தது. அறிமுகம் செய்துகொள்ளவில்லை. உங்கள் பேச்சை மட்டுமே மிகுவிருப்போடு கேட்டுக்கொண்டிருந்தேன். 2019 ஈரோடு விவாதப் பட்டறைக்கு காலையில் வந்தேன். நீங்கள் தரை தளத்தில் வந்தவர்களை வரவேற்று பேசிக் கொண்டிருந்தீர்கள். நான் அறிமுகம் செய்துகொள்ளவில்லை. சற்று தொலைவிலிருந்து உங்களையே கவனித்துக் கொண்டிருந்தேன். மனதில் எழுந்த எண்ணம் ஏன் மனம் அமைதி கொண்டிருக்கிறது? ஏன் எழுத்தில் பிரம்மாண்ட ஜெயமோகன் நேரில் வெகு சாதாரணமாக தோன்றுகிறார். வீட்டிற்கு வந்து தங்கள் நூலை அல்லது வலைதளத்தை வாசிக்கும்போது மீண்டும் பழைய ஜெயமோகன் வந்துவிடுவார்.

சென்ற வருட விஷ்ணுபுர விருது விழாவில் உங்களை மீண்டும் காணும் போது அதே சாதாரண ஜெயமோகன் எண்ணம். பின்னாடி அமர்ந்திருந்த நீங்கள் சிலசமயம் முன்னாள் சென்று அமர்ந்தீர்கள். ஒரு மெல்லிய பதட்டம் உங்கள் முகத்தில் தெரிந்தது. மீண்டும் பின்னால் சென்றீர்கள். இவரா நான் எண்ணிய ஜெயமோகன் என்ற எண்ணம் வந்தது. விழாவின் இறுதியில் உங்கள் உரையை கேட்கும் போதும், ஆவணப்படத்தில் உங்கள் பேச்சை கேட்கும்போதும் நானறிந்த ஜெயமோகன் தென்பட்டார். இந்தக் கட்டுரை என் கேள்விக்கு விடையாய் அமைந்தது.

இதுபோன்று ஒரு சம்பவம் எனக்கு நடந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத் நுழைவுத் தேர்வுக்கு ஒரு பயிற்சி கூடத்தில் தங்கிப் படிக்கும்போது சிவா அறிமுகமானான். அவன் என் மீது பிரமிப்புகொண்டிருந்ததை பின்னால் தெளிவாக உணர்ந்தேன். அவனுக்கு கல்விமேல் பெரும்விருப்பம். நான் நன்றாக படிக்கக்கூடிய மாணவன். அது அவனுக்குள் பிரமிப்பை உண்டாக்கி இருக்கலாம். கல்லூரியில் சேரும் நாளில் தற்செயலாக அங்கே அவனைப் பார்த்தேன். அவனும் நான் தேர்ந்தெடுத்த பொறியியல் பிரிவையே தேர்ந்தெடுத்திருந்தான்.

நான்கு வருடம் வகுப்பில் அவனருகிலே கழிந்தது. கடைசி ஆண்டு அவன் வீட்டிற்கு சென்றேன். அன்று தொடுதிரை கைபேசிகள் வெகுவாக புழங்கவில்லை. அவன் தம்பி தன் அண்ணண் சொன்னவற்றையெல்லாம் கொண்டு என்னை நெடிய உடல் கொண்டவனென்று கற்பனை செய்துகொண்டான். நேரில் என்னை கண்டபின் ஏமாற்றமடைந்தான். இரு நாட்கள் அவர்கள் இல்லத்தில் தங்கியிருந்தேன். மீண்டும் பலவருடங்கள் கழித்து அவன் தம்பியை கண்டேன். அதே பிரமிப்போடு பேசினான். பிரமிப்பு உண்மை. அதற்கு அவன் கொடுத்த வடிவம் பொருத்தமானதல்ல.

எழுத்தாள பிரமிப்பு உண்மை. அதற்கு வாசகன் கொடுக்கும் வடிவம் உண்மையில் பொருந்தாமல் போகலாம். ஆனால் பிரமிப்பு உண்மை.

அன்புடன்

மோகன் நடராஜ்

முந்தைய கட்டுரைதூரன் விருது விழா, 2022
அடுத்த கட்டுரைகமல், கடிதம்