அமெரிக்க நிலத்தில் நீங்கள் விரிவாக பயணம் செய்து மீண்ட சமயத்தில் நானும் இந்திய நிலத்தில் ஒரு சுற்று சுற்றி மீண்டு விட்டேன். மே மாத இறுதியில் ஒரு நீண்ட கார் பயணம். சண்டிகரிலிருந்து தமிழ் நாடு. விடுமுறை நாட்களுக்குப் பின் ஜுன் இறுதியில் மீண்டும் காரிலே சண்டிகர்.
தில்லி-மும்பாய்-பெங்களூரு-சென்னை மாநகரங்களை இணைக்கும் இந்தியாவின் தங்க நாற்கரச்சாலைகளின் வழியாக தமிழ்நாடு. பின்பு ஸ்ரீநகர் கன்யாகுமரி சாலையில் மீண்டும் சண்டிகர். தேசிய நெடுஞ்சாலை 48 ல் சென்று நெடுஞ்சாலை 44 ல் திரும்பி வருவது. சுமார் 6000 கி. மீ பயணம்.
பயணத்தோழர்கள் வேறு யாருமில்லை. நித்யாவும் விஷ்வாவும்தான். அநேகமாக அனைத்து பயணங்களிலும் உடன் வருபவர்கள். இந்திய நிலத்தின் குறுக்குவெட்டைப் பார்ப்பது பயணத்தின் முதன்மையான நோக்கம். அப்புறம் இந்தியா பற்றிய ஒருவகையான crash course. (but without any CRASH ofcourse). ஆனால் பயலுக்கு இன்னும் வெண்மீசை இல்லாமல் மோர் கூட குடிக்கத் தெரியாது. இருந்தாலும் குழந்தைகளுக்கு சரியானவற்றை கையளிக்கும் கடமை பெற்றவர்களுக்கு இருக்கிறதே!
சண்டிகர்-தில்லி-ஜெய்பூர்-அகமதாபாத்-மும்பாய்- பூனா-பெங்களூர் வழியாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர். திரும்பிச் செல்லும் வழி சேலம்-பெங்களூர்-ஹைதராபாத்- நாக்பூர்- ஜான்சி- ஆக்ரா-தில்லி வழியாக சண்டிகர். இந்தியாவின் மேற்கின் ஓரமாக பயணம் செய்து இந்தியாவின் மைய நிலத்தின் வழியாக வீடு திரும்புதல் என்பது பயணத்திட்டம். ஒரு வருடத்திற்கு முன்னரே போட்ட திட்டம். பொது முடக்க விதிகள் அனைத்தும் தளர்ந்து இந்த வருடம்தான் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.
ஸ்ரீநகர் கன்யாகுமரி சாலையில் திரும்பிச் செல்லும்போது ஒரே ஒரு detour மட்டும் செய்தோம். நாக்பூரிலிருந்து ஜபல்பூர் அருகே உள்ள பேடாகாட் சென்றோம். நீங்கள் மையநிலப் பயணத்தில் சென்ற ஊர். எரிமலை, இயற்கை வெண்ணீர், இமயத்தின் பாலை மலைகள் போன்றவை எப்போதுமே என்னை கவர்ந்திழுப்பவை. பேடாகாட்டின் சலவைக்கல் பாறைகளை முதன்முதலில் புகைப்படத்தில்தான் பார்த்தேன். பார்த்த கணமே என் பக்கெட் லிஸ்டில் குறித்துக்கொண்டேன்.
பேடாகாட்டில் முதலில் செளசட் யோகினிகளையும் சிவன் பார்வதியையும் தரிசித்தோம். பின்பு நர்மதை ஆற்றின் பேடாகாட் நீர் வீழ்ச்சி மற்றும் சலவைக்கல் பாறைகளைப் பார்க்கச் சென்றோம்.
பேடாகாட் அல்லது தெளன்தார் நீர்விழ்ச்சியில் நர்மதையின் நீர் விழுந்து பாறைகளை அறுத்து இரு கிளைகளாகப் பிரிந்துச் செல்கிறது. அருவிக்கு மேலே கேபிள் காரில் பறந்து செல்லும்போது இதோ இப்போது விழப்போகிறோம் தலைகுப்புற விழுந்துவிட்டோம் என்ற திக் திக் எண்ண ஓட்டத்தை தவிர்க்க முடியவில்லை. அருவியின் கரையில் நின்ற எங்களை பூ போல சிறு துளிகளை தெளித்து நர்மதை வரவேற்றாள்.
பின்பு அருகில் உள்ள சலவைக்கல் பாறைகளைப் பார்க்கச் சென்றோம். படகு சவாரி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் பாறைகளுக்கு அருகில் சென்று பார்க்க முடியவில்லை. ஆற்றங்கரையில் உள்ள ஒர் அரசு தங்கும் விடுதியில் இருந்துதான் சலவைக்கல் பாறைகளைப் பார்க்க முடிந்தது. அவசரநிலை வழிகாட்டியாகத் தன்னை சுயபிரகடனம் செய்துகொண்ட தற்காலிக வேலையில்லா படகோட்டி செய்த ஏற்பாடு.
விடுதியின் வெளிச்சுவரில் ஒரு சுவாரஸ்யமான புகைப்படத்தை கவனித்தேன். காந்தி 1941 ல் பேடாகாட் வந்து சலவைக்கல் பாறைகளைப் பார்த்தபோது எடுக்கப்பட்ட படம் பெரிதாக்கப்பட்டு சுவற்றில் மாட்டப்பட்டிருந்தது.
சற்றும் எதிர்பாராத சில இடங்களில் காந்தி வந்துவிடுகிறார். ஹிமாசல பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் கால்கா சிம்லா சாலை அருகே தாக்சாய் (Dagshai) என்ற ஆங்கிலேயர் கால கண்டோன்மென்ட் ஊர் உள்ளது. தாக்சாய் சிறைச்சாலையில் 1920 ல் பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த அயர்லாந்து புரட்சியாளர்களைச் சிறைவைத்திருந்தனர். அதை விசாரிக்க காந்தியே நேரில் தாக்சாய் வந்தார். ஆங்கிலேயர் கால தாக்சாய் சிறைச்சாலை இன்று அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. காந்தி இரவு தங்கியிருந்த செல்லில் அவர் பயன்படுத்திய சர்க்கா மற்றும் மேசை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
காந்தியை கொன்ற பிறகு நாதுராம் கோட்சேவையும் தற்காலிகமாக தாக்சாய் சிறையில் வைத்திருந்தனர். நல்ல வரலாற்று புனைவு எழுதலாம். (இன்னொரு வரலாற்று முக்கியத்துவமும் தாக்சாய் சிறைக்கு உண்டு. கொமகாட்டு மாரு கப்பல் புரட்சியாளர்கள் சிலரை ஆங்கிலேயர்கள் தாக்சாய் சிறையில்தான் கொன்றார்கள்.)
ஊரின் பெயர்கள்தான் எத்தனை வகை ! மாநிலங்களின் பெயரில் நிலத்தை குறிக்கும் ஒட்டுதான் அதிகம் உள்ளன. பிரதேசம், ராஸ்டிரம், ஸ்தான், கண்ட் போன்ற ஒட்டுகள். மிசோரம் மாநிலத்தின் பெயரில் உள்ள ரம் மிசோ மொழியில் நிலத்தைக் குறிப்பது. மேலும் கர், புரம், தீப் போன்ற ஒட்டுகள்
இந்தியாவின் கடவுளர்களில் பெயரில் அமைந்த ஊர்களில் ராமனின் பெயரில்தான் அதிக ஊர்கள் இருக்கிறதாமே! அதன்பின் கிருஷ்ணனின் பெயரில் என்கிறார்கள்.
அதிகாரம் கைமாற கைமாற பெயர்களும் மாற்றப்பட்டன என்கிறார்கள் அறிஞர்கள். உதாரணமாக சுல்தான் மற்றும் இஸ்லாமிய ஆட்சி காலங்களில் அகமதாபாத், சுல்தான்பூர், ஓளரங்காபாத், அடிலாபாத், நிஜாமாபாத் போன்ற பெயர்களைச் சூட்டினர். நேரடியாக மதத்தை சுட்டும் பெயர்கள். இஸ்லாம்பூர், அலகாபாத் போன்றவை. போர்வெற்றியை கொண்டாடும் விதமாக போடப்பட்ட பெயர்கள். ஃபதேகர், ஃபதேபூர். ஃப்தே என்றால் வெற்றி.
பின்பு அதிகாரம் ஆங்கிலேயர்கள் கைகளுக்கு மாறியபோது மீண்டும் பெயர் மாற்றங்கள். ஆனால் அவர்கள் இந்தியாவில் புதிதாக உருவாக்கிய ரயில் நிலையங்கள், மலை வாசத் தளங்கள், டீ எஸ்டேட்டுகள், கண்டோன்மென்ட் பகுதிகளுக்கு புதிய பெயர்களைப் போட்டனர். கிளட்டர்பக் கன்ஜ், மெக்கிளஸ்கி கன்ஜ், ஹேமில்டன் கன்ஜ் ரயில் நிலையங்கள், எலீனாபாத், மெக்லியோடு கன்ஞ், லான்ஸ் டவுன் என ஆங்கில சீமான் சீமாட்டிகளின் பெயர்களைச் சூட்டினர்.
மேலும் ஆங்கில உச்சரிப்பிற்கு வசதியாக பிராந்தியப் பெயர்களையும் மாற்றினர். உதகமணடலம் – ஊட்டி, கோழிக்கோடு-கேலிகட், கங்கா – கேன்ஜஸ், போன்றவை. ஆங்கில நாக்குகளுக்கு வெவ்வேறு மொழிகளில் அமைந்த இந்தியப் பெயர்கள் அளித்த பெரும் அதிர்ச்சியை கற்பனை செய்ய முடிகிறது.
சுதந்திரத்திற்குப் பின் அதிகாரம் நம்மிடம் வர மீண்டும் பெயர் மாற்றங்கள். தமிழ் நாடு தலைவர்களின் பெயர்களை மாவட்டங்களில் இருந்து நீக்க ஆந்திரா மற்றும் தெலுங்கானா தலைவர்களின் பெயர்களைக் கொண்டுவருகிறது. ரங்க ரெட்டி, பொட்டி ராமலு, ஒய் எஸ் ஆர் போன்ற பெயர்கள்.
பஞ்சாப் ஹரியானா வயல்வெளிகளில் ஆரம்பித்து ராஜஸ்தானின் பாலை நிலத்தின் வழியே சென்று குஜராத்தின் வணிக நகரங்களில் நுழைந்து மஹாராஸ்டிரத்தின் காட் செக்ஷனின் ஏறி இறங்கி தக்காணத்தைத் நான்கு நாட்களில் தொட்டோம்.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா
விந்திய இமாசல யமுனா கங்கா…
தாகூரின் இந்தியாவை ஏறக்குறைய தரிசனம் செய்தாயிற்று. வங்கத்தையும் ஒரிசாவையும் தவிர. இமயத்தையும் கங்கையும் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
ராஜஸ்தானின் வெயிலை ஈடுகட்ட கர்நாடகம் கொஞ்சம் குளிர்ந்து போல தெரிந்தது. ஆந்திரத்தில் சிவந்திருந்த மண் மத்திய பிரதேசத்தில் கருமை நிறம் கொண்டது. தக்காணத்தில் கொட்டியது போல அமைந்த பாறைக் குன்றுகளை புந்தேல்கண்ட் பகுதியின் மணற் குன்றுகள் சமன்செய்தன.
கக்கர், சபர்மதி, தாப்தி, கிருஷ்ணா, துங்கபத்ரா, கோதாவரி, நர்மதா, பேத்வா, சம்பல், யமுனா முதலிய ஆறுகளைக் கடந்தோம். ஆரவல்லி, மேற்கு தொடர்ச்சி, விந்திய சத்புரா மலைத்தொடர்களில் ஏறி இறங்கினோம். தெலுங்கானா மற்றும் மத்திய பிரதேச வனங்களிலும் மஹாராஸ்டிரத்தின் பென்ச் தேசிய பூங்காவின் ஊடே கொஞ்சம் திகிலுடன் சென்றோம்.
மொத்தமாக ஒன்பது நாட்கள். ஏழு இரவுகள் இந்தியாவின் வெவ்வேறு நகரங்களில் தங்கி ஒன்பது மாநிலங்களின் விதவிதமான உணவு வகைகளை வழியில் உண்டோம்.
இந்தப் பயணத்தில் என்ன அடைந்தோம்?
அதை பட்டியல் போடுவது கடினம்தான். ஆனால் என் விழிகள் அடுத்தப் பயணத்திற்காக மேலும் கூர்மை அடைந்திருக்கின்றன.
ஜய ஹே!
அன்புடன்,